Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஒரு மனிதனுக்கு திடீர் மரணம் ஏற்படுவது நல்லதா? கெட்டதா?

ஒரு மனிதனுக்கு திடீர் மரணம் ஏற்படுவது நல்லதா? கெட்டதா?

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

திடீர் மரணத்திற்கு مَوْتُ الْفَجْأَةِ “மவ்துல் பஜ்அஹ்” என்று அறபியில் சொல்லப்படும்.

மனிதர்களிற் சிலர் நோயுற்று பல நாட்கள் படுக்கையிலிருந்து மரணிக்கிறார்கள். இன்னும் சிலர் விபத்துக்களில் சிக்கி திடீரென மரணிக்கிறார்கள்.

இவ்விரு வகையான மரணம் நல்லவர்களுக்கும் வரலாம். கெட்டவர்களுக்கும் வரலாம். கெட்டவர்களுக்கே திடீர் மரணம் வரும் என்பது பிழையான கருத்தாகும்.

எனினும் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் திடீர் மரணத்தை விட்டும் பாதுகாப்பு தேடியுள்ளார்கள்.

كَانَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ يَتَعَوَّذُ مِنْ مَوْتِ الْفَجْأَةِ، وَكَانَ يُعْجِبُهُ أَنْ يُمَرَّضَ قَبْلَ أَنْ يَمُوتَ»

பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் திடீர் மரணத்தை விட்டும் பாதுகாப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள். மேலும் அவர்கள் மரணிப்பதற்கு முன் நோயுற்றிருப்பதை விரும்பினார்கள். (ஆதாரம்: அல்முஃஜமுல் கபீர் லித்தபறானீ)

திடீர் மரணம் என்பது நீரில் மூழ்கி மரணித்தல், கிணற்றில் விழுந்து மரணித்தல், வாகன விபத்தில் மரணித்தல், கொலை செய்யப்பட்டு மரணித்தல் – வெட்டப்பட்டோ, சுடப்பட்டோ மரணித்தல், மரம் விழுந்து அல்லது மரத்திலிருந்து விழுந்து மரணித்தல், தீப்பற்றி மரணித்தல், கால்ரா, வாந்தி பேதி, கொரோனா போன்ற நோயினால் மரணித்தல், பிரசவ நேரம் தாய் மரணித்தல், அல்லது குழந்தை மரணித்தல், கட்டிடம் விழுந்து மரணித்தல் போன்றவையாகும்.

இவ்வாறு மரணிப்பது திடீர் மரணம் என்று சொல்லப்படும். இவ்வகை மரணம் சிலருக்கு நல்லதாயும், சிலருக்கு கெட்டதாயும் அமையும்.

பொதுவாக இத்தகைய மரணம் விரும்பத்தக்கதல்ல என்பதால்தான் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அதை விட்டும் பாதுகாப்பு தேடினார்கள். அவர்கள் தங்களுக்காக பாதுகாப்புத் தேடவில்லை. ஆயினும் தங்களின் “உம்மத்” சமூகம் பாதுகாப்புத் தேட வேண்டுமென்பதற்காகவே தேடினார்கள்.

யாருக்கு நல்லது? யாருக்கு கெட்டது?

ஐங்காலமும் தொழுதும், “ஹலால் – ஹறாம்” பேணியும், பாவங்களை விட்டும் விலகி, நன்மையான காரியங்கள் செய்தும், அதிக நேரம் அல்லாஹ்வின் “திக்ர்” நினைவில் இருக்கிறவர்களுக்கு திடீர் மரணம் நல்லதாகும். இதற்கு மாறாக வாழ்பவனுக்கு திடீர் மரணம் நல்லதில்லை.

ஏனெனில் நல்ல மனிதன் அதிக நேரங்களில் இறை நினைவிலேயே இருப்பான். மற்றவன் அதிக நேரம் அவ்வாறு இருக்கமாட்டான். ஆகையால் நல்ல மனிதர்களைப் பொறுத்து திடீர் மரணம் நல்லது. கெட்ட மனிதர்களைப் பொறுத்து அது நல்லதல்ல.

எனவே, நல்லவனாயினும், கெட்டவனாயினும் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் திடீர் மரணத்தை விட்டும் பாதுகாப்புத் தேடியிருப்பதை ஆதாரமாகக் கொண்டு நாமும் தேடிக் கொள்வது நல்லதே!

عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ مَوْتِ الْفَجْأَةِ؟ فَقَالَ: «رَاحَةٌ لِلْمُؤْمِنِ، وَأَخْذَةُ أَسَفٍ لِلْفَاجِرِ»

அன்னை ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். “நான் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் திடீர் மரணம் பற்றிக் கேட்ட போது அது விசுவாசிக்கு சுகமானதும், கெட்டவனுக்கு கைசேதப்பிடி” என்றும் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments