Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ நாயகம் அவர்களின் நேரடி “கலீபா” இமாம் அபுல் அப்பாஸ் அல்முர்ஸீ...

அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ நாயகம் அவர்களின் நேரடி “கலீபா” இமாம் அபுல் அப்பாஸ் அல்முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

“எல்லாம் அவனே” என்று திருக்குர்ஆனும் கூறவில்லை, திரு நபீயின் நிறை மொழிகளும் கூறவில்லை, “தரீகா”க்களும் கூறவில்லை, அதன் ஷெய்குமார்களும் கூறவில்லை.

இது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளரின் நவீன கண்டுபிடிப்பு. அறியாமையின் அனர்த்தம். “ஹமாகத்”தின் உச்ச கட்டம்.

ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் இமாம் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ நாயகம் அவர்களின் நேரடி முதலாவது கலீபா அபுல் அப்பாஸ் அல்முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களாவர்.

இவர்கள் ஸ்பெய்ன் நாட்டின் “முர்ஸிய்யா” என்ற இடத்தில் ஹிஜ்ரீ 616ல் பிறந்து அங்கேயே வளர்ந்தார்கள்.

பின்னர் தூனுஸ் நாடு வந்து அங்கு அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ ஞானக் கலை கற்றார்கள். இமாம் ஷாதுலீ அவர்கள், போலி உலமாஉகளின் சூட்சியால் “தூனுஸ்” நாட்டிலிருந்து “மிஸ்ர்” நாட்டுக்கு நாடு கடத்தப்பட்ட போது அவர்களுடன் இமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களும் வந்து “இஸ்கந்தரிய்யா”வில் தங்கிவிட்டார்கள். ஹிஜ்ரீ 686ல் மரணிக்கும் வரை அங்கேயே தங்கியிருந்தார்கள்.
قال المرسي قُدِّسَ سِرُّه، إنّ لله عبادا، محق أفعالهم بأفعاله، وأوصافهم بأوصافه، وذواتهم بذاته، (الطبقات الكبرى للشعراني 13 -6)
இமாம் முர்ஸீ அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். “அல்லாஹ்வுக்கு சில அடியார்கள் உள்ளனர். அல்லாஹ் தனது செயல்கள் கொண்டு அவர்களின் செயல்களை அழித்துவிட்டான், தனது தன்மைகள் கொண்டு அவர்களின் தன்மைகளை அழித்து விட்டான். தனது “தாத்” கொண்டு அவர்களின் “தாத்”துகளையும் அழித்துவிட்டான்” என்று.

இதன் விபரம் என்னவெனில் அல்லாஹ்வின் படைப்புகள் மூலம் வெளியாகின்ற எச் செயலாயினும் அச் செயலுக்கு எதார்த்தத்தில் உரியவன் – சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அவன் தவிர வேறெவருக்கும் எச் செயலும் சொந்தமானதல்ல. اَلْأَفْعَالُ كُلُّهَا للهِ எல்லாச் செயல்களுக்கும் உரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமேயாவான். இதுவே العقيدة الإسلاميّةالأشعريّة இஸ்லாமிய “அஷ்அரிய்யா” கொள்கையாகும். இதற்கு முரணான கொள்கை வழிகேடென்றே கணிக்கப்படும்.
وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ
“அல்லாஹ் உங்களையும் படைத்து உங்களின் செயல்களையும் படைத்தான்”. இதுவே அல்லாஹ் திருமறை மூலம் தந்த தத்துவமாகும். இத்திரு வசனத்தின் ஆதாரப்படி நாம் அவனுக்குச் சொந்தமானவர்களாயிருப்பது போல் நமது செயல்களும் அவனுக்கே சொந்தமானவையாகும். (திருக்குர்ஆன் 37-96)

கடலினடியில் கருங்கல்லினுள்ளே வாழும் சிற்றெறும்பின் சிறிய அசைவு கூட, தாயின் வயிற்றில் வளரும் சிசுவின் நாடித்துடிப்பு உள்ளிட்ட சிறிய, பெரிய அனைத்துச் செயல்களும் கூட அல்லாஹ்வின் செயல்களேயாகும்.

ஆனால் நீ ஒரு செயலைச் செய்து விட்டு நான் செய்தேன் என்று நீ சொல்வதும், உன் மகன் ஒரு செயலைச் செய்துவிட்டு தான் செய்தேன் என்று அவன் சொல்வதும், உன் மனைவி ஏதோ ஒன்றைச் செய்துவிட்டு தான் செய்தேன் என்று அவள் சொல்வதும் எதார்த்தத்திற்கு முரணான, அர்த்தமற்ற, உயிரற்ற பேச்சேயாகும். செயல் இறைவனுடையதாயினும் அது வெளியாவதற்கு வழியாக படைப்பு இருந்ததன் காரணத்தினால் மட்டுமே அதன் பக்கம் சேர்த்துச் சொல்லப்படுகிறதேயன்றி எதார்த்தம் அதுவல்ல.

இவ்வாறு சொல்லுதல் மன்திக் – மஆனீ முதலான கலைகளில் مَجَازْ عَقْلِيْ என்று சொல்லப்படும். இதற்கு எதிரானது حقيقة عقلي என்றும் சொல்லப்படும்.

இவ்விரு அம்சங்களும் திருக்குர்ஆனையும், ஹதீதுகளையும் சரியாக விளங்கிக் கொள்வதற்கு பெரிதும் உதவும். இவ்விரு அம்சங்களின் அடிப்படையிலும் திருமறை வசனங்களும் அருளப்பட்டன. ஹதீதுகள் – நபீ மொழிகளும் வந்துள்ளன. மனிதர்களின் அன்றாடப் பேச்சு வழக்குகளிலும் இவ் அடிப்படை உள்ளது.

இதன் விபரத்தை முழுமையாக இங்கு எழுத விரும்பவில்லை. ஆயினும் ஆய்வுத்திறனுள்ளவர்களின் நன்மை கருதி சுட்டிக் காட்டுகிறேன்.

அல்லாஹ்தான் ஒரு மனிதனை மரணிக்கச் செய்கிறான். இதுவே எதார்த்தம். இதன்படியும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டுள்ளது. அல்லாஹ் திருக்குர்ஆனில்
اللَّهُ يَتَوَفَّى الْأَنْفُسَ حِينَ مَوْتِهَا

“அல்லாஹ்தான் ஆத்மாக்கள் மரணிக்கும் போது அவற்றை மரணிக்கச் செய்கிறான்” என்று கூறியுள்ளான்.
(திருக்குர்ஆன் 39-42)

திருக்குர்ஆனில் இன்னுமோர் இடத்தில் இதற்கு மாற்றமாகவும் கூறியுள்ளான்.
قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ

உங்களைக் கொண்டு சாட்டப்பட்ட “மலகுல் மவ்த்” மரணத்திற்குப் பொறுப்பான “மலக்” அமரர் உங்களின் ஆன்மாக்களை கைப்பற்றுவார்கள் என்று நீங்கள் சொல்லுங்கள். (திருக்குர்ஆன் 32-11)

இவ்வாறு இன்னும் பல திரு வசனங்களும். ஹதீதுகளும் வந்துள்ளன. விரிவையஞ்சி அவற்றை எழுதவில்லை. விளக்கத்திற்கு ஓர் உதாரணம் போதும்.

ஆன்மாக்கள் மரணிக்கும் போது அவற்றை அல்லாஹ் மரணிக்கச் செய்கிறான் என்பதே எதார்த்தம். இது “ஹகீகத் அக்லீ” என்று சொல்லப்படும். “மலகுல் மவ்த்” மரணத்திற்குப் பொறுப்பான “மலக்” இஸ்றாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழியாக மரணம் நிகழ்வதால் அவர்களின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டிருப்பது “மஜாஸ் அக்லீ” என்று சொல்லப்படும்.

உண்ணல், உறங்கல் என்பனவும் செயல்கள்தான். இச் செயல்களுக்கும் சொந்தக்காரன் – உரியவன் அல்லாஹ் மட்டுமேயாவான். இவ்விரு செயல்கள் கூட படைப்புக்குச் சொந்தமானவையல்ல. இதுவே எதார்த்தம். எனினும் குறித்த இரு செயல்களும் படைப்பு மூலம் – படைப்பின் வழியாக வெளியாவதால் மனிதன் சாப்பிட்டான், நாய் உறங்கியது என்று உலக நடைமுறைக்காகவே சொல்லப்படுகிறது.

“மஜாஸ் அக்லீ” என்ற அடிப்படையில் அல்லாஹ் சிரித்தான், அல்லாஹ் உறங்கினான், அல்லாஹ் சாப்பிட்டான் என்று சொன்னவன் விசாரிக்கப்படாமல் அவனை “முர்தத்” என்று சொல்வது “ஷரீஆ” சட்டத்தின் அடிப்படையிலும் பிழையேயாகும்.

ஷாதுலீ நாயகம் அவர்களின் “கலீபா” இமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுமல்லாஹ் அவர்கள் (அல்லாஹ்வுக்கு சில அடியார்கள் உள்ளனர். அவன் தனது செயல்கள் கொண்டு அவர்களின் செயல்களை அழித்துவிட்டான் என்றும், அவன் தனது தன்மைகள் கொண்டு அவர்களின் தன்மைகளை அழித்துவிட்டான் என்றும், அவன் தனது “தாத்” கொண்டு அவர்களின் “தாத்”துகளை அழித்துவிட்டான் என்றும்) அவர்கள் சொன்னதிலுள்ள விளக்கம் என்னவெனில் அல்லாஹ்வின் வலீமார் யாராயினும் அவர் தனக்கு எந்தவொரு செயலுமில்லையென்றும், அதேபோல் தனக்கு எந்த ஒரு தன்மையும் இல்லையென்றும், அதேபோல் தானும் இல்லையென்றும் நம்பினவராகவே இருப்பார் என்பதாகும். அதாவது இருக்க வேண்டும் என்பதாகும்.

ஒருவன் இதற்கு மாறாக தனக்கும் செயலுண்டு. தனக்கும் தன்மையுண்டு, தனக்கும் “தாத்” உண்டு என்று இவற்றைத் தனக்குச் சொந்தமாக்கினால் அவனால் ஆன்மிக அந்தஸ்த்தை அடைய முடியாது.

மேற்கண்ட இமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் மேற்கண்ட அமுத வாக்கின் மூலம் (அத்தபகாதுல் குப்றா 13-06) ஓர் அடியான் தனக்கென்று ஒன்றுமில்லை என்றும், எந்த ஒரு செயலுமில்லை, எந்த ஒரு தன்மையுமில்லையென்றும் அவன் அல்லாஹ்வின் செயலிலும், தன்மையிலும், “தாத்”திலும் “பனா” எனும் நிலையடைந்து கொள்ள வேண்டுமென்று வழி காட்டியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் செயலில் “பனா” ஆதல், அவனின் தன்மையில் “பனா” ஆதல், அவனுடைய “தாத்”தில் “பனா” ஆதல், அதாவது அவனில் “பனா” ஆதல் ஆகிய முப்பெரும் “பனா”க்களும் ஏற்பட்டால் அவன் “பகா” எனும் நிலையை அடைந்துவிடுவான். அந்த நிலைதான் தெளிவு நிலையாகும். இந்நிலை “ஸஹ்வு” நிலையென்றும், இதற்கு எதிரானது “மஹ்வு” நிலை என்றும் ஸூபீகள் சொல்வர்.

இக்கருத்தை உள்வாங்கியே ஒரு ஞானி பின்வருமாறு பாடியுள்ளார்.

فَنَاءٌ فِى فَنَاءٍ فِى فَنَاءٍ – فَكَانَ فَنَائُهُ عَيْنَ الْبَقَاءِ

“பனா”வுக்குப் பிறகுதான் “பகா” ஏற்படும். ஒருவருக்கு “பனா” நிலை ஏற்பட்டு “பகா” நிலை ஏற்படவில்லையானால் அவர் ஒரு வகையில் சிறந்தவர்தானாயினும் அவர் “அல் இன்ஸானுல் காமில்” சம்பூரண மனிதனல்ல. அவர் “அல் இன்ஸானுன் நாகிஸ்” குறையுள்ள மனிதன்தான்.

وقال المرسي قدّس سرّه ‘ لو كُشف عن حقيقة وليٍّ لَعُبد من دون الله ، لأنّ أوصافه من أوصافه، ونُعوته من نعوته ‘
إيقاظ الهمم، ص 199 ، الطبقات الكبرى 2 13

ஷாதுலீ நாயகமவர்களின் கலீபா அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

“ஒரு வலிய்யுல்லாஹ்வின் எதார்த்தம் தெளிவாகக் கூறப்பட்டால் – அவரின் எதார்த்தம் திரை நீக்கப்பட்டால் அல்லாஹ் அன்றி அவர் வணங்கப்படுவார். ஏனெனில் அவரின் தன்மைகள் அல்லாஹ்வின் தன்மைகளாகவும், அவரின் வர்ணனைகள் அல்லாஹ்வின் வர்ணனைகளாகவும் இருப்பதே இதற்குக் காரணமாகும் என்று கூறினார்கள்.
ஆதாரம்: ஈகாழுல் ஹிமம்
பக்கம் 199, அத்தபகாதுல் குப்றா, பக்கம் 132

ஸுப்ஹானல்லாஹ்! இமாம் அபுல் அப்பாஸ் அல்முர்ஸீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஷாதுலீ நாயகம் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் முதலாவது நேரடி “கலீபா” ஆவார்கள்.

இத்தகைய மகானின் மேற்கண்ட இந்தப் பேச்சை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “பத்வா” குழுவினர் கண்டார்களாயின் இவருக்கும் ஒரு “முர்தத்” பத்வா வழங்கி இந்நாட்டையும், தூனுஸ், மற்றும் இஸ்கந்தரிய்யா போன்ற இடங்களில் வாழும் மக்களையும் குழப்பி விடலாமென்று துள்ளிக் குதிப்பார்கள் என்று எண்ணுகிறேன். “பத்வா” வியாபாரம் எப்போது வந்தாலும் தவற விடாமல் செய்வதற்கு அவர்கள் பேனாவோடும், பேப்பரோடும் ஆயித்தமாக உள்ளார்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments