Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“ஈதுல் பித்ர்” “பித்றா” பெருநாளா? “ஈதுஸ்ஸவ்ம்” நோன்புப் பெருநாளா?

“ஈதுல் பித்ர்” “பித்றா” பெருநாளா? “ஈதுஸ்ஸவ்ம்” நோன்புப் பெருநாளா?

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

عيد الفطر
“ஈதுல் பித்ர்” “பித்றா” பெருநாளா?
عِيْدُ الصَّوم
“ஈதுஸ்ஸவ்ம்” நோன்புப் பெருநாளா?

றமழான் நோன்பை அடுத்து வரும் பெருநாள் “நோன்பு பெருநாள்” என்று மக்கள்தான் அழைக்கிறார்கள். குறித்த பெருநாள் “ஷரீஆ”வில் “ஈதுல் பித்ர்” “பித்றா” பெருநாள் என்றே அழைக்கப்படுகிறது.

இப் பெருநாள் நோன்பு மாதத்தை அடுத்து வருகின்ற “ஷவ்வால்” மாத முதற் பிறையில் தான் வருகிறது.

இப்பெருநாள் தினமும், “துல்ஹஜ்” மாதம் பிறை 10ல் வருகின்ற ஹஜ்ஜுப் பெருநாள் தினமும், இப் பெருநாளை அடுத்து வருகின்ற தொடரான மூன்று நாட்களான “அய்யாமுத் தஷ்ரீக்” நாட்களில் நோன்பு நோற்பதும், மேலும் “ஷக்கு” சந்தேகத்துக்குரிய அன்று நோன்பு நோற்பதும் “ஹறாம்” தண்டனைக்குரிய குற்றமாகும். நோன்பு நோற்றால் அது நிறைவேறவுமாட்டாது.

புனித றமழான் முடிந்து அடுத்த மாதமான “ஷவ்வால்” மாத்ததிற்கான பிறை காணப்பட்டால் அன்று “ஈதுல் பித்ர்” ஆகும். “பித்றா” பெருநாளாகும். அதாவது நோன்பு பெருநாளாகும்.

நோன்புப் பெருநாள் எதற்கு?

புனித றமழான் மாதம் முடியும் வரை – ஒரு மாத காலம் தொடராக நோன்பு நோற்பது கடமையானதும், கடுமையானதுமான ஒரு பணியாகும். வணக்கமாகும்.

பசியுடனும், தாகத்துடனும் இருத்தல் என்பது “நப்ஸ்” உடன் போராடுகின்ற செயல்கள் என்பது யாவரும் அறிந்ததே! நபீ மணி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

قال النّبي صلّى الله عليه وسلّم: أَعْدَى عَدُوِّكَ نَفْسُكَ الَّتِيْ بَيْنَ جَنْبَيْكَ،
“உன்னுடைய இரு விலாக்களுக்குமிடையில் இருக்கின்ற உனது “நப்ஸ்” உனது விரோதிகளில் உனக்கு மிகக் கடுமையான விரோதியாகும்” என்று அருளினார்கள்.

வெளியிலுள்ள உனது எதிரியால் உனக்கு தீங்கு செய்வது கடினம். அவன் அவ்வாறு செய்வதாயினும் நீ இருக்கும் இடத்திற்கு அவன் வந்துதான் செய்ய வேண்டும். தூர நின்று செய்ய முடியாது. ஆயினும் உன் வீட்டினுள் உள்ள உனது எதிரியால் மிக எளிதாக உனக்கு தீங்கு செய்து விடலாம்.

இதனால்தான் أعدى عدوّك உனது எதிரிகளில் மிகக் கடுமையான எதிரி என்று “நப்ஸ்” ஐ நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மேற்கண்ட வசனத்தின் மூலம் குறிப்பிட்டார்கள். 30 நாட்கள் இராப்பகலாக “நப்ஸ்” உடன் போர் செய்தவனுக்கு ஓய்வும், நிம்மதியும் அவசியம் என்பதற்காகவே இஸ்லாம் அவனுக்கு நோன்பை அடுத்த மாதமான “ஷவ்வால்” மாத தலைப்பிறை நாளை பெருநாளாக்கிக் கொடுத்துள்ளது. அதோடு அவனின் மன நிம்மதிக்காகவும் அன்று நோன்பு நோற்பதை “ஹறாம்” என்றும் இஸ்லாம் கூறியுள்ளது.

அல்லாஹ் அருளாளனும், அன்புள்ளோனுமாவான். தனக்காக றமழான் மாதம் பகற் பொழுதில் நோன்பு நோற்றும், இராப் பொழுதில் வணக்க வழிபாடுகள் செய்தும் “நப்ஸ்” என்ற வன விலங்கை பட்டினி பசியில் போட்டும், வணக்க வழிபாடுகள் செய்தும் அதைக் கொன்ற அல்லது அதை வென்ற தனது நல்லடியானுக்கு அவன் கொடுத்த பரிசுதான் நோன்பு பெருநாளாகும்.

ஒரு தந்தை தனது மகனின் “டொக்டர்” படிப்புக்கான இறுதிப் பரீட்சை நெருங்கியதும் அவனிடம் நீ இராப்பகலாக கண் விழித்தும், கஷ்டங்களைச் சுமந்தும் டொக்டர் பரீட்சையில் சித்தி பெற்றால் உன்னை ஜப்பான் நாட்டிற்கு நான் அழைத்துச் சென்று எத்தனை கோடி செலவு செய்தேனும் நீ விரும்புகின்ற “கார்” ஒன்று வாங்கித் தருவேன் என்று கூறி அவன் சித்தி பெற்றதும் தனது வாக்கை நிறைவேற்றி தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ வைப்பது போன்றதே நோன்பு நோற்றும், ஏனைய வணக்க வழிபாடுகள் செய்தும் “நப்ஸ்”ஐ வென்று வெற்றிவாகை சூடிய அடியானுக்கு அல்லாஹ் பெருநாளை வழங்கியும், அன்று நோன்பு நோற்பதை தடை செய்தும், புத்தாடை உடுப்பதை “ஸுன்னத்” – வணக்கமாக்கியும் மகிழ்ந்துள்ளான். மகிழ்ந்துமுள்ளான்.

நோன்புப் பெருநாள் தினமும், ஹஜ்ஜுப் பெருநாள் தினமும் புதிய உடைகள் உடுப்பது “ஸுன்னத்” ஆகும். சிலர் புதியவற்றை குறிப்பாக சாரம் – கைலியை கழுவி உடுப்பார்கள். இது “ஸுன்னத்” ஆகாது. புதிய உடை ஒரு தரம் கழுவப்பட்டாலும் அது “ஷரீஆ”வின் பார்வையில் பழையதென்றே கருதப்படும்.

ஒருவன் உடுக்கின்ற எல்லாம் புதியவையாக இருப்பது மிகவும் விரும்பத்தக்கதாகும். அதற்கு வசதியற்றோர் ஏதாவதொன்றை மட்டுமாவது – பெனியனை மட்டுமாவது புதிதாக உடுத்துக் கொண்டால் “ஸுன்னத்” உடைய நன்மை கிடைத்துவிடும்.

நோன்புப் பெருநாள் தினம் உடுப்பது வெள்ளை நிறமாகவும், ஹஜ்ஜுப் பெருநாள் தினம் உடுப்பது “கலர்” நிறமானதாகவும் இருப்பது விரும்பத்தக்கது.

நோன்பு மாதம் நோன்பு நோற்றும், மற்றும் “தறாவீஹ்” முதலான வணக்கங்கள் செய்தும், மனவெழுச்சியுடன் போராடி அதை சுத்தப்படுத்தியும் புனித றமழான் மாதத்தை கழித்த ஒருவனின் உள்ளம் மாசற்றதாயும், பால் போல் வெண்மை உள்ளதாயும் இருக்கும். அதற்குப் பொருத்தமாக நோன்பு பெருநாள் தினம் வெள்ளை நிற உடுப்புகள் உடுப்பது விஷேடமானதே!

ஒருவன் பெருநாள் தொழுகைக்காக பள்ளியை நாடிச் செல்லும் போது ஒரு வழியால் செல்வதும், வரும்போது அதே வழியால் வராமல் வேறு வழியால் வருவதும் சிறந்ததாகும். இவ்வாறு செய்தல் மறுமையில் அவை இவனுக்காக சாட்சி சொல்வதற்கேயாகும்.

நோன்பு பெருநாள் தொழுகையாயின் தொழுமுன் காலைச் சாப்பாடு சாப்பிடுவதும், “ஹஜ்” பெருநாள் தொழுகையாயின் தொழுதபின் காலைச் சாப்பாடு சாப்பிடுவதும் “ஸுன்னத்” நபீ வழியாகும். வழமைக்கு மாறு செய்தலே இதன் நோக்கமாகும்.

இரு பெருநாள் தினத்திலும் ஒருவன் மரணித்த தனது பெற்றோர், மற்றும் உறவினரின் அடக்கத்தலங்கள் சென்று அவர்களை “சியாறத்” தரிசிப்பதும், தான் இருக்கும் ஊரில் அவ்லியாஉகளின் “மசார்” சமாதி இருப்பின் அங்கு அவர்களை தரிசிப்பதும் நபீ வழியேயாகும். இதேபோல் உயிரோடுள்ள பெற்றோரையும், உறவினர்களையும் சந்தித்து ஸலாம் கூறி “முஸாபஹா”, “முஆனகா” – கை கொடுத்து கட்டியணைத்து நலம் விசாரிப்பதும் நல்வழியேயாகும்.

உறவினர், அயல் வீட்டவர்களில் வறுமைக் கோட்டில் வாழ்பவர்கள் இருந்தால் பெருநாட் காலையில் அவர்களுக்கு உணவு, உடை வசதிகள் செய்து கொடுப்பதும் நற்காரியங்களேயாகும்.

ஊரில் உள்ள உலமாஉகள், நல்ல மனிதர்கள், மற்றும் “தரீகா”வின் ஷெய்குமார்கள் ஆகியோரைச் சந்தித்து சுக செய்தி விசாரிப்பதும் நற் காரியங்களையே சேரும்.

ஒருவன் தனது மனச் சாட்சிக்கு விரோதமாக எவரையாவது ஏசியிருந்தால், அடித்திருந்தால், அல்லது எந்த வகையிலேனும் வேதனைப்படுத்தி இருந்தால் அவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டு அவருடன் கை குலுக்கி கொள்வது வாழ்வில் “பறகத்” அருளை அள்ளித் தரும் நற்காரியங்களேயாகும்.

பெருநாள் தினம் அதிகாலை தொழுகைக்காக பள்ளிவாயலுக்குச் செல்லும் போது முடிந்த அளவு சிறு தொகையேனும் பணம் எடுத்துச் சென்று பள்ளிவாயலுக்கு முன்னால் குந்திக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு வேறாகாத வெளிப்பாடுகளான ஏழைகளுக்கு வழங்கி அவர்களின் மனதை மகிழ்விப்பதும் நல்ல காரியமேயாகும்.

ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்தவர்கள், கொடுப்பவனும் அவன்தான், எடுப்பவனும் அவன்தான், எல்லாமாயும் “தஜல்லீ” வெளியாகி இருப்பவனும் அவன்தான் என்ற “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தின்படியும், நீங்கள் எங்கு பார்த்தாலும் அவனே உள்ளான் என்ற இறை தத்துவத்தின் படியும் வாழ வேண்டும் என்றும், உங்களின் “துஆ”வில் எனக்காக ஒரு நிமிடம் ஒதுக்கி கொள்ளுமாறும் அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.

ஹமவோஸ்த் – எல்லாம் அவனே!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments