தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
தொடர் – 01
இறைஞானிகளிற் சிலர் சில நேரங்களில் மட்டும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவார்கள். ஒரு சமயம் ஒரு கருத்துக் கூறுவார்கள். இன்னொரு சமயம் முதலில் கூறிய கருத்துக்கு முரணான கருத்தும் கூறிவிடுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறுவதால் அவர்கள் மீது தவறான எண்ணம் எங்களின் உள்ளங்களில் ஏற்பட்டுவிடக் கூடாது. நான் இங்கு குறிப்பிடுவது வலீமாரின் எதிரிகளான வஹ்ஹாபிகள் போன்ற வழி தவறியவர்களையல்ல. வலீமாரின் நேசர்களையே குறிப்பிடுகிறேன். இவர்களையே காப்பாற்ற வேண்டும். அவர்களையல்ல. ஏனெனில் அவர்கள் வலீமாரை எதிர்ப்பவர்கள். அவர்கள் வழி தவறிப் போனவர்கள். அவர்கள் எதிர்ப்பு எனும் சேறில் விழுந்து உடலும், உடையும் அசுத்தமானவர்கள். அவர்களைக் காப்பாற்றுதல் என்பது அர்த்தமற்றதாகும்.
எனவே, வலீமார் மீது நல்லெண்ணம் கொண்டு அவர்கள் மீது அன்பு வைத்துள்ளவர்களைக் கெடுத்து அவர்களை விட்டும் பிரித்து வைப்பதற்கே ஷெய்தான் முயற்சிப்பான். ஆகையால் அவனின் வழிகேட்டில் விழுந்து விடாமல் இவர்களையே நாம் காப்பாற்ற வேண்டும்.
கடலுக்குச் செல்பவர்களையே புத்தி கூறி அனுப்பி வைக்க வேண்டுமேயன்றி கடலில் விழுந்து செத்துப் போனவனுக்கு புத்தி கூறிப் பயனில்லை. ஆகையால் வலீமாரை நேசிப்பவர்களுக்கும், அவர்களை நெருங்கிக் கொண்டிருப்பவர்களுக்குமே நாம் புத்தி சொல்ல வேண்டும்.
“விலாயத்” எனும் ஒலித்தனம் பெற்ற வலீமார் அனைவரும் படைப்பு படைத்தவன் தானானதேயன்றி அவனுக்கு வேறானதல்ல என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இதுவே அவர்களின் அடிப்படைக் கொள்கையுமாகும். அவர்களின் கொள்கைப் பிரச்சாரமும் இதுதான்.
ஆயினும் சில நேரங்களில் இதற்கு மாறாகவும் அவர்கள் சொல்லிவிடுவார்கள். அதாவது படைப்பு படைத்தவனுக்கு வேறானதென்றும் சொல்லிவிடுவார்கள்.
இதனால் அவர்கள் மீது நேசம் கொண்டு அவர்களை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை கெடுத்துவிடுவதற்கு ஷெய்தான் இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவான். ஆகையால் இவ்விடயத்தில் வலீமாரை நேசிப்போர் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுதல் அவசியம்.
வலீமார் சில நேரங்களில் இவ்வாறு முரணாகப் பேசுவதை ஷெய்தான் பயன்படுத்தி அவர்களை வழிகெடுத்துவிடச் சந்தர்ப்பம் உண்டு என்பதை உணர்ந்த இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் வலீமார் சில நேரம் அவ்வாறு பேசியது ஏன் என்பதற்கு விளக்கம் கூறி வலீமாரை நேசிப்போர் வழிதவறிவிடாமலிருக்க வழி காட்டித் தந்துள்ளார்கள். அதை இங்கு எழுதுகிறேன்.
قال الشّيخ محي الدين ابن عربي فى الباب الثاني والسبعين والثلاثمأة بعد كلام طويل، وبالجملة فالقلوب به هائمةٌ، والعقُول فيه حائرةٌ، يريد العارفون أن يفصلوه تعالى بالكليّة عن العالم من شِدّة التّنزيه فلا يقدِرون، ويريدون أن يجعلوه عينَ العالم من شِدّة القرب فلا يتحقّق لهم فهمٌ على الدّوام متحيّرون، فتارةً يقولون هو، وتارة يقولون مَا هُو، وبذلك ظهرتْ عظمتُه تعالى، اهـ،
அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “புதூஹாத்” எனும் நூல் 372ம் பாடத்தில் நீண்ட விபரத்தின் பின் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
“பொதுவாக அல்லாஹ்வின் விடயத்தில் மனிதர்களின் உள்ளங்கள் காதல் பைத்தியம் பிடித்துப் போய்விட்டன. அவன் விடயத்தில் புத்திகள் தடுமாறிப் போய்விட்டன. இறைவன் “தன்ஸீஹ்” பரிசுத்தத்தில் கடும் பரிசுத்தமானவனாதலால் அவன் வேறு படைப்பு வேறு என்று சொல்ல நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு அவர்களால் முடியாமலுள்ளது. இறைவன் படைப்புக்கு நெருங்கியிருப்பதில் அவன் கடுமையாக நெருங்கியிருப்பதால் அவன் படைப்பு தானானவன் என்றும் சொல்ல நினைக்கிறார்கள். ஆனால் அதற்கும் அவர்களால் முடியாமலுள்ளது. இதனால் படைப்பும், படைத்தவனும் ஒன்றுதான் என்று சொல்ல முடியாமலும், அல்லது அதற்கு வேறானவன்தான் என்று சொல்ல முடியாமலும் தடுமாறியவர்களாவே உள்ளார்கள். ஒரு சமயம் எல்லாம் அவன்தான் என்று கூறுவார்கள். இன்னொரு சமயம் எல்லாம் அவனில்லை என்று சொல்வார்கள். இன்னுமொரு சமயம் எல்லாம் அவனும்தான் இல்லையும்தான் என்று சொல்வார்கள். இதன் மூலமே – எவ்வாறு சொல்வது? என்பது கொண்டு அவனின் வலுப்பமும் வெளியாகிறது” என்று கூறியுள்ளார்கள்.
அல்யவாகீத், பாகம் 01, பக்கம் 58, இமாம் ஷஃறானீ
மேலும் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ அவர்கள் மேற்கண்ட தனது கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் பின்வருமாறு கவியில் கூறியுள்ளார்கள்.
وَمِنْ عَجَبِيْ أَنِّيْ أَحِنُّ إِلَيْهِمْ – وَأَسْئَلُ عَنْهُمْ دَائِمًا وَهُمُوْ مَعِيْ
وَتَبْكِيْهِمْ عَيْنِيْ وَهُمْ فِى سَوَادِهَا – وَتَشْتَاقُهُمْ رُوْحِيْ وَهُمْ بَيْنَ أَضْلُعِيْ
“எனது அதிசயம் என்னவெனில் எனது குடும்பம் என்னுடனேயே இருக்கும் நிலையில் அவர்களைக் காண வேண்டுமென்று நான் தவிப்பதும், அவர்களைப் பற்றி எந்நேரமும் வினவிக் கொண்டிருப்பதுமேயாகும்.
எனது குடும்பம் என் கண்ணின் இரு மொழியில் இருக்கும் நிலையில் அவர்களை நான் நினைத்து அழுவதும், அவர்கள் எனது விலா எலும்புகளுக்கிடையில் இருக்கும் நிலையில் எனதுயிர் அவர்களை ஆசை வைப்பதுமேயாகும்” என்று பாடியுள்ளார்கள்.
மேற்கண்ட இப்னு அறபீ அவர்களின் பாடல் முதலில் சொல்லி வந்த அதே கருத்தை உள்வாங்கியதாயிருப்பது ஆய்வாளர்களுக்கு மறைவானதல்ல.
தலைப்பின் சுருக்கம் என்னவெனில், இறைஞானிகளினதும், ஸூபீ மகான்களினதும், தத்துவ வாதிகளினதும் அசைக்க முடியாத கொள்கை – அகீதா – என்னவெனில் படைப்புக்கள் எல்லாம் அல்லாஹ் தானானவையேயன்றி அவனுக்கு வேறானவையல்ல என்பதேயாகும். இதில் எள்ளளவும் அவர்கள் சந்தேகம் கொள்வதுமில்லை. அவர்களின் கொள்கை வழியிற் செல்லும் ஸூபிஸ சமுகம் சந்தேகப்படுவதுமில்லை.
எனினும் அல்லாஹ்வின் இரு நிலைகளான தன்ஸீஹ் – தஷ்பீஹ் நிலைகளில் சில சமயம் “தன்ஸீஹ்” நிலை வலீமாரில் மிகைத்தும் செயல்படும். “தன்ஸீஹ்” நிலை என்றால் சாதாரணமாக பரிசுத்த நிலை என்று சொல்லப்படும். இது ஒரு சுருக்கமான பொருள். இந்நிலை பற்றி சற்று விரிவாகச் சொல்வதாயின் அல்லாஹ்வின் பரிசுத்த “தாத்” அல்லது “வுஜூத்” உள்ளமை என்பது படைப்பாக வெளியாகுமுன் இருந்த நிலையாகும். இந்நிலை இறைஞானிகளிடம் “தன்ஸீஹ்” பரிசுத்த நிலை எனப்படும்.
இந்நிலைக்கு எதிரான நிலை “தஷ்பீஹ்” என்று சொல்லப்படும். அதாவது அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை படைப்பாக வெளியான பின் உள்ள நிலையாகும்.
இரண்டு நிலைகளும் அவனின் உள்ளமையின் நிலைகளேயாகும்.
எதுவெல்லாம் அல்லாஹ்வுக்கு இல்லையென்று “அகீதா” கொள்கை அறிவில் சொல்லப்பட்டதோ அதுவெல்லாமே அவனில் இல்லை என்று நம்புதல் “தன்ஸீஹ்” நிலையை நம்புவதாகும். இதேபோல் எதெல்லாம் அவனில் இல்லை என்று சொல்லப்பட்டதோ அதெல்லாம் அவனில் உண்டு என்று நம்புதல் “தஷ்பீஹ்” நிலையை நம்புவதாகும்.
ஒரு விசுவாசி அல்லாஹ்வை நம்புவதாயின் இப்போது நான் எழுதிய விபரப்படி நம்ப வேண்டும். இன்றேல் பாதியை நம்பியும், பாதியை நம்பாமலும் விட்டதாகிவிடும். இரு நிலைகளையும் உள்வாங்கியதே அல்லாஹ்வின் “தாத்” அல்லது “வுஜூத்” ஆகும்.
இதுகுறித்து “இன்ஸான் காமில்” நூலாசிரியர் அஷ்ஷெய்கு அப்துல் கரீம் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் குறித்த நூலில்
كُلَّمَا نَفَيْتَهُ فِى التَّنْزِيْهِ فَقَدْ أَثْبَتَّهُ فِى التَّشْبِيْهِ
என்று கூறியுள்ளார்கள். இதன் பொருள்:
“அல்லாஹ்வின் “தன்ஸீஹ்” நிலையில் எவையெல்லாம் அவனுக்கு இல்லையென்று சொன்னாயோ அவையெல்லாம் “தஷ்பீஹ்” நிலையில் அவனுக்கு உண்டு என்று சொல்” என்று கூறியுள்ளார்கள்.
மேற்கண்ட இவ்விரு நிலைகள் தொடர்பாக அஷ்ஷெய்கு இறைஞானி பீர் முஹம்மத் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகையில்,
கண்டதும் கேட்டதுமல்ல, அங்கு
கருதி முடிந்த தலங்களுமல்ல
அண்டமும், பிண்டமும் அல்ல
அகர வுகார சிகாரமுமல்ல
மண்டலம் மூன்றதுமல்ல
மறைவாக நின்றாடும் வாசியுமல்ல
அன்றாதி எங்கும் நிறைந்து – என்னை
ஆளும் றஹ்மானைக் கண்டு கொண்டேனே!
(இது தன்ஸூஹ் நிலை)
கண்டதும் கேட்டதும்தானே – அங்கு
கருதி முடிந்த தலங்களும்தானே
அண்டமும் பிண்டமும்தானே
அகார வுகார சிகாரமும்தானே
மண்டலம் மூன்றதும்தானே
மறைவாக நின்றாடும் வாசியும்தானே
அன்றாதி எங்கும் நிறைந்து – என்னை
ஆளும் றஹ்மானைக் கண்டு கொண்டேனே!
(இது தஷ்பீஹ் நிலை)
தொடரும்…