Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இறைவனுக்கு நிகராக எவருமில்லை, எதுவுமில்லை!

இறைவனுக்கு நிகராக எவருமில்லை, எதுவுமில்லை!

தொடர்: 01

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

அல்லாஹ்வுக்கு – இறைவனுக்கு நிகரில்லை, அவனைப் போல் எவருமில்லை, எதுவுமில்லை என்பது திருக்குர்ஆனும், நபீ மொழிகளும் கூறுகின்ற, எவராலும் அசைக்க முடியாத, “முஃமின்” விசுவாசிகள் என்றழைக்கப்டுகின்ற அனைவரும் அவசியம் நம்ப வேண்டிய விடயமாகும். இதில் எவரும் கையடித்து அவனுக்கு நிகர் உண்டு என்று கூற முடியாது.

மேற்கண்ட இக்கருத்தைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவாகச் சொல்கின்றன.

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، اللَّهُ الصَّمَدُ، لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ،

முஹம்மதே நபீயே! அல்லாஹ் ஏகன் என்றும், அவன் தேவையற்றவன் என்றும், அவன் யாரையும் பெறவில்லை என்றும், அவன் எவராலும் பெறப்படவில்லை என்றும், அவனுக்கு நிகராக எவருமில்லை என்றும் நீங்கள் சொல்வீர்களாக! (ஸூறதுல் இக்லாஸ்)

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ

அவன் – அல்லாஹ் போல் எதுவுமில்லை, அவனே கேட்பவனாயும், பார்ப்பவனாயும் உள்ளான்.
(திருமறை 42-11)

இவ்விரு திரு வசனங்களில் ولم يكن له كفوا أحد அவனுக்கு நிகராக எவருமில்லை என்ற வசனம் அல்லாஹ் போல் உயர்திணையில் மனிதர்களில் எவருமில்லை என்ற கருத்தை தருகின்றது. இந்தக் குறிப்பை தருவது உயர்திணையைக் குறிக்கும் “அஹதுன்” என்ற சொல்தான்.

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ

அல்லாஹ் போல் எதுவுமில்லை – எந்தவொரு வஸ்த்துமில்லை, அவனே கேட்பவனாயும், பார்ப்பவனாயும் உள்ளான் என்று இரண்டாவதாகக் குறிப்பிட்ட வசனம் கூறுகிறது.

முந்தின வசனத்தில் “அஹதுன்” என்ற சொல்லும், இரண்டாம் வசனத்தில் “ஷைஉன்” என்ற சொல்லும் அல்லாஹ்வுக்கு நிகரில்லை என்பதை நிறுவ பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களாகும்.

குறித்த இரு திரு வசனங்களும் கூறுகின்ற படி அல்லாஹ்வுக்கு நிகராக எவருமில்லை என்றும், எதுவுமில்லை என்றும் நம்புதல் அவசியம் என்று தெளிவாகின்றது.

எந்த அம்சத்தில், எவ்விடயத்தில் அல்லாஹ்வுக்கு நிகரில்லை என்று நம்ப வேண்டும்?

அவனின் “தாத்”திலும் அவனுக்கு நிகரில்லை என்றும், அவனின் “ஸிபாத்” தன்மைகளிலும், மற்றும் அவனின் “அப்ஆல்” செயல்களிலும் அவனுக்கு நிகரில்லை என்றும் நம்ப வேண்டும்.

முதலில் அவனுக்கு “தாத்” உண்டு என்று நம்ப வேண்டும். அவனுக்கு “தாத்” இல்லை என்று நம்புதல் “ஈமான்” விசுவாசமாகாது.

இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் “அல்லாஹ் ஒருவன் உள்ளான்” என்ற நம்பிக்கையுள்ளவர்கள் 99 வீதம் இருந்தாலும் கூட பொதுவாக அவனுக்கு “தாத்” உண்டு என்று நம்பியவர்கள் மிகக் குறைந்தவர்களேயாவர். அவர்கள் உலமாஉகளும், மார்க்க கல்வி கற்கும் மாணவ மாணவிகளும், மார்க்க விடயங்களோடு தொடர்புள்ளவர்களுமேயாவர்.

“தாத்” என்று பொதுவாக உடலுக்குச் சொல்லப்படும். மனிதனின் “தாத்” என்பது அவனின் உடலைக் குறிக்கும். அப்துல்லாஹ்வின் “தாத்” என்பது அவனின் உடலைக் குறிக்கும். நீரின் “தாத்” என்பது அதன் உடலான நீரையும், நெருப்பின் “தாத்” என்பது அதன் உடலான நெருப்பையும் குறிக்கும். ஒவ்வொரு படைப்புக்கும் “தாத்” இருப்பது போல் அல்லாஹ்வுக்கும் “தாத்” உண்டு என்று நம்பத்தான் வேண்டும்.

ஆயினும் அல்லாஹ்வின் அந்த “தாத்” பரிசுத்தமானதென்றும், ஒருபோதும் அழியாததென்றும், அதேபோல் மாறுபடாததென்றும், அதேபோல் நிறம், ஆழம், அகலம், எடை போன்றவற்றை விட்டும் துய்மையானதென்றும், பொதுவாக எந்தவொரு குறையுமில்லாததென்றும், அதற்கு நிகரான “தாத்” இல்லை என்றும் நம்ப வேண்டும். இதுவே “தாத்” தொடர்பான நம்பிக்கையாகும்.

ஆயினும் இந்த “தாத்” தொடர்பாக இதன் தொங்கலைக் கண்டு பிடிக்க வேண்டுமென்று நினைப்பது கூடாது. அதைக் கண்டுபிடிக்கவும் முடியாது.
قال العارفون العجزُ عن إدراكِه إدراكٌ، وقالوا أيضا العجزُ عن دركِه دركٌ
இறைஞானிகள் சொன்னதாகவும், கலீபாக்களில் சிலர் சொன்னதாகவும் பின்வரும் தகவல்கள் கூறுகின்றன.

ஒருவன் “அல்லாஹ்வின் “தாத்” தொடர்பாக ஆய்வு செய்து ஆய்வு செய்து அதை அடைந்து கொள்ள முடியாதென்று முடிவு செய்வதே அதை அடைந்து கொள்வதாகும்”

இறைஞானிகளினதும், கலீபாக்களினதும் கருத்தின்படி அல்லாஹ்வின் “தாத்”தை எவர் எத்தனையாண்டுகள் எந்த வகையில் ஆய்வு செய்தாலும் அதை அடைந்து கொள்ள முடியவே முடியாது. இதற்கான காரணம் சிருட்டியால் சிருட்டி கர்த்தாவை அளக்கவோ, சூழ்ந்து கொள்ளவோ முடியாதென்பதேயாகும்.

எம் பெருமானார் முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் مَا عَرَفْنَاكَ حَقَّ مَعْرِفَتِكَ “உன்னை எவ்வாறு அறிய வேண்டுமோ அவ்வாறு நாங்கள் அறியவில்லை” என்று சொல்லியிருப்பதன் படியும் அல்லாஹ்வின் “தாத்”தை எவராலும் சூழ்ந்தறிய முடியாதென்ற முடிவு கிடைக்கிறது.

கலீபாக்களின் பேச்சில் إِدْرَاكٌ “இத்றாகுன்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சரியான பொருள் اَلْإِحَاطَةُ – “அல் இஹாதது” சூழ்ந்தறிதல் என்பதாகும். ஒன்றை சூழ்ந்தறிதல் என்றால் அதை முழுமையாக, அதில் ஓர் அங்கம் கூட விடுபடாமல் அறிவதாகும். இவ்வாறுதான் அறிய முடியாதே தவிர சிறிதளவும் அறிய முடியாதென்று கருத்து வராது.

ஏனெனில் அல்லாஹ்வை காண முடியுமா? முடியாதா? என்பது தொடர்பாக திருக்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு கூறியுள்ளான்.
لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ
பார்வைகள் அவனைச் சூழ்ந்து கொள்ளாது. அவன் பார்வைகளைச் சூழ்ந்து கொள்வான். அவன் இரக்கமுள்ளவனும், எதையும் உள் விளங்கி அறிபவனுமாவான். (திருக்குர்ஆன் 06-103)

மேற்கண்ட திரு வசனத்தில் تُدْرِكُ , يُدْرِكُ என்று இரு சொற்கள் வந்துள்ளன. இவ்விரு சொற்களும் إِدْرَاكٌ , دَرْكٌ என்ற சொல்லடிகளில் உள்ளவையாகும். இதற்கு எட்டிக் கொள்ளுதல் என்று வெளிப்படையாகப் பொருள் சொல்லிக் கொண்டாலும் இத்திரு வசனத்திற்கு விளக்கம் எழுதிய தலை சிறந்த திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் لَا تُحِيْطُهُ الْأَبْصَارُ பார்வைகள் அவனைச் சூழ்ந்து கொள்ளாதென்றும், அவன் பார்வைகளைச் சூழ்ந்து கொள்வான் என்றுமே விளக்கம் எழுதியுள்ளார்கள்.

இவர்கள் எழுதியுள்ள கருத்தின்படி – விளக்கத்தின்படி அல்லாஹ்வைப் பார்க்க முடியுமாயினும் பார்வைகளால் அவனைச் சூழ்ந்து கொள்ள முடியாதென்றும் விளக்கம் வரும். இவ்விளக்கத்தின் படி அல்லாஹ்வின் “தாத்”தை எட்டிக் கொள்ள முடியாதென்றால் அவனை – அவனின் “தாத்”தை – அறிவால் சூழ்ந்து கொள்ள முடியாதென்று விளங்க வேண்டுமென்றேயன்றி அவனை அறிய முடியாதென்று விளங்கக் கூடாது.

எனவே, அல்லாஹ்வின் “தாத்”தை அறிவால் எட்டிக் கொள்ள முடியாதென்றால் அறிவால் சூழ்ந்து கொள்ள முடியாதென்றும், அதேபோல் பார்வையால் சூழ்ந்து கொள்ள முடியாதென்றுமே விளங்க வேண்டும். பொதுவாகப் பார்க்க முடியாதென்றோ, அறிய முடியாதென்றோ விளங்கிக் கொள்ள கூடாது.

பின்வருமாறும் ஒரு நபீ மொழி உண்டு. كُلُّكُمْ فِى ذَاتِ اللهِ حَمْقَى “அல்லாஹ்வின் “தாத்” விடயத்தில் நீங்கள் அனைவரும் மடையர்களாவீர்கள்” இதன் கருத்தும் நான் மேலே எழுதிய கருத்துப் போன்றதேயாகும்.

இன்னும் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் “தாத்” தொடர்பாக அருளிய ஒரு ஹதீதையும் இங்கு குறிப்பிடுகிறேன். இந்த நபீ மொழியும் அல்லாஹ்வின் “தாத்” பற்றி ஆராய வேண்டாம் என்று எச்சரிக்கும் நபீ மொழியேயாகும்.
قال النبي صلّى الله عليه وسلّم تَفَكَّرُوْا فِى خَلْقِ اللهِ، وَلَا تَفَكَّرُوْا فِى ذَاتِ اللهِ
அல்லாஹ்வின் படைப்பு பற்றிச் சிந்தியுங்கள். அவனின் “தாத்” பற்றிச் சிந்திக்காதீர்கள் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.

இந்த நபீ மொழியும் மேலே நான் எழுதிக் காட்டிய நபீ மொழி போல் அல்லாஹ்வின் “தாத்” பற்றிச் சிந்திக்க வேண்டாம் என்றே எச்சரிக்கின்றது. இறைவனுக்கு நிகராக எவருமில்லை, எதுவுமில்லை என்று நான் தலைப்பு எழுதியிருந்தாலும் கூட அது தொடர்பாக விளக்கம் எழுதாமல் அதற்கு முன்னர் அறிய வேண்டிய சில விடயங்களையே இதுவரை எழுதினேன்.

அல்லாஹ்வுக்கு நிகரில்லை, அவன் போன்று எதுவுமில்லை, எவருமில்லை என்றால் அவனுக்கு இணையில்லை என்பதே இதன் சுருக்கமாகும். நிகர், இணை என்பதைக் குறிக்கும் அறபுச் சொற்கள் பல உள்ளன. அவற்றில் இரு சொற்கள் நான் முதலில் எழுதிக் காட்டிய திரு வசனங்களில் வந்துள்ளன. அவை كُفْوٌ , مِثْلٌ என்பனவாகும். இவைபோல் نَظِيْرٌ، شَبِيْهٌ என்ற சொற்களும் உள்ளன.

இவையாவும் அல்லாஹ் போல் எதுவுமில்லை, எவருமில்லை என்ற தத்துவத்தையே உணர்த்துகின்றன.

நிகர் என்றால் ஒன்றுபோல் இன்னொன்று இருப்பதைக் குறிக்கும். அவ்வாறிருந்தால்தான் இது அதற்கு நிகரானது, இது அது போன்றதென்று சொல்ல முடியும். எதற்கு எது நிகர் என்று சொல்கிறோமோ அவ்விரண்டும் தோற்றத்திலும், தன்மையிலும் எந்தவொரு வித்தியாசமுமில்லாமல் ஒன்று போலவே இருக்க வேண்டும். இதுவே நிகர் என்று சொல்லப்படும்.

உதாரணமாக ஒரே அச்சில் வார்க்கப்பட்ட இரண்டு பண நோட்டுக்கள் போன்றும், அதேபோல் ஒரே அச்சில் வார்க்கப்பட்ட இரண்டு மோதிரங்கள் போன்றுமாகும்.

ஒரே அச்சில் வார்க்கப்பட்ட இரண்டு ஆயிரம் ரூபாய் தாள்கள் போன்று. இவ்விரண்டில் ஒன்று மற்றதற்கு நிகரானதென்று சொல்ல முடியும். ஏனெனில் இரண்டும் ஒரே அச்சில் வார்க்கப்பட்டவையாதலால் இரண்டும் எந்தவொரு வித்தியாசமுமின்றி ஒன்று போலவே இருக்கும்.

அல்லது ஒரே அச்சில் வார்க்கப்பட்ட இரு தங்க மோதிரங்கள் போன்று. இவ்விரண்டில் ஒன்று மற்றதற்கு நிகராகவே இருக்கும்.

இவ்வாறிருந்தால் மட்டுமே நிகர் என்ற பேச்சுக்கு இடமிருக்கும்.

அல்லாஹ்வின் “தாத்”திற்கு சடமோ, உருவமோ, கட்டுப்பாடோ, வரையறையோ, நிறமோ, ஆழம், அகலம், நீளம் போன்ற முப்பரிமாணங்களோ இல்லாதிருக்கும் நிலையில் அவனுக்கு நிகராக எதைச் சொல்ல முடியும்? எதை அவனுக்கு நிகராகச் சொல்வதாயினும் படைப்புக்களில் ஒன்றைத்தானே நிகராகச் சொல்ல வேண்டும். அப்படியொரு படைப்பை எங்கே தேடுவது? அது அசாத்தியம்.

ஒரு படைப்பில் மேலே நான் சொன்ன அம்சங்களில் எது இருந்தாலும் நிச்சயமாக அவற்றில் ஓர் அம்சம் இருக்கவே முடியாது. அதுவே சிருட்டி கர்த்தா என்ற அம்சமாகும். சிருட்டி கர்த்தாவுக்கு நிகர் சொல்வதாயின் சிருட்டி கர்த்தாவையே சொல்ல வேண்டும். சிருட்டி கர்த்தா இருவராக இருக்க முடியாது. படைத்தவன் ஒருவனாகவே இருக்க வேண்டும். சிருட்டி கர்த்தா என்பவன் படைத்தவனாகவே இருப்பான். அவனுக்கு படைப்பை நிகராக கூற முடியாது.

தொடரும்…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments