தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
ஒரு வலீயின் எதார்த்தம் திரை நீக்கி காண்பிக்கப்பட்டால் – ஒரு வலீயின் அகமியம் பொது மக்களுக்கு விளக்கமாகச் சொல்லப்பட்டால் அல்லாஹ் அன்றி அந்த வலீ வணங்கப்படுவார் என்று அபுல் அப்பாஸ் முர்ஸீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த மகான் ஒரு குத்புஸ்ஸமானின் “கலீபா” என்பது “தரீகா”வாதிகள் யாவரும் அறிந்த விடயமாகும். குறிப்பாக ஷாதுலிய்யா “தரீகா”வைச் சேர்ந்தவர்கள் இதை நன்கறிவர்.
ஒரு குத்புஸ்ஸமான் தனக்கு “கலீபா”வாக ஒருவரை நியமிப்பதாயின் அவரின் நியமனம் எவ்வாறிருக்கும் என்பது சொல்லத் தேவையில்லை. ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா முதலான நாற் பெரும் கலைகளிலும் பாண்டித்தியம் உள்ளவரையே நியமிப்பார் என்பது தெரிந்த விடயமே!
ஆகையால் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ அவர்களின் மேற்கண்ட தகவல் வெளிப்பார்வையில் “ஷரீஆ”வுக்கு முரணானது போல் தோற்றினாலும் கூட அது “ஷரீஆ”வுக்கு முரணானதேயல்ல.
ஒருவன் ஒரு மார்க்க அறிஞரை மேம்படுத்திப் பேசும்போதும் அல்லது ஒரு மார்க்க விடயத்தை மேம்படுத்திப் பேசும் போதும் அவன் பயன்படுத்துகின்ற வசன நடை பரவலான அறிவில்லாதவர்களுக்கு பிழையாகத் தோற்றுவதற்கு சாத்தியமுண்டு. அவ்வாறான கட்டத்தில் நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்தல் வேண்டும்.
பின்வரும் பெருமானாரின் அருள் வாக்கை உதாரணமாகக் கொண்டு சிந்திக்கலாம்.
لَوْ كُنْتُ آمُرُ أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ، لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا،
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
நான் ஒருவரை இன்னொருவருக்கு “ஸுஜூத்” செய்ய பணிப்பதாயிருந்தால் மனைவி கணவனுக்கு ஸுஜூத் செய்ய வேண்டுமென்று நான் ஏவியிருப்பேன் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் கூறினார்கள். ஆதாரம்: ஸுனனுத் தாரமீ
இந்த நபீ மொழியின் வெளித் தோற்றம் கணவனுக்கு மனைவி “ஸுஜூத்” செய்யலாம் என்ற கருத்தைக் காட்டினாலும் கூட அவ்வாறு நாம் புரிந்து கொள்ளக் கூடாது. விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.
நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கணவனின் தரத்தை மேம்படுத்திக் காட்டுவதற்காக அவ்வாறு சொன்னார்களே தவிர “ஸுஜூத்” செய்ய வேண்டும் என்பதற்காக அவ்வாறு சொல்லவில்லை.
“ஷரீஆ”வுக்கு முரணாக எந்த ஒரு திரு வசனமும் இருக்கவுமாட்டாது. அதேபோல் எந்த ஒரு நபீ மொழியும் இருக்கவுமாட்டாது.
இன்னுமிது போல் பின்வரும் நபீ மொழியையும் நோக்கலாம்.
وَقَالَ أَبُو هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ وُضُوءٍ وَفِى رِوَايَةٍ عِنْدَ كُلِّ صَلَاةٍ،
எனது “உம்மத்” சமுகத்திற்கு கஷ்டம் கொடுக்க நான் விரும்பாத காரணத்தினால்தான் ஒவ்வொரு “வுழூ” வின் போதும், அல்லது ஒவ்வொரு தொழுகையின் போதும் “மிஸ்வாக்” பல் துலக்குமாறு நான் ஏவவில்லை என்று கூறினார்கள்.
இதன் தெளிவான பொருள் நான் எனது சமுகத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்க நினைத்திருந்தால் ஒவ்வொரு “வுழூ”வின் போதும், அல்லது ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்கல் அவசியம் என்று சொல்லியிருப்பேன் என்று கூறினார்கள்.
இந்த நபீ மொழியும் மேற்கண்ட நபீ மொழிபோல் பல் துலக்குவதின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. ஒன்றின் சிறப்பை மேம்படுத்திக் காட்டுவதற்காகவே அவ்வாறு சொல்லப்பட்டதாகும்.
பெருமானார் தங்களின் சமுகத்திற்கு மார்க்கம் இலகுபடுத்தப்பட்டதை கூறுவதாயின் இதைத்தானா கூற வேண்டும்? அவர்களுக்கு அதற்கு வேறு விடயம் இல்லையா? ஒரு நாளைக்கு ஐம்பது நேரம் தொழுவதை ஐந்து நேரமாக்கியதை கூறியிருக்கலாமல்லவா?
இவ்வாறுதான் இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொன்ன செல்லப் பிள்ளை வார்த்தையுமாகும்.
قَالَ الشَّافِعِيُّ رَحِمَهُ اللهُ لَوْ لَمْ يُوْقِنْ مُحَمَّدُ بْنُ إِدْرِيْسَ الشَّافِعِيُّ أَنَّهُ يَرَى رَبَّهُ فِى الْمِيْعَادِ لَمَا عَبَدَهُ فِى الدُّنْيَا،
“முஹம்மத் இப்னு இத்ரீஸ் ஷாபிஈ ஆகிய இவர் மறுமையில் அல்லாஹ்வைக் காணமாட்டார் என்றிருந்தால் அவனை இவ்வுலகில் வணங்கியிருக்கமாட்டார்” என்று கூறியது ஒரு வகையான செல்லக் கதையேயன்றி எதார்த்தம் அதுவல்ல. மறுமையில் அல்லாஹ்வை காணாது போனாலும் அவன் வணங்கப்படுவதற்குத் தகுதியுடையவனேதான். இதுவும் ஒரு விடயத்தை மேம்படுத்திக் காட்டுவதற்காகச் சொல்லப்பட்டதேயாகும்.
قَال الإمام أبو العباس المرسي رحمه الله: أَكْرَهُ لِلْفُقَهَاءِ خَصْلَتَيْنِ، قَوْلَهُمْ بِكُفْرِ الْحَلَّاجِ وَقَوْلَهُمْ بِمَوْتِ الْخَضِرْ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ،
சட்ட மேதைகள் – சட்டவாதிகள் சொல்கின்ற இரண்டு விடயங்களை நான் வெறுக்கிறேன். ஒன்று. இமாம் மன்சூர் அல்ஹல்லாஜ் “காபிர்” என்று அவர்கள் சொன்னது. இரண்டு களிர் – “கிழ்று” அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்று அவர்கள் சொல்வது என்று அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: லதாயிபுல் மினன்,
பக்கம்: 473, ஆசிரியர்: ஷஃறானீ
“அனல் ஹக்” “நான் அல்லாஹ்” என்று சொன்ன இமாம் மன்சூர் அல்ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்களை “காபிர்” என்றும், “முர்தத்” என்றும் சொல்பவர்களில் அதிகமானோர் “தஸவ்வுப்” ஸூபிஸம் தெரியாத “புகஹாஉ” சட்ட மேதைகளாவர். இத்தகையோரின் தலையீடு காரணமாகவே அந்தப் பெரிய மகான் அறுத்தும், அரிந்தும், சித்திரவதை செய்தும் கொல்லப்பட்டார்கள். அவர்களின் கொலைக்கு ஸூபீ மகான்களில் எவரும் ஆதரவு வழங்கவில்லை. எனினும் கொலைக்குப் பயந்த சிலர் தவிர.
இமாம் கொலை செய்யப்பட்டு பல வருடங்களின் பின் தோன்றியவர்கள்தான் இமாம் ஙஸ்ஸாலீ அவர்களும், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ நாயகம் அவர்களுமாவர். இவ்விருவரும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
ஹல்லாஜ் கொலை செய்யப்பட்ட காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் கை கொடுத்து அவரைக் காப்பாற்றியிருப்போம் என்று கூறிய தகவல் “ஹயாதுல் ஹயவான்” எனும் நூலில் பதிவாகியுள்ளது. ஹல்லாஜின் கொலை உலமாஉகளில் ஸூபிஸம் தெரியாத சட்ட மேதைகளின் சதியேயாகும்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கும், நான் கூறிய ஸூபிஸ ஞானக் கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாற்றி “பத்வா” கொடுத்துவிட்டு அவர்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டுமென்று சொன்னதும், இன்றுவரை சொல்லிக் கொண்டிருப்பதும் போலி உலமாஉகள் செய்த சதியேயாகும். இவர்கள் அறிஞர்கள் அல்ல. அநீதியாளர்களாவர். இன்னோரை ஆலிம்கள் என்று சொன்னவன் கூட தண்டிக்கப்படுவான் என்பதில் சந்தேகமே இல்லை. ஸூபிஸம் தெரியாத இத்தகைய போலிச் சட்ட மேதைகளால்தான் அன்று இமாம் ஹல்லாஜ் அவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் மட்டுமன்றி ஸூபிஸ மகான்களின் எண்ணற்றோர் கொல்லப்பட்டனர். பலர் நாடு கடத்தப்பட்டனர். இன்னும் பலர் வன விலங்குகளுக்கு உணவாக்கப்ட்டனர். இன்னும் பலர் துன்புறுத்தப்பட்டனர்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்னையும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களையும் “முர்தத்” என்று மதம் மாற்றி “பத்வா” வழங்கியது மட்டுமன்றி ஒன்றுமே புரியாத வெறும் உலக்கைகள் போல் எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்றும் கூறியிருப்பது கொலை செய்ததற்குச் சமமானதேயாகும். நபீ பெருமானின் வாக்குப்படி இவர்கள் கொலை காரர்கள்தான்.
வாளால் வெட்டிக் கொல்வதும், நஞ்சூட்டிக் கொல்வதும், பட்டினி பசி போட்டுக் கொல்வதும், பொருளாதாரத் தடை செய்து கொல்வதும், “பத்வா” வழங்கிக் கொல்வதும் கொலைதான். تَكْفِيْرُ الْمُسْلِمِ كَقَتْلِهِ ஒரு முஸ்லிமை “காபிர்” என்று சொல்வது அவனைக் கொலை செய்வதேயாகும் என்ற கருத்தில் பல நபீ மொழிகள் பதிவாகியுள்ளன.
“கத்ல்” கொலை என்ற சொல்லைப் பயன்படுத்தி “பத்வா” தீர்ப்பு வழங்கிவிட்டு யாரோ ஓர் அரச அதிகாரி உலமா சபை உறுப்பினரிடம் இது பற்றிக் கேட்ட போது பயங்காட்டுவதற்காக அச் சொல்லைப் பயன்படுத்தியதாகக் கூறினாராம். அதற்கு அந்த அதிகாரி “கத்ல்” என்ற அறபுச் சொல்லுக்கு எந்த ஓர் அகராதியிலேனும் பயங்காட்டுதல் என்ற பொருள் உண்டா? என்று கேட்க தலை சொறிந்தாராம் கௌரவ உறுப்பினர். பொய் சொல்வதாயினும் பொருத்தமாகச் சொல்ல வேண்டுமென்று வயோதிபர்கள் சொல்வார்கள். ஆனியில் ஒரு பொய்யும், ஆவணியில் இன்னொரு பொய்யும் சொல்பவன்தான் பொருத்தம் பார்த்துச் சொல்வான். வாய் திறந்தால் பொய்தான் என்று சொல்லப்படுவோருக்கு பொருத்தம் தெரியாது. வாயால் வருவது செய்திதான். ஸுப்ஹானல்லாஹ்!
كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ
ஒருவன் தான் கேள்விப்படும் செய்திகளையெல்லாம் சொல்வானாயின் அவன் பொய்யன் என்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.
ஒருவன் ஆயிரம் செய்தி கேள்விப்பட்டாலும் அவன் அவை பற்றி அலசி ஆராய்ந்து, விசாரித்து விபரமறிந்த பிறகுதான் பிறரிடம் சொல்ல வேண்டும். இவ்வாறு செய்யாமல் விடுவதால்தான் விபரீதங்கள் ஏற்படுகின்றன.
ரிஸ்வீ முப்தீ அவர்கள் எங்களின் உலமா சபையிலும் ஸூபீகள் உள்ளார்கள் என்று சொல்வதாக அறிய முடிகிறது. இவர் செல்வது பொய் என்பதற்கு ஒரேயொரு ஆதாரம் ஸூபிஸ தத்துவம் “குப்ர்” என்று அந்தச் சபை “பத்வா” வழங்கியிருப்பதேயாகும். அந்தச் சபையில் ஒரு ஸூபீயாவது இருந்திருந்தால் அவருக்கு ஹுலூல் – இத்திஹாத் என்பதற்கும், “வஹ்ததுல் வுஜூத்” என்பதற்கும் வேறுபாடு நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். தெரியவில்லையே! அப்படியானால் முப்தீகளும், முல்லாக்களும் யார்?
ஆகையால் உலமா சபை “பத்வா” வழங்கிய காலத்தில் அதில் ஒரு ஸூபீ கூட இருக்கவில்லை என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை. எனினும் தற்போது பெயரளவிலேனும் ஒரு சிலர் “ஸூபீ” லேபல் போட நினைப்பதும் ஒரு சதியென்றே சொல்ல வேண்டும். والله خير الماكرين
“பத்வா” வழங்கிய முப்தீகாள்!
நீங்கள் “பத்வா”வை வாபஸ் பெறுவதும், பெறாமலிருப்பதும் உங்கள் மனச் சாட்சியைப் பொறுத்ததாகும். ثُمَّ لَتُسْئَلُنَّ عَنِ النَّعِيْمِ
ஒரு வகையில் உங்கள் “பத்வா” எனது அறிமுகத்திற்கும், எனது ஆன்மிக வளர்ச்சிக்கும், பலரின் ஈமான் பலமடைவதற்கும் ஓர் உந்து சக்தி எனலாம். அல்ஹம்து லில்லாஹ்!
முற்றும்.