Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்باب الصيام - பாபுஸ் ஸியாம் - நோன்பின் பாடம்.

باب الصيام – பாபுஸ் ஸியாம் – நோன்பின் பாடம்.

தொடர்: 01

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

تعريف الصيام – நோன்பின் வரைவிலக்கணம்.

معنى الصيام فى اللّغة مُطلقُ الإمساك عن الشّيئ، فإذا أمسك شخصٌ عن الكلام، أو الطعام فلم يَتَكَلَّمْ، ولمْ يأكلْ، فإنّه يُقال له فى اللّغة: صائمٌ، ومِن ذلك قولُه تعالى ‘ إنِّي نذرتُ للرَّحمن صوما ‘ (مريم 26) أي صَمتا وإمساكا عن الكلام،

وأمّا معناه فى اصطلاح الشَّرع فهو الإمساكُ عن المُفطِراتِ يوما كاملا، مِن طُلوع الفجر الصَّادق، إلى غُروبِ الشمسِ، بالشُّروط الآتي بيانُها، وهذا التعريفُ مُتَّفقٌ عليه بين الحنفيّة والحنابلة، أمّا المالكيّة والشّافعيّة فإنّهم يزيدون فى آخره كَلِمَةَ (بِنِيَّةِ) وذلك لأنّ النّيّةَ ليستْ بِرُكنٍ مِن أركان الصِّيام عند الحنفيّة والحنابلة، فليسَتْ جُزءًا مِن التعريف، على أنّها شرطٌ لازم لا بُدَّ منه، فمَنْ لم ينوِ بالكيفيّة الآتي بيانُها فإنَّ صِيامَه يبطُل باتِّفاقٍ،

முதலில் “ஸவ்ம்” என்ற சொல் தொடர்பான சிறு விளக்கம்.

இச் சொல் صَامَ يَصُوْمُ صَوْمًا وَصِيَامًا என்ற சொல்லடியில் உள்ளதாகும். صَائِمٌ என்று நோன்பாளி அழைக்கப்படுவான். இச் சொல்லின் பன்மை صائمون , صُوَّامٌ, صُيّامٌ, صُوَّمٌ, صُيَّمٌ என்றெல்லாம் வரும்.

நோன்பு என்ற பொருளுக்கு “ஸவ்ம்”, “ஸியாம்” என்ற சொற்களைப் பயன்படுத்தலாம். “ஸவ்ம்” என்ற அறபுச் சொல்லை முதலில் நோன்பு என்று தமிழில் மொழியாக்கம் செய்தவர் யாரோ தெரியவில்லை. தெரிந்தவர்கள் எமக்கு அறிவித்து உதவலாம்.

“ஸவ்ம்”, அல்லது “ஸியாம்” என்ற அறபுச் சொல்லுக்கு அறபு மொழியில் ஒரு பொருளும், “ஷரீஆ”வில் இன்னொரு பொருளும் உண்டு. முதலில் அதற்கு அறபு மொழியில் உள்ள பொருளை அறிவோம். ஸவ்ம் அல்லது ஸியாம் என்றால் அறபு மொழியில் பொதுவாக “தடுத்தல்” என்று பொருள் வரும்.

உதாரணமாக ஒருவன் பேசுவதை தவிர்ந்து பேசாமலிருந்தால், அல்லது உணவை தடுத்து உண்ணாமலிருந்தால் அறபு மொழியில் هُوَ صَائِمٌ என்று பொதுவாக சொல்ல முடியும்.

இதே கருத்தை கருத்திற் கொண்ட ஸெய்யிததுனா மர்யம் அலைஹஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள். “நான் இறைவனுக்காக “ஸவ்ம்”ஐ நேர்ச்சை செய்துவிட்டேன்” என்று. (திருக்குர்ஆன் – மர்யம்: 26)

இதன் சுருக்கமான விபரம் பின்வருமாறு. மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள் கணவனின்றி வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பார்வை கொண்டு நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கற்பமான போது அவர்களிடம் பலர் வந்து கணவனின்றி நீங்கள் கற்பமானதெவ்வாறு என்று கேட்கலாயினர். அவ்வேளை மர்யம் நாயகி அவர்களுக்கு அல்லாஹ் மேற்கண்டவாறு சொல்லுமாறு அறிவித்துக் கொடுத்தான். அதன்படி அவர்களிடம் யார் வந்து வினவினாலும்
إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا
“நான் அல்லாஹ்வுக்காக ஒரு நோன்பை நேர்ச்சை செய்துள்ளேன். ஆகையால் இன்று எந்த மனிதனுடனும் நான் பேசமாட்டேன்” என்று கூறலானார்கள்.

இவ்வசனத்தில் “ஸவ்ம்” என்ற சொல் வந்துள்ளது. இச் சொல்லுக்கு அறபு மொழியில் தடுத்தல் என்று பொருளிருப்பதால் அந்தப் பொருளை ஆதாரமாகக் கொண்டு அவ்வாறு சொல்லுமாறு அவர்கள் பணிக்கப்பட்டார்கள். அவ்வாறே சொல்லியும் வந்தார்கள்.

“ஸவ்ம்” என்ற சொல்லுக்கு அறபு மொழியில் “இம்ஸாக்” தடுத்தல் என்று பொருளிருப்பதால் அதே பொருளைக் கருத்திற் கொண்டு “நான் இறைவனுக்காக “ஸவ்ம்” பேச்சைத் தடுத்திருக்கிறேன்” என்ற கருத்தின்படி கூறினார்களே தவிர அவர்கள் பொய் சொன்னார்கள் என்று எவரும் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் குறித்த “ஸவ்ம்” என்ற சொல்லுக்கு “ஷரீஆ”வில் கூறப்படுகின்ற “நோன்பு” என்ற கருத்தில் அவ்வாறு அவர்கள் சொல்லவில்லை. இக்கருத்தின் அடிப்படையிலேயே அவ்வாறு சொன்னார்கள் என்பதற்கு ஆதாரம் அதே வசனத்தில் பின்னால் கூறப்பட்ட فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا “இன்று நான் எந்த மனிதனுடனும் பேசமாட்டேன்” என்ற வசனமேயாகும்.

“ஸவ்ம்” என்ற சொல்லுக்கு பேச்சை தடுத்தல் என்ற கருத்தின்படி நாமும் சொல்ல முடியுமா என்ற கேள்விக்கு ஆம் என்றே பதில் கூற வேண்டும். இவ்வாறு சொல்வது பொய்யாகாது.

மேற்கண்ட விளக்கமும், விபரமும் “ஸவ்ம்” என்ற சொல்லுக்கு அறபு மொழி அடிப்படையிலான “தடுத்திருத்தல்” என்ற பொருளை கருத்திற் கொண்டதாகும்.

“ஸவ்ம்” என்ற அதே சொல்லுக்கு “ஷரீஆ”வின் அடிப்படையில் பின்வருமாறு பொருள் கொள்ள வேண்டும்.
هُوَ الْإِمْسَاكُ عَنِ الْمُفْطِرَاتِ يَوْمًا كَامِلًا مِنْ طُلُوْعِ الْفَجْرِ الصَّادِقِ إِلَى غُرُوْبِ الشَّمْسِ

நோன்பு என்பது “ஸுப்ஹ்” உடைய நேரத்திலிருந்து “மக்ரிப்” உடைய நேரம் வரை – முழுப்பகலும் நோன்பை முறிக்கும் கருமங்கள் செய்யாமல் பின்வரும் நிபந்தனைகளுடன் அவற்றைத் தடுத்துக் கொள்வதாகும். இதுவே “ஷரீஆ”வின் நோன்பாகும். இதுவே “ஷரீஆ”வில் சொல்லப்படுகின்ற நோன்புக்கான “தஃரீப்” வரைவிலக்கணமுமாகும்.

மேற்கண்ட இவ் வரைவிலக்கணத்தில் நோன்புக்கான “நிய்யத்” பற்றிக் கூறப்படவில்லை.

நோன்பு நிறைவேறுவதவாயின் முழுப்பகலும் நோன்பை முறிக்கும் கருமங்களைத் தவிர்ப்பதோடு நோன்பு மாத ஒவ்வோர் இரவும் இதற்காக “நிய்யத்” வைப்பது ஹனபீ மத்ஹப், ஹன்பலீ மத்ஹப் இரு மத்ஹபுகளிலும் கடமையில்லை. تَبْيِيْتُ النِّيَّةِ இரவில் “நிய்யத்” வைத்தல் கடமை என்பது மாலிக் மத்ஹப், ஷாபிஈ மத்ஹப் ஆகிய இரு மத்ஹபுகளில் மட்டுமேயாகும். இதன்படி இவ்விரு மத்ஹபுகளிலும் நோன்புக்காக இரவில் நிய்யத் வைப்பது கடமை என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு மத்ஹபின் படி இரவில் “நிய்யத்” வைக்கா விட்டால் நோன்பு நிறைவேறாது. ஆயினும் ஹனபீ, ஹன்பலீ ஆகிய இரு மத்ஹபுகளிலும் நோன்புக்காக “நிய்யத்” வைப்பது இரவிலும் கடமையில்லை. பகலிலும் கடமையில்லை.

வஹ்ஹாபீகள் மத்ஹப் எதையும் பின்பற்றுதல் கூடாது, அது வழி கேடு என்று சொல்பவர்களாவர். இவர்கள் நோன்புக்கு மட்டுமன்றி எந்த ஒரு வணக்கத்திற்கும் “நிய்யத்” கடமையில்லை என்றே சொல்வார்கள். “நிய்யத்” வைக்கவுமாட்டார்கள்.

மத்ஹபுகளைப் பின்பற்றுவது வழிகேடு என்று கூறும் வஹ்ஹாபீகள் “நிய்யத்” விடயத்தில் மட்டும் ஹன்பலீ மத்ஹபைப் பின்பற்றுவது இவர்களின் நடிப்பேயாகும். வஹ்ஹாபிஸத்தின் தலைவர் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவரும் மத்ஹப்கள் வழிகேடு என்ற கொள்கையுள்ளவராக இருந்தாலும் கூட தான் ஹன்பலீ மத்ஹப் வழியைப் பின்பற்றுபவர் போல் நடித்து வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மக்களைத் தன் பக்கம் திருப்புவதற்காக அவர் கையாண்ட தந்திரமாகும்.

இந்த மனுஷன் அவ்வாறு நடித்து வந்ததற்கான காரணம் என்னவெனில் இவர் வாழ்ந்த காலத்தில் (1111 – 1206) உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்கள் அனைவரும் நான்கு மத்ஹபுகளில் ஏதாவதொன்றை பின்பற்றிச் செயல்பட்டவர்களாகவே இருந்தார்கள். உலக முஸ்லிம்கள் மத்ஹபுகளை ஏற்றுச் செயல்படும் வேளை தான் மட்டும் அதற்கு மாற்றமாகச் செயல்பட்டால் தனது ஏனைய வஹ்ஹாபிஸக் கொள்கைகளை மக்கள் மத்தியில் சொல்ல முடியாமற் போய் விடும் என்பதற்காக ஹன்பலீ மத்ஹபை பின்பற்றுபவர் போல் அவர் நடிக்கலானார். அவர் எந்த ஒரு மத்ஹபையும் பின்பற்றாதவர் என்பதற்கும், மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாதென்ற கொள்கை உள்ளவராக இருந்தார் என்பதற்கும் மறுக்க முடியாத, தெளிவான ஆதாரம் என்னவெனில் இன்று வாழும் அவரின் கொள்கை வழி செல்லும் வஹ்ஹாபீகள் மத்ஹபுகளை வெறுப்பதும், அவை வழிகேடு என்று சொல்வதுமேயாகும். உண்மையிலேயே அவர் மத்ஹபை பின்பற்றி வாழ்ந்திருந்தால் அவரைப் பின்பற்றுவோரும் மத்ஹப் வழியில் வாழ்ந்திருப்பார்கள்.

குறிப்பாக “ஷரீஆ”வில் “ஸவ்ம்” நோன்பு என்பது “ஸுப்ஹ்” தொழுகைக்கான “அதான்” பாங்கு சொல்வதற்கான நேரம் முதல் “மக்ரிப்” தொழுகைக்கான “அதான்” பாங்கு சொல்லும் நேரம் வரை நோன்பை முறிக்கும் காரியங்கள் யாவையும் கட்டாயம் தவிர்த்துக் கொள்வதாகும். இவ்விடயத்தில் நான்கு மத்ஹப் உடையவர்களிடம் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை.

எனினும் நோன்புக்காக இரவில் “நிய்யத்” வைக்க வேண்டும் என்ற விதி மாலிக் மத்ஹப், ஷாபிஈ மத்ஹப் இரண்டிலும் மட்டுமே உண்டு. இவ்விரு மத்ஹபுகளின் படி பகல் முழுவதும் நோன்பை முறிக்கும் காரியங்களை கட்டாயம் தவிர்ப்பதோடு நோன்புக்காக இரவில் “நிய்யத்” வைத்துக் கொள்வது கடமை. அதாவது “பர்ழ்” ஆகும். இரவில் “நிய்யத்” வைக்காவிட்டால் நோன்பு நிறைவேறாது. அந்த நோன்பு “களா” திரும்ப நோற்கப்பட வேண்டும்.

இரவில் “நிய்யத்” வைத்தல்.

இரவு என்பது “மக்ரிப்” தொழுகைக்கான நேரம் முதல் “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வரையாகும். இவ்விரு நேரத்திற்கும் இடையில் எந்த நேரத்திலும் “நிய்யத்” வைக்க முடியும். “ஸஹர்” நேரம் சாப்பிட்ட பிறகுததான் “நிய்யத்” வைக்க வேண்டுமென்பது அவசியமில்லை.

ஒருவன் நோன்பு திறந்ததைத் தொடர்ந்து அடுத்த நாள் நோன்பு நோற்பதற்காக “நிய்யத்” வைப்பது ஆகும். இரவில் எந்த நேரத்திலும் “நிய்யத்” வைத்துக் கொள்ளலாம். பள்ளிவாயல்களில் “தறாவீஹ்” தொழுகையின் பின் நோன்புக்கான “நிய்யத்” தொழுபவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது நமது நாட்டிலுள்ள வழக்கமாகும். இவ்வழக்கம் “பித்அத் ழலாலா” வழிகேடான “பித்அத்” என்று விட்டுவிடாமல் இவ்வழக்கம் பேணப்படுவதால் பல நன்மைகள் உண்டேயன்றி தீமை எதுவுமில்லை. நோன்பு நோற்காத ஒருவன் தன்னைப் பிறர் பார்த்து தவறாக நினைக்காமலிருப்பதற்காக அவனும் “நிய்யத்” சொல்வானாயின் அவன் அல்லாஹ்விடம் பொய் சொன்னவனேயாவான்.

“ஸஹர்” நேரம் “நிய்யத்” வைக்கலாமென்று இருக்காமல் முன்கூட்டி “நிய்யத்” வைப்பதால் ஏற்படுகின்ற நன்மை என்னவென்றால் பள்ளிவாயலில் தறாவீஹ் தொழுகையின் பின் “நிய்யத்” வைத்துக் கொண்டால் “ஸஹர்” நேரம் “நிய்யத்” வைக்க மறந்தாற் கூட நோன்பு நிறைவேறுவதேயாகும்.

ஒருவர் பள்ளிவாயலில் நாளைய நோன்புக்காக “நிய்யத்” வைத்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் சாப்பிடுதல், குடித்தல், உடலுறவு கொள்ளுதல் போன்ற நோன்பை முறிக்கும் காரியங்கள் எதையும் ஸஹர் முடியும் வரை செய்யலாம். முன்கூட்டி வைத்த “நிய்யத்” வீணாகிவிடாது. திரும்ப “நிய்யத்” வைக்க வேண்டிய அவசியமுமில்லை. ஏற்கனவே வைத்த “நிய்யத்” செல்லுபடியாகும்.

“ஷாபிஈ” மத்ஹப் சட்டங்களைத் தழுவி – பேணி “ஷாபிஈ மத்ஹப்” வழியில் வாழ்ந்து வருகின்ற ஒருவன் இரவில் நோன்புக்கான “நிய்யத்” வைக்க மறந்தால் அன்று பகல் முழுவதும் அவன் நோன்பாளி போன்றே இருப்பதுடன் அந்த நோன்பை “களா” திரும்ப நோற்பது கடமை. இத்தகைய ஒருவன் தான் “ஷாபிஈ” மத்ஹப் காரனாக இருந்தாலும் ஹனபீ, ஹன்பலீ இரு மத்ஹபுகளிலும் “நிய்யத்” அவசியமில்லையாதலால் தனது நோன்பு சரியானதென்று அவன் முடிவு செய்யாமல் “நிய்யத்” வைக்கத் தவறிய அன்றைய நோன்பை “களா” செய்வது அவன் மீது கடமையாகும்.

தொடரும்…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments