அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் குடும்பத்தாரினதும், நினைவாக 17.06.2022 வெள்ளிக்கிழமை புனித திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமான 36வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிப் பெருவிழா 19.06.2022 ஞாயிற்றுக்கிழமை மாகந்தூரி தினம் வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இப்பெருவிழாவின் ஆரம்ப நிகழ்வில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஹாஜா நாயகம் பேரிலான புனித திருக்கொடியேற்ற நிகழ்வில் இலங்கைத் திருநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நீங்கவும், நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடரிலிருந்து நாடு மீண்டு வரவும், செல்வம் செழித்தோங்கவும், நாட்டின் சமாதானம், சகவாழ்வு மற்றும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்காகவும் விஷேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.
தொடர்ந்து மூன்று தினங்களும் ஹாஜாஜீ மஜ்லிஸ் மண்டபத்தில் அருள்நிறைந்த மஜ்லிஸ் நிகழ்வுகளும் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினதும், சங்கைக்குரிய உலமாஉகளினதும் சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெற்றது.
இறுதித்தினமான கந்தூரி தினத்தன்று துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாதுடன் 36வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிப் பெருவிழா நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.