தொடர் 01
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال: أن النبي صلى الله عليه وسلم قال لفاطمة رضي الله عنها: ‘ ما أخْرَجَكِ يَا فاطِمَةُ مِنْ بَيْتكِ؟ ‘ قالَت: أتيتُ أهلَ هذا البيت فَتَرَحَّمْتُ إِلَيْهِمْ مَيِّتَهُمْ أو عزَّيْتُهم به، (رواه أبو داؤود – 3123، النسائي – 27-4)
“நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் வழியில் தங்களின் அன்பு மகள் பாதிமா றழியல்லாஹு அன்ஹா அவர்களைக் கண்ட சமயம் எதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள் இந்த வீட்டவர்களில் ஒருவர் மரணித்ததற்காக இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக – சலிப்பாற்றுவதற்காக வந்தேன்” என்று பதிலளித்தார்கள்.
(அபூதாவூத் 312, நஸாயீ 04-27)
عن عمرو بن حزم رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ‘ ما مِنْ مُؤْمِنٍ يُعَزِّي أخاهُ بِمُصِيْبَتِهِ إِلاَّ كَساهُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ حُلَلِ الكَرَامَةِ يَوْمَ القِيامَةِ ‘. (ابن ماجه – 1601، البيهقي – 4-59)
நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள். “யாராவது ஒரு முஸ்லிம் தனது சகோதரனுக்கு நேர்ந்த துன்பத்திற்காக அவனை “தஃஸியத்” சலிப்பாற்றினால் அவனுக்கு மறுமையில் சங்கை – கௌரவம் ஆடைகள் அணிவிப்பான்.
(இப்னு மாஜஹ் – 1601, பைஹகீ 4-59)
மேற்கண்ட இரு நபீ மொழிகள் மூலமும் துன்பம் நேர்ந்த ஒருவனுக்கு “தஃஸியத்” ஆறுதல் கூறுதல், சலிப்பாற்றுதல் “ஸுன்னத்” நல்ல காரியம் என்பது விளங்கப்படுகின்றது.
முதலாவது நபீ மொழி மூலம், மரணித்த பெண்களுக்காகவோ, அல்லது ஆண்களுக்காகவோ உயிருடனுள்ள உறவினர்களை “தஃஸியத்” செய்வது – சலிப்பாற்றுவது “ஸுன்னத்” என்பது விளங்கப்படுகின்றது. ஆண்கள் ஆண்களையும், பெண்கள் பெண்களையும் சலிப்பாற்றலாம். மஹ்றமான – ஆண்களும், பெண்களும் சலிப்பாற்றலாம். ஆறுதல் கூறலாம்.
இரண்டாவது நபீ மொழி மூலம் மரணத்திற்காக மட்டுமன்றிப் பொதுவாக “முஸீபத்” துன்பம் ஏற்பட்டாலும் “தஃஸியத்” செய்ய வேண்டும் என்பது விளங்கப்படுகிறது.
ஏனெனில் இரண்டாவது நபீ மொழியில் “முஸீபத்” துன்பம் என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளதேயன்றி மரணம் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
ஆகையால் மனிதனுக்கு மரணம், துன்பம், நோய், சோதனை போன்ற எந்த கஷ்ட நஷ்டம் ஏற்பட்டாலும் அதற்காக “தஃஸியத்” சலிப்பாற்றுதல் செய்யலாம். ஆயினும் ஒரு முஸ்லிமின் மரணம் காரணமாக சலிப்பாற்றுவதற்கு மட்டும்
أَحْسَنَ اللهُ عَزَائَكَ وَغَفَرَ لِمَيِّتِكَ وَجَبَرَ مُصِيْبَتَكَ
என்று சொல்வது “ஸுன்னத்” ஆகும். அதாவது நற்செயலாகும்.
இந்த வசனம் ஒரு முஸ்லிம் மரணித்ததற்காக அவரின் உறவினர்களான முஸ்லிம்களை சலிப்பாற்றும் போது மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். இது
تَعْزِيَةُ الْمُسْلِمِ بِالْمُسْلِمِ
என்று சொல்லப்படும். இதன் பொருள் மரணித்த முஸ்லிமுக்காக உயிருள்ள முஸ்லிமை சலிப்பாற்றல் எனப்படும்.
மரணித்தவன் “காபிர்” ஆக இருந்து அவனின் முஸ்லிமான உறவினரை சலிப்பாற்றும் போது
أَعْظَمَ اللهُ أَجْرَكَ وَأَحْسَنَ عَزَائَكَ
உனது மரணித்தவரின் பாவத்தை அல்லாஹ் மன்னிப்பானாக என்ற வசனம் பாவிக்கலாகாது. இது
تَعْزِيَةُ الْمُسْلِمِ بِالْكَافِرِ
என்றும் சொல்லப்படும். இதன் பொருள் மரணித்த காபிருக்காக உயிருள்ள முஸ்லிமை சலிப்பாற்றுதல் எனப்படும்.
இதற்குப் பின்வருமாறு உதாரணம் சொல்லலாம்.
மரணித்த காபிர் ஒருவனின் உறவினன் முஸ்லிமாயிருந்து அவனை சலிப்பாற்றுதல் போன்று. மரணித்த பொன்னம்பலத்தின் அண்ணன் முஸ்தபா முஸ்லிமாயிருப்பது போன்று.
மரணித்தவன் முஸ்லிமாயிருந்து அவனின் உறவினன் காபிர் ஆக இருந்தால் أَحْسَنَ اللهُ عَزَائَكَ وَغَفَرَ لِمَيِّتِكَ என்று சலிப்பாற்றலாம். இதன் பொருள் அல்லாஹ் உனக்கு அழகிய பொறுமையை தருவானாக! மரணித்தவனின் பாவத்தை மன்னிப்பானாக! என்று சொல்ல வேண்டும்.
உதாரணமாக இப்றாஹீம் என்பவர் மரணித்ததற்காக அவரின் உறவினன் அழகப்பாவை சலிப்பாற்றுதல் போன்று.
ஒரு காபிர் மரணித்ததற்காக அவரின் உறவினனான ஒரு காபிரை சலிப்பாற்றும் போது
أَخْلَفَ اللهُ عَلَيْكَ وَلَا نَقَصَ عَدَدَكَ
இது
تَعْزِيَةُ الْكَافِرِ بِالْكَافِرِ
ஒரு காபிர் மரணித்ததற்காக அவனின் உறவினனான காபிரை சலிப்பாற்றுதல் எனப்படும்.
மொத்தம் நான்கு வகை உண்டு.
ஒன்று – ஒரு முஸ்லிம் மரணித்ததற்காக அவனின் உறவினனான முஸ்லிமை சலிப்பாற்றுதல்.
இரண்டு – ஒரு காபிர் மரணித்ததற்காக அவனின் உறவினன் முஸ்லிமை சலிப்பாற்றுதல்.
மூன்று – ஒரு முஸ்லிம் மரணித்ததற்காக அவனின் உறவினன் காபிர் ஒருவரை சலிப்பாற்றுதல்.
நான்கு – காபிர் மரணித்ததற்காக அவனின் உறவினன் காபிர் ஒருவனை சலிப்பாற்றுதல்.
மேற்கண்ட நான்கு வகைகளும் இஸ்லாம் அனுமதித்தவையேயாகும்.
ஒரு முஸ்லிமுக்கு எந்த வகையிலேனும் ஒரு காபிர் நண்பனாயிருந்து அவன் மரணித்தால் அந்த முஸ்லிம் மரணித்த காபிரின் உறவினரை சலிப்பாற்ற வேண்டும். அதற்கு மரணித்தவனின் வீடு செல்ல வேண்டும். இதில் மார்க்க விரோதம் கிடையாது. “காபிர்”களின் வீடுகள், கடைகளில் சாப்பிடுவதோ, குடிப்பதோ “ஹறாம்” விலக்கப்பட்டவையல்ல. எனினும் முடிந்தவரை தவிர்த்துக் கொள்வது விரும்பத்தக்கது.
“தஃஸியத்” சலிப்பாற்ற வேண்டியவர்கள் மரணித்தவனின் உறவினர்கள் மட்டுமேயாவர். எனினும் மற்றவர்களைச் சலிப்பாற்றுவதால் குற்றம் வராது. எனினும் சலிப்பில்லாதவனை சலிப்பாற்றுதல் என்பது வெறும் நடிப்பேதான்.
ஒரு முஸ்லிம் மரணித்தால் மட்டுமே அவனுக்காக அவனின் உறவினர்களை சலிப்பாற்றும் போது وَغَفَرَ لِمَيِّتِكَ உன்னுடைய மரணித்தவனின் பாவத்தை அல்லாஹ் மன்னிப்பானாக என்ற வசனம் பாவிக்க வேண்டும். மரணித்தவன் “காபிர்” ஆக இருந்தால் மட்டும் இந்த வசனம் பயன்படுத்தி சலிப்பாற்றுதல் கூடாது. அது “ஹறாம்” விலக்கப்பட்ட தண்டனைக்குரிய குற்றமாகும்.
