தொடர்:01
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அன்புத் தோழா! நீ அனுப்பிய கடிதம் கிடைத்தது. மேற்கண்ட உனது கேள்விக்கு இப்பதிவின் மூலம் பதில் தருகிறேன். இப்பதிவை வாசித்து நீ பயன் பெறுவதுபோல் பிறரும் பயன் பெற வேண்டுமென்பதற்காக பகிரங்கமாக பதிவிடுகிறேன்.
ஸூபீகளின் “அகீதா” கொள்கையை சரிகண்டு அதை ஏற்றுச் செயல்படுகின்ற நானும், எனது ஸூபிஸ சமூகமும் “வுஜூத்” எனும் உள்ளமை அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம், அது படைப்புக்கு இல்லையென்றும் நம்பியும், பேசியும் வருகிறோம். இதுவே இறைவன் பற்றிய எமது கொள்கையுமாகும்.
நாங்கள் இவ்வாறு சொல்வது தலைப்பில் நான் குறிப்பிட்ட கேள்வியை உனதுள்ளத்தில் எழுப்பியுள்ளது. உனது கேள்வி கேட்க வேண்டிய நியாயமான கேள்விதான்.
அன்புத் தோழா!
உனது கேள்விக்குச் சுருக்கமாக விடை சொல்ல முடியும். விரிவாகவும் சொல்ல முடியும். சுருக்கமாகச் சொல்வதால் உன் போன்ற ஸூபிஸத்தோடு தொடர்புள்ளவர்கள் மட்டுமே புரிந்து கொள்வார்களாதலால் உன்போல் ஏனையோரும் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக விரிவாகவே விடை தருகிறேன். ஒரு பக்க சார்பற்ற மன நிலையோடு இப்பதிவை வாசித்துப் பயன் பெறு.
அன்புத் தோழா!
உனது கேள்விக்கு நான் விடை சொல்லுமுன் “வுஜூத்” உள்ளமை தொர்பான முன்னறிவுக் குறிப்புக்களில் சிலதை உனது கவனத்திற்குத் தருகிறேன்.
“வுஜூத்” என்றால் உள்ளமை என்று பொருள். இது அதன் சொல்லர்த்தமேயன்றி அதற்கான விளக்கமல்ல. சொல்லர்த்தம் எவ்வாறு சொல்லிக் கொண்டாலும் “வுஜூத்” என்றால் அது எதுவென்று அறிந்து கொள்வதே எமது குறிக்கோளாகும். எமது இலக்கும் அதுவேதான்.
“வுஜூத்” உள்ளமை என்றால் ஒரு வஸ்த்து உள்ளதாயிருப்பதைக் குறிக்கும். அல்லது உளதாயிருப்பதைக் குறிக்குமென்றும் சொல்ல முடியும். இரண்டும் ஒன்றுதான். இச் சொல்லின் எதிர் மறை عَدَمٌ – அதம் இன்மை அல்லது இல்லாமை என்பதாகும்.
தமிழறிவு இல்லாத சிலர் உள்ளமை என்றால் உண்மையென்று விளங்குகிறார்கள். இது தவறு. உள்ளமை வேறு. உண்மை வேறு. صِدْقٌ என்ற சொல்லுக்கே உண்மை என்று பொருள் வரும். இச் சொல்லின் எதிர் மறை كَذِبٌ என்று வரும்.
எமது தலைப்புக்குரிய சொல் “வுஜூத்” உள்ளமை என்ற சொல்லேயாகும். உண்மை என்ற சொல் அல்ல. ஆகையால் “வுஜூத்” பற்றியே ஆய்வு செய்வோம்.
அல்லாஹ்வில் அவசியம் இருக்க வேண்டிய அம்சம் “வுஜூத்” எனும் உள்ளமைதான். உள்ளமை என்பதற்கு எதிர் மறை عَدَمٌ – “அதம்” எனும் இன்மையாகும். இதை இல்லாமை என்றும் சொல்லலாம். உள்ளமை என்ற சொல்லின் எதிர்மறை பொய் என்பதல்ல. பொய் என்பது உண்மை என்ற சொல்லின் எதிர் மறைதான். صِدْقٌ “ஸித்குன்” என்றால் உண்மை. இதன் எதிர்மறை كَذِبٌ – “கதிப்” பொய்யென்பதாகும். விஷயம் தெரியாதவர்கள் உள்ளமையும், உண்மையும் ஒன்றென்றே விளங்கியுள்ளார்கள். இது தவறு.
“வுஜூத்” என்றால் உள்ளமை என்ற பொருளின் படி ஒரு வஸ்த்து உள்ளதாக இருப்பதைக் குறிக்கும். اللهُ مَوْجُوْدٌ –“அல்லாஹ் மவ்ஜூதுன்” என்றால் அல்லாஹ் இருக்கிறான் – உள்ளான் என்றுதான் பொருள் வரும். அல்லாஹ்வுக்கு உள்ளமை உண்டு என்றுதான் சொல்ல வேண்டுமேயன்றி அவனுக்கு உண்மையுண்டு என்று சொல்வதில்லை. اللهُ مَوْجُوْدٌ أَوْ مَعْدُوْمٌ அல்லாஹ் என்று ஒருவன் இருக்கின்றானா அல்லது இல்லையா? என்று கேட்டால் இவ்வசனத்தின் பொருள் அவன் உள்ளானா? இல்லையா? என்பதேயாகும்.
இதை இன்னும் விளக்கமாகச் சொல்வதாயின் பின்வருமாறு சொல்லலாம். ஒருவன் இன்னொருவனிடம் அப்துல்லாஹ் இருக்கின்றானா? என்று கேட்டால் இருந்தால் ஆம் என்றும், அல்லது இல்லை என்றுமே விடை சொல்ல வேண்டும். அந்நேரம் அப்துல்லாஹ் என்பவன் சாய்ந்து கொண்டிருந்தாலும், நின்று கொண்டிருந்தாலும் சரியே. அப்துல்லாஹ் இருக்கின்றானா என்று கேட்டவனின் நோக்கம் ஆள் இருக்கின்றானா என்பதை அறிவதேயன்றி எவ்வாறு இருக்கிற்னான்? – என்ன செய்து கொண்டிருக்கிறன்றான்? என்பதை அறிவதல்ல.
கேள்வி கேட்டவனின் நோக்கத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் – இருத்தல் என்றால் அமர்தல் என்று பொருள் வைத்துக் கொண்டு அவன் இருக்கவில்லை சாய்ந்து கொண்டிருக்கிறான் என்றோ, நின்று கொண்டிருக்கிறன்றான் என்றோ விடை சொல்வது கேட்டவனின் கேள்விக்கு விடையாகாது.
அப்துல்லாஹ் இருக்கிறானா? என்ற கேள்வியில் இருக்கிறானா என்ற சொல் அவனின் “வுஜூத்” உள்ளமை தொடர்பானதென்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
“வுஜூத்” என்ற சொல் உள்ளமை என்ற பொருளைத் தருவது போல் அதே சொல்லடியிலுள்ள مَوْجُوْدٌ – மவ்ஜூத் என்ற சொல் உள்ளதாக இருக்கின்ற ஒரு வஸ்த்தைக் குறிக்கும். உதாரணமாக هَلْ عِنْدَكَ الْمَالُ؟ உன்னிடம் பணம் உண்டா என்று கேட்டவனுக்கு نَعَمْ مَوْجُوْدٌ ஆம் என்னிடம் பணம் உண்டு என்று சொல்வது போன்று. இவ் உதாரணத்தில் “மவ்ஜூத்” என்ற சொல் உண்டு என்ற பொருளில் பணத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. اللهُ مَوْجُوْدٌ என்பதும் இவ்வாறுதான்.
அல்லாஹ்வின் உள்ளமை “தாத்” எனும் பெயராலும் அழைக்கப்படும். “தாத்” என்றாலும், “வுஜூத்” உள்ளமை என்றாலும் இரண்டும் ஒன்றுதானேயன்றி வேறானதல்ல என்று ஸூபீகள் சொல்வர். ஆயினும் “முதகல்லிமீன்” என்போர் “தாத்” வேறு, “வுஜூத்” வேறு என்றும், “வுஜூத்” என்பது அந்த “தாத்” இன் “ஸிபத்” தன்மை என்றும் சொல்வார்கள். இது தொடர்பாக இங்கு விளக்கம் எழுதாமல் இதோடு சுருக்கிக் கொள்கிறேன்.
“முதகல்லிமீன்” வழி செல்பவர்கள் – இன்றுள்ள ஆலிம்கள் – மேற்கண்ட நான் கூறிய கருத்தை இரும்புத் துரும்பாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இவர் “முதகல்லிமீன்”களைச் சாடுகிறார் என்று ஒரு புரளியை உருவாக்கலாம். அவர்களுக்கான சரியான பதிலும் என்னிடம் உண்டு. நேர காலம் வரும் போது அது வெளிவரும்.
நான் ஸூபீகளின் கொள்கை வழியிற் செல்பவனாகையால் அவர்களின் கொள்கைப்படி “தாத்”, “வுஜூத்” இரண்டும் ஒன்றுதான் என்ற கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எனது பயணத்தை தொடர்கிறேன்.
“தாத்”, “வுஜூத்” என்று இரு பெயர்களால் அந்த மெய்ப் பொருள் அழைக்கப்பட்டாலும் “முஸம்மா” பெயர் வைக்கப்பட்டது ஒன்றுதான். அது இரண்டல்ல.
அல்லாஹ்வுக்கு – அல்லாஹ்வின் “தாத்”திற்கு “வுஜூத்” – உள்ளமை அவசியமென்ற கருத்தின்படி உள்ளமையின் எதிர் மறையான “அதம்” இன்மை என்பது அந்த “தாத்”தில் இருக்க முடியாது. அது “முஸ்தஹீல்” அறவே சாத்தியமற்றதாகும். இதேபோல் உள்ளமையின் எதிர்மறையான “அதம்” இன்மை என்பது படைப்பில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்றென்பது சொல்லாமலேயே விளங்கப்பட வேண்டிய ஒன்றாகும். அவ்வாறாயின் படைப்பு என்பது “அதம்” இன்மை – இல்லாததென்று முடிவு செய்தல் வேண்டும்.
அல்லாஹ் “வாஜிபுல் வுஜூத்” உள்ளமை அவசியமானவனென்றால் படைப்பு அவனுக்கு மாறானதாக இருக்க வேண்டுமென்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்லவென்பது வெள்ளிடை மலை . அவ்வாறாயின் படைப்புக்கு “வாஜிபுல் வுஜூத்” இல்லையென்று முடிவு செய்தல் அவசியம். இவ்வாறு முடிவு செய்தால் படைப்பு என்பது مُمْتَنِعُ الْوُجُوْدِ – உள்ளமை தடையானதென்று முடிவு செய்தல் வேண்டும். ஸூபீகள் படைப்புக்கு உள்ளமை இல்லையென்று முடிவு செய்கிறார்கள்.
எனினும் கொள்கை தொடர்பான அறிஞர்களில் “முதகல்லிமீன்” என்போர் படைப்புக்கு “வாஜிபுல் வுஜூத்” உள்ளமை அவசியமானதென்றோ, அல்லது مُمْتَنِعُ الْوُجُوْدِ உள்ளமை தடையானதென்றோ கூறாமல் அது مُمْكِنُ الْوُجُوْدِ உள்ளமை சாத்தயமானதென்றே கூறுகின்றார்கள். இவ்வாறு இவர்கள் கூறினாலும் கூட இவர்களும் இவ்விடயத்தில் படைப்புக்கு உள்ளமை நிச்சயமாக உண்டு என்று கூற முன்வரவில்லை. உள்ளமைக்கு சாத்தியம் உண்டு – இடம்பாடு உண்டு என்றுதான் கூறியுள்ளார்கள். இது கூட அவர்களுக்கு இவ்விடயத்தில் திட்டமாகக் கூற முடியாமற் போயிற்று என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
கூரிய புத்தியும், அதி விவேகமும் உள்ள ஒருவனிடம் “மும்கினுல் வுஜூத்” உள்ளமை இடம்பாடானது என்ற வசனம் எதைக் காட்டுகின்றதென்று கேட்டால் இரண்டுக்கும் இடமுண்டு என்பதை காட்டுகிறது என்றே சொல்வான்.
ஆனால் ஸூபீகளோ படைப்புக்கு உள்ளமை இல்லை என்ற விடயத்தில் – அதாவது படைப்பே இல்லை என்ற விடயத்தில் மிகத் தெளிவாக உள்ளார்கள். ஸூபீ மகான்களின் உச்சக்கட்ட முடிவும் இதுதான்.
படைப்பு “மும்கினுல் வுஜூத்” உள்ளமை சாத்தியமானதென்ற “முதகல்லிமீன்”களின் கருத்துப்படி அந்த உள்ளமை “மஜாஸீ” அல்லது “வஹ்மீ” என்றே முடிவு செய்ய வேண்டும். படைப்புக்கு உள்ளமை உண்டு என்று சொன்னாற் கூட அது “மஜாஸீ” அல்லது “வஹ்மீ” அடிப்படையிலான உள்ளமை என்றே சொல்லவும் வேண்டும். நம்பவும் வேண்டும். இவ்வாறு நம்பாமல் (அல்லாஹ்வின் உள்ளமை போல் وُجُوْدٌ مُسْتَقِلٌّ சுமயான உள்ளமையென்று நம்பினால் நம்பினவன் “முஷ்ரிக்” இணை வைத்தவன் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை. இவ்வாறு நம்பினவன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வின் தலைவனாயினும், ஸூபிஸ சமூகத்தின் தலைவன் எவராயினும் சரியே! சட்டம் அனைவருக்கும் ஒன்றே!
ஆயினும் மார்க்கத்தை தலை கீழாய்ப் புரட்டி “பத்வா” தீர்ப்பு வழங்கும் உலமா சபை இவ்வாறான விடயங்களில் தில்லு முல்லுச் செய்பவர்களாயிருப்பதால் இரண்டு “வுஜூத்” என்று சொன்ன தமது ஆதரவாளர்களையும் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல் மறைப்பார்கள். மறைத்துக் கொண்டுமிருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்களும், குறிப்பாக இவர்கள் தவிரவுள்ள ஏனைய உலமாஉகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ரிஸ்வி ஸாஹிபு வெசக் தினத்தன்று பௌத பன்சலை சென்று வெசக் விளக்கு கையிலேந்தி நின்றது மத மாற்றத்தை ஏற்படுத்தும் செயலாயிருந்தும் கூட அது தொடர்பாக வாயே திறக்காமல் “பத்வா” குழுவினர் எங்கே போனார்கள்? ஏனைய உலமாஉகள் எங்கே போனார்கள்? யார் இதை தட்டிக் கேட்டவர்? “பத்வா” என்பது ஆளுக்கா? பிழையான சொல்லுக்கும், செயலுக்குமா?
ரிஸ்வீ ஸாஹிப் விளக்குத் தூக்குவதற்கு பல்லாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறிவிட்டார். இவருடன் எனக்கும், ஸூபிஸ சமுகத்திற்கும் “முர்தத்” பட்டம் வழங்கிய “முப்தீ”களும் இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறிவிட்டார்கள்.
எப்போது உலகில் வாழும் பல மில்லியன் முஸ்லிம்களை “முர்தத்” என்று சொன்னார்களோ அன்றே அவர்கள் இஸ்லாம் எனும் கோட்டையிலிருந்து வெளியேறிவிட்டனர். இவர்கள் இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வெளியேறியவர்கள் என்று நான் சொல்லவில்லை. என்னுயிரினும் மேலான எம் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களே அன்று சொல்லிவிட்டார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا قَالَ الرَّجُلُ لِأَخِيهِ يَا كَافِرُ، فَقَدْ بَاءَ بِهِ أَحَدُهُمَا»
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு “காபிர்” என்று சொன்னால் அவ்விருவரில் ஒருவர் “காபிர்” ஆகிவட்டார் என்று நபீ அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரீ (6103)
அறிவிப்பு: அபூ ஹுறைறா
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيُّمَا رَجُلٍ قَالَ لِأَخِيهِ يَا كَافِرُ، فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا»
இதன் தமிழாக்கம் மேற்கண்ட நபீ மொழியின் தமிழாக்கம் போன்றதே.
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரீ – 6104
அறிவிப்பு: அப்துல்லாஹ் இப்னு உமர்
عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَلَفَ بِمِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ، وَلَعْنُ المُؤْمِنِ كَقَتْلِهِ، وَمَنْ رَمَى مُؤْمِنًا بِكُفْرٍ فَهُوَ كَقَتْلِهِ»
ஒருவன் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தைக் கொண்டு பொய்ச் சத்தியம் செய்தானாயின் அவன் பொய்யன்தான். ஒருவன் ஏதாவதொரு வஸ்த்தைக் கொண்டு தற்கொலை செய்து கொண்டானாயின் அவன் நரகத்தில் அது கொண்டே வேதனை செய்யப்படுவான். “முஃமின்” ஒரு விசுவாசியை சபித்தல் அவனைக் கொலை செய்வது போன்றதாகும். ஒரு விசுவாசி இன்னொரு விசுவாசியை “காபிர்” என்று சொல்வது அவனைக் கொலை செய்தல் போன்றதாகும்.
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரீ – 6105
அறிவிப்பு: தாபித் இப்னுழ்ழஹ்ஹாக்
விளக்கம் தொடரும்…
தலைப்பின் கேள்விக்கு எதிர்வரும் தொடரில் விளக்கம் எழுதப்படும்.