Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மிக விரைவில் உலமாஉகள் சந்திக்கவுள்ள "மிர்ஆதுல் ஆரிபீன்" எனும் ஞான நூலின் வரலாறு.

மிக விரைவில் உலமாஉகள் சந்திக்கவுள்ள “மிர்ஆதுல் ஆரிபீன்” எனும் ஞான நூலின் வரலாறு.

மிக விரைவில் உலமாஉகள் சந்திக்கவுள்ள مرآة العارفين – “மிர்ஆதுல் ஆரிபீன்” எனும் ஞான நூலின் வரலாறு.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

உலமா சபை வெளியிட்ட குருட்டு “பத்வா” பிழை என்று நிறுவி நான் எழுதிய الكبريت الأحمر “அல்கிப்ரீதுல் அஹ்மர்” எனும் அறபு நூலை இந்தியா – தமிழ் நாடு உலமாஉகளிடம் காண்பித்து அவர்களிடம் கையெழுத்து எடுக்கும் நோக்கில் நானும், மர்ஹூம் மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்களும் 1982ம் ஆண்டு இந்தியா சென்றோம்.

முதலில் காயல்பட்டணம் சென்று அஷ்ஷெய்கு ஜலீல் முஹ்யித்தீன் ஹழ்றத் அவர்களை அவர்களின் இல்லத்தில் சந்தித்து “அல்கிப்ரீதுல் அஹ்மர்” நூலின் பிரதியைக் கொடுத்து விளக்கமும் கூறி கையெழுத்துக் கேட்டோம்.

அதற்கவர்கள், “எனக்கு ஒரு வாரம் கால அவகாசம் தாருங்கள். அதுவரை நீங்கள் கீழக்கரையை அடுத்துள்ள ஆயிஷா நகர் சென்று அங்குள்ள “மத்ரஸதுல் மவாலீ” அறபுக் கல்லூரியில் தங்கியிருங்கள். நான் ஒரு வாரத்தில் அங்கு வந்து சந்திக்கிறேன்” என்று கூறினார்கள். கையெழுத்துப் பிரதியைக் கொடுத்துவிட்டு இரவோடு இரவாக குறித்த மத்ரஸாவுக்கு வந்தோம்.

அவ்வேளை அங்கு ஐந்து ஹழ்றத்மார்கள் இருந்தார்கள். அதிபராக மல்லிப்பட்டணம் அப்துர் றஊப் ஹழ்றத் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் ஐவரையும் ஒரே நேரத்தில் சந்தித்து ஜலீல் முஹ்யித்தீன் ஹழ்றத் அவர்கள் சொன்ன செய்தியையும் கூறி அவர்களின் மத்ரஸாவில் சுமார் ஏழு நாட்கள் தங்கியிருந்தோம்.

நாங்கள் அங்கு சென்ற அதே நாள் ஜலீல் முஹ்யித்தீன் ஹழ்றத் அவர்களிடம் நாங்கள் கொடுத்த பிரதியில் இன்னொரு பிரதியை அவர்களிடம் கொடுத்து ஹழ்றத் அவர்கள் வரும் வரை நீங்கள் ஐவரும் இப்பிரதியை வாசித்துப் பாருங்கள் என்று கூறினோம். அங்கு நாங்கள் தங்கியிருந்த நாட்களில் ஒரு நாளில் கூட அப்பிரதியை அவர்கள் வாசிக்கவுமில்லை. தொட்டுக் கூடப் பார்க்கவுமில்லை.

இடையில் ஒரு நாள் அதிபர் அவர்கள் என்னை அழைத்து இந்நூலில் நீங்கள் எழுதியுள்ள தலைப்பின் சுருக்கத்தை எங்களுக்கும், மாணவர்களுக்கும் விளக்கி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டபடி நான் செய்தேன். அனைவரும் நன்றி கூறி என்னைப் பாராட்டினார்கள்.

ஏழு நாட்கள் கடந்தும் ஹழ்றத் அவர்கள் வரவில்லையாதலால் மத்ரஸாவில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த மௌலவீ ஸலாஹுத்தீன் அவர்கள் மூலம் ஹழ்றத் அவர்களுடன் தொடர்பு கொண்ட போது, மௌலவீ அப்துர் றஊப் தந்த நூல் சென்னை – மண்ணடியிலுள்ள “சைன்ஸ் மெடிகல்” என்ற கடையில் கொடுக்கப்பட்டுள்ளது என்று பதில் வந்தது.

நாங்கள் சென்னை செல்வதற்கு ஆயித்தமாகி மத்ரஸா ஹழ்றத்மார் ஐவரிடமும் விடை பெறச் சென்ற போது, “உங்களால் கையெழுத்திட முடியுமாயின் செய்து தாருங்கள்” என்று கேட்டோம்.

அதற்கவர்கள், “நாங்கள் ஹழ்றத் அவர்களிடம் இப்போதுதான் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக கற்றுக் கொண்டிருக்கிறோம். இப்போது எங்களால் கையெழுத்திட முடியாது” என்று கூறிவிட்டார்கள்.

மறுநாள் சென்னை வந்து சொல்லப்பட்ட கடைக்குச் சென்று பிரதியைப் பெற்றுக் கொண்டோம். அதில் ஹழ்றத் அவர்களின் கையெழுத்து இருக்கவில்லை. எவ்வாறு கொடுத்தோமோ அவ்வாறே அப்பிரதி இருந்தது. கவலைதான். என்ன செய்வது? ஓர் உண்மையை நிறுவுவதாயின் பல இன்னல்களை அனுபவிக்கத்தான் வேண்டும், அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களில் எமக்கு முன்மாதிரி உண்டு என்ற இறை வசனத்தை சாந்தி தரும் மருந்தாக நினைத்து தொடர்ந்து செயல்படத் தொடங்கினோம்.

தமிழ் நாட்டிலுள்ள பல உலமாஉகளிடம் இது சம்பந்தமாக தொடர்பு கொண்ட போது, “இக்காலத்தைப் பொறுத்த வரை உங்கள் நூலை சரிகண்டு கையெழுத்திடுவதாயின் அதற்குத் தகுதியான ஒரு மகான் தமிழ் நாட்டில் உள்ளார்கள் என்றால் கம்பம் நகரிலுள்ள அம்பா நாயகம் அவர்களையே சொல்ல முடியும்” என்று கூறினார்கள்.

மறுநாள் கம்பம் வந்தோம். ஒரு மகானை சந்திக்கும் மன நிலையோடு வந்தோம். கம்பம் சாலையோரம் ஒரு “தைக்கா” கண்ணுக்குத் தெரிந்தது. அங்கு சென்றோம். “தைக்கா”வின் முன் வாயலில் “ஒன்றும் ஸைவரும் – பூச்சியமும் இரண்டாகாது. எல்லாம் அவனே” என்று எழுதப்பட்டிருந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியாத நிலையில் “வுழூ” சுத்தம் செய்யும் நோக்கத்தோடு உள்ளே சென்றோம்.

வலுப்பமிகு தோற்றமுள்ள ஒருவர் “வுழூ” செய்து காலைக் கழுவிக் கொண்டிருந்தார். இவர் யாரோ என்று நினைத்து முடிவதற்குள் அவரே உரத்த குரலில் (யா அப்தர் றஊப் மர்ஹபா – அப்துர் றஊபே நல்லாசிகள். உங்கள் தகப்பனாரின் ஜனாசா நல்லடக்கத்தில் “அப்தால்”களில் ஒருவர் கலந்து கொண்டுள்ளார்கள்) என்று கூறினார்கள். எவரும் சொல்லாமலேயே அவர்கள்தான் அம்பா நாயகம் என்று நாங்கள் புரிந்து கொண்டோம்.

அவர்கள் என்னிடம் உங்கள் மாமி – மனைவியின் தாய் நல்ல பெண்மணி என்று சொல்லிவிட்டு உங்களின் வயிற்றுவலி எப்படி சுகமா? என்று கேட்டார்கள். இல்லை. இருந்தமாதிரியே இருக்கிறது என்றேன்.

நீங்கள் இருவரும் எதற்காக வந்தீர்கள் என்று வினவினார்கள். நாங்கள் சென்ற நோக்கத்தையும், உலமாஉகள் எமக்குச் செய்த அநீதியையும் விளக்கமாக விபரித்தோம். செவியேற்றுக் கொண்டிருந்த மகான் அவர்கள் மூன்று நாட்கள் இங்கு தங்கியிருக்க வேண்டும் என்றார்கள். ஏற்றுக் கொண்டோம்.

இரண்டாம் நாள் நீங்கள் கொண்டு வந்துள்ள “கிதாப்” – நூலைத் தாருங்கள் என்றார்கள். கையெழுத்துப் பிரதியைக் கொடுத்தோம். அதைக் கையில் வைத்துக் கொண்டு அவர்களின் மகன் அப்துல் ஙபூர் மௌலவீ – عبد الغفور என்பவரை அழைத்து (இவர் இலங்கையிலிருந்து வந்துள்ளார். “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் தொடர்பாக அறபியில் ஒரு நூல் எழுதி வந்துள்ளார். என்னிடம் கையெழுத்து எடுப்பதற்காக இங்கு வந்துள்ளார். ஆகையால் நீங்கள் வாசியுங்கள். நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்) என்று கூறினார்கள்.

மௌலவீ அப்துல் ஙபூர், அம்பா நாயகம் அவர்களின் கட்டில் ஓரமாக நின்ற நிலையிலேயே வாசிக்கத் தொடங்கினார். அவர்கள் செவி சாய்த்துக் கொண்டே இருந்தார்கள். எஞ்சியதை மூன்றாம் நாளும் வாசித்தார். செவி சாய்த்துக் கொண்டே இருந்தார்கள்.

இறுதியில் மகன் மௌலவீ அப்துல் ஙபூர் அவர்களிடம், “இந்நூலை தொடக்கத்திலிருந்து இறுதிவரை வாசிக்கக் கேட்டுக் கொண்டிருந்தேன். இதில் கூறப்பட்டவை யாவும் சரியானவை என்றும் எழுதி மேலதிகமாகவும் எழுதிக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். மகன் மௌலவீ அவ்வாறே எழுதி வந்தார்.

மகான் அவர்கள் அதை வாசித்து விட்டு (“வஹ்ததுல் வுஜூத்” சம்பந்தமாக எவரும் என்னிடம் கையெழுத்துக் கேட்டு வரவுமில்லை. எவருக்கும் நான் கையெழுத்து போட்டுக் கொடுக்கவுமில்லை. இதுவே எனது முதல் கையெழுத்தும், கடைசிக் கையெழுத்தும்) என்று கூறியவர்களாக கையெழுத்திட்டுத் தந்தார்கள். இது 1982ம் ஆண்டு நடந்த நிகழ்வாகும். இதுவே நடந்த உண்மை. இதுவே சத்தியம். எனினும் இது தொடர்பாக சில தவறான கருத்துக்கள் நடமாடுகின்றன. இது தொடர்பாக சந்தேகமுள்ளவர்கள் என்னுடன் நேரில், அல்லது போன் மூலம், அல்லது தபாலில் தொடர்பு கொண்டு தெளிவைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நான் எழுதிய “அல்கிப்ரீதுல் அஹ்மர்” எனும் நூலில் அதி சங்கைக்குரிய அல்வலிய்யுல் காமில், அல்ஆரிப் பில்லாஹ் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் றஹிமஹுல்லாஹ் அவர்களின் கையெழுத்து உண்டு என்பதையும், அவர்களின் கையெழுத்துக்குப் பக்கத்தில்அவர்களின் மகன்களில் ஒருவரான மௌலவீ அப்துல் ஙபூர் – مولوي عبد الغفور அவர்கள் குறித்த நூல் பற்றிப் புகழ்ந்து அவரின் கையால் எழுதிய வசனங்களும் உண்டு என்பதையும் சத்தியம் செய்து கூறுகின்றேன். நேரில் பார்க்க விரும்புகின்றவர்களுக்கும் காண்பிக்க நான் தயாராக உள்ளேன் என்பதையும் கூறிக் கொள்கிறேன்.

அந்த நூலில் அம்பா நாயகம் அவர்கள் கையெழுத்திடவில்லையென்று எவர் பொய்யான செய்தியைப் பரப்பினாரோ அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து அவரின் பொய்யை நிறுவுவதற்கும் நான் ஆயித்தமாயுள்ளேன் என்பதை இவ்விடயத்தில் சந்தேகமுள்ள அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். பொய்யான வதந்தியை பரப்பியவர் இன்றுடன் அதை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். தவறினால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதை விட வேறு வழி எனக்கு இல்லை.

அத்துடன் பொய்யான வதந்தியை எழுப்பியவர் ஏன் எழுப்பினார் என்பதற்கான காரணத்தையும் பகிரங்கமாக கூற என்னால் முடியும், அம்பா மகான் அவர்களின் கண்ணியத்தை வதந்தியை எழுப்பியவர் பாதுகாக்கத் தவறினால் அவர்களின் சாபம் இவரைத் தொடரும் என்பதில் எமக்கு சந்தேகமில்லை.

அதன் பின் நாங்கள் இருவரும் “நாஹூர் ஷரீப்” வந்து முதலில் சங்கைக்குரிய அஷ்ஷெய்கு அஸ்ஸெய்யித் பாகர் ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்களைச் சந்தித்தோம். அவர்களிடம் முழு விபரங்களையும் கூறி அவர்களிடமும் கையெழுத்துக் கேட்டோம். நாஹூர் ஷரீபில் அவர்களின் அகமியம் தெரிந்தவர்கள் இவர்களை “நடாமடும் வலீ” என்று சொல்வார்கள்.

எல்லா விபரங்களையும் கேட்டுக் கொண்டிருந்த மகான் பாக்கர் ஆலிம் அவர்கள், “நீங்கள் “ஹமவோஸ்த்” கொள்கையா? “ஹமஊஸ்த்” கொள்கையா? என்று கேட்டார்கள்.

நாங்கள் “ஹமவோஸ்த்” எல்லாம் அவனே என்ற கொள்கையுள்ளவர்கள்தான். ஆயினும் நீங்கள் சொல்கின்ற “ஹமஊஸ்த்” கொள்கை எங்களுக்குத் தெரியாது. இச் சொல்லைக் கூட உங்கள் மூலமே அறிகிறோம் என்று கூறினோம்.

அதற்கவர்கள் “ஹமவோஸ்த்” எல்லாம் அவனே என்ற கொள்கைதான் சரியானதென்றும், “ஹமஊஸ்த்” என்ற கொள்கை பிழையானதென்றும் விளக்கம் தந்தார்கள். அவர்கள் தந்த விளக்கத்தை இங்கு எழுத வாய்ப்பில்லை. எழுதுவதாயின் பல பக்கங்கள் எழுத வேண்டும்.

மகான் அவர்கள் கையெழுத்துப் பிரதியை தாருங்கள் என்று அதைப் பெற்றுக் கொண்டு இவ் ஊரில் என்னை விடத் திறமையுள்ள, கையெழுத்துப் போடத் தகுதியான ஒருவர் இருக்கிறார். அவரிடம் நீங்கள் முதலில் கையெழுத்து எடுங்கள். நானும் கையொப்பமிட்டுத் தருவேன் என்று கூறினார்கள்.

அவர்கள் இலங்கை வெலிகாமத்தில் வாழ்ந்த சங்கைக்குரிய அஷ்ஷெய்கு அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா அவர்களின் “கலீபா” சங்கைக்குரிய யாஸீன் ஹழ்றத் அவர்களாவர்.

நாங்கள் இருவரும் அவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களைச் சந்தித்தோம். அவர்கள் கல்வியில் மிகத் திறமையானவர்களும், ஆன்மிக உயர் பதவிகள் பெற்ற பெரு மகானுமாவார்கள்.

நாங்கள் அவர்களிடம் முழு விபரங்களும் சொல்லி, மகான் பாக்கர் ஆலிம் அவர்கள் சொன்ன செய்தியையும் கூறி நான் எழுதிய கையெழுத்துப் பிரதியையும் கொடுத்தோம். அவர்கள் அதைக் கையேற்றுக் கொண்டு ஓர் ஆலோசனை கூறினார்கள்.

அதாவது நாஹூர் நகரில் உள்ள உலமாஉகளில் சிலரை மட்டும் அழைத்து அவர்களுடன் நாமும் சேர்ந்து உங்களின் கையெழுத்துப் பிரதியை வாசிப்போம் என்று ஆலோசனை கூறினார்கள்.

அன்று புனித றமழான் நடுப்பத்தாக இருந்தது. உலமாஉகள் அனைவரும் ஒரு “தைக்கா”வில் தறாவீஹ் தொழுகையின் பின் ஒன்று கூடி “ஸஹர்” நேரம் வரை வாசிக்கலாமென்று முடிவு செய்தார்கள். அதே இரவு தறாவீஹ் தொழுகையின் பின் ஒன்று கூடும் உலமாஉகள் மத்தியில் உங்களின் நூலில் எழுதப்பட்டுள்ள கொள்கையின் சாராம்சத்தை சுருக்கமாகப் பேச வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள். அதன்படி நடந்தது.

தொடரும்….

RELATED ARTICLES

Most Popular

Recent Comments