தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ
ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையாகும். எனவே, நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்தான் உள்ளான். (திருக்குர்ஆன் 2-115)
எல்லாம் அவனே! என்ற தத்துவத்தை மறுப்பவர்களே! அவன்தான் எல்லாமாயும் உள்ளான் என்பதை நீங்கள் மறுப்பதற்கான காரணம் என்ன? இவ் உண்மையை ஏற்றுக் கொள்ள உங்களைத் தடுப்பது எது?
மேற்கண்ட திரு வசனம் அல்லாஹ்வின் வசனமேயன்றி வேறு எவரின் வசனமுமல்ல. அல்லாஹ்தான் சொல்கிறான் நீங்கள் எங்கு பார்த்தாலும் அங்கு அல்லாஹ்தான் உள்ளான் என்று.
அல்லாஹ்வே இவ்வாறு தெளிவாகச் சொல்லியிருக்க அவனின் பேச்சை தூக்கியெறிந்து விட்டு அந்த ஆலிம் இவ்வாறு சொன்னார், இந்த ஆலிம் இவ்வாறு சொன்னார் என்று ஆலிம்களின் தலையில் போட்டுவிட்டு நீங்கள் ஏன் உங்களைக் குழப்பிக் கொள்ள வேணடும்?
ஆலிம்கள் “ளாலிம்”களானால் அவர்களை எவ்வாறு பின்பற்றுவது? அவர்களின் பேச்சை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? ஆலிம்கள் – மௌலவீமார் அனைவரும் ஒரே கொள்கையில் இருந்தார்களென்றால்தானே அவர்களை நாம் ஏற்றுக் கொள்ள முடியும்.
இக்காலத்தைப் பொறுத்த மட்டில் ஓர் ஊரில் ஐந்து ஆலிம்கள் இருந்தால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்திலிருப்பதாக காண முடியவில்லை. ஒருவர் தப்லீக் ஜமாஅத்திற்கு ஆதரவாயிருப்பார். இன்னொருவர் அதற்கு எதிரானவராயிருப்பார். இன்னோர் ஆலிம் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு – வஹ்ஹாபிஸத்திற்கு ஆதரவாயிருப்பார். இன்னொருவர் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்புக்கு ஆதரவாயிருப்பார்.
இவ்வாறு உலமாஉகள் மாறு பட்ட பல்வேறு கருத்துள்ளவர்களாயிருக்கும் நிலையில் யார் யாரைப் பின்பற்றுவது? யார் யாருடைய சொல்லைக் கேட்பது? இதற்கு முஸ்லிம் சமுகத்திடம் சரியான ஒரு முடிவு அவசியம் தேவை. இவ்விடயத்தில் சரியான முடிவு எட்டப்பட வாய்ப்பு இல்லை.
முஸ்லிம்கள் அனைவரையும் ஏதோ ஒரு கொள்கையில் ஒன்றிணைப்பது முடியாத காரியமேயாகும். நடைமுறையிலுள்ள நான்கு மத்ஹபுகளில் ஒரே மத்ஹபின் கீழ் முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பது கூட முடியாத ஒன்றேயாகும்.
உலமாஉகளிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி என்னவெனில் அல்லாஹ்வே திருக்குர்ஆனில் நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்தான் உள்ளான் என்று தெளிவினுந் தெளிவாய் – பட்டவர்த்தனமாக அல்லாஹ் சொல்லியிருக்கும் நிலையில் அவன் கூறிய கருத்தை ஏன் மறுக்க வேண்டும்? மறுப்பதற்கான காரணம் என்ன? உலமாஉகளே! விடை சொல்லுங்கள். மௌனிகளாகி மக்களை ஏமாற்றாதீர்கள். இது அரசியல் சாக்கடையல்ல. மார்க்கத்தின் பூக்கடை.
அல்லாஹ் சொல்லியுள்ளானா? அது போதும். அதை நாம் ஏற்றுச் செயல்பட வேண்டியது எமது கடமையாகும்.
நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் படைப்பு உள்ளது என்று அல்லாஹ் சொல்லவில்லை. அவ்வாறு சொல்வதாயின் فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ خَلْقُ اللهِ நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் படைப்பு உள்ளது என்றுதான் சொல்லியிருப்பான். அவ்வாறு அவன் சொல்லவில்லை. ஏன் சொல்லவில்லையெனில் அவ்வாறு சொன்னால் அது அர்த்தமற்றதாயும், நாகரீகமற்றதாயும் ஆகிவிடும். அல்லாஹ்வின் நோக்கம் உலகமாயும், உலகிலுள்ளவையாகவும் நானே இருக்கிறேன் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவதேயன்றி தனது படைப்பு இருக்கிறதென்பதை தெளிவு படுத்துவதல்ல.