“காபிர்”கள் படைப்புக்களை முன்னிறுத்தி வணக்கம் செய்பவர்களும், ஹக்கு வேறு, கல்கு வேறு என்று சொல்பவர்களுமாவர். இவ்விரண்டும் இணை வைத்தலாகும். “ஷிர்க்” ஆகும். “ஷிர்க்” என்பது மன்னிக்க முடியாத பாவமென்று அல்லாஹ் திருக்குர்ஆனில் தெளிவாக கூறிவிட்டானாகையால் அத்தகையோரின் “ஷிர்க்” என்ற பாவத்தை மன்னிக்குமாறு “துஆ” செய்வது அல்லாஹ்வை நேரடியாக எதிர்ப்பது போன்ற பாவச் செயலாகும். இதை அவன் மன்னிக்க மாட்டான். பாவத்தை மன்னிக்குமாறு மட்டும்தான் அவர்களுக்கு பிரார்த்திப்பது குற்றமேயன்றி அவர்களின் படிப்பு, பொருளாதாரம், ஆரோக்கியம் முதலானவற்றுக்காக பிரார்த்திப்பது குற்றமாகாது.
அவர்கள் விக்கிரகம், சிலை போன்ற படைப்பை முன்வைத்து வணங்குவதும், படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்று நம்புவதுமே மன்னிக்க முடியாத குற்றமென்று நான் விளங்குகிறேன்.
وَأَمَّا لَفْظَةُ التَّعْزِيَةِ فَلَا حَجْرَ فِيْهِ، فَبِأَيِّ لَفْظٍ عَزَّى حَصَلَتْ،
சலிப்பாற்றும் வசனங்கள் பற்றி முன்னால் விபரமாக எழுதியுள்ளேன். அவற்றை மீண்டும் எழுதுகிறேன்.
أَعْظَمَ اللهُ أَجْرَكَ وَأَحْسَنَ عَزَائَكَ وَغَفَرَ لِمَيِّتِكَ
இதன் பொருள்: அல்லாஹ் உனது கூலியை வலுப்பமாக்கி வைப்பானாக! உனக்கு அழகிய பொறுமையை தருவானாக! உனது மையித்தின் பாவத்தை மன்னிப்பானாக!
وَأَحْسَنَ عَزَائَكَ
என்றால் وَرَزَقَكَ الصَّبْرَ الْجَمِيْلَ உனக்கு அழகிய பொறுமையை தருவானாக! என்று பொருள் வரும்.
சலிப்பாற்றும் அறபு வசனங்கள் தெரியாதவர்கள் அதன் பொருளைத் தமிழில் சொல்லலாம். முஸ்லிம் அல்லாதவர்களிடம் சலிப்பாற்றும் போது அறபு வசனத்தை தவிர்த்து அதன் பொருளை தமிழில் கூறுவது பொருத்தமென்று நான் நினைக்கிறேன்.
“தஃஸியத்” செய்யும் போது மேற்கண்ட அறபு வசனங்களை சொல்ல வேண்டும். அல்லது அதன் பொருளைக் கூற வேண்டும். இருவர் கை கோர்த்து “முஸாபஹா” செய்வது பொதுவான “ஸுன்னத்” ஆகுமேயன்றி “தஃஸியத் முஸாபஹா” என்று ஒன்றில்லை. அவ்வாறு செய்வது குற்றமுமில்லை. “பித்அத் ழலாலா” வழிகேடான “பித்அத்” அல்ல.
ஆயினும் நமதூர் மக்கள் “தஃஸியத்” செய்யும் போது பெண்கள் பெண்களுடனும், ஆண்கள் ஆண்களுடனும் கை கோர்த்து “முஸாபஹா” செய்து கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது “ஸலவாத்” சொல்கிறார்கள். இதை நான் தவறென்று சொல்லவில்லை. ஆயினும் “முஸாபஹா” செய்வதும், ஸலவாத் சொல்வதும் சலிப்பாற்றுதலோடு சம்பந்தப்பட்டவையல்ல என்றே சொல்கிறேன். இதனால் வஹ்ஹாபிகள் போல் “ஸலவாத்” சொல்வதை நான் வெறுக்கவில்லை. “ஸலவாத்” என் உயிர்.
ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் “முஸாபஹா” செய்து “ஸலவாத்” சொல்லி முடிப்பதற்கு சுமார் இரண்டு நிமிடங்கள் தேவைப்படும். ஆண்களோ முப்பது நொடிக்குள் முடித்துவிடுவார்கள்.
எனவே “தஃஸியத்” சலிப்பாற்றுதல்தான் பிரதான நோக்கமேயன்றி “முஸாபஹா” செய்து “ஸலவாத்” சொல்லிக் கொண்டிருப்பதல்ல. சலிப்பாற்றும் வசனங்களை எந்த மொழியிலேனும் சொல்வதே அதன் இலட்சியமாகும்.
சலிப்பாற்றும் போது சிரித்துக் கொண்டு குறித்த வசனங்களை கூறாமல் பக்தியுடன் கூற வேண்டும்.
தொடரும்…