தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையிடம் இதுவரை பல கேள்விகள் நான் கேட்டிருக்கிறேன். எந்தவொரு கேள்விக்கும் உலமா சபை பதில் தரவில்லை. இதற்கான காரணம் உலமா சபையின் இயலாமையேயாகும்.
“தஸவ்வுப்” எனும் ஸூபிஸ ஞானம் பேசிய எனக்கும், எனது கருத்தைச் சரி கண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாற்றி “பத்வா” வழங்கிவிட்டு என்னையும், அவர்களையும் கொலை செய்ய வேண்டுமென்றும் கண் கெட்ட சட்டம் கூறி, இத்தகவலை பிரசுரங்கள் முலமும், நூல்கள் மூலமும் நாடு முழுக்க பிரகடனம் செய்தது உலமா சபை.
உலமா சபையின் தீர்ப்பின் பின்னணிதான் மௌலவீ MSM பாறூக் காதிரி அவர்களின் கொலையும், என்னைக் கொல்ல எடுக்கப்பட்ட முயற்சியுமாகும்.
“பத்வா” வழங்கிய உலமாஉகளே!
நீங்கள் ஸூபிஸம் பேசிய எனக்கும், நான் கூறிய ஸூபிஸ ஞானக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் மதம் மாற்றி “முர்தத்” என்று தீர்ப்புக் கொடுத்து, என்னையும், எனது கருத்தை சரி கண்டவர்களையும் கொலை செய்வது மார்க்கக் கடமை என்றும் பிரகடனம் செய்தீர்கள்.
உங்களின் “பத்வா” கொள்ளையர்களுக்கும், கொலை காரர்களுக்கும், திருடர்களுக்கும், சந்தர்ப்பவாதிகளுக்கும், பொறாமைக் காரர்களுக்கும் “விற்றமின் டொனிக்” கொடுத்தது போலாகிவிட்டது.
உங்களின் “பத்வா”வை ஆதாரமாகக் கொண்டு கொள்ளையடிப்பதைத் தொழிலாகக் கொண்ட சிலர் எமது ஆதரவாளர்களின் கடைகள் வீடுகளைக் கொள்ளையடித்தார்கள். கூலிக்குக் கொலை செய்யும் கொலை காரக் கும்பல்களால் பலர் கொலை செய்யப்பட்டார்கள். அதேபோல் உங்களின் “பத்வா”வை ஆதாரமாகக் கொண்டு “முர்தத்” மதம் மாறியவர்களின் சொத்துக்கள் மற்ற முஸ்லிம்களுக்கு “ஹலால்” என்ற உங்களின் அறிவுக்குப் பொருத்தமற்ற “பத்வா”வினால் பலரின் வீடுகளும், கடைகளும் உடைக்கப்பட்டு பொருட்களும், பணங்களும் திருடப்பட்டன. இதுவரை 50 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை இழந்து தவிக்கிறது ஸூபிஸ சமுகம்.
இத்தகைய அட்டூழியங்கள் அதிகமாக காத்தான்குடியிலேயே நடைபெற்றன. இதற்குக் காரணம் நானும், எனது ஆதரவாளர்களில் அதிகமானவர்களும் காத்தான்குடி வாசிகளாயிருப்பதேயாகும்.
நீங்கள் வழங்கிய கண் மூடித்தனமான “பத்வா” வினால் இலங்கையின் பல பகுதிகளிலும் வாழ்கின்ற ஸூபிஸ சமுகம் பல்வேறு கஷ்டங்களையும், இன்னல்களையும் சுமார் 42 வருடங்களாக அனுபவித்து வருகின்றனர்.
உங்களுடன் தொடர்பு கொண்டு மனிதாபிமான முறையில் பேசி ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உங்களுடன் தொடர்பு கொண்டால் ஒரு பதிலும் கிடைப்பதாக இல்லை. சில கடிதங்கள் முகவரி பிழையென்று திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறன.
நான் உங்களிடம் கேட்ட கேள்விகளில் முக்கியமானவற்றை மீண்டும் கேட்கிறேன்.
கேள்விகள்:
ஒன்று: உங்களுக்கு மதம் மாற்றி “பத்வா” வழங்கும் அதிகாரம் யாரால் எப்பொது வழங்கப்பட்டது? விபரமாக பதில் தர வேண்டும். பதில் தராமல் மழுப்பினீர்களாயின் உங்களின் கோர முகத்தை எவ்வாறு பொது மகக்ளுக்கு காட்ட வேண்டுமோ அவ்வாறு காட்டுவேன். “நான் இலங்கை முஸ்லிம் என்றும், நான் கூறிய ஸூபிஸ ஞானக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்களும் ஸூபிஸ முஸ்லிம்களே” என்றும் நீங்கள் பிரகடனம் செய்யும் வரை என் பேனா செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.
இரண்டு: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வீ முப்தீ அவர்கள் விகாரை சென்று வெசக் விளக்கை கையிலேந்தி நின்ற கண் கொள்ளாக் காட்சியை நான் கண்ட நாள் முதல் இவரின் இச் செயலுக்கு சட்டம் என்ன என்று கேட்டு பல கடிதங்கள் அனுப்பியிருந்தும் நீங்கள் ஒன்றுக்கும் பதில் தராமல் பதுங்கு குழியில் பதுங்குவதேன்? இவருக்கான “பத்வா” என்ன? இவர் முஸ்லிமா? “முர்தத்”தா? சட்டத்தைச் சொல்லுங்கள். நீங்கள் சட்டம் சொல்லத் தயங்குவதேன்?
மூன்று: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கும், ஸூபிஸ ஞானத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் வழங்கிய “ஏகத்துவத்தில் ஊடுருவல்” என்ற “பத்வா” “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று வழங்கப்பட்டதா? “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பிழையென்று வழங்கப்பட்டதா?
உலமா சபையின் அறபு “பத்வா”வில் எந்த ஓர் இடத்திலும் “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொற் கூட கூறப்படவில்லையே ஏன்?
ஒருவன் ஒரு விடயம் பிழையென்று “பத்வா” கொடுப்பதாயின் அந்த விடயம் தொடர்பாக – அதன் தலைப்பை பல இடங்களில் குறிப்பிடுவதே வழக்கம். உங்களின் “பத்வா”வில் ஓர் இடத்தில் கூட “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல் கூறப்படவில்லை. மாறாக “ஹுலூல் – இத்திஹாத்” என்ற சொல் குறித்த “பத்வா”வில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளதே அது ஏன்?
நான்கு: அந்த “பத்வா” அறபுப் பகுதியில் எனது பெயர் எந்த ஓர் இடத்திலும் கூறப்படாதிருக்கும் நிலையில் அதன் மொழியாக்கத்தில் எனது பெயர் வந்தது எவ்வாறு? அசலில் இல்லாதது நகலில் – மொழியாக்கத்தில் எவ்வாறு வந்தது?
මම කඩයට ගියා “மம கடயட கியா” என்ற வசனத்தை நான் வாழைப்பழம் வாங்குவதற்காக கடைக்குச் சென்றேன் என்று மொழியாக்கம் செய்யலாமா? உலமா சபை இவ்வாறுதான் மொழியாக்கம் செய்துள்ளது.
ஐந்து: அறபு மொழியில் “பத்வா” எழுதியவர் யார்? தமிழாக்கம் செய்தவர் யார்? ஏனெனில் அறபு மொழியில் “பத்வா” எழுதியவர் “யாரோ ஒருவர்” என்றுதான் குறிப்பிட்டுள்ளாரே தவிர என் பெயர் குறித்து “பத்வா” எழுதவில்லை. அதன் மொழியாக்கத்திலேதான் எனது பெயர் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு சதியாகும்.
அறபியில் இருப்பது போன்றே மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தால் “பத்வாவுக்குரியவர்” யாரென்று எவருக்கும் விளங்காமற் போய்விடும். எதிரிகளின் அம்புகளுக்கு நான் இலக்காக வாய்ப்பு இருந்திருக்காது. நான் எதிரிகளால் குறி வைக்கப்படுவதற்கு என் பெயர் சொல்ல வேண்டுமல்லவா? உலமாஉகளின் குறிக்கோள் இப்போது புரிகிறதல்லவா? “பத்வா” வழங்கிய உலமாஉகளின் உள்ளங்கள் பால் போல் மென்மையானவையும், வெண்மையானவையுமாகும். இதனால்தான் إِنَّمَا يَخْشَى اللهُ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءَ அல்லாஹ் தனது அடியார்களில் “உலமாஉ” மார்க்க அறிஞர்களையே பயப்படுகிறான் என்று ஒரு “கிறாஅத்” வந்தது போலும். (அல்லாஹ் என்ற சொல்லின் “ஹே” என்ற எழுத்துக்கு “ழம்மு” வைத்தும், “உலமாஉ” என்ற சொல்லின் “ஹம்ஸ்” என்ற எழுத்துக்கு “பத்ஹ்” வைத்தும் வாசித்தால் உலமாஉகளின் இரகசியம் வெளியாகும். அல்லாஹ் கெட்டவனையே பயப்படுவான். நலல்வனைப் பயப்பட மாட்டான்)
ஆறு: நான் “வஹ்ததுல் வுஜூத்” எனும் ஸூபிஸ ஞானம் பேசியிருக்கும் நிலையில் தமது அறியாமை காரணமாக அதை “ஹுலூல் – இத்திஹாத்” எனும் தவறான கொள்கையென தலை கீழாய்ப் புரிந்து அக் கொள்கையையே நான் பேசுவதாக தப்பாக எடை போட்டுக் கொண்டு “ஹுலூல் – இத்திஹாத்” பேசியவனுக்கு வழங்க வேண்டிய “பத்வா”வில் என் பெயரைக் குறிப்பிட்டது நான் கொலை செய்யப்பட வேண்டுமென்பதற்காக செய்யப்பட்ட சதியேயாகும்.
ஏழு: ஒன்றுக்கும் உதவாத உலமா சபையின் உச்சக்கட்ட அறியாமை என்ன தெரியுமா? எழுதினால் சிரிப்புத்தான் வரும். “பத்வா”வுக்கு ஆதாரம் திரட்டியவர் சுய நினைவோடுதான் திரட்டினாரா? அல்லது கலப்பான உணர்வோடு திரட்டினாரா? இதில் எனக்கு சந்தேகம் உண்டு.
ஏனெனில் உலமா சபையின் “பத்வா” குழு எந்தக் கிதாபை வாதத்திற்கு ஆதாரமாக எடுக்கக் கூடாதோ அந்த கிதாபை எடுத்திருப்பதாகும்.
“அத்துஹ்பதுல் முர்ஸலா” என்று ஒரு நூல் உண்டு. இந் நூல் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கு ஆதரவான நூல் என்பதை விட “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையின் வரைவிலக்கணமே இந்த நூல் என்றால் அது மிகையாகாது.
“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை வயது வராத சிறுவர்கள் உள்ளிட்ட, பாலர் வகுப்புக் கூட படிக்காத பாமரர்கள் உள்ளிட்ட அனைவரும் மிக எளிதாக விளங்கும் பாணியில் எழுதப்பட்ட நூல்தான் “அத்துஹ்பதுல் முர்ஸலா” நூலாகும். இந்நூலை ஒரு தரம் மட்டும் ஒருவன் வாசித்தால் கூட அவன் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசராக ஆகிவிடுவான்.
இத்தகைய ஒரு நூலை “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை எதிர்த்து நூல் எழுதுபவன் அல்லது “பத்வா” கொடுப்பவன் ஆதாரமாக எடுக்க நினைக்கவும் மாட்டான். உலமா சபை முப்தீகள் போல் அல்லது அதன் பொதுச் செயலாளர் போல் விபரம் தெரியாதவர்களே அதை இரும்புத் துரும்பாக நினைத்துக் கொண்டார்கள் போலும். அது இரும்புத் துரும்புதான் எமக்கு. ஆனால் அவர்களுக்கல்ல. அவர்களுக்கு அது அவர்களை நேரடியாகத் தாக்கும் ஏவு கணையேயாகும்.
மேற்கண்ட ஏழு கேள்விகளும் உலமா சபையிடம் பல தரம் கேட்ட கேள்விகளேயாகும். அவர்கள் ஒரு கேள்விக்கேனும் பதில் தரவில்லை. அவர்கள் தரவுமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் தற்போது அவர்கள் தம்மை விட்டால் போதும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்து விட்டார்கள். ஏனெனில் முழுப்பிழையும், தப்பும் அவர்கள் பக்கமே உள்ளன. அவர்களால் தப்ப முடியாது. இவர்கள் செய்துள்ள இத்தப்பு சர்வதேச முஸ்லிம்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டிய ஒன்றாகும். இந்நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டாலும் கூட எங்கள் தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட வில்லையானால் இவர்களின் கதி அதேகதிதான். அப்ஸோஸ்!
முட்டு முன் குனிவான் மூளைசாலி
முட்டிய பின் குனிவான் முழு முட்டாள்!