நீங்கள் உங்கள் “பத்வா”வை கெய்ரோ அஸ்ஹர் பல்கலைக் கழகத்திற்கும், இன்னும் பல பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்பி அவர்களின் அங்கீகாரம் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளீர்கள்.
அவர்கள் அங்கீகாரம் தந்துதான் இருப்பார்கள். அவற்றை விடுங்கள். நான் கூட அங்கீகாரம் தந்துதான் இருப்பேன். ஏனெனில் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கைக்கு மறுப்பெழுதிவிட்டு அதற்கு அங்கீகாரம் கேட்டால் நிச்சயமாகத் தருவார்கள்.
நீங்கள் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கைக்கு மறுப்பெழுதியதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். ஆனால் தந்திரமாக ஒரு வேலை செய்துள்ளீர்கள். உங்கள் அறபு “பத்வா”வில் ஓர் இடத்தில் கூட எனது பெயர் கிடையாது. ஆனால் அதன் தமிழ் மொழியாக்கத்தில் பல இடங்களில் எனது பெயரைக் குறிப்பிட்டது மட்டுமன்றி தமிழாக்கம் முதலாம் பக்கத்தில் (காத்தான்குடி றஊப் மௌலவீ போன்றோரின் மார்க்க விரோதக் கருத்துக்கள் குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய Fபத்வா மார்க்கத்தீர்ப்பு) என்று கட்டம் போட்டு பெரிய எழுத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இது உங்களின் சதியா? இல்லையா? அறபு பத்வாவில் இல்லாதது தமிழ் மொழியாக்கத்தில் எவ்வாறு வந்தது? பொது மக்கள் மத்தியில் என்னைக் குற்றவாளியாக காட்டி எனக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பலையை ஏற்படுத்துவதற்காகவும், “முர்தத்” கொலை செய்யப்பட வேண்டுமென்று பத்வா வழங்கிய நீங்கள் இன்னார்தான் அந்த “முர்தத்” என்று எதிரிகளுக்கு அடையாளம் காட்டுவதற்காகவும் என் பெயரை தமிழில் குறிப்பிட்டுள்ளீர்கள். இதுதானே உங்கள் நோக்கம். நெஞ்சில் விரல் வைத்து கூறுங்கள்.
“ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று “பத்வா” வழங்கிவிட்டு “வஹ்ததுல் வுஜூத்” பேசியவருக்கு அந்த “பத்வா”வை சுமத்தி இவர்தான் ஆளென்று என்னைக் காட்டிக் கொடுத்து பொது மக்களை என்னைக் கொலை செய்யத் தூண்டிய அநீதியாளர்கள்தான் நீங்கள். உலமாஉகள் இவ்வாறு செய்யலாமா? இது ஹறாமான காரியங்களில் மிகக் கடுமையான ஹறாமானது. இவ்வாறு பகிரங்கமாக ஹறாம் செய்த நீங்கள் வேறு “ஹறாம்”களை செய்யமாட்டீர்களா? அல்லாஹ் மிக அறிந்தவன்.
நீங்கள் உங்களின் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கைக்கு மறுப்பான “பத்வா”வை வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பி அங்கீகாரம் பெற்றதாகச் சொல்கிறீர்கள். இன்ஷா அல்லாஹ்! நான் எழுதி வெளியிடவுள்ள “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை சரியான கொள்கையென்று ஆதாரங்களோடு எழுதியுள்ள நூலை வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பி அவர்களின் அங்கீகாரம் பெற்றுக் காட்டவா? காட்டினால் என்ன சொல்வீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள். பதில் தர தயங்குவீர்கள்.
எந்தவொரு பல்கலைக் கழக “முப்தீ” ஆயினும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பொருத்தமாகவே அவர் பதில் – “பத்வா” கொடுப்பார். இதுவே “முப்தீ”களின் வழக்கம். இந்த உலமாஉகள் “வஹ்ததுல் வுஜூத்” என்று எழுதாமல் “ஹுலூல் – இத்திஹாத்” என்று “பத்வா” எழுதிவிட்டு அதற்கு அங்கீகாரம் கேட்டால் நிச்சயமாக யாரும் அங்கீகாரம் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய “பத்வா”வுக்கு நானும் கொடுப்பேன். இந்த அறிஞர்கள் செய்த வேலை என்ன தெரியுமா? “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று பத்வா எழுதிவிட்டு அதில் “வஹ்ததுல் வுஜூத்” பேசிய எனது பெயரைக் குறிப்பிட்டதாகும். பொது மக்கள் இவர்களின் தில்லுமுல்லை புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதை எழுதுகிறேன்.
ஒரு வகையில் நோக்கினால் “பத்வா” வழங்கியவர்கள் “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று சரியாகவே வழங்கியுள்ளார்கள். அதை அச்சிடும் பொறுப்பையும், அதற்கான செலவையும் காத்தான்குடி உலமா சபையிடம் கொடுத்திருப்பார்கள் போலும்.
காத்தான்குடி உலமா சபைதான் எனது பெயரை தமிழில் எழுதியிருப்பார்கள் போலும். இதற்கு ஓர் ஆதாரம் என்னிடம் உண்டு.
எனக்கு காத்தான்குடியில் மிக நெருக்கமான ஒரு நண்பர் இருந்தார். மக்கள் அவரை “டபிள் ஏ றாஸிக்” என்றழைப்பார்கள். கொழும்பு பேங்ஷால் வீதியில் கயிற்றுக்கடை என்று அழைக்கப்படும் கட்டிடத்தில் தொழில் செய்து கொண்டிருந்தார். தற்போது அவர் இல்லை. ஒரு நாளிரவு கொழும்பிலுள்ள அவரின் அறையில் நான் அவருடன் தங்கியிருந்த போது விஷயம் தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்றேன். உங்களுக்கு எதிராக உலமா சபை “பத்வா” கொடுத்துள்ளதாம். அதைப் புத்தகமாக அச்சடிக்க வேண்டும். பண உதவி செய்யுங்கள் என்று கேட்டு வந்தார்கள். தவிர்க்க முடியாத ஒரு சூழலில் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தேன் என்றார். அன்றைய – 1979ம் ஆண்டின் ஐந்தாயிரம் ரூபாய் இன்று எவ்வளவு இருக்குமென்று கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் “பத்வா” கொடுத்தது கொழும்பு உலமா சபையாயினும் அதை நூலாக அச்சிட்டது காத்தான்குடி உலமா சபையாக இருக்கலாமென்றும், எனது பெயரை முன் பக்கத்தில் பெட்டி வடிவத்தில் கொட்டை எழுத்தில் எழுதியவர்கள் காத்தான்குடி உலமா சபையாக இருக்கலாமென்றும் நான் யோசிக்கிறேன். அல்லாஹ் மிக அறிந்தவன்.
“பத்வா” வழங்கியது கொழும்பு உலமா சபையாயினும் அதை அச்சிட்டு வெளியிட்டவர்கள் காத்தான்குடி உலமாஉகளாயிருக்கலாம் என்பதற்கு வாய்ப்பு அதிகமுண்டு. ஏனெனில் வெளியூர் உலமாஉகளுக்கு என் மீது கோபம் ஏற்படச் சாத்தியமுண்டு. ஆனால் பொறாமை ஏற்படச் சாத்தியம் குறைவு. பொறாமை என்பது எனதூரவர்களுக்கு ஏற்படவே சாத்தியமுண்டு.
قال الجلال السُّيوطي رحمه الله واعلم أنّه ‘ ما كان كبيرٌ فى عَصـر قطُّ إلّا كان له عدوٌّ من السَّفَلَةِ، إذِ الأشرافُ لم تَزَلْ تُبْتَلَى بِالْأَطْرَافِ ‘
நீ புரிந்து கொள்! எந்த ஒரு காலத்திலும் ஒரு பெரிய மனிதன் இருந்தால் அவருக்கு தரம் குறைந்தவர்களில் – கீழ் சாதிகளில் ஒருவன் பகைவனாகவே இருப்பான். சிறப்புள்ளவர்கள் சிறப்பில்லாதவர்களால் சோதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்) என்று இமாம் ஜலாலுத்தீன் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
أوحى الله تعالى إلى نبيّه عيسى عليه السلام ‘ لَا يَفْقِدُ نَبِيٌّ حُرْمَتَهُ إِلَّا فِى بَلَدِهِ ‘
அல்லாஹ் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “எந்த ஒரு நபீயும் தனது கண்ணியத்தை தனது ஊரிலேயே இழப்பார்” என்று “வஹீ” அறிவித்தான்.