– மௌலவீ KRM. ஸஹ்லான் (றப்பானீ (BBA(Hons) –
{ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ} [البقرة: 156]
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே மீள்பவர்களுமாவோம்” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 2 :156)
இந்த திரு வசனத்தில் கூறப்படுகின்ற إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ என்ற வசனம் மரணச் செய்தி கேட்டு அல்லது ஒரு துன்பச் செய்தி கேட்டு சொல்லப்படுகின்ற வசனமாகும்.
இதன் பொருள் பின்வருமாறு. “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்களும், இன்னும் நிச்சயமாக நாங்கள் அவனளவில் மீள்பவர்களுமாவோம்” என்பதாகும்.
إنا لله
“நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்களாவோம்”.
إنالله என்ற வசனத்தில் “சொந்தமானவர்களாவோம்” என்ற பொருளைத்தரக்கூடிய அறபுச் சொல் வெளிப்படையாக கூறப்படாது போனாலும் “லில்லாஹி” என்ற சொல்லிலுள்ள “லாம்” அல்லது “லி” என்ற எழுத்து مِلْكٌ – மில்குன் என்ற சொல் மறைந்துள்ளதை குறிக்கின்றது. இதற்குச் சொந்தம் என்று பொருள் வரும். இதன்படி إنا لله நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு சொந்தமானவர்கள் என்று பொருள் வரும்.
மரணித்த செய்தி கிடைத்ததும் “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்” என்று சொல்வது “ஸுன்னத்” நபீ வழியாகும். மரணச் செய்தி மட்டுமன்றி துக்கம், கவலை போன்ற செய்திகள் கிடைத்தாலும் இவ் வசனத்தை முழுமையாக சொல்ல வேண்டும். இதுவும் நபீ வழியேயாகும்.
மரணச் செய்தியோ, கவலைக்குரிய செய்தியோ கிடைத்தால் இத்திரு வசனத்தைச் சொல்வதற்கும், கிடைத்த கவலைக்குரிய செய்திக்கும் என்ன தொடர்புள்ளதென்று அறிந்து கொண்டால்தான் இவ்வாறு கூறுவது எந்த அளவு பொருத்தமானது என்பது புரியும்
உலகமும், உலகத்திலுள்ள சகல வஸ்த்துக்களும் மனிதர்களும், ஏனைய உயிரினங்களும், பொதுவாக கண்ணுக்குத் தெரியாத சிறிய வஸ்துக்கள் உட்பட அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையாகும். இதில் சந்தேகமில்லை.
இதுவே சரியான தத்துவமும், கொள்கையும் என்பதற்கு திருக்குர்ஆனிலும், ஹதீதுகளிலும் பலஆதாரங்கள் உள்ளன.
إنا لله நிச்சயமாக நாம் எல்லோரும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்களாவோம். அதாவது நாம் அனைவரும் அல்லாஹ்வின் சொத்துக்கள். அவனின் உடைமைகளாவோம்.
இத்திரு வசனத்தின் மூலம் உலகும், உலகிலுள்ளவையும் அல்லாஹ்வின் சொத்துக்கள், அவனுக்குச் சொந்தமானவை என்று தெளிவாகிவிட்டது.
எதார்த்தமும், உண்மையும் இவ்வாறிருக்கும் நிலையில் மனிதர்கள் தமக்கு வீடு சொந்தம், கடை சொந்தம், காணி சொந்தம், தோட்டம் சொந்தம் என்று பேசுவதும், சொந்தம் கொண்டாடுவதும் அறியாமையின் உச்சக் கட்டமேயாகும். ஒரு மனிதன் திருக்குர்ஆனை ஆய்வு செய்தானாயின் உலகிலுள்ள ஒரு வஸ்து கூட தனக்குச் சொந்தமானதல்ல என்ற எதார்த்தத்தை அறிந்து கொள்வான்.
மனிதன் படைக்கப்படுவதற்குமுன் வெளிரங்கத்திலும் உள்ரங்கத்திலும் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையாக இருந்தன. ஏனெனில் அவ்வேளை விற்பதற்கும் வாங்குவதற்கு எவருமே இல்லாதிருந்த நிலையாகும். யார் வாங்குவது? யார் விற்பது? என்ற கேள்விக்குரிய காலமாக அது இருந்தது.
முதல் மனிதன் ஆதிபிதா ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் படைக்கப்பட்டு அதன்பின் “ஹவ்வா” அலைஹஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும் படைக்கப்பட்டு அவர்கள் இருவர் மூலமும் மனிதகுலம் பெருகிய பிறகு அவர்களுக்கு வதிவிடங்களும் வாழ்வாதாரங்களும் தேவைப்பட்டன. இவ்வாறான நாகரீக வளர்ச்சியின் போதுதான் பொருட்களை அதிகாரத்திற்குட்படுத்தி சொந்தமாக்கிக்கொள்ளல், விற்றல், வாங்குதல் மூலம் சொந்தமாக்கிக்கொள்ளல் என்பது ஏற்பட்டது. இவ்வாறான செயற்பாடுகளினால் மனிதன் அல்லாஹ்வுக்குச்சொந்தமான சொத்துக்களை தனது சொத்துக்கள் என்று தவறான கற்பனையை வளர்த்துக்கொண்டான்.
சுருக்கம் என்னவெனில் அல்லாஹ் தஆலா படைத்த இவ்வுலகமும், உலகத்திலுள்ள சகல வஸ்த்துக்களும், பரந்து விரிந்து காணப்படுகின்ற இப்பூமியும் அதிலுள்ளவைகளும் அவனுக்கு மட்டுமே உரித்துடையதாகவும், சொந்தமானதாகவும் வெளிரங்கத்திலும் உள்ளரங்கத்திலும் இருந்தது. மனிதனைப் படைக்குமுன் இப்பூமியில் மலக்குகளின் நடமாட்டங்களும், ஜின்களின் நடமாட்டங்களும் மட்டுமே இருந்தன. மனிதனைப்படைத்த பின் மனிதன் இந்த வஸ்துக்களை தனக்குச் சொந்தமானதென வெளிரங்கத்தில் கற்பனைசெய்துகொண்டான். ஆனால் உண்மையில் அனைத்தும் அல்லாஹ் தஆலாவுக்கே சொந்தமானவை.
#அனைத்தும்அவனுக்கேசொந்தம்என்றால்அதுஎன்னவகையானசொந்தம்?#
அனைத்தும் அவனுக்கே சொந்தம் என்றால் அது என்ன வகையான சொந்தம்? என்பதை இலகுவாக புரிய,
அறபு மொழியின் அடிப்டையில் விளக்காமல் தமிழ் மொழியின் மூலம் விளக்குகிறேன்.சற்று சிந்தனையுடன் வாசியுங்கள்.
உங்களுக்குத் தெரியும் தமிழ் மொழியில் “வேற்றுமை உருபுகள்” என்று உள்ளது.
அதில் 6ம் வேற்றுமை உருபு என்று ஒன்று உண்டு.
“அது” என்பது ஆறாம் வேற்றுமைக்குரிய உருபாகும்
இது ஒரு பெயர்ச்சொல் கொண்டுள்ள; சொந்தம்,உரித்து,உடமை பற்றி குறிப்பிட தமிழ் இலக்கணத்திலாகட்டும்,பேச்சுவழக்கிலாகட்டும் இவ்வுருபு பயன்படுத்தப்படுகிறது.
இவ் 6ம் வேற்றுமை உருபில் “”தற்கிழமை”” “”பிறிதின் கிழமை”” என இரு அம்சங்கள் உண்டு. இதற்கு தழிழ் மொழி இலக்கணத்தில் விரிவான விளக்கங்கள் உள்ளன. சுருக்கமாக சொல்வதாயின்
“”தற்கிழமை”” என்றால் விட்டுப்பிரியாத சொந்தம்.
“”பிறிதின்கிழமை”” என்றால் விட்டுப்பிரிந்த சொந்தம் எனப்படும்.
உதாரணமாக,
முஸம்மிலதுகை அல்லது முஸம்மிலின் கை. அல்லது முஸம்மிலுக்கு கை சொந்தமானது.
இங்கு முஸம்மிலை விட்டும் அவனது கை தனியாக விட்டுப்பிரிந்ததல்ல என்பதால் இது தற்கிழமை என்று சொல்லப்படும்.
அடுத்து,
முஸம்மிலது வீடு அல்லது முஸம்மிலின் வீடு. அல்லது முஸம்மிலுக்கு வீடு சொந்தமானது. இங்கு முஸம்மிலை விட்டும் அவனது வீடு தனியாக விட்டுப்பிரிந்தது.
இது பிறிதின்கிழமை என்று அழைக்கப்படுகின்றது.
இப்போது إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ என்ற அல் குர்ஆன் வசனத்துக்கு வருவோம்,
நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்களும், இன்னும் நிச்சயமாக நாங்கள் அவனளவில் மீள்பவர்களுமாவோம்.
இத்திருவசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொந்தம் எந்த வகைச்சொந்தம்……………?
தற்கிழமை அடிப்படையிலான சொந்தமா………….?
பிறிதின்கிழமை அடிப்படையிலான சொந்தமா………….? நன்கு சிந்தியுங்கள்..
முஸம்மிலுக்கு அவனது கை சொந்தமாக இருப்பது போல்,
நாங்கள் அல்லாஹ்வுக்கு (அவனை விட்டும் பிரியாத) சொந்தமா……………………?
முஸம்மிலுக்கு அவனது வீடு சொந்தமாக இருப்பது போல்,
நாங்கள் அல்லாஹ்வுக்கு (அவனை விட்டும் பிரிந்த) சொந்தமா……………………?
நாங்கள் அல்லாஹ்வுக்கு (அவனை விட்டும் பிரிந்த) அவனுக்கு வேறான
சொந்தம் என்றால் அல்லாஹ் என்று ஒரு தனியான உள்ளமையும் நாங்கள் என்று இன்னொரு தனியான உள்ளமையும் இருப்பதாக நம்பிக்கை கொள்ளவேண்டிவரும். இது “ஷிர்க்” இணையாகும்.
நாங்கள் அல்லாஹ்வுக்கு (அவனை விட்டும் பிரியாத) சொந்தம் என்றால் அல்லாஹ் என்று ஒரு தனியான உள்ளமை மாத்திரம் இருப்பதாகவே நம்பிக்கை கொள்ளவேண்டிவரும். இதுவே சரியான நம்பிக்கை “ஈமான்” ஆகும்.
وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ
நாங்கள் அனைவரும் அல்லாஹ் அளவிலேயே மீள்வோம்.
إنا لله நாங்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள் என்று கூறிய அல்லாஹ் இதையடுத்து நாங்கள் நிச்சயமாக அல்லாஹ் அளவிலேயே மீள்வோம் என்றும் சொல்லியுள்ளான்.
ஒருவன் எங்கிருந்து வந்தானோ அதே இடத்திற்கு திரும்பிச்செல்வதையே “மீள்தல்” என்பது குறிக்கின்றது.
ஒருவன் எங்கிருந்து வந்தானோ அதே இடத்திற்கு திரும்பிச்செல்லாமல் இன்னொரு இடத்திற்குச்சென்றால் அதை “மீள்தல்” என்றுசொல்ல முடியாது.
நாங்கள் அல்லாஹ் என்ற உள்ளமையில் இருந்து விட்டுப்பிரியாமல் படைப்புகளாக வெளிப்பட்டதால் அல்லது வந்ததால் அல்லாஹ் அளவிலேயே மீள்வோம் என்று சொல்வது இங்கு பொருத்தமாகின்றது.
நாங்கள் அல்லாஹ் என்ற உள்ளமையில் இருந்து வராமல் வேறு எங்காவது இருந்து வந்திருந்தால் அல்லாஹ் அளவிலேயே மீள்வோம் என்று சொல்வது இங்கு பொருத்தமற்றதாகிவிடும்.
எனவே “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்களும், இன்னும் நிச்சயமாக நாங்கள் அவனளவில் மீள்பவர்களுமாவோம்”