தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ_பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
தலைப்பு மூடலானது. வாசிப்பதால் மட்டும் விஷயம் விளங்காது. பின்னால் நான் எழுதியுள்ள விபரத்தையும் வாசித்தறிய வேண்டும்.
குசு வெளியான பின் தொழுதல் கூடாது.
ஒருவன் ஏதோ ஒரு தொழுகையின் கடைசி “றக்அத்”தில் “அத்தஹிய்யாத்” ஓதி முடித்துவிட்டு வழமைபோல் “அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்” என்று “ஸலாம்” சொன்னான். இரண்டாம் “ஸலாம்” சொல்வதற்குள் அவனுக்கு குசு வெளியானால் அவன் இரண்டாம் “ஸலாம்” சொல்லாமல் முதலாம் ஸலாமுடன் நிறுத்திக் கொண்டானாயின் அவனின் தொழுகை நிறைவேறும். குசு வெளியானபின் இரண்டாவது “ஸலாம்” சொன்னால் அவனின் தொழுகை நிறைவேறாது.
இதற்கான காரணமும், விளக்கமும் என்னவெனில் தொழுகையில் முதலாவது ஸலாம் மட்டும்தான் கடமையானதாகும். அது சொல்லாவிட்டால் தொழுகையே வீணாகிவிடும். இரண்டாவது “ஸலாம்” கடமையானதல்ல. அது “ஸுன்னத்” மட்டும்தான். சொல்லாவிட்டாலும் தொழுகை நிறைவேறும். அது “பர்ழ்” கடமை அல்ல.
ஒருவன் முதலாம் “ஸலாம்” சொன்னதோடு தொழுகையின் கடமைகள் யாவும் நிறைவு பெறுகின்றன. அதோடு அவன் தொழுகையை நிறுத்திக் கொண்டாலும் தொழுகை நிறைவேறும்.
ஆயினும் முதலாம் “ஸலாம்” சொன்னபின் இரண்டாம் “ஸலாம்” சொல்வதற்குள் அவனுக்கு குசு வெளியானால் அவன் இரண்டாம் “ஸலாம்” சொல்லக் கூடாது. சொன்னால் தொழுகை நிறைவேறாது. அது “களா” திரும்பத் தொழப்பட வேண்டும். இரண்டாவது “ஸலாம்” சொல்லாவிட்டால் தொழுகை நிறைவேறும்.
இதற்கான காரணம் “வுழூ” சுத்தம் முறிந்த பின் தொழுகையை தொடர்ந்ததேயாகும்.
“வுழூ” சுத்தமின்றி தொழுவதும், “ஸுஜூத்” செய்வதும் “ஹறாம்” தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
மேலே நான் எழுதிய இச்சட்டம் சட்டக்கலை கற்ற உலமாஉகளுக்கும், அறபுக் கல்லூரிகளில் கற்றுக் கொண்டிருக்கும் பெரிய பாட மாணவர்களுக்கும் மட்டுமே தெரியும். பொது மக்களில் அதிகமானவர்களுக்கு இவ்வாறான சட்டங்கள் தெரியாது.
“குசு” அறபு மொழியில் ضُرَاطْ “ழுறாத்” எனப்படும். இது சத்தமாக இருந்தால் மட்டும்தான். சத்தமில்லாமலிருந்தால் அது فُسَاءٌ “புஸாஉன்” என்று சொல்லப்படும்.
எவ்வாறன குசு வெளியானாலும் “வுழூ” சுத்தம் முறிந்து விடும்.
“குசு” என்றால் ஆசன வாய் வழியாக வெளியேறும் (நாற்றமடிக்கும்) வாயு.
“குஷி” என்றால் பொங்கும் மகிழ்ச்சி. மகிழ்ச்சியான மன நிலை. குசு வெளியானால்தான் “வுழூ” முறியும். خُشِيْ “குஷி” வந்தால் முறியாது.
உறக்கம் “வுழூ”வை முறிக்கும். அது சிறு தூக்கமாயினும், பெருந் தூக்கமாயினும் சரியே. அறபு மொழியில் பெருந்தூக்கம் نَوْمْ “நவ்ம்” என்றும், சிறு தூக்கம் سِنَةٌ “ஸினதுன்” என்றும் சொல்லப்படும். இருவகைத் தூக்கமும் “வுழூ”வை முறிக்கும்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்காக வருபவர்களிற் சிலர் “கதீப்” அவர்களின் விளக்கம் உப்பு, உறைப்பு இல்லாதிருந்தால் – அவர் விஷயமில்லாத வெறும் கப்பலாயிருந்தால் பிரசங்கத்தை கேட்காமல் பலர் உறங்குவதையும், பிறகு “வுழூ” இன்றித் தொழுவதையும் காணக் கூடியதாக உள்ளது. யாராயினும் ஒரு நொடி நேரம் உறங்கினாலும் மீண்டும் “வுழூ” சுத்தம் செய்த பின்புதான் தொழ வேண்டும்.
“வுழூ” சுத்தம் முறியாமல் உறங்குவதற்கும் இஸ்லாம் வழிகாட்டுகிறது. இது தொடர்பாக ஸுன்னீ உலமாஉகளிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டும். எழுதினால் சரியாக விளங்க முடியாமற் போய் விடும்.
தொழுகையில் “ஸுஜூத்” நிலையில் தொழுபவனின் ஏழு உறுப்புகள் தரையில் பட வேண்டும். அத்தரையில் பாய், மாபிள், சீமெந்து, விரிப்பு எது இருந்தாலும் குற்றமில்லை. அதன் மீது “ஸுஜூத்” செய்யலாம். “ஸுஜூத்” செய்யுமிடம் சுத்தமாயிருத்தல் அவசியம். எந்த வஸ்த்தின் மீதும் “ஸுஜூத்” செய்யலாம். “ஸுஜூத்” செய்யுமிடம் – நெற்றியை வைக்கும் இடம் உடலை விட பணிவானதாக இருக்க வேண்டும். அது உடலை விட உயரமானதாக இருத்தல் கூடாது. “ஸுஜூத்” செய்யும் வேளை நெற்றி மட்டுமே தரையில் படுவது அவசியமாகும். மூக்கு படுவேண்டுமென்பது அவசியமில்லை. ஆயினும் மூக்கும் தரையை தரையை தொடும் வகையில் “ஸுஜூத்” செய்தல் மிக நல்லது.
“ஸுஜூத்” செய்யும் நேரம் தரையில் அவசியம் பட வேண்டிய உறுப்புகள் ஏழு. ஏழும் ஒரே நேரம் தரையில் பட வேண்டும். அவை,
01. நெற்றி
02. இரு உள்ளங்கைகள்
03. இரு முழங்கால்கள்
04. இரு கால் விரல்களின் உட்பகுதிகள்.
மொத்தம் ஏழு உறுப்புகளாகும். இவ் ஏழு உறுப்புகளில் நெற்றி மட்டும் திரையின்றி தரையில் பட வேண்டும். அதாவது தொழுபவன் சுமந்துள்ள எந்த ஒரு வஸ்த்தும் நெற்றிக்கும், தரைக்குமிடையில் திரையாக இருத்தல் கூடாது. அவ்வாறிருந்தால் அந்த “ஸுஜூத்” நிறைவேறாது.
உதாரணமாக தொழுகின்ற ஒருவரின் தொப்பி அல்லது தலைப்பாகை அல்லது கைலேஞ்சு போன்ற ஏதோ ஒன்று அவனின் நெற்றிக்கும், தரைக்கும் திரையாக அமைந்திருத்தல் கூடாது. சட்டம் தெரியாமல் சிலர் இவ்வாறு செய்கிறார்கள். தினமும் வழமையாக தொழுகின்ற ஒருவர் இவ்விடயத்தில் பேணுதலாக இருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் வருடத்தில் ஒரு தரம் பெருநாள் தொழுகைக்காக மட்டும் தொப்பி போடுபவரும், கைலேஞ்சு கட்டுபவரும் நெற்றியை மறைத்திருப்பதை காண முடிகிறது. இவர்கள் இவ்விடயத்தில் ஸுன்னீ உலமாஉளிடம் சட்ட விதிகளைக் கேட்டறிந்து செயல்பட வேண்டும்.
இரு கைகளின் உள்ளங்கைகள் தரையில் திரையுடன் படுவது குற்றமாகாது. இதேபோல் கால்கள் திரையுடன் படுவதும் குற்றமாகாது. சுருங்கச் சொன்னால் கை, கால்களுக்கு “சொக்ஸ்” உறைகள் போடுவது குற்றமாகாது.
முழங்கால் இரண்டும் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். முழங்கால்கள் இரண்டும் திரையோடு தரையில் படுவது கடமை. அவ்விரண்டும் வெளியே தெரியுமளவு “ஸுஜூத்” செய்தால் அது நிறைவேறாது. அது மட்டுமன்றி முழங்காலுக்கும், தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதி எல்லா நேரங்களிலும் மறைக்கப்பட வேண்டியதாகும்.
ما بين السرة والركبة عورة
முழுங்காலுக்கும், தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதி “அவ்றத்” ஆகும். இது தொழுகையில் மட்டுமன்றி எல்லா நேரங்களிலும் மறைக்க வேண்டியது அவசியமானதே!
முஸ்லிம்களிற் பலர் அறிந்தோ, அறியாமலோ குறித்த பகுதியை மறைக்காமல் வீதிகளில் கூட நடமாடுகிறார்கள். இது “ஹறாம்” தண்டனக்குரிய குற்றமேயன்றி “மக்றூஹ்” போன்ற தண்டனையற்ற செயல் அல்ல. இவ்வாறு சாதாரணமாக செய்பவர்கள் இனிமேல் அவ்வாறு செய்வதை தவிர்ப்பது கடமையாகும்.
உதைப்பந்தாட்ட விளையாட்டின் போது விளையாடுபவர்களில் அநேகமானவர்கள் முழங்காலுக்கும், தொப்புளுக்குமிடைப்பட்ட பகுதியை முழுமையாக மறைப்பதில்லை. இதன் பிறகு அவர்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தொழுகையில் “ஸுஜூத்” செய்யும் வேளை இரு கால் விரல்களின் உட்பகுதி தரையில் பட வேண்டும். எல்லா விரல்களையும் மடக்கி வைப்பதற்கு முடியாதவர்கள் தம்மால் முடிந்தவரை ஒரு சில விரல்களின் உட்பகுதியாவது தரையில் படும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். விரல்களை அறவே மடக்கி வைக்க முடியாதவர்கள் விரல்களின் நுனியாவது தரையில் படும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட ஏழு உறுப்புக்களும் உரிய முறையில் வைக்கப்பட்டிருந்தால் மட்டும்தான் “ஸுஜூத்” நிறைவேறும். இவ்விடயத்தில் தொழுபவர்களில் அதிகமானவர்கள் தவறு செய்வதை காண முடிகிறது.
மேற்கண்ட ஏழு உறுப்புக்களும் தரையில் பட வேண்டுமென்று “ஷரீஆ” சட்டம் கூறுவது அர்த்தமற்ற, தத்துவமற்ற வெறும் செயல் அல்ல. ஏழின் பின்னணியில் எத்தனையோ இறைஞான தத்துவங்கள் மறைந்தள்ளன. அவற்றை பொது மக்களிடம் கூறி அவர்களுக்கு தத்துவத்தை உணர்த்துவது உலமாஉகளின் கடமையேயன்றி பொது மக்களின் கடமையல்ல. தண்டிக்கப்படுபவர்கள் உலமாஉகள்தான். பொது மக்கள் அல்ல. “ஷரீஆ”வின் சட்டம் சொல்லும் போது அதன் பின்னணித் தத்துவமும் கூறப்பட வேண்டும். இன்றேல் அது செக்கு மாட்டின் கதையாகிவிடும்.
ஏழு உறுப்புகளையும் தரையில் வைத்திருக்கும் நிலைதான் “ஸுஜூத்” இன் நிலையாகும். தொழுகையில் “கியாம்” நிற்கும் நிலை, “றுகூஉ” குனிந்திருக்கும் நிலை, “ஸுஜூத்” தரையில் சிரம் வைக்கும் நிலை, “ஜுலூஸ்” இருக்கும் நிலை என்று பல நிலைகள் உள்ளன. இவற்றில் ஓர் அடியான் அல்லாஹ்வை மிக நெருங்கிய நிலை “ஸுஜூத்” நிலை மட்டும்தான்.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ، وَهُوَ سَاجِدٌ،
ஓர் அடியான் தனது இரட்சகனான அல்லாஹ்வுக்கு மிக நெருங்கிய கட்டம் அவன் “ஸுஜூத்” நிலையில் இருக்கும் கட்டமாகும் என்று நபீ அலைஹிஸ்ஸலாது அவர்கள் அருளினார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம்)
அல்லாஹ் அடியானுக்கு ஒரு நொடி நேரம் கூட தூரப்பட்டவனாக இல்லை என்பதும், அல்லாஹ் அவனுக்கு அவனின் பிடரி நரம்பு – முதுகு முள்ளை விட நெருங்கியுள்ளான் என்பதும் திருக்குர்ஆன், நபீ மொழிகள் மூலம் நிறுவப்பட்ட உண்மைத் தத்துவமாயிருக்கும் நிலையில், அல்லது இன்னொரு பாணியில் சொல்வதாயின் அல்லாஹ் மனிதன் தானாக இருக்கும் நிலையில் அவன் மிக நெருங்கிய நேரம் “ஸுஜூத்” செய்யும் நேரம் என்று எவ்வாறு சொல்ல முடியும்? என்று ஒருவர் கேட்பாராயின் அவருக்குப் பின்வருமாறு பதில் கூறலாம்.
அல்லாஹ்வுக்கும், மனிதனுக்குமிடையிலுள்ள நெருக்கம் அல்லாஹ் தானான நெருக்கமாயினும் “மஹப்பத்” அன்பு பாசம், இரக்கம் என்பவற்றைக் கவனித்தே அடியான் “ஸுஜூத்” இல் இருக்கும் நேரம் என்று சொல்லப்பட்டுள்ளதென்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒருவன் தனக்குள்ள ஒரு தேவையை இன்னொருவனிடம் வாயால் கேட்டும் பெறலாம். அல்லது மற்றவன் இவனின் தேவையை அறிந்து இவன் அவனிடம் கேட்காமலேயே அவன் இவனின் தேவையை நிறைவேற்றியும் வைக்கலாம். இவ்விரண்டிலும் பிந்தினதே அன்பின் உச்சக்கட்டமாகும். இதுவே “மஹப்பத்” என்று சொல்லப்படும். இந்நிலை உள்ளவனே “ஹபீப்” என்றும் அழைக்கப்படுவான்.
நபீ பெருமான் அலஹிஸ்லாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் حبيب الله ஹபீபுல்லாஹ் ஆவார்கள். அவர்கள் அவனின் خليل الله அல்ல. இரண்டு வசனங்களுக்கும் “அல்லாஹ்வின் அன்பன்” என்று பொருள் கூறிக் கொண்டாலும் கூட இரண்டுக்குமிடையில் தரத்தில் வித்தியாசம் உண்டு. “ஹபீப்” மலை உச்சியில் நிற்பார். “கலீல்” அதன் அடியில் இருப்பார்.
அக்பர் என்பவன் அம்ஹர் என்பவனின் “ஹபீப்” என்று சொல்வதாயின் அக்பர் தனது தேவையை அம்ஹரிடம் வாயால் கேட்டுப் பெறுமுன் அம்ஹர் அக்பரின் நிலையை அறிந்து அவன் கேட்காமலேயே அவனுக்கு கொடுப்பவனாக இருக்க வேண்டும்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கேட்டுப் பெற்றுக் கொண்டதை விட அல்லாஹ்விடம் தனது தேவைகளை கேட்காமல் பெற்றுக் கொண்டதே அதிகம்.
முஸ்லிம்களின் “கிப்லா”வாக ஜரூசலத்திலுள்ள “பைதுல் முகத்தஸ்” இருந்த கால கட்டத்தில் அதை அண்ணலெம்பிரான் அவர்கள் மனதால் விரும்பவில்லை. திருப்தி பெறவில்லை. அல்லாஹ் அதை மக்காவிலுள்ள “கஃபா”வின் பக்கம் மாற்றித் தர வேண்டுமென்று விரும்பினார்கள். அவ்வளவுதான். மறு கணமே பின்வரும் திரு வசனம் அருளப்பட்டது.
قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ
“அல்லாஹ்வின் றசூலே உங்களின் மனது “கஃபா”வின் பக்கம் “கிப்லா” மாற்றப்பட வேண்டும் என்று விரும்புவதை நாங்கள் அறிவோம். ஆகையால் நீங்கள் இதன் பிறகு “கஃபா”வின் பக்கம் – “மஸ்ஜிதுல் ஹறாம்” பக்கம் முன்னோக்குங்கள்” என்று கூறினான்.
இது பெருமானார் அவர்கள் அல்லாஹ்விடம் வாயால் கேட்டுப் பெற்றதல்ல. அவர்களின் மனம் விரும்பியதை அறிந்த அல்லாஹ் அவர்கள் கேட்காமலேயே அவர்கள் நினைத்ததை கொடுத்தான். “ஹபீப்” ஆகிய பெருமானாருக்கு “மஹ்பூப்” ஆகிய அல்லாஹ் வழங்கினான்.
தொழுகையில் ஏழு உறுப்புகள் தரையில் பட வேண்டும் என்று எழுதினேன். இதற்கான ஆன்மிகம் உணர்த்தும் காரணத்தை எழுதவில்லை. இது அடுத்த தொடரில் இடம் பெறும்.
தொடரும்…