தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இன்றும் இந்த “ஸுன்னத்” எல்லா ஊர்களிலும் பேணப்பட்டே வருகிறது. “தஃஸியத்” என்ற சொல்லுக்கு சலிப்பாற்றுதல் என்று பொருள். கவலை, துக்கம் என்பவற்றை நீக்கி வைத்தல் என்றும் பொருள் கொள்ளலாம்.
மரணித்த ஒருவரின் பிரிவால் அவரின் உறவினர்களை கவலை ஆட் கொள்வது இயல்பானதே, இயற்கையே! ஆகையால் கவலை, சோகம் என்பவற்றால் பாதிக்கப்பட்ட “மையித்” மரணித்தவரின் உறவினர்களை மற்றவர்கள் சலிப்பாற்றி வைத்தல், கவலையை நீக்கி வைத்தல் “ஸுன்னத்” ஆகும். நபீ வழியாகும். வணக்கமாகும்.
உறவினர் என்போர், இரத்த உறவிலுள்ளவர்களையும், மற்றும் வேறு வகையான உறவிலுள்ளவர்களையும் எடுத்துக் கொள்ளும். பொதுவாக எந்த வகை உறவாயினும் மரணப் பிரிவால் மனக் கவலையடைந்த அனைவரையும் சலிப்பாற்றுதல் ஸுன்னத் ஆனதே! குறிப்பாக இரத்த உறவினர்களுக்கு இது விஷேட “ஸுன்னத்” ஆகும்.
இவ்விடயத்தில் இன, மத, மொழி வேறுபாடின்றி சலிப்பாற்றலாம். சலிப்பாற்றும் வசனங்களுக்கு மொழிக் கட்டுப்பாடு இல்லை. எனினும் அறபு மொழயில் குறித்த சில வசனங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த தெரிந்தவர்கள் பயன்படுத்தலாம். ஆயினும் எவர் சலிப்பாற்றப்பட்டாலும் அவருக்கு சலிப்பாற்றுபவர் சொல்வது விளங்க வேண்டும்.
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சலிப்பாற்றும் போது பயன்படுத்திய, மற்றவர்களைப் பயன்படுத்துமாறும் தூண்டிய வசனங்களைப் பயன்படுத்துவது சிறந்தது. இவ்வசனங்களின் பொருள் சலிப்பாற்றப்படுபவருக்குத் தெரியாது போனால் அறபு வசனங்களைச் சொல்வதோடு அவனுக்குத் தெரிந்த மொழியில் சலிப்பாற்றும் வசனங்களையும் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். மரணித்தவர் “காபிர்” ஆகவும், சலிப்பாற்றப்படுகின்ற அவரின் உறவினர் முஸ்லிமாகவும் இருந்தால் அவரை சலிப்பாற்றும் போது மட்டும் غَفَرَ اللهُ لِمَيِّتِكَ உனது மரணித்தவரின் பாவத்தை அல்லாஹ் மன்னித்து விடுவானாக! என்ற வசனத்தை மட்டும் பயன்படுத்தாமல் வேறு வசனங்களை மட்டும் பயன்படுத்தலாம்.
ஏனெனில் முஸ்லிம் அல்லாதவர்களுக்காக அவர்களின் பாவத்தை மன்னிக்குமாறு பிரார்த்திப்பது கூடாது. இதற்கு ஆதாரம் பின்வரும் திருவசனமாகும்.
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ
அல்லாஹ்வுக்கு இணை வைப்பதை மட்டும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான். ஆயினும் அது தவிரவுள்ள ஏனைய பாவங்களை அவன் விரும்பியவர்களுக்கு மன்னிப்பான். (திருமறை 4-48)
இணை வைத்தல் என்றால் சிலை, விக்கிரகம், சிருட்டி என்பவற்றை முன்வைத்து வணங்குதலைக் குறிக்கும் என்பதே அநேகரின் அபிப்பிராயமும், நம்பிக்கையுமாகும். இவ்வாறுதான் நாமும் கூறுவோம். இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது.
இது “ஷிர்க் ஜலீ” பகிரங்க இணை எனப்படும். இதையும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான். இதை அவன் மன்னிப்பதாயின் அவ்வாறு வணங்கி வந்தவன் “ஷஹாதா கலிமா”வின் சரியான பொருளை அறிந்து அதை மனதால் நம்பி, வாயால் மொழிய வேண்டும். அதோடு சிருஷ்டி வணக்கத்தை முற்றாக வெறுத்து விடவும் வேண்டும். ஆயினும் இவ்வாறு செய்வதற்கு முன் அவன் செய்த எந்த ஒரு பாவத்திற்காகவும் அவன் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டுமென்பது அவசியமில்லை. கேட்பது தவறுமில்லை.
ஏனெனில் ஒருவன் திருக்கலிமாவின் சரியான பொருளை அறிந்து அதை மனதால் நம்பி வாயால் மொழிந்ததோடு அவன் முன் செய்த அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடும்.
الْإِسْلَامُ يَهْدِمُ مَا قَبْلَهُ
இஸ்லாம் அதற்கு முன்னுள்ள அனைத்தையும் இடித்து தள்ளிவிடும் என்றார்கள் எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்.
இதற்கான காரணம் திருக்கலிமாவின் சரியான பொருளான “அல்லாஹ் அல்லாத ஒன்றுமில்லை” என்ற தத்துவமேயாகும். இத் தத்துவத்திற்கு அப்படியொரு அபார சக்தி உண்டு. ஒருவன் திருக்கலிமாவை முறைப்படி மொழிந்தானாயின் அதற்கு முன் அவன் ஆயிரம் விபச்சாரம் செய்திருந்தாலும், ஆயிரம் வருடங்கள் ஒரு நாளைக்கு ஒரு சிருட்டி வீதம் 365,000 சிருட்டிகளை வணங்கியிருந்தாலும் அவனின் அனனைத்து பாவங்களும் ஆதவனைக் கண்ட ஐஸ் கரைந்து விடுவது போல் கரைந்து இல்லாமற் போய்விடும்.
100 பவர் உள்ள ஒரு மின் குமிழின் வெளிச்சம் 1000 பவர் உள்ள ஒரு மின்குமிழ் வெளிச்சத்தில் மங்கி மறைந்து விடுவது போல் அனைத்து பாவங்களும் மங்கி மறைந்து போகும்.
சிருட்டி வணக்கம் “ஷிர்க்” இணை வைத்தலாவது போல் சிருஷ்டியின் புகழுக்காக – அதன் பாராட்டுதலுக்காக அல்லாஹ்வை வணங்குவதும் ஒரு வகை “ஷிர்க்” இணை வைத்தலேயாகும்.
உதாரணமாக பிறரின் பாராட்டையும், புகழையும் எதிர் பார்த்து வணக்கம் செய்தல் போன்று.
இதற்கு சில உதாரணங்கள் எழுதுகிறேன். எனக்கு அறிமுகமான ஒருவர் இருந்தார். அவர் தொழுவதற்காக பள்ளிவாயலுக்கு வந்தால் அங்கு யாராவது பணக்காரர்கள் இருந்தால் மட்டும் தொழுவார். மீண்டும் மீண்டும் தொழுதுகொண்டே இருப்பார். அந்தப் பணக்காரன் பள்ளிவாயலை விட்டும் வெளியேறினால் அவரும் வெளியேறிவிடுவார். இவரின் நோக்கம் செல்வந்தர்களின் உள்ளத்தில் இடம் பிடிப்பதேயன்றி அல்லாஹ்வின் உள்ளத்தில் இடம் பிடிப்பதல்ல. இவர் யார்? இவர்தான் முகத்துதியுள்ளவர். இவரின் வணக்கம் அல்லாஹ்வை அடையாது.
எனக்குத் தெரிந்த இன்னொருவர் இருந்தார். அவர் புனித றமழான் பிற்பகுதி வந்துவிட்டால் தனது ஷேட் பாக்கட்டில் பணம் வைத்துக் கொள்வார். அது அவரின் “சகாத்” பணம். எவ்விடத்தில் மனிதர்கள் கூட்டமாக இருக்கிறார்கள் என்று தேடியலைவார். அப்படியொரு கூட்டத்தைக் கண்டால் அங்கு சென்று இருப்பவர்களுக்கு முன்னால் நின்று தனது பணத்தை ஒவ்வொரு தாளாக எண்ணியெண்ணிக் கொடுப்பார். ஆயினும் எந்த ஓர் ஏழையாவது தனிமையாக இருந்தால் அவனுக்கு கொடுக்கமாட்டார். இதே நபர் குறித்த காலத்தில் எனக்கும் “சகாத்” நிதி தருவதற்காக எனதலுவலகத்திற்கு வருவார். நான் தனிமையாக இருந்தால் உள்ளே வரமாட்டார். திரும்பிச் சென்றுவிடுவார். இவ்வாறு பல நாட்கள் முயற்சிப்பார். ஏதாவதொரு நாள் என்னுடன் பலர் இருப்பதைக் கண்டாராயின் உள்ளே வந்து பலர் காணும் வகையில் 100 ரூபாய் புதிய தாளில் 50 தாள் எண்ணி அதை கார்ட்ஸ் விளையாடுவோர் விசிறி விரிப்பது போல் விரித்து என்னிடம் தருவார். நான் பல்லைக் கடித்து கோபத்தை அடக்கிக் கொண்டு பெற்றுக் கொள்வேன்.
ஒரு முறை இவரின் இத்தகைய நடவடிக்கையை சகித்துக் கொள்ள முடியாமல் அவர் அவ்வாறு தந்த பணத்தை சுருட்டி அவர் மூஞ்சில் எறிந்து விட்டு இதன் பிறகு நீ எனக்கு “சகாத்” நிதி தரக் கூடாது என்று எச்சரித்து அவரின் பிழையை – நடிப்பை அவருக்கு சுட்டிக் காட்டினேன். அதன்பிறகு அவரிடமிருந்து சுமார் ஐந்து வருடங்கள் “சகாத்” நிதி பெறாமல் இருந்தேன். அதன் பிறகு அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
இன்னுமொரு பண முதலை இருந்தார். அவரிடம் பொது விடயத்திற்கு பெரிய தொகை நிதியுதவி பெற வேண்டுமானால் அவரிடம் செல்லும் போது பத்திரிகை நிருபர் ஒருவர், “கெமரா மேன்” ஒருவர், மற்றும் ஊர் பிரமுகர்களுடன் சென்றால் போதும். அதோடு கையில் ஒரு மாலையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பத்து இலட்சம் ரூபாய் கேட்காமலேயே கிடைத்துவிடும். இவர் யார்? இவரும் மேற் சொன்னவர்கள் போல் ஒருவகையில் “முஷ்ரிக்” இணை வைத்தவர்தான். இவரின் இத்தகைய வேலை “ஷிர்குன் கபீ” மறைந்த “ஷிர்க்” எனப்படும்.
மேற்கண்டவாறு “ஷிர்க்” இணைவைத்தலில் இரண்டு வகையுண்டு.
இன்னுமொரு வகை “ஷிர்க்” இணையுண்டு. இதுவே மிகப் பெரிய இணையாகும். சிருட்டிகளை வணங்கும் இணையை விட இதுவே மிக பயங்கரமானதாகும். ஒருவன் எல்லா வகை இணைகளையும் விட்டுவிடுவான். ஆயினும் இப்போது நான் எழுதவுள்ள இந்த வகை “ஷிர்க்” ஐ விடவுமாட்டான். இதை “ஷிர்க்” என்று ஒத்துக் கொள்ளவுமாட்டான். இதுவே “ஙெய்ரிய்யத்” ஹக்கு வேறு, கல்கு வேறு – படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்ற பயங்கர “ஷிர்க்” ஆகும்.
இவ்வகை “ஷிர்க்”ஐ ஒழிப்பதற்கும், அழிப்பதற்குமான ஒரே வழி “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை விளங்கியறிந்து கொள்வதேயாகும்.
உலமாஉகளிலும், பொது மக்களிலும் இவ்விபரம் தெரியாதவர்களே அதிகமாக உள்ளனர். உலமாஉகள் என்னுடன் கோபித்துக் கொள்ள வேண்டாமென்று அவர்களை மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நான் அறிந்தவரை “நுபுவ்வத்” நபித்துவம் வழங்கப்பட்ட நபீமாரும், “விலாயத்” ஒலித்தனம் வழங்கப்பட்ட அவ்லியாஉகளும் மட்டும்தான் “வஹ்ததுல் வுஜூத்” எனும் தத்துவக்கடலில் முங்கிக் குளித்தவர்களாவர். இக்கடலில் முங்கிக் குளிக்காத எந்த ஒரு நபீயும், எந்த ஒரு வலீயும் இல்லை என்றே நிச்சயமாக கூற முடியும்.
எனவே, “ஷிர்க்” என்பது சிலை, சூரியன், விக்கிரகம் போன்ற சிருட்டியை முன்வைத்து வணங்குவது மட்டுமன்றி சிருட்டி வேறு, சிருட்டித்தவன் வேறு என்று நம்புவதும் ஸூபீ மகான்களின் ஆய்வின் படி “ஷிர்க்” இணையேதான்.
நான் கூறும் இந்த தத்துவம்தான் இஸ்லாம் மார்க்கம் ஏனைய மதங்களைவிடச் சிறந்ததென்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாகும். இதன் ருசியை “வஹ்ததுல் வுஜூத்” ஹோட்டலில் சாப்பிட்டவன் மட்டுமே அனுபவித்திருப்பான். இத் தத்துவத்தை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் மட்டுமே இதன் ருசியை அனுபவித்திருப்பான்.
அல்லாஹ்வின் மனித படைப்புகளிற் சிறந்த எம் பெருமான் மட்டுமே 100 வீதம் அனுபவித்தவர்கள் என்று கூறினால் அது மிகையாகாது.
இதனால்தான் குத்புமார்களில் ஒருவரான “ஷெய்குல் அறப்” شيخ العرب அறபு மக்களின் ஞான குரு என்ற பட்டத்துக்குரிய ஹிஜ்ரீ 569ல் பிறந்து 675ல் “வபாத்” மறைந்த குத்புஸ்ஸமான், உலகப் பிரசித்தி பெற்ற இறை ஞானி அஷ்ஷெய்கு அஹ்மதல் பதவீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானாரைப் புகழும் போது اَلْمُتَلَذِّذِ بِتَوْحِيْدِكَ இறைவா! உனது தவ்ஹீதில் இன்பம் பெற்றவர்கள், ருசி கண்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதுவே பேரின்பம்.
முற்றும்