Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்முல்லாக்களின் கையெழுத்தில்லாத “முர்தத் பத்வா”தந்தையின் பெயர் தெரியாத தனயன் போன்றதாகும்!

முல்லாக்களின் கையெழுத்தில்லாத “முர்தத் பத்வா”
தந்தையின் பெயர் தெரியாத தனயன் போன்றதாகும்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

ஒருவனுக்கு தபால் மூலமோ, அல்லது வேறு வழிகள் மூலமோ ஒரு கடிதம் கிடைத்தால் அவன் முதலில் பார்ப்பது எழுதியவனின் கையெழுத்தையேயாகும். அதிகமானவர்களிடம் இவ்வழக்கம் உண்டு. அதில் கையெழுத்து இல்லையானால் அவன் அதை மொட்டைக் கடிதமெனக் கருதி அதைக் கசக்கி தனது காலின் கீழ் உள்ள குப்பைக் கூடையில் போட்டு விடுவான். ஒரு கடிதத்தின் பிரதான அம்சம் எழுதியவனின் கையெழுத்தேயாகும்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” என்றும், எங்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்றும் வழங்கிய “பத்வா” மொட்டைக் கடிதம் போல் மொட்டை “பத்வா”வேயாகும்.

ஏனெனில் அதில் “பத்வா” எழுதியவரின் அல்லது எழுதியவர்களின் பெயரோ, பெயர்களோ கூறப்படவில்லை. இது தந்தையின் பெயர் தெரியாத தனயன் போன்ற “பத்வா”வேயாகும்! எழுதியவர்கள் தம்மைக் காட்டிக் கொள்ளப் பயந்தவர்களேயாவர். பயந்தவர்களுக்கு ஏன் இந்த வேலையோ!

நமது இலங்கைத் திரு நாட்டில் சில ஊர்களில் தந்தையின் பெயர் தெரியாதவனை “ஹறாங்குட்டி” என்று சொல்வது வழக்கம். இதை எழுதிக் கொண்டிருந்த போது “ஹறாங்குட்டி” கதைதான் என் நினைவுக்கு வந்தது.

இக்குட்டி பிறந்து சில நாட்களிலேயே “ஜனாஸா” மையித் வைக்கப்படும் “ஸுந்தூக்”கில் அதை வைத்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களால் பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளி வளாகத்திலிருந்து ஊர் வீதி வழியாக “ஷஹாதத் கலிமா” சொல்லி மெத்தைப் பள்ளிவாயல் வழியாக பிரதான வீதியை அடைந்து “குட்வின்” சதுக்கத்தில் ஹறாங்குட்டி எரித்துச் சாம்பலாக்கப்பட்டது.

இந்த நிகழ்வு 25.05.1980 அன்று நடந்த நிகழ்வாகும். அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்கள் இப்போதும் எங்களிடமுள்ளன. தேவைப்பட்டால் வெளியிடுவோம்.

இப்போது எமக்கு எதிராகவும், ஸூபிஸ ஞானத்திற்கு எதிராகவும், “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் தத்துவத்திற்கு எதிராகவும் கொடி தூக்குபவர்களில் அநேகமானவர்களுக்கு இந்நிகழ்வு தெரியாது. இன்று 42 வயதுள்ள ஒருவர் இந்நிகழ்வு நடந்த 1979ம் ஆண்டு தாயிடம் பால் அருந்தும் வயதுள்ளவராகவே இருந்திருப்பார்.

செத்திறந்து சாம்பலாக்கப்பட்ட பிரேதத்தை மீண்டும் வைத்துக் கொண்டு சாம்பிராணி போடுவோரை எண்ணி நான் வெட்கித் தலை குனிகிறேன்.

ரிஸ்வீ முப்தீ அவர்களே!

ஒருவர் “பத்வா” எழுதினால் அவர் தனது பெயரை அல்லது ஒரு குழு சேர்ந்து எழுதினால் அவர்கள் தமது பெயர்களையும், தமது முகவரிகளையும் எழுதுவதே வழக்கம். இதுவே சரியான நடைமுறையுமாகும்.

உங்களின் உலமா சபை கொடுத்த “பத்வா”வில் “பத்வா” எழுதியவர்களின் பெயர் முகவரிகள் கூறப்படவில்லையே அது ஏன்? பயந்துவிட்டார்களா? அப்படியானால் நீங்கள் “பத்வா” எழுத ஏன் முன்வர வேண்டும்? இடுப்பில் பலமில்லாதவனும், ஆண்குறி சூகையானவனும் திருமணம் செய்யாமல் ஒதுங்கிக் கொள்கிறார்களே! அவர்களுக்குள்ள “அக்ல்” புத்தியாவது “பத்வா” வழங்கிய முல்லா மகான்களுக்கு இல்லாமற் போய்விட்டதே! நீங்களாவது அவர்களுக்கு புத்திமதி சொல்லியிருக்கலாமல்லவா? நீங்கள்தான் ஐடியா மன்னராச்சே!

ரிஸ்வீ முப்தீ அவர்களே!

(நான் “பத்வா” வழங்கவில்லை என்றும், “பத்வா” வழங்கிய கால கட்டத்தில் நான் பதவியிலிருக்கவில்லை) என்றும் கூறி நியாயம் கேட்பவர்களுக்கு சாட்டுப் போக்கு சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இது கூட சாம்பல் கேட்ட கதை போன்ற ஒரு கதையேதான்.

நீங்கள் கூறும் நொண்டிச் சாட்டைப் பார்த்தால் “பத்வா” வழங்கப்பட்ட நேரம் நீங்கள் பதவியிலிருந்திருந்தால் “பத்வா” வழங்கவிட்டிருக்கமாட்டீர்கள் என்று சொல்கிறீர்கள். இவ்வாறுதான் கலீபதுல் குலபா மௌலவீ அப்துல் ஹமீத் பஹ்ஜீ அவர்களும் என்னிடம் சொன்னார்.

கொழும்பிலுள்ள ஒரு “ஹோல்” மண்டபத்தில் சிறிய அளவிலான ஒரு மாநாடு நடந்தது. அதை சகோதரர் ஸெய்யித் ஹனீப் ஹாஜீ அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் என்று நினைக்கிறேன். அதற்கு எனக்கும் அழைப்பு வந்தது. நானும் சென்றிருந்தேன். பிரதம அதிதியாக மரியாதைக்குரிய அஸ்ஸெய்யித் அபீபுத்தீன் கைலானீ அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மட்டுமே அங்கு அறபு மொழியில் பேசினார்கள். அவரின் பேச்சை சகோதரர் மௌலவீ யஹ்யா அஸ்ஹரீ அவர்கள் தமிழாக்கம் செய்தார்.

நான் உள்ளே சென்ற போது முன்னிருக்கையில் ஒருவர் இருந்தார். அவருடன் இன்னுமொருவரும் இருந்தார். இருவருக்குமிடையில் ஓர் இடம் காலியாயிருந்தது. அவ்விடத்தில் அங்கு நின்றிருந்த ஒருவரால் நான் அமர்த்தப்பட்டேன். எனது வலது பக்கமிருந்தவர் மரியாதைக்குரிய அதிபர் முஹாஜிரீன் ஹஸ்றத் அவர்கள். இடப்பக்கம் இருந்தவர் முகத்தை மறைத்துக் கொண்டிருந்ததால் அவர் யாரென்று எனக்கு தெரியாமற் போயிற்று. நான் முஹாஜிரீன் ஹஸ்றத் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தின் பின் முகத்திரையை நீக்கிவிட்டு என்னை நோக்கி நான் யார் தெரியுமா? என்று அவர் வினவினார். ஸலாம் சொன்னாரா? இல்லையா? என்பது என் நினைவில் இல்லை. பார்த்த முகம் போல் தெரிகிறது என்றேன். அதற்கவர் நான்தான் கலீபதுல் குலபா அப்துல் ஹமீத் என்றார். சற்று சத்தமாய் சிரித்து விட்டு, எனக்கு “முர்தத் பத்வா” கொடுத்தவர்களில் நீங்களும் ஒருவர்தானே? என்றேன். அதற்கவர் “அஸ்தக்பிறுல்லாஹல் அளீம்” நான் அந்தக் கூட்டத்திற்கு கூட போகவில்லை. இருந்தாலும் “முர்தத்” என்று “பத்வா” கொடுக்காதீர்கள் என்று பல தரம் நான் கூறியும் என் பேச்சை அவர்கள் கேட்கவில்லை என்று கூறினார். அவர் பொய் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேனாயினும் நான் அவரை எதிர்த்து எதுவுமே சொல்லவில்லை.

இந்த விபரத்தை நான் எழுதியதற்கான காரணம் என்னவெனில் இவரும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வீ முப்தீ அவர்களும் அதியுச்ச பதவியில் இருப்பவர்களாவர்.

மௌலவீ அப்துல் ஹமீத் பஹ்ஜீ அவர்கள் “கலீபதுல் குலபாஇ” இலங்கை நாட்டிலுள்ள “ஷாதுலிய்யா தரீகா”வின் பல கலீபாஉகளுக்கும் கலீபாவானவராவார். இப்பதவி சாதாரணமான பதவியல்ல. கிடைத்தற்கரிய பதவியாகும். இவருக்கு ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்களினதும், அவர்களின் கலீபா அஸஸெய்யித் அபுல் அப்பாஸ் அல்முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களினதும், அவர்களின் கலீபா அஸ்ஸெய்யித் தாஜுத்தீன் அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ் அவர்களினதும் “ஷபாஅத்” சிபாரிசும், உதவியும் நிச்சயமாக கிடைக்கும்.

எவர் எத்தரீகாவுக்கு கலீபாவாக இருந்தாலும் அவர் அத்தரீகாவின் “றூஹ்” உயிரான “தரீகா”வின் கொள்கையை – “அகீதா”வை வளர்க்க வேண்டும். அதை வளர்ப்பதற்கு அயராதுழைக்கவும் வேண்டும்.

“தரீகா”க்களை தாபித்த குத்புமார்களில் “கிதாப்” நூல்கள் எழுதுவதைக் குறைத்து أَحْزَابْ எனும் “அவ்றாத்”களை அதிகப்படுத்திய மகான் ஷாதுலீ நாயகம் என்றே சொல்ல வேண்டும்.

இதேபோல் தரீகாக்களின் தாபகர்களான குத்புமார்களில் “வஹ்ததுல் வுஜூத்” பேசாத எந்தவொரு குத்பும் இருந்ததற்கு வரலாறே கிடையாது. அவர்களில் விளக்கமாகவும், வெளிப்படையாகவும் “வஹ்ததுல் வுஜூத்” பேசிய, எழுதிய மகான் ஷாதுலீ நாயகம் என்றே சொல்ல வேண்டும். அவர்களின் “கலீபா”வின் “கலீபா”வான “ஹிகம்” எனும் ஞான நூலை எழுதிய தாஜுத்தீன் அதாஉல்லாஹ் அவர்களும் அவ்வாறே பேசியும், எழுதியுமுள்ளார்கள்.

ஒரு காலத்தில் – சுமார் 75 வருடங்களுக்கு முன் “ஹிகம்” எனும் நூல் இலங்கையிலுள்ள சில அறபுக் கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கப்பட்டும் உள்ளன. இந்நூல் பற்றிக் கருத்துக் கூறிய அறிஞர் சமுகம் كَادَ الْحِكَمُ أَنْ يَكُوْنَ قُرْآنًا “ஹிகம் எனும் நூல் குர்ஆனுக்கு நெருங்கிவிட்டது” என்று கூறியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் அறிந்தவரை இலங்கையில் நடைமுறையிலுள்ள “தரீகா”க்களில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் கூறப்படாத எந்த ஒரு “தரீகா”வும் கிடையாது. விபரமறிய விரும்புவோர் எம்மோடு தொடர்பு கொண்டு விபரம் கேட்டால் விளக்கமாகக் கூற நாம் ஆயித்தமாயுள்ளோம்.

கலீபதுல் குலபா அவர்களே!

உங்களுக்கோ, உங்களின் ஏனைய கலீபாஉகளுக்கோ இக்கொள்கை விளங்காதிருப்பின் அல்லது தெளிவில்லாதிருப்பின் நீங்கள் அனைவரும் நேரகாலத்தைப் பெற்றுக் கொண்டு என்னிடம் வருமாறு உங்களை அன்போடு அழைக்கிறேன்.
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
அல்லாஹ்வின் அருளைச் சொல்லிக் காட்டுங்கள் என்ற திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் நான் சொல்கிறேன். பெருமை, கர்வம் என்ற அசுத்தங்களைச் சுமந்தவனாக நான் இதைக் கூறவில்லை. அல்லாஹ் எனக்குச் செய்த “நிஃமத்” அருளைச் சொல்லிக் காட்ட வேண்டுமென்ற அடிப்படையில் சொல்கிறேன்.

“வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தெரிந்த மகான்கள் பலர் இந்நாட்டில் இருக்கலாம். ஆயினுமவர்களில் அநேகர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “முர்தத் பத்வா” தமக்கும் வந்துவிடுமோ என்று அஞ்சி இலைமறை காய் போல் வாழ்ந்து வருகிறார்களேயன்றி தெரிந்தவர்கள் இல்லையென்று நான் சொல்லவில்லை. உலமா சபை முப்தீகள் “பத்வா” கொடுப்பதற்கு பேனா, பேப்பருடன் ரெடியாக வழிமேல் விழி வைத்து காத்துக்கிடக்கின்றனர். அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களையும் பலிக்கிடாய்களாக்க நான் விரும்பவில்லை.

قال الشّيخ الأكبر محي الدين ابن عربي قُدّس سرّه خُصِّصْتُ بِعِلْمٍ لَمْ يُخَصَّ بِمِثْلِهِ – سِوَايَ مِنَ الرَّحْمَنِ ذِي الْعَرْشِ وَالْكُرْسِيِّ

நான் ஓர் அறிவு கொண்டு சொந்தமாக்கப்பட்டுள்ளேன். அர்ஷ், குர்ஸீ உடைய இறைவன் வேறெவருக்கும் அதைக் கொடுக்காமல் எனக்கு மட்டுமே தந்துள்ளான் என்று கூறினார்கள்.

அவர்களின் இப்பாடல் சிரியா நாட்டின் தலைநகரான டமஸ்கஸ் நகரில் அமைந்துள்ள அவர்களின் புனித அடக்கவிடத்தின் தலைவாயலில் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருளைச் சொல்லிக் காட்டுவதற்காக கூறினார்களேயன்றி பெருமைக்காக சொல்லவில்லை.

அவர்கள் போல்தான் நானும் சொல்கிறேனேயன்றி பெருமைக்கும், எனக்கும் சம்பந்தமே கிடையாதென்று சத்தியம் செய்து கூறுகிறேன். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “பத்வா” பயமுறுத்தல் இன்றேல் என்னைவிடத் தரமான மறைந்து வாழும் மகான்கள் சபைக்கு வருவார்கள். மேடையேறிப் பேசவும் செய்வார்கள்.

கலீபதுல் குலபா அவர்களே!

ஷாதுலிய்யா தரீகாவுக்கும், “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்திற்கும் சம்பந்தமே கிடையாதென்றும், இந்த ஞானம் ஷாதுலீ நாயகமோ, தரீகாவைச் சேர்ந்த ஏனைய மஷாயிகுமார்களோ பேசவுமில்லை, எழுதவுமில்லை என்றும் நீங்கள் சொல்வீர்களாயின் சொல்லுங்கள். நாம் விளக்கி வைக்க எப்போதும் ஆயித்தமாயுள்ளோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

سمحا ومعذرة من العلماء الّذين أشرت إليهم بأسمائهم وألقابهم ومناصبهم، لأنّ القلب يتأذّى ويتألّم ويقطر دمعا ودما، بما فعل العلماء الّذين أفتوني وجمّا غفيرا وجمعا كبيرا من الموحّدين المؤمنين بوحدة الوجود التي هي الروح للإيمان والإسلام، وهي المرقاة التي توصل العبد إلى ربّه،
முற்றும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments