Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நீதி மன்றில் நீதிவான் கூறிய தீர்ப்புக்கு நியாயம் கேட்கும் ஒருவனை நீதிவான் நிந்திப்பது நியாயமாகுமா?

நீதி மன்றில் நீதிவான் கூறிய தீர்ப்புக்கு நியாயம் கேட்கும் ஒருவனை நீதிவான் நிந்திப்பது நியாயமாகுமா?

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
நீதி மன்றில் நீதிவான் முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்படுகிறது. நீதிவான் சட்டப்படி விசாரிக்க வேண்டிய அனைவரையும் விசாரித்த பின் ஒரு தீர்ப்பு கூறுகிறார். அவரின் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட ஒருவன் அவரிடம் நியாயம் கேட்டால் அவர் அதற்கான நியாயம் சொல்ல வேண்டும்.
 
அவன் மீது கோபம் கொண்டு அவனைத் தண்டிப்பது கூடாது. இதுவே நியாயம்.
எனினும் தற்போது நீதிமன்றின் நடைமுறை எனக்குத் தெரியாது.
நீதிவானின் தீர்ப்புக்கு நியாயம் கேட்பவன் நல்லெண்ணத்தோடு நியாயத்தை அறிந்து கொள்ளும் நோக்குடன் மட்டும் கேட்க வேண்டும். தீர்ப்பு வழங்கியவரைத் தீண்டும் வகையில் கேட்பது கூடாது.

மேலே நான் எழுதிய தலைப்பு பின்னால் நான் எழுதப் போகின்ற விடயத்துக்கான அத்திவாரமாகும். அது தலைப்பல்ல. தலைப்பும், அதற்கான விபரமும் பின்னால் வரும்.
 
அல்லாஹ் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைப் படைத்த பின் மலக்குகள் – அமரர்கள் அனைவரையும் அழைத்து நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “ஸுஜூத்” செய்யுமாறு பணித்தான்.
இந்த வரைலாறை பின்வருமாறு விளக்கமாக அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளான்.
 
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ
மேலும் நாம் மலக்குகளிடம் ஆதமுக்கு நீங்கள் “ஸுஜூத்” செய்யுங்கள் என்று கூறிய போது “இப்லீஸ்” தவிர அவர்கள் அனைவரும் “ஸுஜூத்” செய்தார்கள். அவன் செய்யவில்லை. ஆணவம் கொண்டான் – பெருமை பேசினான். இன்னும் நிராகரிப்பாளர்களில் அவன் ஆகிவிட்டான். (அல்பகறா – 34).
மேலும் அல்லாஹ் விபரமாக கூறுகிறான். கவனியுங்கள்.
 
إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ طِينٍ (71) فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ (72) فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ (73) إِلَّا إِبْلِيسَ اسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ (74) قَالَ يَا إِبْلِيسُ مَا مَنَعَكَ أَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ أَسْتَكْبَرْتَ أَمْ كُنْتَ مِنَ الْعَالِينَ (75) قَالَ أَنَا خَيْرٌ مِنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ (76) قَالَ فَاخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌ (77) وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِي إِلَى يَوْمِ الدِّينِ (78) قَالَ رَبِّ فَأَنْظِرْنِي إِلَى يَوْمِ يُبْعَثُونَ (79) قَالَ فَإِنَّكَ مِنَ الْمُنْظَرِينَ (80) إِلَى يَوْمِ الْوَقْتِ الْمَعْلُومِ (81) قَالَ فَبِعِزَّتِكَ لَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ (82) إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ (83) قَالَ فَالْحَقُّ وَالْحَقَّ أَقُولُ (84) لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنْكَ وَمِمَّنْ تَبِعَكَ مِنْهُمْ أَجْمَعِينَ (85)
மொழியாக்கம்:
உங்கள் இரட்சகன் மலக்குகளிடம், நிச்சயமாக நான் மனிதனைக் களி மண்ணால் படைக்கப்போகிறேன் என்று கூறிய வேளையை நபீயே நீங்கள் நினைவு கூர்வீர்களாக! (38-71)
பிறகு நான் அவரை அவரின் தோற்றத்தை உருவாக்கிச் சரிப்படுத்தி என் உயிரிலிருந்தும் அவரில் ஊதிய போது அவருக்கு சிரம் பணிந்தவர்களாக விழுங்கள் எனக் கூறியதும், (38-72)
அது சமயம் அனைவரும் ஒன்றாகச் சிரம் பணிந்தார்கள். (38-73)
இப்லீஸ் தவிர. அவன் கர்வம் கொண்டான். நிராகரிப்பாளர்களிலும் ஆகிவிட்டான். (38-74)
அதற்கு அல்லாஹ்! இப்லீஸே! என் இரு கரங்களால் நான் படைத்ததற்கு நீ சிரம் பணியாது உன்னைத் தடுத்தது எது? நீ கர்வம் கொண்டு விட்டாயா? அல்லது நீ உயர்ந்த பதவியுடையவர்களில் ஆகிவிட்டாயா? என்றான். (38-75)
அதற்கவன் நான் அவரை விட மிக்க மேலானவன், என்னை நெருப்பினால் நீ படைத்தாய். அவரை களி மண்ணால் படைத்தாய் என்றான். (38-76)
அதற்கு அல்லாஹ், அவ்வாறாயின் நீ இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன் என்று கூறினான். (38-77)
என்னுடைய சாபமும் தீர்ப்பு நாள் வரை நிச்சயமாக உன் மீது இருக்கும் என்று கூறினான். (38-78)
அதற்கவன், என் இரட்சகனே! இறந்தோர் எழுப்பப்படும் நாள் வரை நீ எனக்கு அவகாசம் அளிப்பாயாக! என்று கூறினான். (38-79)
அதற்கு அல்லாஹ் நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டவர்களில் உள்ளாய் என்று கூறினான். (38-80)
குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரையில் உன் தவணை உண்டு என்று கூறினான் (38-81)
அப்போது அவன் உன் மகத்துவத்தின் மீது சத்தியமாக நிச்சயமாக நான் அவர்கள் அனைவரையும் வழி கெடுத்துவிடுவேன் என்றான். (38-82)
மொத்தம் 15 திரு வசனங்கள் மூலம் அல்லாஹ்வுக்கும், இப்லீஸ் என்பவனுக்கும் இடையில் நடந்த உரையாடல் முடிந்தது.
விளக்கம்:
إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ طِينٍ
உங்கள் இரட்சகன் மலக்குகளிடம் நிச்சயமாக நான் மனிதனைக் களி மண்ணால் படைக்கப் போகிறேன் என்று கூறிய வேளையை நபீயே நீங்கள் நினைவு கூறுவீர்களாக! நினைத்துப் பார்ப்பீர்களாக!
அல்லாஹ் மனுகுலத்தின் தந்தை நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைப் படைப்பதற்கு முன் மேற்கண்டவாறு மலக்குகளிடம் சொன்னான்.
இந்த நிகழ்வின் போது நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பிறக்கவுமில்லை, ஆதம் நபீ அவர்கள் படைக்கப்படவுமில்லை.
எனினும் இந்த நிகழ்வு நடந்து பல்லாயிரம் வருடங்கள் கழிந்த பின் இது பற்றி நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நபீயாக வந்தபின் அவர்களிடம் சொல்லிக் காட்டிய அல்லாஹ் இதை நீங்கள் நினைத்துப் பாருங்கள் என்று பல்லாயிரம் வருடங்களின் பின் சொல்கிறான்.
எந்த ஒரு சம்பவமாயினும் அதில் நேரடியாகக் கலந்து கொண்ட ஒருவரிடமே அந்த சம்பவத்தை அல்லது அந்த நிகழ்வை நினைத்துப் பாருங்கள் என்று சொல்ல முடியும். ஒரு நிகழ்வின் போது அதில் கலந்து கொள்ளாத ஒருவரிடம் அந்த நிகழ்வை நினைத்துப் பாருங்கள் என்று சொல்ல முடியாது. சொன்னாலும் அவருக்குப் புரியாது. அல்லாஹ் இவ்வாறு சொல்கிறான் என்றால் எல்லாமறிந்த அவன் அதை அறிந்துதான் சொல்கிறான் என்பதை உணர்ந்து அதை நம்ப வேண்டும்.
திருக்குர்ஆனில் وَإِذْ என்று வசனம் வரும் இடங்களில் எல்லாம் நபீயே நாயகமே! பின்வரும் நிகழ்வை நினைத்துப் பாருங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் இவ்வாறு வரும் வசனங்களின் தொடக்கத்தில் வந்தள்ள “வாவு” என்ற எழுத்துக்குப் பின்னால், إِذْ என்ற சொல்லுக்கு முன்னால் اُذْكُرْ என்ற ஒரு சொல்லை நாம் ஏற்படுத்தி நினைத்துப் பாருங்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். அப்படியொரு சொல்லை நாம் ஏற்படுத்துவது பிழையாகாது. ஏனெனில் மொழியிலக்கணமும், அறபு மொழி நடையும்தான் அவ்வாறு ஏற்படுத்த சொல்கின்றன. இந்த விபரம் அறபு மொழிலக்கணம் விளங்கி கற்றவர்களுக்குப் புரியும்.
இவ்வாறு ஏற்படுத்துவதன் மூலம் உலகில் அல்லாஹ் நடத்திய நிகழ்வுகளின் போதெல்லாம் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்கள் என்ற அதிசய உண்மையை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் பெருமானார் அவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ளவும் முடியும்.
அல்லாஹ் மனிதனுக்கு “இன்ஸான்” என்ற சொல்லை திருக்குர்ஆனில் பல இடங்களில் பாவித்திருப்பது போல் بَشَرْ “பஷர்” என்ற சொல்லையும் மனிதன் என்ற பொருளுக்கு பல இடங்களில் பாவித்துள்ளான். திட்டமான கணக்கு எனக்குத் தெரியாது. ஆயினும் சுமார் 28 இடங்களில் பாவித்துள்ளான் என்பது என் நினைவில் உண்டு.
அவை, ஆல இம்றான் 47, மாயிதா 18, அன்ஆம் 91, இப்றாஹீம் 10, இப்றாஹீம் 11, நஹ்ல் 103, கஹ்ப் 110, மர்யம் 20, அன்பியா 03, முஃமினூன் 24, முஃமினூன் 33, ஷுஅறா 154, ஷுஅறா 186, றூம் 20, யாஸீன் 15, புஸ்ஸிலத் 06, மர்யம் 26, முத்தத்திர் 25, ஹூத் 27, யூஸுப் 31, ஹிஜ்ர் 28, இஸ்றா 93, மர்யம் 17, முஃமினூன் 34, புர்கான் 54, ஸாத் 71.
இவை என் நினைவில் உள்ளவையாகும். இவையல்லாதவையும் இருக்கலாம்.
இக்குறிப்பு தத்துவப் பேச்சாளர்களுக்கு ஒரு “சதகா”வாக இருக்கும் என்பதற்காகவும், தலைப்பில் நான் எழுதியுள்ள திரு வசனத்தில் இச் சொல் இடம் பெற்றிருப்பதற்காகவுமே எழுதினேன்.
“பஷர்”, “இன்ஸான்” இவ்விரு சொற்களும் மனிதனைக் குறித்தாலும் கூட இவ்விரண்டிற்கும் சிறிய அளவிலான வேறுபாடு உண்டு. அந்த வேறுபாடு பிறருக்குப் புரிய வைக்குமளவு எனக்கு எட்டவில்லை. எட்ட வேண்டுமென்று முயற்சித்தேன். அது எட்டாக் கனியாய் போய்விட்டது. நற்பாக்கியம் உள்ளவர்கள் எட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதன் சுருக்கத்தை அறபியில் தருகிறேன்.
قال الراغب – عبّر الله عن الإنسان بالبشـر اعتبارا بظهور جلده من الشعر، فإنّ البشـرة هو ظاهر الجلد، بخلاف الحيوانات التي عليها الصوف والشعر أو الوَبَرُ، (تفسير روح البيان،المجلّد الثامن، سورة ص، الآية 70-72)
من فاز بالفهم أفادني، ومن لم يفز دعا لي وله، من أعان على طاعة ولو بشطر كلمة كان شريكا له فيها، فإذا أراد المفيد الفاهم منّي شيئا مّا فله ما شاء، لأنّ الجنّة فيها ما تشتهيه الأنفسُ وَتَلَذُّ الأعينُ، وفيها ما لا عينٌ رأت، ولا أذنٌ سمعت،
قال أربابُ الحقائق، أي الصوفيّون، سُمِّي آدم بشـرا، لأنّه باشَرَهُ الحقُّ سبحانه بِيَدَيْهِ عند خلقه مُباشَرَةً لائقةً بذلك الجناب مُقدَّسَةً عن توهُّمِ التّشبيهِ، فإنّ المباشرةَ حقيقةً هي الإفضاءُ بالبَشَرَتَيْنِ، ولذا كُنِّيَ بها عن الجماع،
“அர்பாபுல் ஹகாயிக்” தத்துவங்களின் தந்தைகளான ஸூபிஸ மகான்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
ஆதிபிதா – முதல் மனிதன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “அபுல் பஷர்” மனிதனின் தந்தை – உடலின் தந்தை என்றுதான் பிரசித்தி பெற்றுள்ளார்களேயன்றி “அபுல் இன்ஸான்” மனிதனின் தந்தை, மனுகுலத்தின் தந்தை என்று அறிமுகமாகவில்லை.
நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “இன்ஸான்” என்று பெயர் சொல்லாமல் “பஷர்” என்று முதலில் பெயர் சொன்னவன் அல்லாஹ்தான். அவர்களைப் படைக்கு முன் அவர்களை “பஷர்” என்றே சுட்டிக் காட்டிப் பேசியுள்ளான்.
إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا
என்ற திரு வசனத்தை ஆய்வு செய்தால் இவ் உண்மை புரியும்.
அல்லாஹ் அவர்களுக்கு அவ்வாறு சொன்னதேன்? என்பதை ஆராயத் தொடங்கினால் பக்குவமற்ற, கொள்கையில் பலவீனமானவர்கள் விளங்க முடியாத சில விடயங்களை சொல்ல வேண்டிய தேவை ஏற்படும். அதை நான் இங்கு எழுதினால் ஏற்கனவே எனக்கு “பத்வா” வழங்கிய முல்லாக்களுக்கு மேலும் இரண்டு கால் முளைத்துவிடும். முளைத்தாலும் அவை நொண்டிக் கால்களாகவே இருக்கும். ஆகையால் இவர்களுக்கு பயந்து ஸூபிஸ தத்துவத்தை மறைப்பதற்கு நானும் தயாராக இல்லை. என்போல் ஸூபிஸ சமூகமும் தயாராக இல்லை. சத்தியம் என்றும் சத்தியம்தான். அதை அசத்தியமாக்க எந்த ஒரு முப்தியாலும் முடியாது.
اَلْحَقُّ حَقٌّ وَلَوْ عَادَاهُ دُبٌّ أَوْ بَقٌّ
நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் بَشَرْ “பஷர்” என்று அல்லாஹ்வால் சுட்டிக் காட்டப்பட்டதற்கு ஸூபீ மகான்கள் தரும் விளக்கம் என்னவெனில் அல்லாஹ் அவர்களைப் படைத்தது தொடர்பாக கூறுகையில்
مَا مَنَعَكَ أَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ
இப்லீஸே! எனது இரு கைகளாலும் நான் படைத்த ஒன்றுக்கு நீ சிரம் தாழ்த்த – “ஸுஜூத்” செய்ய ஏன் மறுத்தாய்? என்று கேட்டதிலிருந்து அல்லாஹ் ஆதம் அவர்களை இரு கைகளாலும் படைத்தான் என்று தெளிவாகிறது. يَدٌ என்றால் ஒரு கை என்றும், يَدَيْنِ என்றால் இரு கைகள் என்றும், يَدَيَّ என்றால் எனது இரு கைகள் என்றும் பொருள் வரும்.
அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தனது இரு கைகளாலும் படைத்தான் என்று சொல்லியுள்ளதால் அவனுக்கு மனிதர்களுக்குள்ள கைகள் போல் இரு கைகள் உள்ளன என்று நம்புதல் பிழையாகும்.
எனினும் இவ்வசனத்தை மேலோட்டமாக மட்டும் ஆய்வு செய்தால் ஒரு குயவன் சட்டி, பானை செய்வதற்காக ஓர் இடத்தில் களி மண்ணை நீர் ஊற்றிப் பிசைந்து அவன் குந்திக் கொண்டு சட்டி, பானை செய்வது போல் செய்தான் என்று விளங்கிக் கொள்தலும் கூடாது.
மேற்கண்ட இரண்டு விதமாக நம்புதலும் பிழை என்றால் சரியாக நம்புவது எவ்வாறு என்று முப்தீகளிடமே கேட்க வேண்டும். இந்நாட்டில் “முப்தீ” என்று அரசாங்கத்தால் அல்லது முஸ்லிம் மக்களால் நியமிக்கப்பட்ட “முப்தீ” யார் இருக்கிறார்? அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முப்தீகள் உள்ளார்களே என்று யாராவது சொல்ல முன்வந்தால் அவர் தனது உண்மையான பெயர் முகவரியுடன் வந்தால் அவருக்கு அவர்கள் வெறும் முட்டிகளேயன்றி “முப்தீ”கள் அல்ல என்பதை ஆதாரங்களோடு நிறுவ நான் தயாராக உள்ளேன்.
 
தொடரும்…
RELATED ARTICLES

Most Popular

Recent Comments