Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஒருவன் தனது பெற்றோர், பிள்ளைகளை விட பெருமானார் அவர்களை அதிகம் நேசிப்பதற்கான வழி என்ன?

ஒருவன் தனது பெற்றோர், பிள்ளைகளை விட பெருமானார் அவர்களை அதிகம் நேசிப்பதற்கான வழி என்ன?

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! தரீகாவாதிகளே! ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகளே!

பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் எமது உயிரினும் மேலானவர்கள் என்று மீலாத் விழாக்களிலும், றபீஉனில் அவ்வல் மாதம் பள்ளிவாயல்களில் நடைபெறுகின்ற “மவ்லித்” சபைகளிலும் உலமாஉகள் பேசுகிறார்கள். அவர்கள் என்ன கருத்தில் அவ்வாறு பேசுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. எதார்த்தம் புரிந்துதான் அவ்வாறு பேசுகிறார்களா? அல்லது எதார்த்தம் புரியாமல் பேசுகிறார்களா? என்பது எமக்குப் புரியவில்லை. எதார்த்தம் புரிந்துதான் நாம் பேசுகின்றோம் என்று அவர்கள் சொல்வார்களாயின் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற காலேஜில் படித்தவர்களாகவே இருக்க வேண்டும். அந்தக் கல்லூரியில் படிக்காதவர்களால் “பெருமானார் எங்களின் உயிரினும் மேலானவர்கள்” என்று பேச முடியாது. இதற்கான விளக்கம் பின்னால் வரும்.

இதற்கான விளக்கத்தை ஒரு நபீ மொழியை ஆதாரமாக வைத்து விளக்குகிறேன்.

عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ»

உங்களில் ஒருவனுக்கு அவனின் பெற்றோரை விடவும், அவனின் பிள்ளைகளை விடவும், மற்றும் மனிதர்கள் அனைவரை விடவும் அவனுக்கு நான் நேசமுள்ளவனாக – பிரியமுள்ளவனாக ஆகும்வரை உங்களில் எவரும் விசுவாசியாக முடியாது என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். (ஆதாரம் – புகாரீ)

மேற்கண்ட இந்த நபீ மொழிப்படி ஒரு மனிதனுக்கு தனது பெற்றோர், பிள்ளைகள், மற்றும் மனிதர்கள் அனைவரும் விருப்பமானவர்களாயிருப்பதை விட பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மிக – அதிக விருப்பமுள்ளவர்களாக ஆகும் வரை அவன் விசுவாசியாக மாட்டான் என்ற தத்துவம் விளங்கப்படுகின்றது.

இங்கு ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டும். அதாவது நபீ மொழியில் வந்துள்ள أَحَبَّ என்ற சொல்லுக்கு அதிக விருப்பமுள்ளவன் என்றுதான் பொருள் வரும். இது மொழியிலக்கண விதியாகும். விருப்பமுள்ளவன் என்று மட்டும் பொருள் வராது.

இதன்படி ஒரு மனிதனுக்கு நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “மஹப்பத்” நேசம் தனது பெற்றோர்கள், பிள்ளைகள், மற்றும் மனிதர்கள் மீது தனக்குள்ள நேசத்தை விட மிக அதிகமானதாயிருக்க வேண்டும்.

இது சாத்தியமா?

ஒருவன் தனது பெற்றோர் மீதும், பிள்ளைகள் மீதும் வைத்துள்ள பாசமும், நேசமும் இரத்த பாசமாகும். ஏனைய மனிதர்கள் மீது வைத்துள்ள நேசமும், பாசமும் இரத்த பாசத்தோடு தொடர்பற்ற சாதாரண பாசமாகும்.

