Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மாணிக்கப்பூர் தந்த மாபெரும் மார்க்க ஞானி சங்கைமிகு ஷாஹுல் ஹமீத் ஆண்டகை அவர்கள்

மாணிக்கப்பூர் தந்த மாபெரும் மார்க்க ஞானி சங்கைமிகு ஷாஹுல் ஹமீத் ஆண்டகை அவர்கள்

ஆக்கம- MIM. அன்ஸார் ஆசிரியர்
இறை அதிகாரிகள்
 
உமது இறைவன் புவியில் “நிழலை எவ்வாறு பரப்பியிருக்கிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (20:45)
பூமியை நாம் விரிப்பாக்கி (அதில்) மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா? (78:06:7)
மேற்படி இரு திருமறை வசனங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள “நிழல்”, “மலைகள்என்பவை இறைவனால் நிறைவேற்று அதிகாரமளிக்கப்பட்ட அவ்லியாக்களையே குறிக்கும் என்பது மெய்ஞ்ஞானிகளின் கூற்றாகும் எமது பூமியெங்கும் “நிழல் எவ்வாறு பரம்பி இருக்கின்றதோ அவ்வாறே அல்லாஹ்வுடைய அவ்லியாக்களும் இப்பூமியெங்கும் பரந்து நிரம்பி இருக்கின்றார்கள் .

மேலும் பூமியில் காணப்படும் மலைகள்  பூமிக்கு முளைகளாகத் தொழிற்பட்டு இப்பூமியை ஆட்ட அசைவின்றி பாதுகாப்பது போல் அவ்லியாக்களும் இப்பூமியையும் இப்பூமியில் உள்ளவைகளையும் ஆபத்துக்களில் இருந்தும் பாதுகாக்கிறார்கள்.

இந்த அவ்லியாக்களில் இருபிரிவினர் உள்ளனர். அல்லாஹ்வுடைய பாதையில் நல்லமல்கள் புரிந்து அவனில் அழிந்து வலித்தனத்தைப் பெற்றவர்கள் ஒரு பிரிவினர். இவர்களுக்கு “கஸ்ப்
என்று சொல்லப்படும். மற்றப்பிரிவினர் “ஆலம் அர்வாஹ்” என்னும் ஆன்மலோகத்திலேயே அல்லாஹ்வினால் தெரிவு செய்யப்பட்டு வலித்தனம் வழங்கப்பட்டவர்கள். இவர்களுக்கு “அதாயி” என்று சொல்லப்படும்.
இவர்களின் இரண்டாம் பிரிவை அதாவது அல்லாஹ்வினால் ஆன்மலோகத்திலேயே “வலித்தனம்” வழங்கப்பட்டவர்கள்தான் அல்வலிய்யுல் காமில் வஸ்ஸபீய்யுல் வாஸில், பர்துல் அஹ்பாப், குத்புல் மஜீப், காதிர் ஒளி, கௌதுல் இஸ்லாம் கன்ஜேஸவா மீரான் சுல்தான் அஸ்ஸெய்யித் அப்துல்காதிர் மீரான் ஸாஹிப் ஷாஹுல் ஹமீது நாகூர் ஆண்டகை அவர்களாகும்.
திருத்தோற்றம்
 
அண்ணல் நபீ (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் ஹஸன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் வழிக் கொடியில் பூத்த ஹஸன் குத்தூஸ் என்ற தந்தைக்கும் அண்ணல் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மற்றோர் பேரரான ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் பரம்பரையில் உதித்த “பாதிமா” என்ற தாய்க்கும் ஆத்மீகப் புலவராக ஹிஜ்ரி 910ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதம் பத்தாம் நாள் வெள்ளிக்கிழமை தஹஜ்ஜுத் வேளையில் சங்கைக்குரிய அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் அன்னவர்கள் இந்தியாவில் மாணிக்கப்பூர் என்னும் ஊரில் “திருத்தோற்றம்” வழங்கினார்கள். இவர்கள் தனது தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற இரவே “இறைநேசச்செல்வர்” என அல்லாஹ்வினால் அறிவிக்கப் பட்டதோடு “அப்துல் காதிர்” என பெயரும் சூடப்பட்டார்கள்.
                ஹிழுறு நபியிடம் திருமறை ஓதுதல்
 
நாயகம் அவர்களுக்கு நான்கு வயதான போது புனித திருமறையை ஓதுவதற்காக பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டார்கள். ஒரு சமயம் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது ஒரு மரத்தடியில் நாயகம் அவர்கள் இளைப்பாரிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஹிழுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றி நாயகமவர்களின் வாயில் உமிழ்ந்து விட்டு மறைந்து விட்டார்கள். அதன் பின்னர் அடிக்கடி பள்ளிக்குச் சென்று ஓதிக் கொடுப்பார்கள். இதனால் பள்ளியில் சேர்ந்து ஒரு வருடத்திலேயே குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து முடித்து விட்டார்கள். தமது எட்டாவது வயதில் அறபு இலக்கணம் இலக்கியம் ஆகிவற்றைக் கற்றுத்தேர்ந்தார்கள்.
பெற்றோரைச் சந்தித்தல்
 
தமது 18வது வயதில் மெஞ்ஞானக் கல்வியைப் பெறும் நோக்கில்
“குவாலியர்” நகர் நோக்கி பயணம் மேற்கொண்டார்கள். செல்லும் வழியில் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நாகூர் நாயகத்தை சந்தித்து இஸ்முல் அஃலத்தை போதித்து மறைந்தார்கள். முயீனுத்தீன் என்பவருடன் தனது பயணத்தை தொடர்ந்த ஆண்டகை அவர்கள் இறுதியாக குவாலியர் நகரின் வெளிப்புறத்தில் உள்ள பாழடைந்த பள்ளியொன்றினுள் தங்கினார்கள். அங்கிருந்து கொண்டு தனக்கொரு “காமிலான ஷெய்கு” ஒருவரைக் காட்டும் படி இறைவனிடம் மன்றாடி பல்லாண்டு காலம் உண்ணாமல் உறங்காமல் தவமிருந்தார்கள்.
இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் “சுபஹ்” “தொழுகையை நிறைவேற்றி விட்டு தியானத்தில் அமர்ந்திருந்த நாயகம் அவர்களுக்கு “ஷாஹுல் ஹமீதே நீர் என்னை வணங்குவதில் முழுமையடைந்து விட்டீர்” என்று உணர்த்திய இறைவன் இம்மை,மறுமையிலுள்ள அனைத்து மர்மங்களையும் தெளிவாக்கினான். அக்கணமே நாயகம் தனது ஷெய்கின் தோற்றத்தை கண்டார்கள்.
இறைவன் உமது வணக்கத்தை ஏற்றுக் கொண்டு “ஷாஹுல் ஹமீத்” என்னும் காரண திருநாமத்தை உமக்கு வழங்கியதோடு உமது ஞான குருவாக “முஹம்மத் கௌது றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களையும் இறைவன் அறிவித்துள்ளான். அவர் உங்களது வருகையை எதிர் பார்த்துக் காத்திருக்கிறார். எனவே அவரிடம் சென்று முரீது பெற்றுக் கொள்வீராக என ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நாயகத்திற்கு அறிவித்தார்கள்.
இதைக்கேட்ட நாயகம் அவர்கள் குவாலியர் நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது தமக்கு திருத்தோற்றம் வழங்கிய ஷெய்க் அவர்களைக் கண்ட அப்துல் காதிர் அவர்கள் தம் கண்களை அவர்களின் காலடியில் ஒற்றி மகிழ்ச்சி மழை பொழிந்தார்கள். இதைக் கண்ட ஷெய்கு நாயகம் அவர்கள் அப்துல் காதிர் அவர்களை அன்புடன் வரவேற்று வாழ்த்துக்கூறி தம் இருப்பிடம் அழைத்து சென்று விருந்தளித்ததோடு “பியாலா” எனும் ஞானமிர்தத்தைப் புகட்டி ஞானோபதேசம் புரிந்து முரீது வழங்கினார்கள். இதனால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து வெளிப்பட்ட மஃரிபா எனப்படும் அகமிய அறிவுத் தொடர்பில் ஷெய்குமார்களின் வழியில் நாயகம் அவர்களும் இணைந்தார்கள்.
விண்ணக காட்சிகள்
 
சுமார் 10 ஆண்டுகள் வரை தமது ஷெய்கு நாயகத்தோடு இருந்து ஆத்மீகப் பயிற்சிகள் பெற்றார்கள். தனக்கென ஒரு தனி அறையில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார்கள். ஒரு நாள் இரவு புனித இஷாத் தொழுகையை தொழுதுவிட்டு “முஷாஹதா” என்னும் நிஷ்ட நிலையில் தலை குனிந்தவர்களாக நீண்ட நேரம் வீற்றிருந்தார்கள். பின்னர் தஹஜ்ஜுத் நேரம் வந்ததும் அதனை தொழுது விட்டும் மீண்டும் அமைதியாக
வீற்றிருந்தாரகள். இதனை அவதானித்த “முயீனுத்தீன்” ஷாஹுல் ஹமீத் நாயகத்தை நோக்கி முஷாஹதாவில் கண்ட காட்சியை தம்மிடம் கூறுமாறு பணிவுடன் வேண்டினார்கள். உடனே நாயகமவர்கள் தாம் கண்ட காட்சியை பின்வருமாறு விபரிக்கின்றார்கள்.
இன்றிரவு ஹிழுர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் வந்து என்னை அழைத்துச்சென்று மண்ணகம் முழுவதையும் காண்பித்தார்கள். பின்னர் விண்ணகத்திற்கு அழைத்துச்சென்று அங்குள்ள காட்சிகளைக் காண்பித்தார்கள். அதன் பின்னர் என்னை ஓரிடத்தில் அமர்த்தினார்கள். அங்கு இறை நேசச் செல்வர்களை நான் சந்தித்தேன். அங்கு இருந்த எனது பாட்டனார் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னைப் பார்த்து அங்கிருந்த வலீ மார்களுக்கு இமாமாக நின்று தொழுவித்து துஆ இறைஞ்சுமாறு வேண்டினார்கள். அவ்விதம் நானும் செய்தேன். அதன் பின்னர் “ஆலமுல் மலகூத்” சென்று அங்கிருந்த நபீமார்கள்,இமாம்கள் ஆகியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசியைப் பெற்றேன். பின்னர் “மகாமுன் மஹ்மூதா”” சென்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களைச் சந்தித்து பேருவகை அடைந்தேன். அவர்கள் என்னை என் புருவ மத்தியில் முத்தமிட்டார்கள். இறுதியாக இறைவனின் திவ்விய தரிசனமான “லிகா” என்னும் இறை காட்சியைப் பெற்றேன். இறைவன் என்னை நோக்கி நாம் உம்மை “குத்பு” ஆகவும் “கௌது” ஆகவும் ஆக்கியுள்ளோம். இதற்கு மேல் உமக்கு என்ன வேண்டும் என வினவினான். அதற்கு நான் “நீயே வேண்டும்”” என்று கூறினேன். அது கேட்ட இறைவன் “அன்த அப்தி ஹக்கா” நீ என்னுடைய உண்மையான அடியான் என்று நன்மாராயணம் கூறி அனுப்பி வைத்தான் என நாயகம் அவர்கள் தாம் முஷாஹதாவில் கண்ட காட்சிகளை விபரித்தார்கள்.
ஞான குருவின் சந்திப்பு
 
18 வருடங்களின் பின்னர் நாயகம் அவர்கள் ஹிஜ்ரி 947ல் பெற்றோரை மீண்டும் மாணிக்கப்பூரில் சந்தித்தார்கள். பின்னர் 404 சீடர்களுடன் தன் பெற்றோருடன் சில காலம் தங்கி விட்டு பெற்றோரின் அனுமதியுடன் புனித மக்கா யாத்திரை மேற்கொண்டார்கள். வழியில் ஓர் இடத்தில் தங்கி இருந்த போது தந்தையாருடைய இறப்புப் படுக்கையை உள்ளுணர்வால் உணர்ந்த நாயகம் அவர்கள் மீண்டும் தன் பெற்றோரிடத்தில் வந்து அவர்களுக்கு செய்ய வேண்டிய ஈமக் கடன்களை செய்து விட்டு மீண்டும் ஹஜ் பயணத்தை மேற்கொண்டார்கள். இடையில் பஞ்சாப்பின் தலை நகரான லாகூரில் தங்கி இருந்த போது அங்கு முப்தியாக இருந்த நூறுத்தீன்  என்பவர் ஆண்டகை அவர்களின் மாண்பினை அறிந்து அன்னாருக்கு பணிவிடை செய்தார்கள்.
ஆண்டகையின் அற்புத வாரிசு
 
ஒரு நாள் முப்தி நூறுத்தீன் அவர்கள் ஆண்டகை அவர்களைத் தனிமையில் சந்தித்து தனக்கு பிள்ளையில்லாக் குறையை தெரிவித்தார்கள். உடனே ஆண்டகை அவர்கள் அவரை நோக்கி இல்லம் சென்று வெற்றிலை, பாக்கு எடுத்து வருவீராக என்று கூற அவர்களும் அவற்றை எடுத்து வந்தார்கள். அதனை ஆண்டகை அவர்கள் அதனை வாயிலிட்டு எடுத்து அதனை உண்ணுமாறு கொடுத்தார்கள். அவரும் அவ்வாறே செய்தார். பின்னர் ஆண்டகை அவர்கள் அவரை நோக்கி உமக்கு நான்கு மகன்களும், சில பெண் மக்களும் பிறப்பார்கள். அவர்களில் மூத்தவர் எனக்கு உரியவர் எனது வாரிசு ஏழு வயதில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதி முடிப்பதோடு அனைத்து கல்வியையும் கற்றுத்தேர்வார்கள் எனவும் தந்தையார் எங்கே என்று வினவினால் அப்போது நான் மக்காவில் இருப்பேன். என்னுடைய பற்குச்சியை அடையாளமாக கொடுத்து அனுப்புங்கள் என தங்களது பற்குச்சியையும் கொடுத்து முப்தி நூறுத்தீன் அவர்களை அனுப்பினார்கள். பின்னர் ஆண்டகை கூறியது போன்று நூறுத்தீன் அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்தது. அவர்கள் மக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்கள்தான் “அஸ்ஸெய்யித் யூசுப் வலிய்யுல்லாஹ்” எனப்புகழ் பெற்ற இறைநேசச் செல்வராகும்.
மறைவு
 
ஹிஜ்ரி 978ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதம் 10ம் நாள் வெள்ளிக்கிழமை ஆண்டகை அவர்கள் தம் மகனை அழைத்து தமக்கு மரணம் நெருங்கி விட்டதாக எடுத்துறைத்து தம் மகனக்கு ஆறுதல் கூறினார்கள். அனைத்து உயிர்களும் மரணம் எனும் பானத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற இறை வசனத்தை ஓதிக்காட்டி ஆறுதல் கூறினார்கள். நான் மறைந்ததும் மழை பெய்யும் அந்த மழைத் தண்ணீரை எடுத்து இன்ன இடத்தில் குளிப்பாட்டும் இன்ன இடத்தில் தோன்றினால் பெட்டி ஒன்றில் கபன் பிடவை இருக்கும் அதை எடுத்து அவற்றை எனக்கு கபன் செய்யும் என்னை நல்லடக்கம் செய்து 03ம் நாளில் அவ்விடத்தில் நின்று ஸலாம் கூறும் . அவ்விடத்திலிருந்து பதில் வந்தால் நான் உயிருடன் இருக்கிறேன் என எண்ணி அங்கு இரும் என சில வஸிய்யத்துக்களை தன் மகனுக்கு சொன்ன அடுத்த கனம் தம் கண்களை மூடிக்கொண்டு இறை இல்லம் அடைந்தார்கள்.
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
நல்லடக்கம்
 
அடுத்த நாள் காலை ஆண்டகை அவர்கள் கூறிய படி அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் வைத்து அவர்களது மகனார் யூசுப் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அவர்களால் மழை நீரினால் குளிப்பாட்டப்பட்டு அவர்கள் கூறிய இடத்தில் இருந்து பெறப்பட்ட பெட்டியில் இருந்து கபன் பிடவை எடுக்கப்பட்டு கபன் செய்யப்பட்டு ஆண்டகை அவர்களின் மகனார் அவர்களினாலேயே ஜனாஸாத் தொழுகை தொழுவிக்கப்பட்டு தற்போதும் இனி எப்போதும் சொர்க்க புரியாக இலங்கக்கூடிய நாகூர் நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் ஆண்டகை அவர்களின் இடக்கஸ்தலத்திற்கு சென்று தன் மகனார் அவர்கள் ஸலாம் கூற அதற்கு உடனடியாக பதில் வந்தது. “அல்லாஹ்வில் அழிந்த அவ்லியாக்களுக்கு மரணம் ஏது அழிவு ஏது” அவர்கள் இப்போதும் இனி எப்போதும் உயிருடனே இருப்பார்கள். அவ்லியாக்களை எதிர்ப்போர்க்கு அருளுமில்லை, பொருளுமில்லை.
“நாகூர் நகர்  செல்வோம்”
“நாயகத்தின் நல்லருளைப் பெருவோம்”
RELATED ARTICLES

Most Popular

Recent Comments