தொடர் – 01
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“தஸவ்வுப்” எனும் ஸூபிஸ ஞானம் கூறும் “வஹ்ததுல் வுஜூத்” மெய்ப் பொருள் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் “அல்கலிமதுத் தையிபா” எனும் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற இறை மறை கூறும் திருவசனம் உலகில் தோன்றிய முதல் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் முதல் அண்ணலெம் பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உள்ளிட்ட அனைவரும் சொன்ன, தமது சமுகத்திற்குப் போதித்த மார்க்கத்தின் மூல மொழியாகும். மூல மந்திரமாகும். திருக்கலிமாவாகும்.
நபீமாரில் இதை மொழியாத எவருமில்லை. 124,000 நபீமாரும் இதை மொழிந்தவர்களும், இது கூறும் தத்துவத்தை போதித்தவர்களுமேயாவர். இது குறித்தே நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்
وَأَفْضَلُ مَا قُلْتُ أَنَا، وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لاَ إِلَهَ إِلاَّ اللهُ، وَحْدَهُ، لاَ شَرِيكَ لَهُ»
நானும், எனக்கு முன் வாழ்ந்த நபீமார்களும் பேசிய பேச்சுக்களில் மிகவும் சிறந்தது “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹூ லா ஷரீக லஹூ” என்பதாகும் என்று கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: முஅத்தா
இவ்வசனத்தின் வெளிரங்கமாக பொருள் “இபாறதுன் நஸ்” வசனம் காட்டும் பொருள் “அல்லாஹ் அல்லாத எந்த “இலாஹ்” தெய்வமும் – நாயனும் இல்லை” என்பதும், இவ்வசனத்தின் உள்ரங்கமான பொருள் “தலாலதுன் நஸ்” “அல்லாஹ் அல்லாத எந்த ஒரு வஸ்த்தும் – படைப்பும் இல்லை” என்பதுமாகும்.
இவ்விரு கருத்துக்கள் மட்டும்தான் திருக்கலிமா தருகின்ற கருத்தாகும். இது தவிர வேறு கருத்து திருக்கலிமாவுக்கு இல்லை.
யாராவதொருவர் என்னிடம் திருக்கலிமாவுக்கு “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை” என்று சிலர் சொல்கிறார்களே என்று கேட்பாராயின் அவ்வாறு சொல்பவர்களிடமே அதற்கான ஆதாரமும், விளக்கமும் கேட்க வேண்டுமென்று நான் அவருக்குச் சொல்வேன்.
ஸூபிஸ வழி செல்லும் நாங்கள் இருக்கின்ற வசனத்திற்கு மட்டுமே பொருள் சொல்வோம். இல்லாத வசனம் ஒன்றை நாங்களாக கற்பனை செய்து சொல்லும் போலிகள் அல்ல. குருடர்களுமல்ல. ذَهَبْتُ إِلَى الدُّكَّانِ என்ற வசனத்திற்கு கடைக்குச் சென்றேன் என்றுதான் நாங்கள் பொருள் சொல்வோமேயன்றி வாழைப்பழம் வாங்குவதற்காக கடைக்குச் சென்றேன் என்று சொல்லமாட்டோம். இதேபோல் اِغْتَسَلَ عَبْدُ اللهْ என்ற வசனத்திற்கு அப்துல்லாஹ் குளித்தான் என்றுதான் பொருள் சொல்வோமேயன்றி முழுக்காளியாயிருந்து குளித்தான் என்று சொல்லமாட்டோம். சுருக்கமாகச் சொன்னால் இல்லாத ஒன்றைச் சொல்லமாட்டோம். இருக்கின்ற ஒன்றை விடவும் மாட்டோம்.
மேலே நான் எழுதிய இரண்டு கருத்துக்கள் மட்டும்தான் திருக்கலிமாவின் கருத்துக்களாகுமே தவிர வேறு கருத்து நான் ஆய்வு செய்து அறிந்த வகையிலும், இதற்கு முன் வாழ்ந்த ஸூபீ மகான்கள் ஆய்வு செய்து அறிவித்த வகையிலும், இதேபோல் இக்காலத்தில் உலகில் வாழும் ஸூபீ மகான்கள் ஆய்வு செய்து அறிவிக்கின்ற வகையிலும் இல்லவே இல்லை. இதேபோல் இஸ்லாமிய வரலாற்றில் இதுவரை தோன்றி மறைந்த மகான்கள், ஸூபீகள், ஆரிபீன் – இறைஞானிகளிற் பலர் நான் திருக்கலிமாவுக்கு கூறிய கருத்தையே பேசியும், எழுதியும் வந்துள்ளார்கள்.
எனினும் ஸூபீ மகான்கள் அல்லாத, நம்பத்தகுந்த இஸ்லாமிய வரலாற்றில் பிரசித்தி பெற்ற சில இமாம்கள் திருக்கலிமாவுக்கு வலிந்துரை கொண்டு பொருள் கூறியிருப்பதற்கான காரணம் அதற்குரிய நேரடிப் பொருள் கூற அவர்கள் பயந்ததேயாகும்.
ஏன் அவர்களுக்குப் பயம் வந்தது?
திருக்கலிமாவுக்கு வலிந்துரை கொள்ளாமல் அவ்வசனத்துக்கான நேரடிப் பொருள் கொண்டால் அல்லாஹ் அல்லாத எந்த ஓர் “இலாஹ்” தெய்வமும் இல்லை என்றும், அல்லாஹ் அல்லாத எந்த ஒரு வஸ்த்தும் இல்லையென்றும் கருத்து வரும். அதாவது இக்கருத்தை விரித்துப் பார்த்தால் “எல்லாம் அவனே” என்று கருத்து வரும்.
அல்லாஹ்வின் படைப்பு என்று எவையெல்லாம் உள்ளனவோ அவையெல்லாம் அவனே என்று சொல்ல வேண்டியும், நம்ப வேண்டியும் ஏற்படும். இது வழிகேட்டிலும் மாபெரும் வழிகேட்டைக் கொண்டு வரும் என்று பயந்து அவர்கள் திசையை மாற்றியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். நான் இவ்வாறு நினைத்தாலும் ஸூபிஸத்தில் ஊறி அதிலேயே “பனா” ஆன மகான்கள் இக்காரணத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவர்கள் இந்த அறிவை மறைப்பது திருக்குர்ஆனுக்கு முற்றிலும் விரோதமானதென்று அடித்துக் கூறுவார்கள். இவ் வாதத்திற்கு ஆதாரமாக பின்வரும் திரு வசனத்தை ஆதாரமாகக் கூறுவார்கள்.
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ
“அல்லாஹ்தான் றஸூல் நாயகமவர்களை நேர்வழி கொடுத்தும், சத்திய மார்க்கம் கொடுத்தும் தூதராக அனுப்பினான். அந்த மார்க்கத்தை “இள்ஹார்” பண்ணுவதற்காகவேயாகும். இதை இணை வைத்தோர் வெறுத்தாலும் சரியே!” என்று கூறியுள்ளான்.
திருமறை: 09-33
“இள்ஹார்” என்றால் என்ன? இச்சொல் வெளிப்படையாக, பட்டவர்த்தனமாக, பகிரங்கமாக என்ற பொருளுக்குரிய சொல்லாகும். மார்க்கத்தைப் பகிரங்கப்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டதினால் திருக்கலிமா “லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதை மக்கத்து கபிர்கள் மத்தியில் பகிரங்கமாகச் சொல்வதற்காக மலை மேல் ஏறினார்கள் எம்பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸாம் அவர்கள்.
அறிஞர்களிற் சிலர் நினைப்பது போல் பகிரங்கமாகச் சொல்வதால் வழிகேட்டிற்கு வழி வகுக்கும் என்றிருந்தால் எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் ஏன் மலையேறி “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொன்னார்கள். நபீ பெருமானின் முதலுரையான அவ்வுரை கேட்ட மக்க நகர் மக்களில் எவரும் அறபு அல்லாத வேறு மொழியை தாய் மொழியாகக் கொண்டவராக இருக்கவில்லை. அவர்கள் பெரும் பண்டிதர்களில்லாது போனாலும் அறபிகளாகவே இருந்தார்கள். படித்தவர்கள், அறிவுள்ளவர்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள் குறைவாகவும், சாமானிய மக்கள் அதிகமாகவும் இருந்தார்கள்.
நபீ பெருமான் அவர்கள் அவர்களுக்கு விளங்கும் பாணியிலேயே தங்களின் கொள்கைப் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். விளங்காத பாணியில் செய்திருக்க முடியாது.
அவர்கள் அந்த மக்களை மலைக்கு அழைத்து அவர்கள் மலை உச்சியில் நின்று கொண்டு கலிமாப் பிரகடனம் செய்ததேன்? கீழே நின்று சொன்னால் அனைவருக்கும் கேட்காதென்பதினாலேயே மலை மீதேறிச் சொன்னார்கள். இதை விளங்காமலேயே முன்னர் வாழ்ந்தவர்களிற் சிலர் இருந்தனர். இப்போதும் சிலர் உள்ளனர். இவர்கள் தமது வாதத்திற்கு ஆதாரமாக إِفْشَاءُ سِرِّ الرُّبُوْبِيَّةِ كُفْرٌ என்ற வசனத்தைக் கூறுகின்றார்கள். இதன் பொருள் றப்புடைய – அல்லாஹ்வின் இரகசியத்தை வெளிப்படுத்துதல் “குப்ர்” நிராகரிப்பாகும் என்பதாகும். இது ஸூபீ மகான்களின் பேச்சு என்பதை நாமும் மறுக்கவில்லை. இரகசியம் என்பது அடிப்படை “தவ்ஹீத்” பற்றிய அறிவல்ல. அது அதற்கப்பால் “இல்ஹாம்”, “கஷ்பு” போன்ற அறிவுகளை மட்டுமே குறிக்கும். தவிர திருக்கலிமாவோடு தொடர்பான, “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பான அறிவைக் குறிக்காது. அவற்றைக் குறிக்குமென்றிருந்தால் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மலைமீதேறி, படித்த, படிக்காத அனைவரையும் அழைத்துச் சொல்லியிருக்கத் தேவையில்லை.
இன்னுமொரு விடயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். நான் மேலே சொன்னது போல் ஸூபீகள் அல்லாத “ஷரீஆ” என்ற வரம்போடு நிற்கின்ற பிரசித்தி பெற்ற அறிஞர்களிற் சிலர் பயந்ததினாலேயே “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற ஞானம் பேசுவதை தடை செய்ததும், அவர்கள் பேசாமல் இருந்ததுமாகும். வேறு காரணத்திற்காக அல்ல. இதை உலமாஉகள் உள்ளிட்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பயந்த முன்னேர் பின்வருமாறும் பயங்கர வேலையொன்று செய்துள்ளார்கள். இது கூட பயத்தினால் செய்தார்களேயன்றி இஸ்லாம் மார்க்கத்தில் இத்தகைய அறிவு ஞானத்தை பேசுவதற்கு எந்த ஒரு தடையும் திருக்குர்ஆனிலும் கூறப்படவில்லை. ஹதீதுகளிலும் கூறப்படவில்லை.
كَلِّمِ النَّاسَ عَلَى قَدْرِ عُقُوْلِهِمْ
“மக்களுடன் அவர்களின் புத்திக்கு ஏற்றவாறு பேசுங்கள்” என்ற பெருமானாரின் அல்லது “ஆரிபீன்” ஞானிகளின் அறிவுரையை ஆதாரமாக வைத்துக் கொண்டு “வஹ்ததுல் வுஜூத்” பேசுவது கூடாதென்போர் மூளையை சற்று சலவை செய்ய வேண்டும். அல்லது தமக்கு மூளைக் கோளாறு உண்டு என்பதைப் புரிந்து மௌனிகளாயிருக்க வேண்டும்.
மேற்கண்ட இவ்வசனம் எவரால் சொல்லப்பட்டதாயினும் அதை சிந்தனை செய்து ஆய்வு செய்தால் மக்களின் புத்திக்கேற்ப பேசுங்கள் என்று கூறியுள்ளார்களேயன்றி لا تُكَلِّمْ என்ற வசனத்தைப் பயன்படுத்தி பேச வேண்டாம் என்று கூறவில்லை.
“வஹ்ததுல் வுஜூத்” பேசுகின்ற நானும், என்னுடனிருக்கின்ற தியாகிகளான உலமாஉகளும் சிறு பிள்ளைகளுக்கு அவர்கள் விளங்கும் பாணியிலும், படித்தவர்களுக்கு அவர்கள் விளங்கும் பாயிணிலும், படிக்காதவர்களுக்கு அவர்கள் விளங்கும் பாயிணிலுமே பேசி வருகிறோம். அழகாகச் சொல்கிறோம். அப்பமென்றால் புட்டுக் காட்ட வேண்டுமா? என்று கேட்பார்கள். ஆனால் நாங்களோ அப்பத்தை புட்டே காட்டுகிறோம். அது கூட விளங்கவில்லையென்றால் அவர்கள் “நஸீப்” நற்பாக்கியம் இல்லாதவர்களேயாவர்.
பிரசித்தி பெற்ற “ஷரீஆ”வின் அறிஞர்களிற் பலர் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை பயத்தால் மறுப்பது போலும், மறைப்பது போலும் இன்னும் திருக்குர்ஆன் வசனங்களில் 29 வசனங்களையும் மூடி மறைக்கிறார்கள். ஏன்? பயத்தினால்தான், அவற்றை அடுத்த தொடரில் எழுதுவேன்.
“அல் பர்கதுல் பரீத்” எனும் எனது சிறிய நூலில் திருக்கலிமாவின் பொருள் இதுதான் என்று சுருதிப் பிரமாணம் கொண்டும், யுக்திப் பிரமாணம் கொண்டும் நிறுவி எழுதியுள்ளேன். இந்நூலை திரும்பத் திரும்ப வாசித்து சத்தியத்தை அறிந்து கொள்ளுமாறும், விளங்காது போனால் இறைஞானத் துறையில் அனுபவமுள்ள அறிஞர்ளுடன் இணைந்து வாசிக்குமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.
தொடரும்….