திருக்குர்ஆனின் மொழி நடை உச்சக்கட்ட நாகரிக நடையாகும். மொழியிலக்கணம் முதல் சொல்லிலக்கணம் வரை அனைத்து இலக்கணமும், இலக்கியமும் அதிலிருந்தே பிறந்துள்ளன.
إِطْلَاقُ الْجُزْءِ وَإِرَادَةُ الْكُلِّ
ஒன்றின் ஒரு பகுதியைச் சொல்லி அதை முழுமையாகக் கருத்திற் கொள்தல் என்ற நாகரிக நடைமுறை திருக்குர்ஆனின் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளது.
இதை நடைமுறையிலுள்ள ஓர் உதாரணம் மூலம் நோக்கலாம்.
காத்தான்குடி ஜமாலுக்கு கல்முனை ஜலால் நீண்ட காலம் நண்பனாயிருந்தான். பின்னர் அவர்களுக்கிடையில் விரிசல் ஏற்பட்டு ஒருவரையொருவர் முகம் பார்க்காமல் வாழ்ந்து வந்தனர்.
ஒரு நாள் காத்தான்குடி ஜமால் கல்முனை ஜலாலை காத்தான்குடி கடைத் தெருவில் கண்டு இருவரும் ஸலாம் சொல்லி கட்டியணைத்து ஆலிங்கனம் செய்து நீண்ட நேரம் உரையாடினார்கள்.
காத்தான்குடி ஜமால் கல்முனை ஜலாலிடம் அடிக்கடி காத்தான்குடி வரும் நீ என் வீட்டுக்கு வந்து தலையை கொஞ்சம் காட்டி விட்டுப் போனால் என்ன என்று கேட்டான். நல்லது வருகிறேன் என்றான் ஜலால்.
ஒரு நாள் ஜலால் காத்தான்குடிக்கு வந்த போது நண்பன் ஜமாலின் தோற்றமும், அவன் சொன்ன வசனமும் நினைவுக்கு வந்தது. ஜமாலின் வீடு நோக்கி விரைந்தான். கதவு தட்டு முன் ஒரு நிமிடம் ஜமால் சொன்ன வசனத்தை மீட்டிப் பார்த்தான். அவன் சொன்னவாறே செய்வோம் என்று முடிவு செய்து கதவைத் தட்டினான். யாரோ ஒரு சிறுவன் கதவு திறந்தான். ஜமால் தனது நண்பன் சொன்னது போல் தலையை மட்டும் காட்டிவிட்டு உள்ளே செல்லாமல் வந்து விட்டான்.
மறுநாள் ஜமால் ஜலாலைச் சந்தித்து நேற்று வீட்டுக்கு வந்த நீ முகத்தை மட்டும் காட்டிவிட்டுச் சென்றுள்ளாய். ஏன் உள்ளே வரவில்லை என்று கேட்டான். அதற்கவன் நீ சொன்னது போன்றே நான் செய்துள்ளேன். மாறு செய்யவில்லை என்று சொன்னான்.
ஜமால் ஜலாலிடம், நான் உன்னிடம் சொன்ன வசனத்தை நீ மேலோட்டமாகப் புரிந்துள்ளாயே தவிர அவ்வசனத்தின் சரியான விளக்கத்தை நீ புரிந்து கொள்ள வில்லை என்றான்.
ஜலால் ஜமாலிடம் விளக்கம் கேட்டான். ஜமால் கொடுத்த விளக்கம் இதோ!
إِطْلَاقُ الْجُزْءِ وَإِرَادَةُ الْكُلِّ
ஒன்றின் ஒரு பகுதியை மட்டும் வசனத்தில் கூறி அந்தப் பகுதியை மட்டும் கருத்திற் கொள்ளாமல் அந்த ஒன்றையே முழுமையாக கவனத்திற் கொள்ளல் என்று ஓர் அம்சம் உண்டு. இந்த அம்சம் பேச்சு நாகரீகத்தைச் சேர்ந்ததாகும். இது அறபு மொழியில் فَصَاحَةٌ என்றும், بَلَاغَةٌ என்றும் சொல்லப்படும். இந்த விபரம் “இல்முல் மஆனீ” எனும் கலையில் விபரமாகச் சொல்லப்படும். விபரம் தேவையானோர் அந்தக் கலையோடு தொடர்புள்ள நூல்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
ஜமால் என்பவன் தனது நண்பன் ஜலாலிடம், நீ காத்தான்குடிக்கு வந்தால் உன் தலையை காட்டிவிட்டுப் போகலாமல்லவா? என்று சொன்ன வசனத்தின் கருத்து ஜலால் தனது வீட்டுக்கு வரவேண்டுமென்பதேயாகும். தவிர முகத்தை மட்டும் காட்டிவிட்டுப் போக வேண்டுமென்பதல்ல. இவ்வாறுதான் இத்தகைய வசனங்களுக்கு கருத்துக் கொள்ள வேண்டும். மொழி நாகரிகம் தெரியாதவன்தான் ஜலால் விளங்கியதுபோல் தவறாக விளங்கிக் கொள்வான்.
ஒருவனுக்கு கடன் தொல்லை அதிகமானால் அவன் எவரிடமும் சொல்லாமல் ஊரைவிட்டும் மறைந்து விடுவான். ஒழிந்து விடுவான். அவனைப் பற்றி மக்கள் பேசும் போது இன்னான் தலைமறைவாகிவிட்டான் என்று பேசுவதுண்டு. இவ்வாறு வசனம் சொல்வதால் அவனின் தலை மட்டும் தான் மறைந்ததேயன்றி உடல் மறையவில்லை என்ற கருத்துக்கு இடமில்லை.
ஒரு மனிதனின் உடலுறுப்புக்களில் தலையே முக்கியம் என்றதால் அவ்வாறு சொல் வழக்கில் பேசப்படுகின்றது. இப்றாஹீம் தலைமறைவு என்று தான் சொல்லப்படுமேயன்றி அவன் கால் மறைவு என்று சொல்லப்படுவதில்லை.
அல்லாஹ் மேற்கண்ட فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللهِ நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு என்ற வசனத்தில் மொழி நாகரிக அமைப்பின் படி கூறியிருப்பது இங்கு கவனிக்கப்பட வேண்டும். இவ் அடிப்படையில் அல்லாஹ்வின் முகம் என்று மட்டும் நாம் புரிந்து கொள்ளாமல் பொதுவாக அல்லாஹ் என்றே பொருள் கொண்டு நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்தான் உள்ளான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
இவ்வாறுதான் பொருள் கொள்ள வேண்டுமென்பதினால்தான் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் என்று பிரசித்தி பெற்ற இப்னு அப்பாஸ் – அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் தங்களின் திருக்குர்ஆன் விரிவுரை நூலில் “வஜ்ஹுல்லாஹ்” என்ற வசனத்திற்கு “தாதுல்லாஹ்” ذاتُ الله என்று விளக்கம் எழுதியுள்ளார்கள்.
இவர்களின் இவ்விளக்கத்தின் படி நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்தான் உள்ளான் – அவனின் “தாத்”துதான் உண்டு என்றே பொருள் கொள்ள வேண்டும். முகம் என்று மட்டும் பொருள் கொள்ளுதல் கூடாது. இவ்வாறு பொருள் கொள்ளக் கூடாது என்பதினால்தான் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அவ்வாறு விளக்கம் கூறினார்கள் போலும்.
மேற்கண்ட வசனத்துக்கு இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ ذَاتُ اللهِ நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் “தாத்” உண்டு என்று கூறியிருக்கும் நிலையில் அவர்களின் விளக்கத்தை தூக்கியெறிந்து விட்டு அதற்கு தமது மனம் போன போக்கில் விளக்கம் கொடுக்கும் மார்க்க அறிஞர்கள் மார்க்கத் துரோகிகளேயாவர்.
مَنْ فَسَّرَ الْقُرْآنَ بِرَأْيِهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
எவன் தனது அபிப்பிராயப்படி திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்கிறானோ அவன் நரகத்தில் தனக்கென்று ஓர் இடத்தை எடுத்துக் கொள்ளட்டும் என்ற நபீ மொழி இன்னோரையே எச்சரிக்கின்றது என்பதை இவர்கள் – இவ் அறிவிலிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேற்கண்ட திரு வசனத்திற்கு நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் படைப்பு உண்டு என்றும், அல்லாஹ்வின் சக்தி உண்டு என்றும் விளக்கம் கூறும் அறிவிலிகளும் உள்ளனர். அவர்களுக்கான வாய்ப்பூட்டு அடுத்த தொடரில் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்!
وَللهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ
என்ற இவ்வசனத்திற்கும் சிலர் தமது விருப்பத்தின்படி விளக்கம் சொல்வதாயும் நாம் அவதானிக்கிறோம். இது தொடர்பான தெளிவு அடுத்த தொடரில் இடம் பெறும்.