Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஒரு நாளில் ஐந்து நேரம் தொழுபவன் எதை எத்தனை தரம் சொல்கிறான்?

ஒரு நாளில் ஐந்து நேரம் தொழுபவன் எதை எத்தனை தரம் சொல்கிறான்?

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

01. எத்தனை தரம் “வுழூ” செய்கிறான்?

02. எத்தனை தரம் “அல்லாஹு அக்பர்” என்று சொல்கிறான்?

03. எத்தனை தரம் “வஜ்ஜஹ்து” ஓதகிறான்?

04. எத்தனை தரம் “பாதிஹா ஸூறா” ஓதகிறான்?

05. எத்தனை தரம் “றுகூஉ” செய்கிறான்?

06. எத்தனை தரம் அந்த “றுகூஉ”வில் “ஸுப்ஹான றப்பியல் அளீம் வபிஹம்திஹீ” என்று கூறுகிறான்?

07. எத்தனை தரம் “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று சொல்கிறான்?

08. எத்தனை தரம் “ஸுஜூத்” செய்கிறான்?

09. எத்தனை தரம் “ஸுப்ஹான றப்பியல் அஃலா வபிஹம்திஹீ” என்று அதில் கூறுகிறான்?

10. எத்தனை தரம் நடு இருப்பு இருக்கிறான்? எத்தனை தரம் அதில் “றப்பிக்பிர் லீ வர்ஹம்னீ…” என்று சொல்கிறான்?

11. எத்தனை தரம் “அத்தஹிய்யாத்” ஓதுகிறான்?

12. எத்தனை தரம் பெருமானாருக்கு “ஸலாம்” சொல்கிறான்?

13. எத்தனை தரம் “அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்” என்று “ஸலாம்” சொல்கிறான்?

14. எத்தனை தரம் “குனூத்” ஓதகிறான்?

15. எத்தனை தரம் “எல்லாம் அவனே” என்று அறபு மொழியில் சொல்கிறான்?

விடைகள்:

01. ஐந்து தரம்.

02. 94 தரம்.

03. ஐந்து தரம்.

04. 17 தரம்.

05. 17 தரம்.

06. 51 தரம்.

07. 17 தரம்.

08. 34 தரம்.

09. 102 தரம்.

10. 17 தரம், 17 தரம்.

11. 9 தரம்.

12. 9 தரம்.

13. 10 தரம்.

14. 1 தரம்.

15. 17 தரம்.


ஒரு நாளில் ஐந்து தரம் தொழுகின்ற ஒருவன் தினமும் மேற்கண்ட நன்மைகள் செய்கின்ற நல்லடியானாவான்.

ஐங்காலமும் தொழுகின்ற ஒருவன் “அல்லாஹு அக்பர்” என்று 94 தரம் சொன்னாலும் அவற்றில் முதல் சொல்கின்ற ஒரு தரம் மட்டும்தான் கடமையாகும். அது “தக்பீறதுத் தஹ்ரீம்” “ஹறாம்” ஆக்கி வைக்கும் “தக்பீர்” என்று சட்டக்கலையில் அழைக்கப்படும். இது “புகஹாஉ”களின் “இஸ்திலாஹாத்” கலைச் சொல்லாகும். இது தவிரவுள்ள ஏனைய “அல்லாஹு அக்பர்” யாவும் கடமையானவையல்ல. “ஸுன்னத்” ஆனவையாகும். இவை “தக்பீறதுல் இன்திகாலாத்” ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறும் தக்பீர் என்று சட்டக்கலையில் சொல்வார்கள். இவற்றைச் சொல்லாவிட்டாலும் தொழுகை நிறைவேறும். ஆனால் முதலில் சொல்கின்ற “அல்லாஹு அக்பர்” சொல்லாவிட்டால் தொழுகை நிறைவேறாது.

முதலில் சொல்கின்ற “அல்லாஹு அக்பர்” என்ற “தக்பீர்” ஹறாமாக்கி வைக்கும் தக்பீர் என்று பெயர் வைக்கப்பட்டதற்கான காரணம் என்னவெனில் அது சொன்னது முதல் தொழுகை நிறைவு பெறும் வரை உண்ணல், உறங்கல், பருகுதல், மற்றும் உறுப்புக்களை தொடராக மூன்று தரத்திற்கு அதிகமாக அசைத்தல் என்பன விலக்கப்பட்டதாகும். இது “ஷரீஆ”வின் சட்டமாகும்.

ஸூபிஸத்தில் முதல் தக்பீர் சொன்னது முதல் தொழுது முடிக்கும் வரை தொழுபவனின் உள்ளத்தில் இறை நினைவல்லாத வேறு நினைவு வருவதை அது ஹறாமாக்கி வைக்கிறது. ஸூபீ மகான்களிடம் வேறு நினைவு வந்தால் தொழுகை நிறைவேறாது. இக்காலத்தில் ஸூபிஸ வழி பேணித் தொழுபவர்கள் அரிதினுமரிதென்றே சொல்ல வேண்டும்.

இறைஞானி இப்னுல் பாரிழ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் القصيدة التائيّة “அல்கஸீததுத் தாஇய்யா” பாடலில்
إِذَا خَطَرَتْ لِيْ فِى سِوَاكَ إِرَادَةٌ – عَلَى خَاطِرِيْ سَهْوًا قَضَيْتُ بِرِدَّتِيْ
யா அல்லாஹ்! உன்னல்லாத வேறு எண்ணம் என் உள்ளத்தில் மறதியாகவேனும் வந்தால் நான் “முர்தத்” மதம் மாறியவன் என்று நானே முடிவு செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்கள்.

குறிப்பு: இப்னுல் பாரிழ் அவர்கள் இப்னு அறபீ அவர்களின் சம காலத்தவர்களாவார்கள். “மிஸ்ர்” நாட்டில் பிறந்து அங்கேயே “வபாத்” ஆனார்கள்.

பிறப்பு: ஹிஜ்ரீ – 576
மறைவு: ஹிஜ்ரீ 632

தொழுகயில் “பாதிஹா ஸூறா” ஓதுவதுதான் கடமை. அதன் பிறகு ஏதாவதொரு “ஸூறா” ஓதுவது கடமையல்ல. அதை விட்டாலும் தொழுகை கூடும்.

இதேபோல் “றுகூஉ” நிலையில் எதுவும் கடமையல்ல. வழமையாக “ஸுப்ஹான றப்பியல் அளீம் வபிஹம்திஹீ” ஓதுவது “ஸுன்னத்” ஆகும். இதை விட்டாலும் தொழுகை கூடும்.

இவ்வாறுதான் “றுகூஉ” செய்துவிட்டு நிலைக்கு வரும்போது “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று சொல்வதும், அதை தொடர்ந்து “றப்பனா லகல் ஹம்து” என்று இறுதிவரை ஓதுவதும் கடமையல்ல. ஓதாவிட்டாலும் தொழுகை கூடும். இவ்வாறுதான் “ஸுஜூத்” நிலையில் “ஸுப்ஹான றப்பியல் அஃலா வபிஹம்திஹீ” ஓதுவதும், “ஸுஜூத்” செய்தபின் நடு இருப்பில் ஓதுகின்ற “றப்பிக்பிர் லீ” என்ற ஓதலுமாகும். இவ்விரு ஓதல்களும் கடமையானவையல்ல. ஓதாமல் விட்டாலும் தொழுகை கூடும்.

பொதுவாக தொழுகையின் “பர்ழ்” கடமைகளில் ஒன்றை விட்டால் மட்டும்தான் தொழுகை நிறைவேறாதேயன்றி “ஸுன்னத்”தான எதை விட்டாலும் தொழுகை நிறைவேறும்.

இந்த விபரத்தை இங்கு சுட்டிக் காட்டியதற்கான காரணம் என்னவெனில் ஒருவன் தொழுகையை விடாமல் அல்லது “கழா” ஆக்காமல் மிகச் சுருக்கமாகவேனும் தொழும் முறையை அறிந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவேயாகும். “ஸுன்னத்”தை விடுதல் தண்டனைக்குரிய குற்றமல்ல. இதேபோல் “மக்றூஹ்” செய்வதும் தண்டனைக்குரிய குற்றமல்ல.

وَفَاعِلُ الْمَكْرُوْهِ لَمْ يُعَذَّبِ – بَلْ إِنْ يَكُفَّ لِامْتِثَالٍ يُثَبِ

“மக்றூஹ்” ஆன ஒன்றைச் செய்தவன் தண்டிக்கப்படுவதில்லை. ஆயினும் அதை ஒருவன் தவிர்த்துக் கொண்டானாயின் அதற்காக அவனுக்கு நன்மையுண்டு.

وَالسُّنَّةُ الْمُثَابُ مَنْ قَدْ فَعَلَهْ – وَلَمْ يُعَاقَبِ امْرُأٌ إِنْ أَهْمَلَهْ

“ஸுன்னத்” ஆன விடயத்தை செய்தவன் நன்மை வழங்கப்படுவான். அதைச் செய்யாமல் விட்டவன் தண்டிக்கப்படமாட்டான்.

இவ்விரண்டும் “பிக்ஹ்” சட்டங்களாகும். இச்சட்டங்கள் தெரியாதவர்கள்தான் “மக்றூஹ்” செய்பவர்களைத் தண்டித்தும், “ஸுன்னத்” செய்யாமல் விடுபவர்களைத் தண்டித்தும் வருகின்றார்கள்.

நான் 1958ம் ஆண்டு காலி கோட்டை “பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா” அறபுக் கல்லூரியில் ஓதச் சேர்ந்தேன். அந்நேரம் எனக்கு 14 வயது. கல்லூரியின் பிரதான சட்டம் தலையில் முடி வைக்க முடியாது. பௌத குருமார் போல் மொட்டை அடிக்கவே வேண்டும். இதற்கு மாறு செய்யும் மாணவன் உடனடியாக கல்லூரியிலிருந்து விலக்கப்படுவான். குற்றமில்லாத ஒரு செயலுக்கு பெருந் தண்டனை. இவ்வாறான தண்டனை அல்லாஹ்வே கொடுப்பதில்லை. அக்கால ஹழ்றத்மார்கள் அவ்வாறு செய்தது விந்தையானதும், வேதனைக்குரியதுமேயாகும். அவர்களின் நோக்கம் என்னவோ எமக்குத் தெரியாது.

எனது தந்தை மர்ஹூம் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்களும் தலையில் முடி வைப்பதற்கு கடும் எதிரியாகவே இருந்தார்கள். நான் முடி வைத்ததற்கு சுவாரஷ்யமான ஒரு வரலாறு உண்டு. அதை இங்கு எழுத விரும்பவில்லை.

ஓர் அவசர சூழலில் தொழுகையிலுள்ள “ஸுன்னத்”தான கருமங்களை விட்டு தொழுவது குற்றமாகாது. ஆயினும் அதை வழக்கமாக்கிக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்.

தொழுபவர் ஒரு தூணை அல்லது ஒரு சுவரை அல்லது ஒரு மனிதனையாவது தனக்கு முன்னால் ஒரு திரை போல் அல்லது தடை போல் வைத்துத் தொழுவது சிறந்தது. அவ்வாறு ஒருவன் தொழுதால் அவருக்கும், அவருக்கு முன்னால் உள்ள தூண், சுவர், மனிதனுக்குமிடையே எவரும் குறுக்கிட்டுச் செல்ல முடியாது. அவ்வாறு செய்திருந்தும் ஒருவர் குறுக்கிட்டுச் சென்றால் அவரைத் தண்டிப்பதற்கு அவனுக்கு உரிமையுண்டு. இவ்வாறு வைக்கப்படும் தூணோ, சுவரோ, மனிதனோ, அல்லது வேறு வஸ்த்தோ அது “சுத்றா” எனப்படும். இவ்வாறு செய்தல் தொழுபவனுக்கு முன்னால் எவரும் குறுக்கிட்டுச் செல்லாமல் இருப்பதற்கேயாகும். இவ்வாறு செய்து தொழுவது “ஸுன்னத்” ஆகும்.

தூண், அல்லது சுவர் அல்லது வேறொரு வஸ்த்தை நோக்கித் தொழ பள்ளிவாயலில் வாய்ப்பு வசதியிருந்தும் அவற்றை “ஸுன்னத்” அடிப்படையில் முன்னோக்காமல் பள்ளிவாயல் நடுவே நின்று தொழுவது தவிர்க்கப்பட வேண்டும்.

ஒருவன் மேற்கண்டவாறு ஏதோ ஒன்றை முன்னால் அடையாளமாக வைத்து தொழும் போது அவனுக்கும், அவ் அடையாளத்துக்குமிடையே குறுக்கிட்டுச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு ஒருவன் தொழும் போது அறிந்தோ, அறியாமலோ ஒருவன் குறுக்கறுத்துச் செல்ல முனைந்தால் தொழுபவன் தனது கையால் ஜாடை செய்து அவனைத் தடுப்பதற்கு தொழுபவனுக்கு உரிமையுண்டு.

இந்த நடைமுறை அறபு நாடுகளில் இருந்து வருவதை நாம் பார்க்கிறோம். ஆகையால் பள்ளிவாயலில் தொழுவோர் இந்த நடைமுறைகளைப் பேண வேண்டும்.

தொழுகையில் அதன் “ஸுன்னத்”துகளை விட்டு “பர்ழ்”ஐ மட்டும் பேணித் தொழுவது ஓர் அவசரக்கட்டத்தில் மட்டுமே ஆகும்.

உதாரணமாக காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு ஒரு பேருந்து தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டு ஐந்து நிமிடத்தில் புறப்படுகின்றதென்று வைத்துக் கொள்வோம். ஒருவன் அவசரத் தேவை காரணமாக கொழும்பு செல்ல வேண்டியுள்ளான். இவன் அதே பேருந்தில் பயணித்தால் மட்டும் தனது தேவையை முடிக்கலாம் என்றும் வைத்துக் கொள்வோம். இவன் பாங்கு சொல்லப்பட்டு ஐந்து நிமிடங்களுக்குள் தொழுகையின் “ஸுன்னத்”துகளைப் பேணி தொழ முடியாதிருந்தால் அவன் வண்டி தவறிவிடாமல் இருப்பதற்காகவும், அதனால் தனது தொழுகை பாழாகிவிடக் கூடாதென்பதற்காகவும் அத் தொழுகையின் “ஸுன்னத்”துக்களை விட்டு “பர்ழ்”ஐ மட்டும் பேணித் தொழுவதற்கு மார்க்கத்தில் இடமுண்டு.

ஓர் அவசர தேவைக்காக பாங்கு சொல்வதற்கு முன் அந்நேரத்திற்கான தொழுகையை தொழலாமா?

உதாரணமாக ஒருவன் ஓர் அவசர தேவைக்காக கொழும்பு செல்ல வேண்டும். அதற்கு ஒரேயொரு வண்டி மட்டும்தான் உள்ளது. அந்த வண்டி உரிமையாளர் எக்காரணம் கொண்டும் தொழுகைக்காக இடை வழியில் வண்டியை நிறுத்தமாட்டார் என்றுமிருந்தால் சிறிய அளவிலான வித்தியாசமிருந்தால் பாங்கு சொல்லுமுன் தொழுவதற்கு மார்க்கத்தில் இடமுண்டு.

வண்டி 12.15 மணிக்கு புறப்படுகிறதென்று வைத்துக் கொள்வோம். “பாங்கு” 12.20 மணிக்கென்றும் வைத்துக் கொள்வோம். இவ்வாறான கட்டத்தில் பயணிப்பவன் ஐந்து நிமிடத்திற்கு முன்னால் தொழாமல் பயணித்தால் அத் தொழுகை நிச்சயமாக “கழா” தவறிவிடுமென்றிருந்தால் பாங்கு சொல்வதற்கு முன் ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் தொழலாம் என்பதற்கு ஓர் ஆதாரம் உண்டு.

ويندب للمصلي أن يكون بين يديه سترة ثلثا ذراع، أو يبسط مصلى، فإن عجز خطَّ خطاً، على ثلاثة أذرع، فيحرم المرور حينئذ. ويندب دفع المار بالأسهل، ويزيد قدر الحاجة، كالصائل، فإن مات فهدرٌ، فإن لم يكن سترةٌ أو تباعد عنها، كره المرور، وليس له الدفع. ولو وجد في صف فرجة فله المرور ليسترها.

தொழுபவன் ஒரு தூண், அல்லது சுவர், அல்லது எதோ ஒரு வஸ்த்தை தனக்கு முன்னால் வைத்துக் கொள்வது நல்லது என்று மேலே எழுதியிருந்தேன். வைக்கப்படுகின்ற எதுவாயினும் அது ஒரு முழத்தில் மூன்று பங்கில் இரண்டு பங்கு உயரமுள்ளதாக இருக்க வேண்டும். அல்லது ஒரு “முஸல்லா” விரித்துக் கொள்ள வேண்டும். அல்லது தொழுபவனுக்கு முன்னால் மூன்று முழ எல்லையில் ஒரு கோடு கீறிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது தொழுபவனுக்கு முன்னால் எவரும் குறுக்கே செல்லாமல் இருப்பதற்காகும். இவ்வாறு தொழுபவன் ஒரு அடையாளம் வைத்துக் கொண்டால் அவனுக்கும், அவ் அடையாளத்திற்கும் இடையே எவரும் குறுக்கே செல்வது கூடாது. அதாவது “ஹறாம்” விலக்கப்பட்டதாகும். யாராவது அதை மீறிச் சென்றால் அவரைத் தடுத்து நிறுத்த அவனுக்கு அதிகாரமுண்டு. அடையாளம் வைக்காமல் தொழுபவனைக் குறுக்கிடுவது “ஹறாம்” ஆகாது. ஆயினும் அது விரும்பத்தக்கதல்ல. இந்நிலையில் குறுக்கே செல்பவனைத் தடுக்க அவனுக்கு அதிகாரம் இல்லை. பின் வரிசையிலிருப்பவன் முன் வரிசையில் இடை வழி இருக்கக் கண்டால் அவன் “ஸப்பு” வரிசைகளைக் குறுக்கறுத்து அங்கு செல்ல முடியும்.

தொடரும்…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments