Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்கிழக்கின் அட்டாளைச்சேனை நகரில் கண்ணுறங்கும் “காமில் வலீ” அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் அவர்கள்!

கிழக்கின் அட்டாளைச்சேனை நகரில் கண்ணுறங்கும் “காமில் வலீ” அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் அவர்கள்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

கடந்த கட்டுரையில் எனது மதிப்பிற்குரிய தந்தை அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் மேற்கண்ட காமில் வலீ வெள்ளி ஆலிம் அவர்களிடம் “பைஅத்” ஞான தீட்சை பெற்றவர்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.

என் தந்தை றஹிமஹுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வவுஜூத்” ஞானத்திற்கு நூறு வீதம் ஆதரவானவர்கள் என்பதற்கு சில ஆதாரங்கள் கூறுகிறேன்.

இவ் ஆதாரங்களை நான் இங்கு கூறுவதற்கான காரணம், எனதூர் மக்களிற் பலர் நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் என் தந்தை பேசவில்லை என்றும், அது பிழையான ஞானமென்று நம்பியிருந்தார்கள் என்றும் அவர்கள் மீது தப்பான அபிப்பிராயமுள்ளவர்களாக இருந்ததேயாகும். அவர்களின் தப்பான அபிப்பிராயத்தை நீக்குவதற்காகவும், மகான் வெள்ளி ஆலிம் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியுள்ளார்கள் என்ற உண்மையை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே இங்கு இந்த விபரங்களை எழுதுவது எனக்கு அவசியமாயிற்று.

இவ் உண்மையை நான் வெளிப்படுத்துவதன் மூலம் பலர் தமது தப்பான கருத்துக்களிலிருந்து விடுபட வாய்ப்பு ஏற்படலாம். அது எனக்கு பெரிய வணக்கமாக ஆகிவிடும்.

என் தந்தை “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற ஸூபிஸ தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்று அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசிய ஒரு மகானிடம் “பைஅத்” செய்து அவர்களின் “முரீத்” சிஷ்யராக இருந்ததாகும். அவர்கள் என்ன கொள்கையில் வாழ்ந்தார்கள் என்பதை நம்புவதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையா?

இங்கு வாசக நேயர்களுக்கு வெள்ளி ஆலிம் மகான் அவர்கள் இக் கொள்கையில்தான் இருந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் தேவையாகலாம். அவற்றிற் சிலதை மட்டும் இங்கு எழுதுகிறேன்.

மகான் வெள்ளி ஆலிம் அவர்கள் கல்லூரிக் கல்விகளில் பெரும் பாண்டித்தியம் பெறாதவர்களாயினும் கர்த்தனின் அருட் கொடையால் கல்விக் கடலானவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மகான் அவர்கள் ஒரு புலவராவார்கள். “மஹ்பூபு மனோன்மணிக் கீதம்” என்ற பெயரில் இறைஞான கீதங்கள் இயற்றி நூலாக வெளியிட்டார்கள். அவற்றில் சில இடங்களில் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவத்தை தெளிவாகவும், சிலேடையாகவும் கூறியுள்ளார்கள்.

(மஹ்பூபு மனோன்மணிக் கீதம்)

ஆலத்தில் நிறைந்திடும் அஹதெனும் பொருளதை
அனுதினம் அகந்தனில் நினைந்திடுவீர்
கோலத்தில் அது நின்று குறிப்பாயிலங்கிடும்
“ஹூ” என்பதையன்றி வேறில்லையே
——————-
மண்ணது விண்ணாய் மறைகள் அனைத்துமாகி
அண்ணல் அஹ்மதுமானாய் ஆதியே நீயும்
அமாவெனும் மர்தபாவில் அறியாதிருப்பதுடன்
ஆலத்தில் கோலமுமானாய் அஹதே நீயும்
நானென்றும் வேறென்றும் நாடியிருப்பவர்க்கு
தூராதி தூரமுமானாய் தூயோனே நீயும்.
——————
“அஹதிய்யத்” எனும் கடலே ஆதியுமாச்சு
அதிலெழுந்த அலைகளது ஆலமுமாச்சு
ஆலமுமாச்சு அதுவே கோலமுமாச்சு
——————-
இல்லல்லாஹுவென்று சொல்லி,
இணையதைத் தள்ளு
ஏகபரா பரம் பொருளை
எங்குமே கொள்ளு
எங்குமே கொள்ளு
அதில் தங்கியே நில்லு.
——————-
ஐனமா துவல்லூ என்று ஆதி சொன்னதே
அது அனைத்துமே அவனே என்ற
அற்புதமதே அற்புதமதே
நீயுமுணர்ந்திடுமிதே.
——————-
ஆதி இறையோனே ஜோதி பெரியோனே
காட்சியளித்திட கல்பிலுதிப் போனே
நானே இழந்தால் நீயது ஏதோ
நீயே இழந்தால் நானது ஏதோ
——————–
கன்சுல் மக்பியில் தன்சீஹுமானோனே
கண்ட பொருளதில் நின்று நிறைந்தோனே
ஷம்சுல் ஹுவிய்யத்தாக இருந்தோனே
தாரணிதனிலே தான் பர்தாவுமானோனே
நான் என்றிருந்தேனே நாளும் கழிந்தேனே
தானாயிருந்த தன்மை அறியேனே
லாஅன இல்லாஹு வென்றிராமலே
வேறது என்ற விலங்கிலிருந்தேனே
——————-
பாங்குடன் நகைகள் பலவிதமானதால்
தங்கமேயன்றி வேறாமோ
தன்ஸீஹும், தஷ்பீஹும் தானேயறிந்தால்
தங்கமும் நகையும் போலாமே!
——————-
பஞ்சென்றும் நூலென்றும் பல உடைகளென்றும்
நீ பார்த்திருக்கிறாய் அஞ்சாமல் ஆழ்ந்ததில் பஞ்சையன்றி அமைந்திருக்கா
உன்னிலே உதித்தெழுந்த ஸிபத்தினைப் பாரு உறங்கினால் ஒழிந்த இடம்
உண்மையில் தேடு விழித்த போது எங்கிருந்து மீளுது கூறு விபரமறிந்தால்
மவுத்தை அறியலாம் நேரு
——————-

மேற்கண்ட பாடல்கள் வெள்ளி ஆலிம் மகான் அவர்களுக்குரியனவாகும். இவையாவும் “எல்லாம் அவனே” என்ற தத்துவத்தை கூறிக் கொண்டிருப்பது ஆய்வாளர்களுக்கு மறைவானதன்று.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அவர்களுக்கு “தரீகா”வின் இவர் போன்ற ஷெய்குமார்களின் பாடல்கள் கிடைக்கவில்லை போலும். இனியாவது விஷயம் தெரியாமல் வாய் திறக்காமலிருப்பாரா பொதுச் செயலாளர்? அல்லது கூட்டத்துடன் சேர்ந்து கோவிந்தா போட்டுத்தானாகுவாரா?

“தரீகா” உடைய ஷெய்குமார்களில் எவரும் “எல்லாம் அவனே” என்று சொன்னதில்லை என்று ஆணித்தரமாகக் கூறிய பொதுச் செயலாளர் தனது கருத்தை வாபஸ் பெறுவது எப்போது?

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “முப்தீ” மகான்கள் “தரீகா”வின் ஷெய்கு வெள்ளி ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கும், அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” பத்வா வழங்குவது எப்போது? உலமாஉகளின் தீர்ப்பின் படி இவர்களின் சமாதிகளை உடைத்து தரைமட்டமாக்குவது எப்போது? இவர்களின் கொள்கை வழியில் வாழ்ந்து வருகின்ற இவர்களின் சந்ததிகளைக் கொலை செய்வது எப்போது? இந்நிகழ்வுகள் யாவையும் ஒரு விழாவாகவே செய்யலாமல்லவா?

ஷாதுலீ நாயகம்:

தரீகாக்களின் ஷெய்குமார்களில் ஒருவர்தான் ஷாதுலிய்யா “தரீகா”வின் தாபகர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்.

இவர்கள் ஹிஜ்ரீ 591ல் தூனுஸ் நாட்டிலுள்ள “ஷாதுலா” என்ற கிராமத்தில் பிறந்து ஹிஜ்ரீ 656ல் “வபாத்” ஆனார்கள். வயது 65 ஆகும். இவர்கள் தங்களின் ஞான குரு அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்களின் வழிகாட்டலில் வளர்ந்தவர்களாவர்.
قال الشَّاذُلِيْ أَوْصَانِيْ أُسْتَاذِيْ أن حَدِّدْ بَصَرَ الْإِيْمَانِ تَجِدِ اللَّـهَ فِى كُلِّ شَيْئٍ، وَعِنْدَ كُلِّ شَيْئٍ، وَمَعَ كُلِّ شَيْئٍ، وَفَوْقَ كُلِّ شَيْئٍ، وَقَرِيْبًا مِنْ كُلِّ شَيْئٍ، وَمُحِيْطًا بِكُلِّ شَيْئٍ، بِقُرْبٍ هُوَ وَصْفُهُ، وَبِإِحَاطَةٍ هِيَ نَعْتُهُ، وَعُدْ عَنِ الظَّرْفِيَّةِ وَالْحُدُوْدِ وَالْأَمَاكِنِ وَالْجِهَاتِ، وَعَنِ الصُّحْبَةِ وَالْقُرْبِ بِالْمَسَافَاتِ وَعَنِ الدَّوْرِ بِالْمَخْلُوْقَاتِ، وَامْحَقِ الْكُلَّ بِوَصْفِهِ الْأَوَّلِ وَالْآخِرِ وَالظَّاهِرِ وَالْبَاطِنِ، كَانَ الله وَلَا شَيْئَ مَعَهُ،
(الطبقات الكبرى، لواقح الأنوار فى طبقات الأخيار، 13-2)
இமாம் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். எனது உஸ்தாத் என்னிடம் நீ ஈமானின் பார்வையை கூர்மையாக்கிக் கொண்டால் ஒவ்வொரு வஸ்த்திலும் அல்லாஹ்வைப் பெற்றுக் கொள்வாய். ஒவ்வொரு வஸ்த்தோடும் அவனைப் பெற்றுக் கொள்வாய். ஒவ்வொரு வஸ்த்தின் மேலும் அவனைப் பெற்றுக் கொள்வாய். ஒவ்வொரு வஸ்த்துக்கும் நெருங்கியவனாயும் பெற்றுக் கொள்வாய். ஒவ்வொரு வஸ்த்தை சூழ்ந்தவனாகவும் பெற்றுக் கொள்வாய். “குர்பு” நெருக்கம் என்ற தன்மை கொண்டும், சூழ்தல் என்ற தன்மை கொண்டும் பெற்றுக் கொள்வாய். எல்லைகள், கட்டுப்பாடுகள் என்பவற்றை விட்டும் நீ மீள்வாயாக! அதேபோல் திசைகளை விட்டும், இடங்களை விட்டும் நீ மீள்வாயாக! அதேபோல் சேர்ந்திருப்பதை விட்டும், தூரத்தில் நெருங்கியிருப்பதை விட்டும், மற்றும் சிருஷ்டிகளைச் சுற்றுவதை விட்டும் நீ மீள்வாயாக! அதாவது இத்தன்மைகளை விட்டும் அவன் பரிசுத்தமானவன் என்று நம்பிக் கொள்! முந்தினவனும் அவனே! பிந்தினவனும் அவனே! வெளியானவனும் அவனே! உள்ளானவனும் அவனே! என்ற திரு நாமங்கள் மூலம் சிருட்டிகள் அனைத்தையும் அழித்துவிடு. இல்லாமற் செய்து விடு. இல்லையென்று நம்பிக் கொள்! அல்லாஹ் மட்டுமே இருக்கின்றான். இருந்து கொண்டுமிருக்கிறான்.
ஆதாரம்: அத்தபகாதுல் குப்றா
லவாகிஹுல் அன்வார்.
ஆசிரியர்: இமாம் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ். (13-02)

இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் மேற்கண்ட தத்துவம் “எல்லாம் அவனே” என்ற ஸூபிஸ தத்துவத்தை விளக்கி நிற்பது அறிவுள்ளவர்களுக்கு மறைவானதன்று.

ஹிஜ்ரீ 591ல் பிறந்து இமாம் ஆக, குத்பாக பிரசித்தி பெற்று வாழ்ந்த இமாம் ஷாதுலீ நாயகம் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியும், எழுதியும் இருக்கும் நிலையில்தான் இவையொன்றும் தெரியாதவர் போல் “எல்லாம் அவனே” என்று எந்த “தரீகா”வும் சொல்லவில்லை, “தரீகா”வின் ஷெய்குமார்களும் சொல்லவுமில்லை என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொறுப்பான பதவியிலிருந்து கொண்டு இஸ்லாமிய, ஸூபிஸ வரலாறுகளே தெரியாமல் அறிக்கை விட்டிருப்பது இவரின் அறியாமையையும், இவரின் மன நிலையையும் படம் பிடித்துக் காட்டுகிறது.

قال الإمام الشاذلي قيل لي يا علي بِيْ قُلْ وَعَلَيَّ دُلَّ وَاَنَا الْكُلُّ


இமாம் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

(அலீயே! என்னைக் கொண்டு சொல்! என் மீது அறிவி! நானே எல்லாம் என்று எனக்குச் சொல்லப்பட்டது என்று கூறினார்கள்)
ஆதாரம்: ஈகாழுல் ஹிமம்
ஆசிரியர்: இப்னு அஜீபா, பக்கம் 57

மேற்கண்ட இவ்வசனத்தில் بِي قُلْ என்னைக் கொண்டு சொல்! என்று ஒரு வசனம் வந்துள்ளது. இதன் சரியான பொருள் என்னைக் கொண்டு நீ சொல் என்பதாகும். இது சிறிய வசனமாயினும் ஆழமான தத்துவத்தை உள்வாங்கியதாகும். அது பற்றி விபரிக்க இவ் இடம் போதாது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments