அன்புள்ள “முரீதீன்”களே! “முரீதாத்”துகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்!
நீங்கள் அனைவரும் ஐவேளைத் தொழுகைகளையும் குறிப்பாக “ஸுப்ஹ்” தொழுகையையும் தொழ வேண்டுமென்றும், ஐவேளைத் தொழுகைக்கு முன், பின் உள்ள முஅக்கதான ஸுன்னத் தொழுகைகளையும், ளுஹா, தஹஜ்ஜுத், வித்ர் போன்ற விஷேட ஸுன்னத் தொழுகைகளையும் தொழ வேண்டுமென்றும், ஸுப்ஹ் தொழுகையின் பின் அல்லது இஷா தொழுகையின் பின் நான் சொல்லித் தந்த “அவ்றாத்” ஓதல்களை தவறாமல் ஓத வேண்டுமென்றும், ஒவ்வொரு தொழுகையின் பின்னும் ஐந்து நிமிடமாவது நேரமெடுத்து உங்களுக்காகவும், எனக்காகவும், உலகில் வாழும் அனைத்து ஸூபீகள், ஸுன்னீகள் அனைவருக்காகவும் “துஆ” செய்து கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த மாதம் – றபீஉனில் ஆகிர் பிறை 11 குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அவர்கள் “வபாத்” ஆன நாளாயிருப்பதால் இம்மாத முடிவுக்கு முன்னர் அவர்கள் பெயரில் திருக்குர்ஆன் முழுவதையும், அல்லது யாஸீன் அத்தியாயத்தை மட்டுமாவது ஓதி அதன் நன்மையை அவர்களுக்கும், அவர்களின் மனைவி மக்கள், மற்றும் அவர்களின் பெற்றோர், குருமார் அனைவருக்கும் சேர்த்து வைக்குமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
பண வசதியுள்ளவர்கள் குத்பு நாயகம் பெயரால் குடும்பத்திலுள்ள ஏழைகளுக்கும், அவர்களை நேசிப்பவர்களுக்கும் அன்னதானம் வழங்குமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
(குத்பிய்யாவின் சிறப்பு)
உங்களில் உடலாரோக்கியம் உள்ளவர்கள் தனியாகவோ, அல்லது கூட்டாகவோ பின்வரும் நடைமுறையைப் பேணுமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
இஷா தொழுகையின் பின் ஸுப்ஹ் தொழுகையின் முன் 12 “றக்அத்”களை இரண்டு இரண்டு “றக்அத்”துகளாக தொழுங்கள்.
أُصَلِّى السُّنَةَ
“உஸல்லிஸ் ஸுன்னத” என்று “நிய்யத்” வைத்துக் கொண்டால் போதும்.
தொழுகையில் ஒவ்வொரு “றக்அத்”திலும் “பாதிஹா சூறா” ஓதியபின் “சூறா இக்லாஸ்” குல்ஹுவல்லாஹ் ஸூறாவை ஒரு தரம் ஓதுங்கள்.
12 “றக்அத்”துகளும் முடிந்த பின் “யா ஷெய்கு யா முஹ்யித்தீன் அப்தல் காதிர் ஜீலானீ” என்று தொடராக ஆயிரம் தரம் சொன்ன பின் உங்களின் தேவைகளை அல்லாஹ்விடம் அல்லது அவர்களிடம் கேளுங்கள்.
இதைவிடவும் சுருக்கமாகச் சொல்வதாயின் “அப்தல் காதிர் முஹ்யித்தீன்” என்று சொல்லுங்கள்.
(குத்பு நாயகம் அவர்களைக் கொண்டு “வஸீலா” தேடும் புதிய முறை)
நீங்கள் பரீட்சைகளில் சித்தி பெற வேண்டுமா? நீங்கள் விரும்பிய ஆணை அல்லது பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமா? உங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் வேண்டுமா? எத்தேவையாயினும் பின்னால் கூறப்படும் விடயத்தை பக்குவமாகச் செய்யுங்கள்.
فائدةٌ: فى الإستغاثة بواسطة حضـرة الغوث محي الدين عبد القادر الجيلاني قُدِّس سرّه،
وهي إذا كان لك مهم أيها الطالب الصادق الراغب وكان ذلك المهم دنيويا أو أخرويا فانهض في ليلة الثلاثاء قبل الفجر وأسبغ الوضوء وصل لله تعالى ركعتين بنية صلاة الحاجة وتقرأ في الأولى بعد الفاتحة الكافرون إحدى عشـرة مرة وفي الثانية بعد الفاتحة الإخلاص إحدى عشرة مرة وبعد السلام تقرأ الإخلاص أيضا إحدى عشرة مرة وتذكر حضرة الغوث قدس سره إحدى عشرة مرة بهذه الصفة يا سيدي عبد القادر محيى الدين وتخطو إلى جهة الشرق إحدى عشرة خطوة وتقول في كل خطوة يا شيخ عبد القادر يا جيلاني ثم تكرر البيتين ثلاث مرات وهما:
أَيُدْرِكُنِــيْ ضَيْــمٌ وَأَنْتَ ذَخِيْرَتِــيْ وَأُظْلَمُ فِى الدُّنْيَـا وَأَنْتَ نَصِيْـرِيْ
وَعَارٌ عَلَى رَاعِي الْحِمَى وَهُوَ قَـــادِرٌ إِذَا ضَاعَ فِى الْبَيْدَا عِقَالُ بَعِيْرِيْ
ثمّ تقول (يا سيّدي عبدَ القادر جيلاني أَدْرِكْنِيْ وَتَدَارَكْنِيْ) وتسئل حاجتك من الله بواسطة الغوث المُشار إليه، قدّس سرّه، فإنّه تداركها بتوسُّطِه لك فى قضاء حاجتِك، وبالله التوفيق، (الفيوضات الربّانيّة، ص 72)
குத்புல் அக்தாப், அல் ஙவ்து முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ அவர்களை முன்னிறுத்தி கேட்கும் “வஸீலா”
கேட்கும் “துஆ” ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இது பரீட்சிக்கப்பட்டதாகும். இதற்கு உண்மை, நேர்மை, உளத் தூய்மை, சரியான கொள்கை அவசியமாகும். வெற்றியை விரும்பும் உண்மையாளனான மாணவனே!
உனக்கு ஏதேனும் தேவை முடிய இருந்தால் அது இவ்வுலகத் தேவையாயினும், மறுவுலகத் தேவையாயினும் சரியே.
செவ்வாய்க்கிழமை இரவு (திங்கள் பின்னேரம்) “ஸுப்ஹ்” தொழுகைக்கான பாங்கு சொல்லுமுன் எழுந்து “வுழூ” செய்து “இஸ்திகாறா” இரண்டு “றக்அத்” தொழ வேண்டும். முதலாம் “றக்அத்”தில் “பாதிஹா ஸூறா” ஓதிய பின் “குல் யா அய்யுஹல் காபிரூன்” என்ற “சூறா”வை 11 தடவைகள் ஓத வேண்டும். இரண்டாம் “றக்அத்”தில் “பாதிஹா சூறா” ஓதி முடிந்த பின் “குல் ஹுவல்லாஹ்” சூறாவை 11 தடவைகள் ஓத வேண்டும்.
தொழுகை முடிந்த பின் அதே இருப்பில் இருந்தவர்களாக மீண்டும் “குல்ஹுவல்லாஹ்” அத்தியாயத்தை 11 தடவைகள் ஓதுங்கள். அதன் பின் “கிப்லா”வை முன்னோக்கிய நிலையிலேயே குத்பு நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ அவர்களின் பெயரை “யா ஸெய்யிதீ அப்தல் காதிர் முஹ்யித்தீன்” என்று 11 தடவைகள் சொல்லுங்கள். அதன் பின் கிழக்குத் திசையை முன்னோக்கியவர்களாக எழுந்து நின்று 11 அடிகள் – எட்டுகள் கிழக்கை நோக்கி நடக்க வேண்டும். ஒவ்வோர் அடி வைக்கும் போதும் “யா ஷெய்கு அப்தல் காதிர் ஜீலானீ” என்று சொல்ல வேண்டும்.
இவ்வாறு செய்து முடிந்த பின் மேலே எழுதியுள்ள நாலடிப் பாடலை மூன்று தடவைகள் ஓத வேண்டும்.
——-
أَيُدْرِكُنِــيْ ضَيْــمٌ وَأَنْتَ ذَخِيْرَتِــيْ وَأُظْلَمُ فِى الدُّنْيَـا وَأَنْتَ نَصِيْـرِيْ
وَعَارٌ عَلَى رَاعِي الْحِمَى وَهُوَ قَـــادِرٌ إِذَا ضَاعَ فِى الْبَيْدَا عِقَالُ بَعِيْرِيْ
——-
அதன் பின்
يَا سَيِّدِيْ عَبْدَ الْقَادِرْ جِيْلَانِيْ أَدْرِكْنِيْ وَتَدَارَكْنِيْ
என்று முடிந்தவரை சொல்லிவிட்டு இவ்வாறு செய்தவர் தனது தேவைகளை அல்லாஹ் இடத்திலும் கேட்கலாம். குத்பு நாயகம் அவர்களிடமும் கேட்கலாம். தேவை நிறைவேறும்.
இவ்வாறு செய்பவர்கள் இதைச் சொல்லித் தந்த எனக்காகவும் “துஆ” செய்ய வேண்டும்.
ஆதாரம்: அல்புயூழாதுர் றப்பானிய்யஹ், பக்கம் 72.
மேற்கண்ட இரு வழிகளும் எல்லாக் காலங்களிலும் தேவையேற்படும் போது செய்யலாம். இரண்டாம் வசந்தமான றபீஉனில் ஆகிர் மாதம் செய்வது சிறந்ததாகும். இவ்விரு நடைமுறைகளும் இந்தியாவில் இப்போதும் உள்ளன.
குறிப்பு: தவறாகச் செய்யாமலிருக்க ஒரு தாளில் எழுதி பார்த்துக் கொண்டும் செய்யலாம்.
காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
17.11.2021