ஒரு மனிதன் இரத்த பாசமற்ற, மனிதர்களை நேசிப்பதை விட அதிகமாக நபீ பெருமான் அவர்களை நேசிப்பதற்கு சாத்தியமுண்டு. ஆயினும் இரத்த பாசமுள்ள பெற்றோர், பிள்ளைகளை விட அதிகமாக நேசிப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் எந்த ஒரு மனிதனாயிருந்தாலும் அவனால் தனது பெற்றோர், பிள்ளைகளை விட பெருமானாரை அதிகமாக நேசிக்க முடியாமைக்கு காரணம் பெருமானார் அவர்களுக்கும், எமக்கும் இரத்த பாசமில்லாதிருப்பதேயாகும்.

குருதியுடன் தொடர்புள்ள பாசத்திற்கும், அதோடு தொடர்பற்ற பாசத்திற்கும் வித்தியாசமுண்டு. குருதியுடன் தொடர்புள்ள பாசம் இயற்கையானது. ஏனைய பாசம் இயற்கையானதல்ல.

இந்த நிலையில் இயற்கையான குருதிப் பாசமுள்ள பெற்றோரை நேசிப்பதை விடவும், பிள்ளைகளை நேசிப்பதை விடவும் நபீ பெருமானை அதிகமாக நேசிப்பதானது சாத்தியமற்றதாகும். அசாத்தியமான ஒன்றை செய்யுமாறு பெருமானார் அவர்கள் எவருக்கும் கட்டளையிடமாட்டார்கள்.

பெருமானார் அவர்களின் இரத்தத்தோடு தொடர்புள்ள அவர்களின் வழித் தோன்றல்களான அவர்களின் பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் தமது பெற்றோரை விடவும், தமது பிள்ளைகளை விடவும் அதிகமாக அவர்களை நேசிப்பதற்கு வாய்ப்பும், சாத்தியமும் உண்டு. அவர்கள்தான் “ஸாதாத்”மார் என்று அழைக்கப்படுவர். அவர்களுக்கு மட்டுமே மேற்கண்ட நபீ மொழியின்படி தமது பெற்றோர், பிள்ளைகளை விட பெருமானார் அவர்களை அதிகம் நேசிப்பதற்கு சாத்தியமுண்டு.

மேற்கண்ட இந்த நபீ மொழி பெருமானாரின் வழித் தோன்றலுக்காக மட்டும் சொல்லப்பட்டதல்ல. அவர்களுக்கு அவ்வாறு சொல்ல வேண்டிய அவசியமுமில்லை.

எனவே மேற்கண்ட நபீ மொழி பொதுவாகச் சொல்லப்பட்டதேயன்றி எவரையும் குறித்துச் சொல்லப்பட்டதல்ல என்பதை கருத்திற் கொண்டு ஆய்வு செய்தால் அவர்களின் வழித்தோன்றல்கள் அல்லாதவர்கள் தமது பெற்றோரையும், பிள்ளைகளையும் விட பெருமானார் அவர்களை நேசிப்பதற்கு என்ன வழி என்று ஆய்வு செய்தறிய வேண்டும்.

குருதித் தொடர்புள்ளவர்களுக்கிடையில் ஏற்படுகின்ற நேசமும், பாசமும் இயற்கையானதும், தவிர்க்க முடியாததுமாகும். மற்றவர்களுக்கிடையில் ஏற்படுகின்ற பாசமும், நேசமும் ஏதாவதொரு காரணத்தைக் கொண்டதாகவே இருக்கும்.

உதாரணமாக அப்துல்லாஹ்வுக்கும், அப்துல் ஜப்பாருக்கும் குருதித் தொடர்பு இருந்தால் அவர்களில் ஒருவன் மற்றவனை நேசிப்பதற்கு காரணம் ஒன்றுமே தேவையில்லை. நேசமும், பாசமும் தானாக வந்து விடும். ஆயினும் குறித்த இருவருக்குமிடையில் குறிப்பிட்ட பாசம் இல்லையாயின் ஒருவர் மற்றவரை நேசிப்பதாயின் ஏதாவதொரு காரணமிருக்க வேண்டும்.

நபீ வழித் தோன்றல்கள் தவிர மற்றவர்கள் நபீ பெருமானை தமது பெற்றொரை விடவும், பிள்ளைகளை விடவும் அதிகம் நேசிப்பதாயின் பெருமானார் அவர்களுக்கும், மற்றவர்களுக்குமிடையில் இரத்த பாசமில்லாது போனாலும் அவர்களுக்கிடையில் குருதிப் பாசத்தைவிட வேறொரு பாசம் இருக்க வேண்டும். அவ்வாறிருந்தால் மட்டுமே அவர்கள் தமது பெற்றோரையும், பிள்ளைகளையும் விட பெருமானாரை அதிகம் நேசிக்க வாய்ப்புண்டு.

எமக்கும், பெருமானாருக்குமிடையிலுள்ள குருதிப்பாசமில்லாத மற்ற பாசம் المحبة الذاتيّة என்றும், المحبّة الوجوديّة என்றும் சொல்லப்படும்.

இதன் விபரம் என்னவெனில், அல்லாஹ் படைப்புகளாக வெளியாயிருப்பது உண்மையாயினும் அவன் முதலில் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் ஒளியாக வெளியாகி அதன் பிறகுதான் அந்த ஒளியிலிருந்து ஏனையவற்றைப் படைத்தான்.

அல்லாஹ்வின் முதல் வெளிப்பாடு எம் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்தான். அவர்களிலிருந்தே ஏனையவற்றைப் படைத்தான்.

இந்த விபரத்தின் படி சகல படைப்புகளிலும், குறிப்பாக மனித படைப்பிலும் அல்லாஹ்வின் ஒளியும், முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் ஒளியும் உண்டு என்பதை மனிதன் புரிந்து கொண்டால் அவன் அல்லாஹ்வையும், நபீ பெருமானையும் தனது பெற்றோரையும், பிள்ளைகளையும், மற்றோரையும் விட அதிகம் நேசிக்க வாய்ப்பு வந்துவிடும். சாத்தியம் ஏற்பட்டு விடும்.

وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ

அல்லாஹ்வின் றஸூல் உங்களில் உள்ளார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்
(திருமறை – 49-7)

அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்கள் உங்களில் இருக்கின்றார்கள் என்பதற்கும், உங்களிலே இருக்கின்றார்கள் என்பதற்கும் வித்தியாசமுண்டு. இது சிந்தனையாளர்களுக்கு நன்றாகப் புரியும்.

ஒரு மனிதன் தன்னில் பெருமானார் அவர்கள் இருக்கின்றார்கள் என்பதையும், தனக்கும், அவர்களுக்கும் இடையில் இரத்த பாசத்தை விட அதிக பாசம் உண்டு என்பதையும் புரிந்து கொண்டானாயின் அவன் தனது பெற்றோரை விடவும், பிள்ளைகளை விடவும் பெருமானாரை அதிகம் நேசிப்பான் என்பதில் சந்தேகமில்லை.

பஞ்சால நூலாகிப் பாவாடையாவது போல் என்று ஓர் இறைஞானி பாடியது போல் பஞ்சு முதலில் துணியாக வெளியாவதில்லை. அது முதலில் நூலாகி அந்த நூல்தான் துணியாகிறது. இதேபோல் இறைவன் முதலில் “நூரே முஹம்மதிய்யா” முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் ஒளியாக வெளியாகி அந்த ஒளி மூலம் சர்வ படைப்புகளாகவும் வெளியாகியுள்ளான்.

எனவே, ஒரு மனிதன் தன்னாக வெளியானவன் அல்லாஹ்வும், றஸூல் அவர்களும்தான் என்பதை விளங்கிக் கொண்டானாயின் அவன் அல்லாஹ்வையும், றஸூல் அவர்களையும் தனது பெற்றோர், பிள்ளைகளை விட அதிகம் நேசிக்க வாய்ப்பு கிடைத்துவிடும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments