தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
إِنَّ مَنْ أَوْهَمَ ظَاهِرُ كَلَامِهِ الْكُفْرَ لِبَعْضِ السَّامِعِيْنَ وَأَمْكَنَ حَمْلُ كَلَامِهِ عَلَى مَحَامِلَ حَسَنَةٍ لَا يُفْتِيْهِ الْمُفْتِى بِرِدَّتِهِ مُعْتَمِدًا عَلَى مُجَرَّدِ كَلَامِهِ مِنْ غَيْرِ اسْتِفْسَارِهِ عَنْ دَلَائِلِ مَقَالِهِ،
فَإِنْ قَالَ أَحَدٌ مَثَلًا ضَحِكَ اللهُ، أَوْ نَزَلَ اللهُ، أَوْ وَضَعَ اللهُ قَدَمَهُ، أَوِ اضْطَجَعَ اللهُ، أَوْ جَاءَ اللهُ، أَوْ نَسَبَ صِفَةً مِنْ صِفَاتِ الْمَخْلُوْقِ إِلَى اللهِ فَلَا يُحْكَمُ عَلَيْهِ بِمُجَرَّدِ كَلَامِهِ أَنَّهُ مُرْتَدٌّ أَوْ خَارِجٌ عَنْ دِيْنِ الْإِسْلَامِ، بَلْ يُسْئَلُ عَنْ مُرَادِ كَلَامِهِ إِنِ احْتَاجَ الْأَمْرُ إِلَى السُّؤَالِ، فَإِنْ فَسَّرَ كَلَامَهُ بِمَا يُوَافِقُ الشَّرْعَ يُقْبَلُ قَوْلُهُ، وَإِلَّا فَلَا، وَإِنْ لَمْ يُوَافِقْ تَفْسِيْرُهُ الشَّرْعَ يُحْكَمُ عَلَيْهِ بِمَا يَقْتَضِيْهِ الشَّرْعُ،
சுருக்கமான தமிழாக்கம்:
ஒருவன் ஒரு வசனம் பேசினான், அல்லது ஒரு பேச்சுப் பேசினான் என்று வைத்துக் கொள்வோம். அவன் பேசிய வசனத்தின் அல்லது பேச்சின் வெளிரங்கம் – வெளித் தோற்றம் “குப்ர்” எனும் நிராகரிப்பை கேட்பவர்களுக்கு சந்தேகமாக்கி வைத்து, அவன் கூறிய வசனத்திற்கோ, பேச்சுக்கோ வலிந்துரை கொடுத்து அது “குப்ர்” நிராகரிப்பு அல்ல என்று சொல்வதற்குச் சாத்தியமிருந்தால் “முப்தீ” நீதிவான் அவனுடைய வசனத்தின் அல்லது பேச்சின் வெளிரங்கத்தை மட்டும் கவனத்திற் கொண்டு அவனின் கூற்றுக்கான ஆதாரத்தை அவனிடமே கேட்டறியாமல் அவனுக்கு “முர்தத்” மதம் மாறியவன் என்று தீர்ப்புக் கூறுவது கூடாது.
உதாரணமாக அல்லாஹ் சிரித்தான் என்றோ, அல்லாஹ் இறங்கினான் என்றோ, அல்லது அல்லாஹ் தனது காற் பாதம் வைத்தான் என்றோ, அல்லது அல்லாஹ் சாய்ந்திருந்தான் – படுத்தான் என்றோ, அல்லது அல்லாஹ் வந்தான் என்றோ, அல்லது படைப்புக்குள்ள ஒரு தன்மையை அல்லாஹ்வின் பக்கம் சேர்த்தோ சொல்வது போன்றுமாகும். அல்லாஹ் நோயுற்றான் என்பது போன்று.
மேற்கண்டவாறு ஒருவன் சொன்னால் அவனின் பேச்சுடைய வெளிரங்கத்தை ஆதாரமாக எடுத்து அவனுக்கு “முர்தத்” மதம் மாறியவன் – இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறியவன் என்று தீர்ப்புச் செய்தல் கூடாது.
எனினும் அவனிடம் அவனின் பேச்சுக்கு விளக்கம் கேட்க வேண்டியிருந்தால் அவனிடம் கேட்க வேண்டும். அவன் “ஷரீஆ”வுக்கு முரண்படாத வகையில் விளக்கம் சொன்னால் அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவன் கூறும் விளக்கம் “ஷரீஆ”வுக்கு முரணாயிருந்தால் அவனுக்கு “ஷரீஆ”வின் படி என்ன தீர்ப்பு சொல்ல வேண்டுமோ அவ்வாறு தீர்ப்புக் கூற வேண்டும்.
மேலே நான் சொன்ன சட்ட விளக்கம் “ஷரீஆ”வை அணுவணுவாய் ஆராய்ந்து எழுதப்பட்ட சட்டமாகும். “பிக்ஹ்” எனும் சட்ட நூல்களை ஆய்வு செய்தால் நான் மேலே கூறிய விபரம் சரியானதென்று தெளிவாகும்.
சிறு விளக்கம்.
ஒருவன் அல்லாஹ் சிரித்தான் என்று சொன்னான் என்று வைத்துக் கொள்வோம். அவனின் இவ்வசனம் சிலருக்கு “குப்ர்” நிராகரிப்பை சந்தேகமாக்குகின்றது என்றும் வைத்துக் கொள்வோம். அதாவது அல்லாஹ் மனிதன் சிரிப்பது போல் சிரித்தான் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம். ஏனெனில் அவ்வாறு சொன்னவன் மனிதன் சிரிப்பது போல் சிரித்தான் என்ற கருத்துப்படவும் சொல்லியிருக்க சாத்தியமுண்டு. அந்தக் கருத்திலன்றி சொல்லியிருப்பதற்கும் சாத்தியமுண்டு. ஆகையால் அவனிடம் என்ன கருத்தை மனதில் நினைத்து நீ சொன்னாய் என்று விளக்கம் கேட்க வேண்டும். மனிதன் சிரிப்பது போல் சிரித்தான் என்றுதான் நான் சொன்னேன் என்று அவன் சொன்னால் “ஷரீஆ” சட்டபப்படி அவனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டுமோ அத் தண்டனை அவனுக்கு வழங்க வேண்டும்.
ஆயினும் எக்காரணம் கொண்டும் குற்றவாளி விசாரிக்கப்படாமல் தீர்ப்புச் சொல்வது பிழைதான். அது மட்டுமன்றி அத்தீர்ப்பு செல்லுபடியாகவுமாட்டாது. “ஷரீஆ”வின் கிதாபுகள் அனைத்தையும் ஆய்வு செய்தாலும் சட்டம் இதுதான்.
குற்றவாளி விசாரணைக்கு வரவில்லையானால் அதற்கான சரியான காரணம் அவன் கூற வேண்டும். அவன் கூறும் காரணம் உண்மையாயின் அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவனுக்கு ஒரு தவணை மட்டும் போதாதென்றால் இன்னும் பல தவணைகள் கொடுத்தாவது அவன் விசாரிக்கப்படவே வேண்டும். எந்த வழியிலும் அவனை விசாரிக்க முடியாதென்று இருந்தால் மட்டுமே அவனின்றி தீர்ப்புக் கூற முடியும்.
அல்லாஹ் சிரித்தான் என்று சொன்னவன் விசாரிக்கப்படும் போது, மனிதன் சிரிப்பது போல் அல்லாஹ் சிரித்தான் என்று நான் சொல்லவில்லை. அவன் பொருந்திக் கொண்டான், திருப்திப் பட்டான் என்ற கருத்திலேயே நான் அவ்வாறு சொன்னேன் என்று கூறினால் அவன் சொல்வதை ஏற்றுச் செயல்பட வேண்டும். அதாவது அவனைத் தண்டிக்கலாகாது.
காழீ நீதி மன்றில் நடைபெறும் திருமணம் சம்பந்தமான வழக்கில் கூட எதிரி சமுகமளிக்காது போனால் காழீ நீதிவான் அவனுக்கு பல தவணைகள் கொடுத்தாவது அவனை அழைத்து அவனையும் விசாரித்த பின்புதான் தீர்ப்புச் சொல்வார். அவசரப்பட்டு ஒரே தவணையில் விசாரணையை முடித்து தீர்ப்புச் சொல்லமாட்டார்.
ஒருவனைக் காபிராக்கி, முர்தத் ஆக்கி கொடுக்கும் தீர்ப்பு சாதாரண தீர்ப்பல்ல. அது மிகப் பேணுதலாகவும், மிகக் கவனத்தோடும் கூறப்பட வேண்டிய தீர்ப்பாகும். காழீ நீதிவான் இரு தரப்பினரையும் பல மாதங்கள் இழுத்தடித்து தீர்ப்பை தள்ளிப் போடுவதற்கான காரணம் இரு தரப்பினரின் நன்மை கருதியேயாகும்.
உலமா சபை விசாரணைக்கு வருமாறு எனக்கு ஒரு கடிதம் மட்டும் அனுப்பி வைத்தார்கள். நான் அதற்கு உரிய நேரத்தில் உரிய பதில் அனுப்பி வைத்தேன். அதில், எனக்கும், காத்தான்குடி உலமாஉகளுக்கும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இதை நாங்களே பேசி முடித்துக் கொள்வோம். நீங்கள் தலையிடாதீர்கள் என்ற கருத்துப்பட எழுதியிருந்தேன். அந்நேரம் எனக்கும், காத்தான்குடி உலமாஉகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது உண்மைதான். எனினும் காத்தான்குடி வஹ்ஹாபீகளும், பொறாமைக் காரர்களும், இன்னுமொரு ஷெய்தானும் இணைந்து சதி செய்து விட்டார்கள். காத்தான்குடி உலமாஉகள் நினைத்திருந்தால் இப்பிரச்சினை இங்கேயே தீர்க்கப்பட்டிருக்கும். பொறாமை அவர்களை விடவில்லை. எனினும் இந்தப் பிரச்சினை கொழும்பு உலமா சபைக்குச் சென்றது அவர்களைப் பொறுத்து நாய்க்கு புரியாணி கிடைத்தாற் போலாகிவிட்டது.
فَلَا يَرْتَدُّ أَحَدٌ أَبَدًا بِمُجَرَّدِ تَلَفُّظِهِ بِأَلْفَاظٍ يُوْهِمُ ظَاهِرُهَا الْكُفْرَ لِلسَّامِعِيْنَ الْقَاصِرِيْنَ إِلَّا إِنْ أَرَادَ الْمُتَلَفِّظُ بِتِلْكَ الْأَلْفَاظِ مَعْنًى يُوْرِثُ الْكُفْرَ وَالرِّدَّةَ، وَالدَّلِيْلُ عَلَى عَدَمِ ارْتِدَادِ مَنْ أَطْلَقَ هَذِهِ الْأَلْفَاظَ الْآيَاتُ الْقُرْآنِيَّةُ وَالْأَحَادِيْثُ النَّبَوِيَّةُ، فَإِنَّ مِنَ الْآيَاتِ الْقُرْآنِيَّةِ مَا يُوْهِمُ الْكُفْرَ لِبَعْضِ النَّاسِ كَقَوْلِ اللهِ عَزَّ وَجَلَّ وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا، وَكَقَوْلِهِ تَعَالَى يَدُ اللهِ فَوْقَ أَيْدِِيْهِمْ، وَكَقَوْلِهِ فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللهِ،
فَإِنَّ هَذِهِ الْآيَاتِ تَدُلُّ علَىَ أَنَّ اللهَ تَعَالَى جَاءَ مَعَ الْمَلَائِكَةِ صَفًّا صَفًّا، وَأَنَّ للهِ يَدًا وَرِجْلًا وَوَجْهًا، فَإِنْ كَانَ أَحَدٌ يَرْتَدُّ بِمُجَرَّدِ إِطْلَاقِ مِثْلِ هَذِهِ الْأَلْفَاظِ فَكُلُّ قَارِئٍ لِلْقُرْآنِ مُرْتَدٌّ وَخَارِجٌ عَنْ دِيْنِ الْإِسْلَامِ، حَتَّى الْمُفْتِى بِرِدَّةِ مَنْ أَطْلَقَ هَذِهِ الْأَلْفَاظَ إِنْ كَانَ يَقْرَأُ الْقُرْآنَ،
சுருக்கமான தமிழாக்கம்:
ஒருவன் சில சொற்களை மொழிகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவற்றைச் செவியேற்கின்ற, விளக்கம் குறைந்தவர்களுக்கு அவற்றின் வெளிரங்கம் “குப்ர்” இறை நிராகரிப்பை ஏற்படுத்துவது போல் விளங்குவதால் மட்டும் அவன் “முர்தத்” மதம் மாறியவனாக மாட்டான். இதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அவன் பயன்படுத்திய சொற்களுக்கு “குப்ர்” ஐ ஏற்படுத்தக் கூடிய கருத்தை அவன் நினைக்காதவனாக, நாடாதவனாக இருக்க வேண்டும்.
நான் எழுதுகின்ற இந்நிபந்தனை அவசியமென்பதற்கு திருக்குர்ஆன் வசனங்களும், நபீ மொழிகளும் ஆதாரங்களாக உள்ளன.
திருக்குர்ஆனில் சில வசனங்கள் உள்ளன. அவற்றின் வெளிரங்கம் சில மனிதர்களைப் பொறுத்து மட்டும் “குப்ர்” நிராகரிப்பை ஏற்படுத்தினாலும் கூட இதனால் குர்ஆன் ஓதக் கூடாதென்ற கருத்து வந்து விடாது. இதோடு அவ்வாறு ஓதினவன் “முர்தத்” மதம் மாறினவனாக ஆகவும் மாட்டான்.
உதாரணமாக உங்களின் இரட்சகனான அல்லாஹ்வும், “மலக்” அமரர்களும் அணியணியாய் வந்தனர், அல்லாஹ்வின் கை அவர்களின் கைகளின் மேல் உள்ளது, நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு என்பன போன்று.
இவை திருக்குர்ஆன் வசனங்களாகும். இத்திரு வசனங்களை இவற்றின் பொருள் தெரிந்தவர்களும் ஓதுவார்கள். பொருள் தெரியாதவர்களும் ஓதுவார்கள். எவர் ஓதினாலும் ஓதுவதை மட்டும் கொண்டு ஓதினவன் “காபிர்”, “முர்தத்” ஆகிவிடமாட்டான். வசனங்கள், சொற்களின் பொருள் விளங்காமல் வசனங்களை ஓதுவது கொண்டு மட்டும் ஓதினவன் காபிர் ஆகவோ, “முர்தத்” ஆகவோ மாட்டான்.
அதாவது வசனங்கள் தருகின்ற கருத்துக்கள் புரியாமல் ஓதுவதால் மட்டும் ஒருவன் “காபிர்” ஆகிவிடவோ, “முர்தத்” ஆகிவிடவோ மாட்டான். அதாவது ஒருவன் தான் ஓதுகின்ற வசனங்களின் பொருள் தெரியாமல் அவ் வசனங்களைச் சொல்வதால் மட்டும் அவன் “காபிர்” ஆகவோ, “முர்தத்” ஆகவோ மாட்டான்.
ஒருவன் அல்லாஹ்வும், “மலக்” அமரர்களும் அணியணியாய் வந்தார்கள் என்று வாயால் சொல்வதால் மட்டும், அல்லது அல்லாஹ்வின் கை அவர்களின் கைகளுக்கு மேலே உள்ளது என்று வாயால் சொல்வதால் மட்டும், அல்லது நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு என்று வாயால் சொல்வதால் மட்டும் ஒருவன் “காபிர்” ஆகவோ, “முர்தத்” ஆகவோ மாறிவிடமாட்டான்.
இதற்கு மாறாக பொருள் விளங்கியோ, விளங்காமலோ எவன் ஓதினாலும் அத்தகைய சொற்களை அல்லது வசனங்களை மொழிந்தால் போதும் மொழிந்தவன் “காபிர்” அல்லது “முர்தத்” ஆகிவிடுவான் என்று சட்டம் இருக்குமாயின் திருக்குர்ஆனை பொருள் தெரிந்தோ, தெரியாமலோ ஓதுகின்ற அனைவரும் “காபிர்” அல்லது “முர்தத்” ஆகிவிட நேரிடும். சட்டம் இவ்வாறுதான் என்றால் திருக்குர்ஆனை ஓதுகின்ற அனைவரும் “காபிர்” அல்லது “முர்தத்” மதம் மாறியவர்களாக வேண்டி வரும். “பத்வா” வழங்கிய “முப்தீ”யும் கூட அவர் குர்ஆன் ஓதுபவராயின் அவரும் “காபிர்” அல்லது “முர்தத்” ஆகவே வேண்டும்.
இவ்வாறுதான் இஸ்லாமிய சட்டம் இருக்கிறதென்று ஒருவன் வாதிட்டால் அவரின் வாதம் பிழையாகிவிடும். எவருமே திருக்குர்ஆன் ஓதக் கூடாதென்று சொல்ல வேண்டியுமேற்படும். சட்டமாக்க வேண்டியும் ஏற்படும்.
ரிஸ்வீ ஸாஹிப் அவர்களே!
ஒருவர் பேசிய, “குப்ர்” நிராகரிப்புக்கு சாத்தியமான, சந்தேகமான வசனத்தைக் கொண்டு அவனை விசாரிக்காமல் அவனுக்கு “காபிர்” என்றோ, “முர்தத்” என்றோ தீர்ப்புச் செய்ய முடியுமென்று நீங்கள் சொல்வீர்களாயின் திருக்குர்ஆன் ஓதுகின்ற அனைவரும் “காபிர்” அல்லது “முர்தத்” என்று நீங்கள் தீர்ப்புக் கூற வேண்டும். “பத்வா” வழங்க வேண்டும். வழங்குவீர்களா?
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு திரு மக்கா நகரில் எதிர்ப்பு அதிகமாகி அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட சமயம் திரு மக்காவிலிருந்து மறைந்து வாழ வேண்டிய ஒரு சூழல், நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அவர்களின் வீட்டை எதிரிகள் ஆயுதங்களோடு முற்றுகையிட்டனர். பெருமானார் அவர்களின் கண்களை கட்டிவிட்டு வெளியேறுவதற்காக ஒரு பிடி மண் எடுத்து அவர்களை நோக்கி எறிந்தார்கள். அந்த மண் அங்கு சூழ்ந்து நின்ற எதிரிகளின் கண்களில் விழுந்து அவர்களின் கண்கள் பார்க்க முடியாமலாயின.
இந்த நிகழ்வு குறித்து திருக்குர்ஆனில் கூறிய அல்லாஹ்
وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى
“முஹம்மதே! நீங்கள் எறிந்த நேரம் நீங்கள் எறியவில்லை. அல்லாஹ்தான் எறிந்தான்” என்று கூறியுள்ளான். எதார்த்தத்தில் மண்ணை எடுத்ததும், அதை எறிந்ததும் நபீகளார் அவர்கள்தான். அவ்வாறிருந்தும் நீங்கள் எறியவில்லை என்று கூறி தானே எறிந்ததாகக் கூறியுள்ளான். இது தொடர்பான விளக்கம் அனைவரும் அறிய வேண்டிய விளக்கமாதலால் அடுத்த தொடரை அவசியம் வாசிக்க வேண்டும்.