Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இறை ஞானிகளைப் புறக்கணிப்பது இறை சாபத்திற்கு வழி செய்யும்!

இறை ஞானிகளைப் புறக்கணிப்பது இறை சாபத்திற்கு வழி செய்யும்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

يقول الإمام القشيري فى رسالته ‘الرسالة القشيريّة ‘فى (باب حفظ قلوب المشائخ وترك الخلاف عليهم)

سمعت الشّيخ أبا عبد الرحمن السلمي يقول إنّ شقيق البَلخي وأبا تراب النّخشبي قدِما على أبي يزيد البسطامي، فقُدِّمت السُّفرةُ، وشابٌّ يخدم أبا يزيد، فقالا له، كُلْ معنا يا فتى، فقال أنا صائمٌ، قال أبو تراب، كُلْ ولك أجرُ صوم شهر، فأَبَى، فقال شقيق، كُلْ ولك أجر صوم سنة، فَأَبَى، فقال أبو يزيد، دَعُوْا مَن سقط من عين الله تعالى، فأُخِذ ذلك الشابّ فى السرقة بعد سنة، فقُطعت يدُه،
(الرسالة القشيريّة، ص 151)

அஷ்ஷெய்கு இமாம் குஷைரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அர்ரிஸாலதுல் குஷைரிய்யா” எனும் நூலில் “ஷெய்குமார்களின் கல்புகளைப் பேணுதல், அவர்களுக்கு மாறு செய்தலை விடுதல்” எனும் பாடத்தில் அஷ்ஷெய்கு அபூ அப்திர் றஹ்மான் அஸ்ஸலமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்ல தான் கேட்டதாக பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

இறைஞானி ஷகீகுல் பல்கீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், இறைஞான மகான் அபூ துறாப் அந்நக்ஷபீ றஹிமஹுல்லாஹ் அவர்களும் இறையியல் மேதை அபூ யஸீத் அல்பிஸ்தாமீ றழியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்திக்கச் சென்றனர்.

அவ்வேளை சாப்பாட்டிற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. ஞானீ அபூ யஸீத் பிஸ்தாமீ அவர்களின் பணியாள் இளைஞர் ஒருவரும் அங்கு இருந்தார். அங்கு சென்றிருந்த ஞானிகள் இருவரும் இளைஞரிடம் எம்முடன் நீங்களும் சாப்பிடுங்கள் என்றனர். அதற்கவர் நான் நோன்பு நோற்றுள்ளேன் என்றார். இருவரில் ஒருவரான ஞானி அபூ துறாப் நீங்கள் எம்முடன் சாப்பிடுங்கள். உங்களுக்கு ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்றார்கள். அதற்கு அவர் மறுத்துவிட்டார். மற்ற ஞானமகான் அந்த வாலிபரிடம் உங்களுக்கு ஒரு வருடம் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று கூறினார்கள். அதற்கும் அவர் மறுத்துவிட்டார். அவ்வேளை சீற்றம் கொண்ட சிங்கம் ஞான மகான் அபூ யஸீத் றஹிமஹுல்லாஹ் அவர்கள், அல்லாஹ்வின் பார்வையிலிருந்து விழுந்தவனை நீங்கள் இருவரும் விட்டு விடுங்கள் என்று சீறினார்கள். அவ்விருவரும் அவரை விட்டு விட்டனர்.

ஒரு வருடத்தின் பின் ஒரு களவு தொடர்பாக அவ்வாலிபன் மாட்டி பிடிபட்டு அவனின் ஒரு கை வெட்டப்பட்டது. ஞான மகான் அபூ யஸீத் அவர்களின் சொல் பலித்தது.
ஆதாரம்: அர்ரிஸாலதுல் குஷைரிய்யா, பக்கம் 151.

மேற்கண்ட நிகழ்வோடு தொடர்புள்ள மூன்று ஞான மகான்களும் உலகப் பிரசித்தி பெற்ற மூன்று ஸூபிஸ ஞான மகான்களாவர். மூவருமே ஈரான் நாட்டின் பல மாகாணங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் ஸூபீகளாயிருந்தாலும் கூட “ஷரீஆ”வையும் கரைத்துக் குடித்த சட்ட மேதைகளாவர். இவர்கள் தான் நோன்பாளியாயிருந்த இளைஞனை சாப்பிடுமாறு பணித்திருக்கிறார்கள். அதாவது நோன்பை விடுமாறு கூறியுள்ளார்கள்.

(இந்த வரலாறை “வுஜூத்” இரண்டென்று உளறும் ஏமாளிகள் அறிந்தார்களாயின் கரு நாகம் போல் சீறிப் பாய்வார்கள். “ஸுன்னத்” ஆன நோன்பிற்கும், “பர்ழ்” ஆன நோன்பிற்குமிடையிலுள்ள சட்டம் தெரியாத சண்டாளர்களாவார்கள். இவர்கள் أحكام الشـريعة வும் தெரியாத, أسرار الشـريعة வும் தெரியாத – “அஹ்காமுஷ் ஷரீஆ”வும் தெரியாத, “அஸ்றாருஷ் ஷரீஆ”வும் தெரியாத மூடர்களேயாவர். மத்ஹபுகளுக்கிடையிலான சட்ட வேறுபாடுகளும் தெரியாதவர்களுமாவர்)

குறித்த மூன்று மகான்களும் நோன்பு நோற்றுள்ள ஓர் இளைஞனை சாப்பிடுமாறு சொன்னது பிழையா? சரியா? என்று முடிவு செய்யுமுன் அவர்கள் மூவரும், அந்த இளைஞனும் எந்த “மத்ஹப்” ஐச் சார்ந்தவர்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் நான்கு மத்ஹபுகளினது எல்லாச் சட்டங்களும் ஒரேமாதிரியானவையல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இதேபோல் குறித்த மூன்று மகான்களும் மேற்கண்ட விபரங்களைத் தெரியாதவர்களல்ல என்பதையும் தெளிந்து கொள்ள வேண்டும்.

மேற்கண்ட விபரங்கள் தெரியாத ஒருவன் குத்புமார், வலீமாரின் செயல்களில் எதையும் பிழையென்று சொல்வது தவறென்பதைப் புரிந்து வாய் மூடி மௌனியாயிருத்தல் வேண்டும்.

மூன்று மகான்களின் செயலும் சரியானதென்பதற்கு நான் ஒரு விளக்கம் எழுதுகிறேன்.

அதாவது அவர்கள் மூவரும் இமாம் மாலிக் அவர்களின் “மாலிக் மத்ஹப்”ஐச் சார்ந்தவர்கள் என்று நல்லெண்ணம் வைத்துக் கொண்டு அவர்களின் செயல் சரியானதென்று முடிவு செய்தல் வேண்டும். குத்புமார், மகான்கள் மீது தப்பெண்ணம் கொள்வது பெரும்பாவமாகும். நஞ்சுண்பதற்கு சமமானதுமாகும்.

இமாம் மாலிக் அவர்களின் மாலிக் மத்ஹப் சட்டத்தை இங்கு எழுதுகிறேன்.

المالكيّة قالوا إتْمامُ النَّفْلِ من الصوم بعد الشُّروع فيه فرضٌ، وكذلك قضائُه إذا تعمَّدَ إفسادَه، ويُستَثْنَى من ذلك منْ صامَ تطوُّعًا، ثمّ أمَرَه أَحَدُ والِدَيه، أو شيخُه بالفطر شفقةً عليه مِن إدامة الصّوم، فإنّه يجوز له الفِطرُ، ولا قضاءَ عليه،
(الفقه على المذاهب الأربعة، ج1،ص487)

وأمّا إن كان الصوم نفلا فإنّ النّية تكفى فيه ولو كانت نهارا، بشرطِ أن تكون قبل الزّوال، وبِشرط أن لا يسبِقَها ما يُنَافِى الصّومَ على الرّاجح، ولا يقوم مقام النّيّة التَّسحُّرُ فى جميع أنواع الصّوم، (الفقه على المذاهب الأربعة، ج 1، ص 476)
மாலிக் மத்ஹபுடை இமாம்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

“ஸுன்னத்” ஆன நோன்பாயினும் அதை நோற்பதெற்கென்ற “நிய்யத்” எண்ணத்துடன் ஆரம்பித்தால் அதைப் பூரணப்படுத்துவது “பர்ழ்” கடமையாகும். “ஸுன்னத்” ஆன நோன்புதானே என்று உரிய காரணமின்றி அதை முறித்துவிடுதல் கூடாது. இவ்வாறுதான் அதை “கழா” திரும்ப நோற்பதுமாகும். இதற்கான நிபந்தனை அவன் மனமுரண்டாக வேண்டுமென்றே அதை முறித்திருக்க வேண்டும். ஆயினும் பின்வரும் விடயத்தில் விதிவிலக்குண்டு.

அதாவது ஒருவன் “ஸுன்னத்” ஆன நோன்பு நோற்று நோன்போடு இருக்கிறான். அவ்வேளை அவனின் பெற்றோர்கள் இருவருமோ, அல்லது அவர்களில் ஒருவரோ, அல்லது அவனின் ஞானகுருவோ அவன் தொடர்ந்து அந்த நோன்பை நோற்பதை அவனின் மீது கருணை கொண்டு விடுமாறு சொன்னால் அவன் அந்த நோன்பை விடுவது ஆகும். அவ்வாறு விட்டால் அதை “கழா” செய்யத் தேவையில்லை.

ஆதாரம்: அல்பிக்ஹ் அலல் மதாஹிபில் அர்பஅஹ்.
முதலாம் பாகம், பக்கம் 487.

மேற்கண்ட விபரத்தில் يَجُوْزُ لَهُ الْفِطْرُ அவன் நோன்பை விடுவது ஆகுமென்றுதான் கூறப்பட்டுள்ளது. எனினும் நான் வேறு ஆதாரங்கள் மூலம் அறிந்த வகையில் ஆகும் என்று சொல்வதை விட நோன்பை விடுவது கடமை يَجِبُ لَهُ الْفِطْرُ என்றே சொல்ல வேண்டும்.

இது நான் அறிந்த கருத்தாகும். எனது இக்கருத்து இஸ்லாமிய மூலாதாரங்களுக்கு முரணானதாயின் எனது கருத்தை ஏற்றுச் செயல்படாமல் இஸ்லாமிய மூலாதாரங்கள் கூறும் கருத்தின்படி செயல்படுமாறு வாசகர்களை கேட்டுக் கொள்கிறேன்.

இறைஞான விளக்கத்திலும், மார்க்கச் சட்ட விளக்கத்திலும் பெற்றோர் அறிவில்லாதவர்களாயிருந்தால் மட்டும் அவர்களின் கருத்தின்படி செயல்படாமல் “ஷெய்கு” ஞான குரு சொல்கின்ற படியே செயல்பட வேண்டும். பெற்றோரும் குரு போல் ஞானமுள்ளவர்களாயின் பெற்றோரின் கருத்தின்படி செயல்படலாம்.

இறைஞானி அபூ யஸீத் அவர்களின் பணியாள் மேற்கண்ட சட்டம் தெரியாதவன் என்று வைத்துக் கொண்டாலும் கூட இறைஞான மகான்கள் மூவரும் தன்னை விட மார்க்கம் தெரிந்தவர்கள் என்பது அந்தப் பணியாளனுக்கு தெரியாமலிருக்க முடியாது. ஆகையால் அவன் அவர்களின் சொற்படி தனது நோன்பை விட்டு அவர்களுடன் சாப்பிடாமல் விட்டதன் மூலம் அவன் அவர்களைக் கண்ணியம் செய்யவில்லை என்பது வெளிப்படையாக விளங்கப்படுகிறது.

நாம் இவ்வாறு விளங்காது போனாலும் அவன் அவ்வாறு செயல்பட்டது பெருந்தவறு என்பதை அவனின் எஜமான் அபூயஸீத் அவர்கள் அங்கு வந்த மகான்கள் இருவரிடமும் சிங்கம் போல் சீறியவர்களாக دَعُوْا مَنْ سَقَطَ مِنْ عَيْنِ اللهِ “அல்லாஹ்வின் பார்வையிலிருந்து விழுந்தவனை விட்டு விடுங்கள்” என்று கூறியது அவன் பிழை செய்தான் என்பதை எமக்கு விளக்கி வைக்கிறது.

இதனால்தான் இந்நிகழ்வு நடந்து ஒரு வருடத்தின் பின் அவன் களவொன்றில் மாட்டி ஒரு கை வெட்டப்பட்டான்.

இதன் மூலம் இறைஞான மகான்களின் உள்ளங்களை வேதனைப்படுத்தக் கூடாதென்பதும், அவர்களின் சொல்லுக்கு மாறு செய்யக் கூடாது என்பதும், மகான்களின் உள்ளங்களை வேதனைப்படுத்துவது பெரும் பாவத்தில் சேருமென்பதும், அவனுக்கு கிடைத்த தண்டனை பெரும் பாவத்திற்குரிய தண்டனையாயிருப்பதால் அவனின் செயல் பெரும்பாவம் என்பதும் தெளிவாகின்றன.

இதைக் கருத்திற் கொண்டுதான், اِحْفَظُوْا لِسَانَكُمْ عِنْدَ الْعُلَمَاءِ وَاحْفَظُوْا قُلُوْبَكُمْ عِنْدَ الْعُرَفَاءِ உலமாஉகளிடம் நீங்கள் சென்றால் உங்களின் நாவைப் பேணிக் கொள்ளுங்கள் என்றும், இறைஞான மகான்களிடம் சென்றால் உங்கள் உள்ளங்களைப் பேணிக் கொள்ளுங்கள் என்றும் தத்துவ மேதைகள் சொன்னார்கள்.

رضي الله عنا وعنهم،

RELATED ARTICLES

Most Popular

Recent Comments