தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
லா ஸலாம அலைக்கும், வலா கலாம மஅகும்.
உங்களின் உச்சக்கட்ட அறியாமையாலும், அவசரப்பட்டும், காத்தான்குடி உலமாக்களில் வஞ்சக நெஞ்சுடையோர் சிலரின் தூண்டுதலாலும் எனக்கும், எனது ஆதரவாளர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” கொடுத்துவிட்டீர்கள். அதோடு எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்றும் சொல்லிவிட்டீர்கள். மௌலவீ பாறூக் காதிரீயின் கொலை இதற்கு சான்றாகும். நானும், எனது கருத்தைச் சரி கண்டவர்களும் “முஃமின்” விசுவாசிகளா? இல்லையா என்பதை அல்லாஹ்தான் அறிந்தவன். அல்ஹம்துலில்லாஹ்!
இதேபோல் நீங்கள் அனைவரும் உலமா சபைக்குள் நுழைந்தபின் எவரிடமாவது எதற்காவது லஞ்ச சந்தோஷம் பெற்றீர்களா? இல்லையா? என்பதையும் எல்லாமாய் வெளியாகியுள்ள எல்லாமறிந்த ஏகனே அறிவான். அல்ஹம்துலில்லாஹ்! லஞ்சம் எடுத்தவன்தான் கொடுப்பான் என்ற மூத்தவர்கள் சொல்லின் அடிப்படையில் வட்டிலப்ப வரலாறையும் நோக்கலாமா? இல்லையா? என்பதையும் அல்லாஹ்தான் அறிவான்.
“ஷரீஆ”வை நிலை நாட்ட வேண்டும். இன்றேல் அல்லாஹ் எம்மைத் தண்டிப்பான் என்று அல்லாஹ்வைப் பயந்து நீங்கள் “பத்வா” வழங்கவில்லை. மாறாக ஸூபிஸ சமுகத்தை சர்வதேச ரீதியில் அவமானப்படுத்த வேண்டும் என்ற பொறாமையினாலும், நீங்கள் அனைவரும் வஹ்ஹாபிஸத்திற்கு ஆதரவானவர்களாதலால் ஸூபிஸத்தை வளரவிடக் கூடாதென்ற நரிப்புத்தியினாலுமே “பத்வா” வழங்கினீர்கள்.
நாங்கள் அல்லாஹ்வைப் பயந்து “பத்வா” வழங்கவில்லை என்பதற்கும், நீங்கள் சொல்வது போல் பொறாமையினால்தான் வழங்கினோம் என்பதற்கும் என்ன ஆதாரமென்று என்னிடம் நீங்கள் கேட்க விரும்புகிறீர்களா? இதோ பதில் வருகிறது. சீறாதீர்கள். நீங்கள் என்னை விசாரிக்காமலும், பல தவணைகள் பின்போட்டு இப்பிரச்சினைக்கு முடிவு காண நினைக்காமலும் அவசரப்பட்டு “பத்வா” கொடுத்தீர்களே இது தவிர வேறென்ன ஆதாரம் தேவை? இது மட்டுமே எவராலும் அசைக்க முடியாத ஆதாரமாகும்.
எதிரியும், வழக்காளியும் விவரமாக விசாரிக்கப்பட்டபின் சொல்லப்படும் தீர்ப்புதான் ஷரீஆ அடிப்படையிலும், உலக நீதித்துறை அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது உங்களுக்குத் தெரியாதா? இதற்கு நீங்கள் மாறு செய்துவிட்டீர்கள். அதோடு மதம் மாற்றி “பத்வா” வழங்கும் அதிகாரம் இல்லாதிருந்தும் செய்துவிட்டீர்கள்.
நீங்கள் என்னை விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கியுள்ளதால் “ஷரீஆ” அடிப்படையிலும், உலக நீதித்துறை விதிப்படியும் உங்கள் “பத்வா” செல்லுபடியற்றதாய் விட்டது. சட்டப்படி உங்கள் “பத்வா” அமுலில் இல்லை. இது உங்களுக்குத் தெரியும். எனினும் மானம், மரியாதை காக்க நடிக்கிறீர்கள். இந்த நடிப்பு நிலைக்காது.
நீங்கள் அனைவரும் விசாரணைக்காக நீதி மன்றில் நிறுத்தப்பட வேண்டியவர்களாகிவிட்டீர்கள்.
நீங்கள் வஹ்ஹாபிஸத்திற்கு ஆதரவானவர்கள் என்று நான் கூறியதற்கு என்ன ஆதாரம் என்று கேட்க நினைக்கிறீர்களா? ஆதாரம் இதோ.
நீங்கள் புல்மோட்டை பள்ளிவாயலுக்கு அனுப்பி வைத்த கடிதத்தில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவானது தஃவா அமைப்புக்களில் தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமீ அமைப்புகளை சரியான அமைப்புகளாக அங்கீகரித்துள்ளதாக எழுதியுள்ளீர்கள்.
மேற்கண்ட இம்மூன்று அமைப்புக்களையும் ஏற்றுக் கொண்ட நீங்கள் தரீகா அமைப்புக்களையும், ஸுன்னத் வல் ஜமாஅத் அமைப்புக்களையும், ஸூபிஸ அமைப்புக்களையும் புறக்கணித்தது ஏன்? இதன் மூலம் நீங்கள் யார் என்பதை படம் பிடித்து காட்டிவிட்டீர்கள். கைலி அவிழ்ந்து காற்றில் பறந்த பின் தலைப்பாவை கழற்றி மானத்தை மறைக்கிறீர்கள்.
நீங்களும் நீங்கள் குறிப்பிட்ட அமைப்புக்களும் வஹ்ஹாபிகள் என்பதை நிறுவுவதற்கு எத்தனை ஆதாரங்கள் தேவையானாலும் நான் தருவதற்கு ஆயித்தமாயுள்ளேன்.
உலமா சபையின் பத்வா குழுவும், தலைவர் முப்தியும் நீதி மன்றில் நிறுத்தப்படுமுன் “பத்வா”வை எந்த ஒரு நிபந்தனையுமின்றி வாபஸ் பெறுங்கள். இன்றேல் சட்டத்தின் முன் தலைகுனிவதையும், அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாவதையும் தவிர உங்களுக்கு வேறொன்றுமில்லை.
குண்டுதாரிக் கொலைகாரனான வஹ்ஹாபிஸ தீவிரவாதி சஹ்றான் உங்கள் “பத்வா”வை ஆதாரமாகக் கொண்டே அவன் தாக்குதல் நடத்தியிருக்க வேண்டுமென்றும் மக்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அரசாங்கம் விசாரணைக் குழுவொன்றை நியமித்தால் உண்மை வெளியாகும்.
எனவே, முட்டிய பின் குனியாமல் முட்டுமுன் குனியுங்கள்.
பின்வரும் “பத் – துஆ” சாபத்துக்கான பிரார்த்தனை ஸெய்யிதுனா குத்புல் அக்தாப், “அல்பாஸுல் அஷ்ஹப்” ராஜாளிப் பறவை முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்றுஹு அவர்களுக்குரியது.
முஸ்லிம்களில் சிலராலும், முஸ்லிமல்லாதவர்களிற் பலராலும் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களின் போது அவர்கள் ஓதி வெற்றி பெற்ற “துஆ”தான் இது.
இன்று வஹ்ஹாபிகளும், ஸூபிஸம் தெரியாத ஸுன்னீ உலமாஉகளும் இணைந்து “ஸூபிஸம்” என்பது பொய்யென்றும், இஸ்லாமில் இல்லாததென்றும் சொல்லி வருகின்றார்கள்.
நாம் அவர்களுக்கு பதில் கூறாமல் இருப்பதும், அவர்களுக்கு எதிராக “துஆ” கேட்காமல் இருப்பதும் அவர்களுடன் இணைந்த ஸூபிஸ ஞானத்தை மறுத்த குற்றமாகிவிடும்.
எனவே நாமும் அவர்கள் போல் அட்டூழியம் செய்யாமல் குத்பு நாயகம் அவர்களின் வழியில் சென்று வெற்றி பெற காலையும், மாலையும் ஓதுவோம்.