தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
முல்லாக்கள் “பத்வா” வழங்கிய முறை பிழையென்பதற்கு அதிக விளக்கம் தேவையில்லை. சுருக்கமாக எழுதுகிறேன். இது எவரும் சாதாரணமாக அறிந்த விடயமேயாகும்.
குற்றவாளி விசாரிக்கப்பட வேண்டுமென்பது முதல் நிபந்தனையாகும். எந்தவொரு வழக்காயினும் குற்றாவளி விசாரிக்கப்பட்டு அவரிடமிருந்து தகவல்கள் பெற்றுக் கொண்ட பின்னரே தீர்ப்புக் கூற வேண்டும். குற்றவாளி விசாரிக்கப்படாமல் தீர்ப்புக் கூறினால் அது செல்லுபடியாகாது.
குற்றவாளியென்று கருதப்பட்ட என்னை உலமா சபை விசாரித்திருக்க வேண்டும். நான் பேசிய கருத்தக்களுக்கான ஆதாரங்களை என்னிடமே கேட்டறிந்திருக்க வேண்டும். இவ்வாறு ஒன்றுமே நடைபெறவில்லை. என்னை விசாரிக்கவுமில்லை. நான் பேசிய கருத்துக்களுக்கான ஆதாரங்களை என்னிடம் கேட்கவுமில்லை.
எனினும் உலமா சபை எனக்கு ஒரு கடிதம் மட்டும் அனுப்பியிருந்தது. அதில் கொழும்பு உலமா சபைக்கு வருமாறு கேட்டிருந்தது. அதற்கு நான் பதில் அனுப்பியிருந்தேன். அதில், எனக்கும், காத்தான்குடி உலமா சபைக்கும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால் நாங்களே இது தொடர்பாக பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று எழுதியிருந்தேன். அந்நேரம் எனக்கும், காத்தான்குடி உலமா சபைக்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நேரமாகும்.
உலமா சபை நான் கொழும்பு செல்வதற்கு ஒரு வாய்ப்புத் தந்திருக்கலாம். ஒரு வாரமோ, இரண்டு வாரமோ கால அவகாசமும் தந்திருக்கலாம். அவ்வாறு கூட அவர்கள் செய்யாமல் இவ்வாறான பாரிய பிரச்சினைக்கு அவசரமாக முடிவெடுத்து “பத்வா” வழங்கியது அவர்களின் சதியென்றே நான் கருதுகிறேன்.
இது அவர்களின் அறியாமையல்ல. ஏனெனில் காழி நீதி மன்றில் கூட பல தவணைகள் கொடுத்து தீர்ப்புக் கூறும் நடைமுறை இருக்கும் நிலையில் உலமா சபை இவ்வாறு நடந்து கொண்டது ஒரு சதியென்றே நான் நினைக்கிறேன். சிந்தனையாளர்களும் இவ்வாறே சொல்வார்கள்.
இங்கு இன்னுமொரு விடயத்தை கவனத்திற் கொள்ள வேண்டும். அதாவது நான் பேசியது இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய வலீமார், குத்புமார், மற்றும் ஸூபீ மகான்கள் பலர் பேசியும், நூல்களில் எழுதியும் வந்த “வஹ்ததுல் வுஜூத்” ஸூபிஸ ஞானமேயாகும்.
ஆனால் உலமா சபை “பத்வா” தீர்ப்பு வழங்கியிருப்பது நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” பிழையென்பதற்காக அல்ல. அவர்கள் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள எந்த ஓர் ஆதாரமும் “வஹ்ததுல் வுஜூத்” பிழை என்பதற்கானதல்ல. அவர்கள் குறிப்பிட்டுள்ள ஆதாரங்கள் யாவும் “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்பதற்கான ஆதாரங்களேயாகும்.
நானோ இக்கொள்கைக்கு முற்றிலும் முரணானவன். நான் பேசத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை பிழையென்றே பேசி வருகிறேன். முல்லாக்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பான முன்னறிவு இல்லாமற் போனதினாலோ என்னவோ எனது பேச்சை “ஹுலூல் – இத்திஹாத்” என்று மருண்டு போனார்கள் போலும். அது அவர்களின் மருள்ச்சியே தவிர அது அவ்வாறில்லை.
நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் “வஹ்ததுல் வுஜூத்” சிந்தனையை, போதனையை அவர்களின் சமுகம் தவறாகப் புரிந்து கொண்டதினால்தான் அவர்களை வணங்கத் தொடங்கினார்கள். தவாறகப் புரிந்தமையே இதற்குக் காரணமாகும்.
எனவே, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஓர் அழைப்போடு மட்டும் நின்றிருக்காமலும், ஒரு தவணையிலேயே விஷயத்தை முடிக்க முடிவு செய்யாமலும், இறையியல் – ஸூபிஸக் கலையோடு தொடர்புள்ள மார்க்க அறிஞர்களின் ஆலோசனைகளுடன் “பத்வா” வழங்கியிருப்பார்களாயின் இன்று இலங்கை வாழ் முஸ்லிம்கள் என்றோ ஏகத்துவத்தைப் புரிந்திருப்பார்கள். 40 வருடங்களுக்கு முன்னேயே இறை ஞானம் பெற்றிருப்பார்கள்.
இந்த விவகாரத்தை முன்னெடுத்து “பத்வா” வரை இதற்கு உந்து சக்தியாக இருந்தவர்களில் ஒருவர் இவ்விவகாரத்தை அரசியலோடும், தன்மானத்தோடும் முடிச்சுப் போட்டதால் இன்று முஸ்லிம்களே இரு பிரிவாகவேண்டியேற்பட்டுள்ளது.
என்னைப் பொறுத்த மட்டில் இது “மார்க்கப் பிரச்சினை” என்ற உடையில் அரசியலும், ஆற்றாமையும் கலந்த ஒரு நாடகமேயாகும். இதுவே எதார்த்தம். இதைப் புரிந்து கொள்ளாத பொது சனம் சாய்ந்தால் சாயிற பக்கம் சாய்கிற செம்மறியாடுகள் போல் ஆகிவிட்டனர்.
“பத்வா” தொடர்பில் உலமா சபையிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் கூறாமல் இப்போது திசை மாறிப் பறப்பதேனோ?
உலமா சபையின் “முப்தீ” மகான்களிடம் “பத்வா” தொடர்பாக பல கேள்விகள் கேட்டிருந்தோம். அவற்றில் ஒன்றுக்கேனும் இன்று வரை பதில் கூறாமல் ஊமைகள் போல காலம் கழித்துவிட்டு இப்போது திசை மாறிப் பறப்பதேன்? அல்லது திசை மாற்றிப் பறப்பதேன்? பயமா? பயம் வேண்டாம். அல்லாஹ் எவருக்கும் அநீதி செய்யமாட்டான். சரியாகவே செய்வான்.
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ ، وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
தினை விதைத்தவன் தினை அறுப்பான். (பழ மொழி)
உலமா சபை முப்திகாள்! நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் கேட்ட கேள்விகளுக்கு முதலில் விடை கூறுங்கள். அதன் பின் நீங்கள் என்னிடம் நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள். நான் விடை தருவேன். உங்கள் போல் இருக்கமாட்டேன். உங்களிடம் பொய், புரட்டு உள்ளன. விடை சொன்னால் மாட்டுவீர்கள்.
நான் கேட்ட கேள்விகளில் ஒன்றுக்கேனும் பதில் கூறாமல் பல மாதங்கள் ஊமைகளாக இருந்துவிட்டு இவ்விவகாரத்தில் பௌத மத அரசியல்வாதிகளும், ஆய்வாளர்களும், பேராசிரியர்களும் இறங்கிய பின் நீங்கள் திசை மாற்றிப் பறப்பதேன்? நீங்கள் மார்க்கத்தோடு விளையாடுவதை உடனே நிறுத்த வேண்டும். நீங்கள் ஆப்பிழுத்த குரங்குகளான பின் அவதி பொறுக்க முடியாமல் குறுக்கு வழியைத் தேடுகிறீர்கள். நீங்கள் பொது மக்களிடம் சொல்லி வந்த மந்திரம் எம்மிடம் பலிக்காது.
விஷயம் விளங்காமல் “பத்வா” கொடுத்து விட்டோம் என்று பகிரங்கமாக ஓர் அறிக்கை வெளியிடுங்கள். ஸூபிஸ சமுகத்தின் நெஞ்சங்களில் எரிகின்ற நெருப்பு நீராகிவிடும். இதற்கு நீங்கள் உடன்படவில்லையானால் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தாருங்கள். என் அழைப்புக்கும் பதில் தாருங்கள்.
நீங்கள் “முர்தத் பத்வா” வழங்குவதற்கு ஆதாரமாக எடுத்த “அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூலில் அதன் ஆசிரியர் “எல்லாம் அவன்” என்ற “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை ஆதாரங்களோடும், உதாரணங்களோடும் விளக்கியுள்ளார்களே! நான் பேசியது பிழையென்று நீங்கள் “பத்வா” வழங்கியிருப்பது இந்நூலுக்கு “பத்வா” வழங்கியதேயாகும். இது உங்களின் அறியாமையாகும். இது பற்றி விவாதிப்பதாயின் வாதியும், பிரதி வாதியும் விவாதத்தின் கருப் பொருள் பற்றி முன்கூட்டியே அறிந்திருப்பது அவசியம். கருப் பொருள் பற்றிய அறிவு இல்லாதவரோடு விவாதிக்க முற்படுவது அறியாமையாகும். பல மணி நேரங்கள் வீணாகவும் போய்விடும்.
ஆகையால் விவாதத்தை விடுவோம். மிக இலகுவான வழி என்னவெனில் நீங்கள் வழங்கிய “பத்வா”வில் பல மகான்களின் பெயர்கள் குறிப்பிட்டு அவர்களை இஸ்லாமிய அறிஞர்கள் என்று ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். அவர்களில் இமாம் இப்னு அறபீ, இமாம் ஷஃறானீ, இமாம் முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ், இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோரும் அடங்குகிறார்கள். அவர்களால் எழுதப்பட்ட நூல்களில் சில நூல்களை உங்களிடம் தருகிறேன். சில பக்கங்களில் சில வரிகளையும் காட்டித் தருகிறேன். அவற்றை நீங்கள் வாசித்து பொது மக்கள் மத்தியில் அதிலுள்ள விளக்கத்தைச் சொல்லுங்கள். எல்லாமவனே என்று சொல்வதைத் தவிர வேறு வழி உங்களுக்கு இல்லாமற் போய்விடும். பொது மக்கள் ஸூபிஸம் கூறும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை சரியானதென்று ஏற்று உண்மை விசுவாசிகளாகிவிடுவார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இதுவே இவ் விவகாரத்தை முடித்து வைப்பதற்கான வழியாகும். நேரமும் வீணாகாது. செலவும் தேவையில்லை. மக்களும் எது சரி? எது பிழை? என்பதை மிக எளிதாக அறிந்து கொள்வார்கள். அதோடு “முர்தத்” விவகாரம் முற்றுப் பெறும். “பத்வா”வினால் முஸ்லிம்களுக்கிடையில் ஏற்பட்ட இடைவெளி நிரம்பியும் விடும்.
உலமாஉகளே முன்வாருங்கள். அறிஞர்களே முன்வாருங்கள். ஆய்வாளர்களே முன் வாருங்கள். எழுத்தாளர்களே முன்வாருங்கள். வட்ட மேசையொன்றில் ஒன்று கூடி திட்டமிட்டுச் செயல்படுவோம். “வஹ்ததுல் வுஜூத்” என்று ஓர் அம்சம் இஸ்லாம் மார்க்கத்தில் உண்டு என்பதை நிறுவுவதற்கு நான் மிகவும் ஆவலாயுள்ளேன்.
உலமாஉகளின் தாய் சங்கத் தலைவர் அவர்களே! “பத்வா” எழுதியவர்களே! நான் முன்வைத்துள்ள முறைப்படி இவ் விவகாரத்தை புரிந்துணர்வோடு முடிப்போம். வருவீர்களா?