Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இப்படியும் மனிதர்கள் உள்ளனரா?

இப்படியும் மனிதர்கள் உள்ளனரா?

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

ஸூறத் மே இன்ஸான்ஹே
ஸீறத் நெஹீஹே!
ஸீறத் மே ஹயவான்ஹே
மகர்தும் நெஹீஹே!
(அறிஞர் அல்லாமா இக்பால்)

கவியின் பொருள்:

உருவத்தில் மட்டும் மனிதன்.
மனிதப் பண்பாடுகள் இல்லை.
பண்பாட்டில் மிருகமாவான்.
ஆனால் “வால்” மட்டும் இல்லை.

மேற்கண்டவாறு உர்து மொழிக் கவி அறிஞர் அல்லாமா இக்பால் றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

இதன் சுருக்கம் என்னவெனில், மனிதர்களிற் சிலர் இருப்பார்கள். அவர்கள் உருவத்தில் – தோற்றத்தில் மட்டுமே மனிதர்களாயிருப்பர். ஆயினும் அவர்களிடம் மனித பண்பாடுகளும், பழக்க வழக்கங்களும் இருக்காது. ஆயினுமவர்கள் மிருகங்களின் பண்பாடும், பழக்க வழக்கமும் உள்ளவர்களாக இருப்பர். அவர்களில் “வால்” மட்டும் இல்லாத குறைதான் இருக்கும். “வால்” மட்டும் இருந்தால் அவர்கள் உருவத்திலும் மிருகங்களேயாவர். மிருகங்கள் என்றே அழைக்கப்படுவர்.

இத்தகைய மனிதர்கள் இக்காலத்தில் அதிகமாக இருப்பதை நாம் காண்கிறோம். இத்தகையோர் படித்தவர்களிலும் உள்ளனர். படிக்காத பாமரர்களிலும் உள்ளனர். மார்க்கவாதிகளிலும் உள்ளனர். மார்க்கமே தெரியாதவர்களிலும் உள்ளனர்.

மனிதனை மனித பண்பாடுகளோடு வாழ வழிகாட்டும் ஒரே மருந்து “தஸவ்வுப்” ஸூபிஸம் எனும் அறிவு மட்டுமேயாகும். “ஷரீஆ”வின் “பிக்ஹ்” சட்டக் கலையல்ல.

சட்டக் கலையும் ஒரு மருந்துதான். ஆயினுமது மனிதன் தனது வெளியுறுப்புக்களால் செய்கின்ற வணக்க வழிபாடுகளில் எந்த ஒரு குறையும், தவறும் ஏற்படாமல் பாதுகாக்கும் மருந்து மட்டுமேயாகும்.

எவர் எவ்வாறு சொன்னாலும் “ஷரீஆ”வும், ஸூபிஸமும் மனிதனுக்கு அவசியமானவை என்பதில் நன்றாகக் கற்றவர்களிடம் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது. அரை குறையாகப் படித்த சிலரையும், “ஷரீஆ” தெரியாத சிலரால் எழுதப்பட்ட தமிழ் நூல்களை வாசித்த சிலரையும் தவிர. இவர்களுக்கு நான் கூற விரும்பும் “வஸிய்யத்” என்னவெனில் பின்வரும் தத்துவத்தை கருத்திற் கொண்டு செயல்பட வேண்டும் என்பதேயாகும்.

இத் தத்துவம் இறையியல் துறையிலும், “ஷரீஆ”விலும், ஸூபிஸத்திலும் ஆழமான அறிவும், அனுபவமும் உள்ள மகான்களின் தத்துவமாகும்.

مَنْ تَشَرَّعَ وَلَمْ يَتَحَقَّقْ فَقَدْ تَفَسَّقْ
وَمَنْ تَحَقَّقَ وَلَمْ يَتَشَرَّعْ فَقَدْ تَزَنْدَقْ

“ஒருவன் “ஷரீஆ”வைக் கற்று “ஹகீகா”வைக் கற்றுக் கொள்ளவில்லையானால் அவன் “பாஸிக்” கெட்டவனாகிவிட்டான். ஒருவன் “ஹகீகா”வைக் கற்று “ஷரீஆ”வை கற்றுக் கொள்ளவில்லையானால் அவன் “ஸிந்தீக்” ஆகிவிட்டான்”

இதே கருத்தை பின்வருமாறு சொற்களை மட்டும் மாற்றியும் சொல்ல முடியும்.

مَنْ تَشَرَّعَ وَلَمْ يَتَصَوَّفْ فَقَدْ تَفَسَّقْ
وَمَنْ تَصَوَّفَ وَلَمْ يَتَشَرَّعْ فَقَدْ تَزَنْدَقْ
“தஷர்றஅ” تَشَرَّعَ என்றால் “ஷரீஆ” கற்றான் என்றும், “தஹக்கக” تَحَقَّقَ என்றால் “ஹகீகத்” கற்றான் என்றும், “தஸவ்வப” تَصَوَّفَ என்றால் “ஸூபிஸம்” கற்றான் என்று பொருள் வரும்.

“தஸவ்வுப்” என்பதும், “ஹகீகஹ்” என்பதும் சாராம்சத்தில் – விடயத்தில் ஒன்றுதான்.

“தஸன்தக” تَزَنْدَقَ என்றால் “சிந்தீக்” ஆகிவிட்டான் என்று பொருள் வரும். “சிந்தீக்” என்ற சொல்லின் அடிப்படை பாரசீகச் சொல்லாகும். அறபு மொழி பேசுவோரும் இதைப் பயன்படுத்துவார்கள். இதன் பொருள்

مَنْ يُظْهِرُ الْإِيْمَانَ وَيُضْمِرُ الْكُفْرَ
“நிராகரிப்பை மறைத்துக் கொண்டு “ஈமான்” விசுவாசத்தை வெளிப்படுத்துபவன்” என்று பொருள் வரும். இதைச் சுருக்கமாகச் சொல்வதாயின் “முனாபிக்” நயவஞ்சகன் என்று சொல்ல முடியும்.

இச் சொல் தொடர்பான வரலாறு ஒன்றை இங்கு குறிப்பிடுகின்றேன். இதை அறிந்து கொண்டால் இச் சொல்லின் பொருள் தெளிவாக விளங்கும்.

இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ் ஸலாம் என்று மாபெரும் மார்க்க மேதையும், இறைஞானியும் இருந்தார். (இவர் ஹிஜ்ரீ 577ல் பிறந்து 660ல் மறைந்தார். “கறாபா” எனும் ஊரில் அடங்கப் பெற்றுள்ளார்)

இவரின் பணியாள் கூறியதாக ஸலாஹுத்தீன் அல் கலாநிஸி அவர்கள் தங்களின் “அல்பவாயித்” என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

இச்சிறு வரலாறை தமிழில் எழுதினால் போதுமாயினும் அறபுக் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி அறபியிலும் எழுதி மொழியாக்கம் செய்கிறேன்.
عن خادم الشيخ عزّ الدين بن عبد السلام قال كنَّا في درس الشيخ عِزِّ الدّين في باب الرِّدَّةِ، فذَكَرَ القارِي لفظةَ الزِّنْدِيق فقال بعضهم ، هذه اللفظةُ عربيَّةٌ أو عَجَميَّة ؟ فقال بعض العلماء ، فارسيّة مُعرّبةٌ ، أصلها ”زِنْ دِيْنْ” وهو الذي يُضْمِرُ الْكُفْرَ ويُظْهِر الإيمانَ ، فقال شخصٌ من الطّلبة مِثْلَ مَنْ ؟ فقال شخصٌ بجانبِ الشيخ عِزِّ الدين بن عبد السلام مثلُ محي الّدين ابن عربي، ولم يَنْطِقِ الشيخ عزّ الدين بشـيء، قال الخادم فلمّا قَدَّمتُ له عَشَائَه وكان صائما سألتُه عن القطب من هو ؟ فقال لا أرى القطبَ في زماننا هذا إلّا الشيخ محي الدّين ابن عربي وهو مُتَبَسِّمٌ، فأطرقتُ مَلِيّا مُتَحيّرا فقال مَالَكَ؟ ذلك مجلسُ الفُقهاء، ما وَسِعَني فيه غَيْرُ السُّكوت ،(اليواقيت، ج1، ص 10)

“இமாம் இஸ்ஸுத்தீன் அவர்களிடம் “ரித்தத்” மத மாற்றம் தொடர்பான பாடம் கற்றுக் கொண்டு வகுப்பில் இருந்தேன். அப்போது “சிந்தீக்” என்ற சொல் பாடத்தில் வந்தது. ஒருவர் இது அறபுச் சொல்லா? அல்லது வேறு மொழிச் சொல்லா? என்று வினவினார். அதற்கு அங்கிருந்த சிலர் அது பாரசீகச் சொல். அறபு மொழியில் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார்.

இச் சொல் زِنْ دِيْنْ “சின் தீன்” என்ற சொல்லின் மருவிய அமைப்பு என்றார்.

“சிந்தீக்” என்பவன் “ஈமான்” நம்பிக்கையை வெளியில் காட்டியும், “குப்ர்” நிராகரிப்பை மறைத்தும் வாழ்பவனாவான். அதாவது முனாபிக் – நயவஞ்சகனாவான். அங்கிருந்த மாணவர்களில் ஒருவர் இக்காலத்தில் அவ்வாறு யாரைக் குறிப்பிடலாம் என்று கேட்டார். அஷ்ஷெய்கு அப்துஸ்ஸலாம் அவர்களுக்குப் பக்கத்திலிருந்த ஒருவர் இப்னு அறபீ போல் என்று சொன்னார். ஷெய்கு அவர்கள் ஒன்றுமே சொல்லவில்லை. மௌனியாயிருந்தார்கள். பாடம் முடிந்தது.

அவர்களின் பணியாள் பின்வருமாறு கூறுகிறார்கள். அன்று ஷெய்கு அவர்கள் நோன்பாளியாக இருந்தார்கள். அவர்களுக்கு இராச் சாப்பாடு ஒழுங்கு செய்து கொடுத்துவிட்டு இக்காலத்து “குத்பு” யார்? என்று அவர்களிடம் கேட்டேன். இப்னு அறபீ அவர்கள்தான் என்று சிரித்துக் கொண்டு சொன்னார்கள். அன்று பகல் பாடத்தில் நடந்ததையும், தற்போது அவர்கள் கூறிய பதிலையும் சிந்தித்து தலை குனிந்தவனாக நான் யோசித்துக் கொண்டிருந்த போது என்னை அவர்கள் விழித்து அது – அந்தச் சபை “புகஹாஉ” சட்டவாதிகளின் சபை, எனக்கு மௌனம் சாதிப்பது தவிர வேறு வழி இருக்கவில்லை என்று கூறினார்கள்.

“சிந்தீக்” என்ற சொல் தொடர்பாக இக்குறிப்பை எழுதினேன். தொடர்ந்து – தலைப்பின் பக்கம் உங்களை அழைத்துச் செல்கிறேன்.

“ஷரீஆ” மனிதனுக்கு எவ்வாறு அவசியமோ அதேபோல் தரீகா, ஹகீகா, மஃரிபா என்பவையும் அவசியமேயாகும். “ஷரீஆ”வின் படி மட்டும் நடந்தால் சுவர்க்கம் போகலாம் என்ற சிலரின் கூற்று அர்த்தமற்றதாகும்.

மனிதன் என்ற வண்டி அல்லாஹ்வை அடைவதாயின் ஷரீஆ, தரீகா எனும் இரு சக்கரங்களும் சரியாகச் சுழல வேண்டும்.

ஸூபிஸத்தின் இலக்குகள் மூன்று. அவை மனிதன் அல்லாஹ்வை அறிவதும், தானுமில்லை, வேறெதுவுமில்லையென்று உணர்வதும், அல்லாஹ் மட்டுமே உள்ளான் என்று தரிபடுத்துவதுமேயாகும். ஒருவன் “பர்ழ்” கடமையான தொழுகை, நோன்பு, சகாத், ஹஜ் போன்றவற்றை முறைப்படி செய்து, மேற்கண்ட மூன்று அம்சங்களையும் கடைப்பிடித்து, சிறிய, பெரிய நற்குணங்களையும் எடுத்து நடந்து, சிறிய பெரிய தீக்குணங்களையும் விட்டு நடந்து, ஹலால், ஹறாம் பேணி வருவானாயின் அவனை அல்லாஹ் பொருந்திக் கொள்வதற்கும், அவன் மேலான சுவர்க்கம் செல்வதற்கும் இவை மட்டுமே போதும். ஆயினும் இவற்றைப் பேணாமல் நடப்பவன் ஒருபோதும் ஜெயம் பெறமாட்டான்.

اَلتَّصَوُّفُ تَزْكِيَةُ النُّفُوْسِ عَنِ الْخَطَرَاتِ الشَّيْطَانِيَّةِ كَمَا قَالَ اللهُ تَعَالَى فِى كَلَامِهِ الْقَدِيْمِ قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا، وَتَصْفِيَةُ الْقُلُوْبِ عَنِ الْأَخْلَاقِ الْمَذْمُوْمَةِ وَالْأَنِّيَّةِ وَالْأَنَانِيَّةِ وَالْغَيْرِيَّةِ،

ஸூபிஸம் என்பது, ஒருவன் ஷெய்தானிய்யத்தான எண்ணங்களை விட்டும் தனது மனதைச் சுத்தம் செய்வதாகும். அல்லாஹ் திருக்குர்ஆனில் “எவன் தனது மனதைச் சுத்தம் செய்தானோ அவன் வெற்றி பெற்றுவிட்டான் என்றும், அதை மாசுபடுத்தியவன் தோல்வியடைந்து விட்டான்” என்றும் தெளிவாகக் கூறியுள்ளான். ஸூபிஸம் என்பது மேற்கண்டவாறு செயல்படுவதையே குறிக்கும். இது மட்டுமல்ல. ஒருவன் தனது “கல்பு” உள்ளத்தை தீக்குணங்களை விட்டும் சுத்தமாக்குவதையும், நான் என்ற உணர்வு, நான் என்ற அகங்காரம், படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்ற உணர்வு அனைத்தையும் நீக்கிச் சுத்தம் செய்வதையும் குறிக்கும்.

மேற்கண்ட விடயங்களைப் பேணி வாழ்வதே ஸூபிஸமாகும்.

لَيْسَ التَّصَوُّفُ لُبْسَ الصُّوْفِ وَالْخَلِقَ – بَلِ التَّصَوُّفُ حُسْنُ الصَّمْتِ وَالْخُلُقِ

ஸூபிஸம் என்பது கனமான கம்பளித் துணி உடுப்பதும், கிழிந்த ஆடை உடுப்பதுமல்ல. ஸூபிஸம் என்பது மௌனமும், நற்குணமுமேயாகும். இவ்வாறு நான் எழுதுவதால் கம்பளித்துணி உடுக்கலாகாதென்பதோ, கிழிந்த உடை உடுக்கலாகாதென்பதோ கருத்தல்ல. எது எப்படிப் போனாலும் கம்பளித்துணியுடுப்பதும், கிழிந்த உடை உடுப்பதுமே ஸூபிஸம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

சிலருளர். பஞ்சமா பாதகங்கள் எல்லாம் செய்வார்கள். மார்க்கத்திற்கும், தமக்கும் சம்பந்தமில்லாமலும் நடந்து கொள்வார்கள். ஆயினும் கம்பளிபோல் கனமான, அழுக்கான, கிழிந்த உடைகள் உடுத்து அசுத்தமாக இருப்பார்கள். இவ்வாறிருப்பது ஸூபிஸமல்ல.

ஆயினும் “மஜ்தூப்”களுக்கு விதி விலக்கு உண்டு. அவர்கள் தன்னுணர்வு இழந்த மகான்களாவர். அவர்கள் தாம் செய்வது எதுவென்று தெரியாமலேயே செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏவல் விலக்கல் இல்லாதவர்கள். “மஜ்தூப்” போல் நடிப்பவர்கள் இவர்களின் படிட்யலில் சேரமாட்டார்கள்.

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments