தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
وكان بعض العارفين رحمه الله يقول (ألسِنة جميع المحبّين أعجميّة على غيرهم، وهي لأصحابهم عربيّة، هذا كلّه في حقّ المُتمكّنين من الأولياء، أمّا من غلب عليه حالُه فَمِنْ أدب أهل الطّريق التسليمُ له، لأنّه يتكلّم بلسان العشق لا بلسان العلم الصحيح،
وقد بَلَغَنَا أنّ عصفورا رَاوَدَ عصفورة في قبّة سليمان بن داؤود عليه السلام ، فأبت عليه فقال لها قد بَلَغَ بي من حبّكِ ما لَوْ قلتِ لي اُقلُبْ هذه القبّة على سليمان وجُنده لقلبتُها، فحملت الرّيحُ كلامَه إلى سليمان، فأرسل خلفه، وقال ما حملك أن تقول ما لم تقدِرْ عليه؟ فقال مهلًا يا نبيّ الله إنّي عاشق، والعُشَّاقُ إنّما يتكلّمون بلسان المحبّة والعشق، لا بلسان العلم والتّحقيق فأَعْجَبَ ذلك سليمانَ، اهـ،
وفي ذلك عذر عظيم للعشّاق في طريق أهل الله عزّوجلّ ،
காதலர்களின் மொழி – பாஷை – அவர்களுக்கு மட்டுமே புரியும். மற்றவர்களுக்குப் புரியாது. மற்றவர்களுக்கு அது பிற மொழியாகவே இருக்கும். இது விஷயம் விளங்கிய இறை நேசர்களான வலீமார்களுக்குரியதாகும். அவர்களுக்கு எல்லாம் புரியும்.
ஆயினும் இறை காதலர்களின் காதல் வலுவடைந்து அது ஒரு வகை போதையை ஏற்படுத்தி விடுமாயின் அப் போதை மயக்கத்தில் அவர்கள் பலவாறு பேசுவார்கள். இறை காதலுக்கு வரம்புமில்லை. எந்த ஒரு கட்டுப்பாடுமில்லை. அவ்வாறு அவர்கள் அந்நிலையில் ஏதாவது சொல்வார்களாயின் அதை மற்றவர்கள் பெரிதுபடுத்தி விடாமல் அவர்களின் பேச்சுக்குரிய விளக்கத்தை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். ஏனெனில் அது காதல் மொழி, காதல் பாஷை. அதன் தாற்பரியமும், தத்துவமும் அவர்களுக்கு மட்டுமே தெரியும். காதல் மொழி பேசும் போது அவர்கள் தெளிவான அறிவுள்ளவர்களாக இருப்பதில்லை.
பின்வரும் சிற்றின்பக் காதல் மொழி தருகின்ற கதையை கவனிப்போம்.
நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உலகையே ஆட்சி செய்த ஒரு வல்லரசாவார்கள். அவர்களின் அரச மாளிகையின் “குப்பா” டோமில் இரண்டு சிட்டுக் குருவிகள் வாழ்ந்து வந்தன. ஒன்று ஆண், மற்றது பெண்.
ஒரு சமயம் ஆண் குருவி பெண் குருவியை சிற்றின்பம் பெற அழைத்தது. பெண் குருவி அதற்கு இணங்காமல் மறுத்துவிட்டது. ஆண் குருவி பலதரம் முயற்சித்தும் பயன் இல்லாமற் போய்விட்டது.
ஆத்திரமடைந்த ஆண் குருவி நான் உன்னைக் கடுமையாக விரும்புகிறேன். நீ எது சொன்னாலும் அதைச் செய்வதற்கு நான் ஆயித்தமாயுள்ளேன். இந்தக் “குப்பா” – டோமை நபீ ஸுலைமான் மீதும், அவர்களின் படைகள் மீதும் புரட்டிவிடச் சொன்னாலும் அதைச் செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்று சிற்றின்ப போதையில் உளறியது ஆண் குருவி.
இவ்வாறு ஆண் குருவி கூறிய செய்தியை செவிமடுத்த காற்று அதை நபீ ஸுலைமான் அவர்களிடம் கூறியது. அல்லாஹ் நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு காற்றையும், உயிரினங்களையும், அவற்றின் மொழியையும் வசப்படுத்திக் கொடுத்திருந்தான் என்பது இங்கு குறிப்பிட வேண்டிதாகும்.
செய்தியை செவியேற்ற நபீ ஸுலைமான் அவர்கள் மேற்கண்டவாறு சொன்ன ஆண் சிட்டுக் குருவியை அழைத்து உன்னால் முடியாத ஒன்றைச் செய்வதாகச் சொல்லியுள்ளாயே! ஏன் சொன்னாய்? என்று அடிக்கும் பாணியில் கோபத்தோடு வினவினார்கள்.
அதற்கு பதில் கூறிய சிட்டுக் குருவி அல்லாஹ்வின் நபீயே! பொறுமை செய்யுங்கள். அவசரப்படாதீர்கள். நான் காதல் பைத்தியம் பிடித்தவன். காதலர்கள் காதல், அன்பு எனும் நாவால் பேசுவார்களேயன்றி தெளிவான, சுய உணர்வோடு பேசுபவர்கள் அல்ல என்று கூறியது. இது கேட்ட நபீ ஸுலைமான் அவர்கள் வியப்படைந்து போனார்கள். தண்டனை வழங்க வந்த நபீ அவர்கள் தலை குனிந்து நின்றார்கள்.
இந்த வரலாறு தருகின்ற பாடம் என்னவெனில் இறை காதலர்கள் – இறைவனைக் காதலித்தவர்கள் “இஷ்க்” காதல் உள்ளவர்கள் உலகையும், தன்னையும் மறந்து சில பாடல்கள் பாடுவார்கள். சில வார்த்தைகள் பேசுவார்கள். அவை வெளிப்பார்வையில் “ஷரீஆ”வுக்கு முரணானது போல் தோற்றும். வலிந்துரை கொள்ள முடியாமலுமிருக்கும். இதேபோல் அவர்களின் செயல்களும் வெளிப்பார்வையில் அதற்கு முரணானது போல் இருக்கும். அவற்றுக்கும் வலிந்துரை கொள்ள முடியாமலேயே இருக்கும்.
இவ்வாறிருந்தால் அவரைக் காப்பாற்றுவதற்கும், “ஷரீஆ”வுக்கு முரணில்லாதவாறு முடிவு செய்வதற்கும் ஒரே வழி பின்னால் நான் கூறவுள்ள ஒரே வழியேயாகும். இது “ஷரீஆ” சொல்லும் வழியேயன்றி எனது கற்பனையில் நான் சொல்லும் வழியல்ல.
அவரை “மஜ்தூப்’ என்று முடிவு செய்து “மஜ்தூப்” என்பவருக்கான சட்டம் அவருக்கு கொடுக்க வேண்டும்.
“மஜ்தூப்” “மஜ்னூன்” இருவருக்கும் சட்டம் அமுல் செய்தல் கூடாது.
‘மஜ்தூப்’ என்பவர் யார்?
இறைஞான வழியில் “ஜத்பு” என்று ஒரு நிலையுண்டு. இந்நிலைக்குள்ளானவர் “மஜ்தூப்” என்று அழைக்கப்படுவார். இவருக்கு “ஸ்பெஷல்” சட்டம் உண்டு. இவர் “ஷரீஆ” சட்டங்களைப் பொறுத்து “மஜ்னூன்” பட்டியலிலேயே சேர்க்கப்படுவார்.
ஏனெனில் எவனுக்கு “ஷரீஆ” சட்டம் அமுல் செய்யப்பட வேண்டுமோ அவன் “முகல்லப்” ஆக இருக்க வேண்டும். அப்படியென்றால் அவன் “ஆகில்” சாதாரண புத்தியுள்ளவனாகவும், வயது வந்தவனாகவும் இருத்தல் வேண்டும். “ஆகில்” புத்தி உள்ளவனாக இருக்க வேண்டுமென்பது சாதாரண புத்தியை குறிக்குமேயன்றி அதிவிவேகமுள்ளவனாக இருத்தலைக் குறிக்காது. சாதாரண புத்தியுள்ளவன் என்று நான் குறிப்பிடுவது பொது சனத்தின் பார்வையில் – உலக வழமையில் – அவன் புத்திக் காரன் என்று கணிப்பிடக் கூடியவனாக இருத்தல் வேண்டும். இவ்விடத்தில் புத்திக் காரன் என்பதற்கு எதிர் மறை “ஜுனூன்” பைத்தியமுள்ளவனையும், அறவே புத்தி வேலை செய்யாத “அக்ல்” புத்தியில் வித்தியாசமுள்ளவனையுமே குறிக்கும்.
இவ்வடிப்படையில் “மஜ்தூப்” என்பவர் “ஆகில்” புத்தியுள்ளவர் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார். ஏனெனில் அவருக்கு இஸ்லாம் வழங்கியுள்ள “மஜ்தூப்” مَجْذُوْبْ என்ற பெயர் ஒன்று மட்டுமே அவர் “முகல்லப்” ஏவல் விலக்கல்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதை உணர்த்துவது ஆய்வாற்றல் உள்ளவர்களுக்கு விளங்காமற் போகாது.
நமது நாட்டில் பேக்கயன், பேயன் என்றழைக்கப்படுபவர்கள் “முகல்லப்” எனும் ஏவல் விலக்கல்களுக்கு உட்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்பது எனது கருத்தாகும்.
“மஜ்தூப்” مَجْذُوْبْ என்ற சொல்லுக்கு மேலெழுந்தவாரியாக – சாதாரணமாக பொருள் சொல்வதாயின் இழுக்கப்பட்டவர் என்று சொல்ல வேண்டும். இச் சொல் جَذَبَ என்ற சொல்லடியிலுள்ளதாகும். இதன் பொருள் இழுத்தான் என்று வரும்.
இதன் சுருக்கமென்னவெனில் எவரின் புத்தியை, சிந்தனையை அல்லாஹ் தன் பக்கம் இழுத்து அவர் தனது சுய விருப்பத்தின்படி வாழாமல் அல்லாஹ்வின் விருப்பத்திற்கமைவாக வாழ வைத்துள்ளானோ அவர் “மஜ்தூப்” என்றழைக்கப்படுவார்.
இந்நிலையை அடைந்தவர்கள் பல்லாயிரம் பேர்கள் உலகில் வாழ்கின்றார்கள். இன்னோரை வஹ்ஹாபிகள் தவிர ஏனையோர்கள் கண்ணியமாக நோக்குவர். வஹ்ஹாபிகளோ இன்னோரை பைத்தியக் காரர்கள் என்பர். கிண்டலும் செய்வர்.
இன்னோர் தமது புத்தியும், சுய விருப்பமும் அல்லாஹ்வால் அவன் பக்கம் இழுக்கப்பட்டவர்களாவர். இதை விடவும் தெளிவாகச் சொல்வதாயின் இன்னோர் “விலாயத்” ஒலித்தனம் என்ற படியில் கால் பதித்தவர்களாவர். இவர்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டியவர்களாவர். இவர்களுக்கு மற்றவர்கள் உதவி செய்ய வேண்டுமேயன்றி உபத்திரம் செய்யலாகாது.
எனது வாழ்க்கையில் பல “மஜ்தூப்”களை சந்தித்துள்ளேன். அவர்களிற் சிலருடன் நெருங்கி வாழ்ந்துமிருக்கிறேன். அநேகமாக “மஜ்தூப்”களை மையவாடி, காடு, அசுத்தமான இடங்கள், “தர்ஹா” அவ்லியாஉகளின் சமாதிகளிலேயே காண முடியும்.
1965 – 66ம் ஆண்டு காலப் பகுதிகளில் நான் இந்தியாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்தில் நாஹூர் ஷரீபுக்கு அண்மையிலுள்ள “மஞ்சக்கொல்லை” என்ற கிராமத்தில் ஒரு “மஜ்தூப்” ஐ முதன் முதலாக சந்தித்தேன். அவரின் பெயர் “ஷிப்லீ பாவா”. இவர் ஓர் இலங்கை வாசியென்று விபரமறிந்த பலர் என்னிடம் சொல்லியுள்ளார்கள்.
இவரை நான் முதலில் சந்தித்த போது இவருடன் பேச முடியாமற் போயிற்று. இதைத் தொடர்ந்து சுமார் 40 ஆண்டுகளில் பல தரம் இவரைச் சந்தித்துள்ளேன். ஒரு தரம் கூட அவர் என்னுடன் பேசவில்லை.
ஆயினுமொரு தரம் நான் அவரைச் சந்திக்கச் சென்ற போது சன நெரிசல் காரணமாக தெருவில் நிற்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் நான் காத்து நின்றேன். “மஜ்தூப்” ஷிப்லீ பாவா அவர்களின் “காதிம்” பணியாளன் வெளியே வந்து அங்கு கூடி நின்ற சுமார் 200 பேர்கள் மத்தியில் சிலோனிலிருந்து வந்துள்ள ஒருவரை மட்டும் அனுமதிக்குமாறு பாவா சொல்கிறார்கள் என்று கூறினார்.
நான் மட்டும் உள்ளே சென்றேன். பாவா அவர்கள் “வுழூ” செய்து கால் கழுவிக் கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டார்களாயினும் என்னுடன் பேசவில்லை. நான் திரும்பி வந்து விட்டேன்.
அஜ்மீர் அரசர் கரீப் நவாஸ் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் “தர்ஹா” அடக்கவிடத்தின் எல்லையில் ஒருவர் நடமாடிக் கொண்டிருப்பார். அவர் யார் என்பது எவருக்கும் தெரியாது. சில நேரம் அழுக்கான, கிழிந்த உடைகளுடனும், இன்னும் சில நேரம் தரமான நல்ல உடைகளுடனும் நடமாடுவார். சில நேரம் பேசுவார். சில நேரம் பேசமாட்டார். எல்லா இடத்திலும் உறங்குவார். சுத்தம், அசுத்தம் என்ற வேறுபாடு பார்க்கமாட்டார்.
இவரை மக்கள் தலை சரியான இயக்கமில்லாதவர் என்று கருதியிருந்தனர்.
ஒரு நாள் இவர் “தர்ஹா” நிர்வாகி ஒருவரின் வீட்டின் வாசற்படியில் உறங்கிக் கொண்டிருந்தார். நிர்வாகி “ஸுப்ஹ்” தொழுகைக்கு சற்று முன் வெளியே வந்த போது பாவா வழியில் உறங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த நிர்வாகி அவரைத் தூக்கி பாதையில் எறிந்து விட்டுச் சென்றார்.
மறு நாள் அதிகாலை அந்த நிர்வாகி “தர்ஹா”வைத் திறப்பதற்காக “ஸுப்ஹ்” தொழுகைக்கு சற்று முன் வழமையாக தர்ஹா திறப்பை எடுப்பதற்காக அலுமாரியைத் திறந்த போது “தர்ஹா” திறப்பு அங்கு இருக்கவில்லை. பல இடங்களிலும் தேடியலைந்தார். எங்குமே திறப்புக் கிடைக்கவில்லை. உரிய நேரமாகியும் திறக்கப்படாமற்போனதால் சனக் கூட்டத்தை சமாளிக்க முடியாமற் போயிற்று. இறுதியில் இன்னொரு நிர்வாகியிடமிருந்த திறப்பால் கதவு திறக்கப்பட்ட போது நிர்வாகியினால் தூக்கியெறியப்பட்ட பாவா அவர்கள் ஹாஜா துயிலும் அறைக்குள் தியானத்தில் இருந்தது கண்டு மக்கள் அங்கு அலை திரண்டனர். தூக்கியெறிந்த நிர்வாகி பாவா இடம் மன்னிப்புக் கேட்டு அவரைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்து பாவா மரணிக்கும் வரை தனது இல்லத்தில் மிகவும் கண்ணியமாக வைத்திருந்து மரணத்தின் பின் தனது செலவிலேயே அவருக்காக அழகிய “தர்ஹா” ஒன்றையே கட்டி கொடுத்துள்ளார். அங்கு செல்லக் கூடிய வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. அல்ஹம்து லில்லாஹ்!
தொடரும்..