தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
قد عُرف ابن تيميّة فى بعض الأوساط بشيخ الإسلام، ولم ينفرد بذلك الوصف، فقد عُرف كثيرٌ من علماء الأئمّة بشيخ الإسلام، ففى ‘نُزهةالألباب فى الألقاب ‘ للحافظ ابن حجر (1-410) فى تعريفه كلمة شيخ الإسلام قال: شيخ الإسلام لُقِّبَ بها قديما أبو إسماعيل عبد الله بن محمد الأنصاري، صاحب ‘ منازل السائرين وذمّ الكلام ‘، ثمّ لُقب بها جماعة بعده، (أخطاء ابن تيميّة، ص
தமிழாக்கம்:
“இப்னு தைமிய்யா” என்பவர் “ஷெய்குல் இஸ்லாம்” என்று சிலரால் அறிமுகம் செய்யப்படுபவராவார். ஆயினும் இஸ்லாமிய வரலாற்றில் இவர் மட்டும் இப்பட்டம் மூலம் அறியப்பட்டவரல்லர். இஸ்லாமிய சமூகத்தில் இப்பட்டம் சூட்டப்பட்ட பலர் வாழ்ந்துள்ளார்கள்.
அல்ஹாபிள் இமாம் இப்னு ஹஜர் அல்ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் نُزهةالألباب فى الألقاب எனும் நூல் முதலாம் பாகம் 410ம் பக்கத்தில் “ஷெய்குல் இஸ்லாம்” என்ற பட்டம் தொடர்பாக எழுதுகையில் முதலில் இப்பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டவர் அபூ இஸ்மாயீல் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் அல் அன்ஸாரீ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இவ்வாறு பட்டம் வழங்கப்பட்ட இவர் منازل السائرين وذمّ الكام எனும் நூலாசிரியராவார். பின்னர் இப்பட்டம் வழங்கி பலர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
ஆதாரம்: أخطاء ابن تيمية “அக்தாஉ இப்னி தைமிய்யா”, பக்கம் 08,
ஆசிரியர்: மஹ்மூத் அஸ்ஸெய்யித் ஸபீஹ் அவர்கள்.
மர்கஸ் அஹ்லுஸ்ஸுன்னத், இமாம் அஹ்மத் ரிழா வீதி, பூர்பந்து, குஜ்றாத், இந்தியா.
இஸ்லாமிய வரலாற்றில் “ஷெய்குல் இஸ்லாம்” “இஸ்லாமின் தலைவர்” என்று பலர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
இமாம் ஙஸ்ஸாலீ, இமாம் பக்றுத்தீன் அர் றாஸீ, இமாம் ஸுயூதீ, இமாம் இப்னு ஹஜர், இன்னுமிவர்கள் போல் பலரை குறிப்பிடலாம்.
இவ்வாறு பட்டம் வழங்கப்பட்ட ஒருவர்தான் ஹிஜ்ரீ 661ல் சிரியா நாட்டின் “ஹர்றான்” எனும் ஊரில் பிறந்து ஹிஜ்ரீ 728ல் சிரியாவின் சிறை ஒன்றில் கைதியாயிருந்து அங்கேயே மரணித்த “இப்னு தைமிய்யா” என்பவராவார். இவர் மரணிக்கும் போது இவரின் வயது 67.
இவரின் ஆதரவாளர்கள் இவரை “ஷெய்குல் இஸ்லாம்” என்று அழைத்து வந்ததால் இவரின் அந்தரங்க வரலாறு தெரியாதவர்களும் அவ்வாறே அழைத்து வந்தனர்.
இவர் மரணித்து சுமார் 383 வருடங்களின் பின் ஹிஜ்ரீ 1111ல் சஊதி அரேபியாவின் “நஜ்த்” எனும் ஊரில் பிறந்து ஹிஜ்ரீ 1206ல் மரணித்தவர்தான் வஹ்ஹாபிஸ வழிகேட்டிற்கு கருவாக இருந்த இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவராவார். இவ்விருவருக்கும் இடைப்பட்ட காலம் 383 வருடங்களாகும். இவரையும் சிலர் “ஷெய்குல் இஸ்லாம்” என்று அழைத்து வந்தார்கள்.
இவர் இப்னு தைமிய்யாவை விட அறிவில் குறைந்தவராயும், அவதந்திரத்தில் அவரை விட கூடினவராயும் இருந்தார்.
இன்று உலகெங்கும் வாழ்கின்ற வஹ்ஹாபிகள் அனைவரும் இவரின் கொள்கையையும், இப்னு தைமிய்யாவின் கொள்கையையும் நூறு வீதம் ஏற்றுக் கொண்டவர்களேயாவர். உலக முஸ்லிம்களில் ஸுன்னீகளாயிருந்தவர்களில் தடம் புரண்டவர்களிற் பலர் இவர்களின் கொள்கையை பின்பற்றியவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
பட்டங்கள் வந்த வரலாறு.
இமாம், ஷெய்குல் இஸ்லாம், ஷம்ஸுல் உலமா, அஃலா ஹழ்றத் போன்ற பட்டங்கள் மனிதர்களால் சூட்டப்படுகின்ற பட்டங்களேயன்றி விலாயத், நுபுவ்வத், ரிஸாலத் போன்று அல்லாஹ்வினால் வழங்கப்படுகின்ற பட்டங்களல்ல.
ஓர் ஊரில் உள்ள ஓர் ஆலிம் மற்ற ஆலிம்களை விட அறிவில் சிறந்தவராயிருந்தால் அவ் ஊரில் உள்ள மக்கள் அவருக்கு “ஷம்ஸுல் உலமா” என்றோ, “இமாம்” என்றோ, “ஷெய்குல் உலமா” என்றோ ஒரு பட்டம் வழங்கி அவரை கௌரவிப்பது வழக்கம். இவ் அடிப்படையில் ஒருவருக்கு ஒரு பட்டம் வழங்கப்பட்டால் ஊர் மக்கள் அப்பட்டத்தை சொல்லியே அவரை அழைப்பார்கள். சில காலத்தின் பின் அவ் ஊர் மக்களுக்கு அவரின் பெயர் தெரியாமலேயே போய்விடும்.
ஓர் ஊரிலுள்ள பல கவிஞர்களில் ஒருவர் மிகத் திறமையானவராயிருந்தால் அவருக்கு “றயீஸுஷ் ஷுஅறா” என்று ஒரு பட்டம் வழங்குவார்கள். அன்று முதல் அவர் அப்பட்டம் கொண்டே அழைக்கப்படுவார். சில காலத்தின் பின் அவ் ஊரவர்களுக்கு அவரின் இயற் பெயரே மறந்து விடும்.
துன்யாவுடைய விடயங்களிலும், மார்க்க விடயங்களிலும் இவ்வாறுதான் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறுதான் ஒரு தரீகாவின் “ஷெய்கு” குருவாக இருப்பவரும் அந்த தரீகாவாதிகளால் ஷெய்குல் இஸ்லாம், ஷெய்குல் மஷாயிக் என்று பட்டங்கள் சூட்டி அழைக்கப்படுவார்கள்.
இன்னும் சிலருளர். இவர்கள் ஷெய்குமார் பரம்பரையை சேர்ந்தவர்களாயிருப்பார்கள். ஆயினும் மார்க்க அறிஞர்களாகவோ, இறைஞானம் தெரிந்தவர்களாகவோ இருக்கமாட்டார்கள். அறபு நூல்களை வாசிப்பதற்குக் கூட தெரியாதவர்களாகவே இருப்பார்கள். இவர்களில் ஒரேயொரு விஷேடம் மட்டுமே இருக்கும். அதாவது பரம்பரை மஷாயிகுமார் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இது மட்டுமே அவர்களில் உள்ள விஷேட அம்சமாகும்.
இவர்களிடம் “பைஅத்” ஞானதீட்சை பெற்றவர்கள் இவர்களை “ஷெய்குல் இஸ்லாம்” என்றும், “ஷெய்குல் மஷாயிக்” என்றும் அழைப்பார்கள்.
எனவே, “ஷெய்குல் இஸ்லாம்” என்றோ, அல்லது “ஷம்ஸுல் உலமா” என்றோ அழைக்கப்படுபவர்கள் அனைவரும் அறிவுக் கடல்களாக இருப்பார்கள் என்பது கருத்தல்ல. சிலர் அறிவாளிகளாகவும், இன்னும் சிலர் அரை குறைகளுமாகவுமிருக்கலாம். இதை நான் மறுக்கவில்லை.
இன்னும் சிலருளர். அவர்களுக்கு மௌலவீ தராதரப் பத்திரம் கூட இருக்காது. ஆயினும் அவர்கள் அறிவு ஞானங்களில் பெரும் கடல்களாக இருப்பார்கள். இலைமறை காய்கள் போல் வாழ்வார்கள்.
ஒருவருக்கு “இமாம்” என்ற பட்டமும் இவ்வாறு வழங்கப்படும் பட்டமேயாகும். ஓர் ஊரில் ஓர் அறிவாளி இருந்தால் அவரை கண்ணியப்படுத்தும் வகையில் அவரின் ஆதரவாளர்கள் அவரை “இமாம்” என்று அழைப்பார்கள். இறுதியில் அவரை ஊர் மக்கள் அனைவரும் அவ்வாறே அழைப்பார்கள். அவர்களில் யாராவதொருவன் இமாம் அத்ஹம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் என்று சொன்னானாயின் விஷயம் தெரியாதவர்களும் அவரை அவ்வாறே சொல்லத் தொடங்கிவிடுவார்கள். இறுதியில் அவர் இமாம் என்றே அழைக்கப்படுவார். அவரின் பெயர் எவருக்கும் தெரியாமல் மறைந்துவிடும். இவ்வாறு இமாம் பட்டம் பெற்றவர்களும் உலகில் வாழ்கிறார்கள்.
எவர் எவருக்குப் பட்டம் வழங்கினாலும் அப்பட்டம் அவருக்குப் பொருத்தமானதாயிருக்க வேண்டும். ஆனாவும், அலிபும் தெரியாத ஒருவருக்கு அறிவுலக மாமேதை என்றும், “கிப்லா” எந்தப் பக்கம் உள்ளதென்று தெரியாத ஒருவருக்கு “தாயிமுஸ்ஸலாஹ்” தொழுகை நிரந்தரமானவர் என்றும் பட்டம் வழங்குவதும், வட்டித் தொழிலிலேயே வாழ்நாளை கழித்த ஒருவனுக்கு شَيْخٌ وَرِعٌ “மார்க்கப்பற்றுள்ள மகான்” என்று பட்டம் வழங்குவதும் நகைப்புக்குரியதும், பாவச் செயலுமாகும்.
சில ஊர்களில் அரசியல்வாதி அல்லது பணக்காரன் ஒருவன் மரணித்தால் அவனின் ஜனாஸா தொழுகைக்காக பள்ளிவாயலில் கூடும் மக்கள் மத்தியில் மரணித்தவன் தொடர்பாக யாராவது ஒருவர் பேசுவதை நாம் காண்கிறோம். இது நல்ல காரியம்தான். இதை நான் மறுக்கவில்லை. ஏனெனில்
اُذْكُرُوْا مَحَاسِنَ مَوْتَاكُمْ وَكُفُّوْا عَنْ مَسَاوِيْهِمْ
“உங்களில் மரணித்தவர்களின் நல்ல காரியங்களை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுங்கள். அவர்கள் செய்த பாவங்கள், தவறுகளை எடுத்துக் கூறாதீர்கள்” என்று எம் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களே அருளியுள்ளதால் மரணித்தவர்களின் நன்மையான காரியங்களை நாம் சொல்லத்தான் வேண்டும், ஆயினும் இந்த நன்மையைச் செய்வதற்காக அதோடு இன்னொரு பாவத்தை நாம் செய்வது கூடாது.
ஒருவர் மரணித்தால் முடிந்தவரை அவரின் நல்லடக்கப்பணியை துரிதப்படுத்த வேண்டும். இதுவே இஸ்லாம் கூறும் அறிவுரையாகும். அவசியத் தேவையின்றி அடக்கப்பணிகளை பிற்படுத்துவது கூடாது. மரணித்தவரின் நற்பணிகள், நற் பண்புகளை மக்கள் மத்தியில் சொல்ல வேண்டுமாயின் அடக்கப் பணிகளை முடித்துவிட்டு சொல்ல வேண்டும். இதற்காக அடக்க வேலையை பிற்படுத்தக் கூடாது.
ஏனெனில் மரணித்த ஒருவர் – மையித் நல்ல மனிதனாயிருந்தால் அவரின் அடக்கப் பணிகள் பிற்படுத்தப்படும் போது அந்த மையித் قَدِّمُوْنِيْ قَدِّمُوْنِيْ என்னை முற்படுத்துங்கள், என்னை முற்படுத்துங்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கும் என்று நபீ பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
ஒரு மணமகன் குளித்து, புதிய ஷேட், கோட், றவ்சர் உடுத்து, நல்ல அத்தர் – குளோன் வாசம் பூசி மணவறைக்குள் நுழைந்து மணமகளை கண்டு மகிழ எவ்வளவு ஆசையோடு இருப்பானோ அவ்வாறுதான் மரணித்த ஒரு நல்லடியானுமாவான்.
ஒரு நல்லடியானின் “மையித்” குளிப்பாட்டி, கபன் செய்து, மணங்கள் பூசி முடிந்தபின் அவனை தாமதமின்றியும், அவசியத் தேவையின்றி பிற்படுத்தாமலும் அவன் அல்லாஹ்வை சந்திப்பதற்கு அவசரமாக வழி செய்து கொடுக்க வேண்டும்.
மரணித்தவனுக்காக திருக்குர்ஆன் ஓத வேண்டுமா? ஓதுங்கள். அது நற்பணியே! மரணித்தவரின் ஆன்ம சாந்திக்காக “ஸலவாத்” சொல்ல வேண்டுமா? சொல்லுங்கள். அது நல்ல காரியமே! மரணித்தவன் பெயரால் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டுமா? அளியுங்கள். அது நல்ல காரியம்தான். இவற்றை அடக்கிய பின் செய்யுங்கள். மணமகனை மண மகளிடம் அவசரமாக அனுப்பி வையுங்கள். தாமதிக்காதீர்கள்.
மரணித்தவன் நல்லவனாயின் அவரைப் புகழுங்கள். அவர் “விலாயத்” ஒலித்தனம் உள்ளவராயின் பொது மையவாடியிலன்றி தனிப்பட்ட இடத்தில் அடக்கம் செய்து “தர்ஹா” கட்டுங்கள். அவரின் நினைவாக கந்தூரி அன்னதானம் வழங்குங்கள். இவையெல்லாம் நல்ல காரியங்கள்தான். தாராளமாக செய்யுங்கள்.
யாராவதொருவன் இவை யாவும் “பித்அத்” என்றும், “ஷிர்க்” என்றும், “குப்ர்” என்றும் சொல்கிறானா? அவனுக்கு நல்வழி பெறும் நோக்கம் இருந்தால் மட்டும் அவனை என்னிடம் அனுப்புங்கள். அவன் உயிர் பெறுவான்.
“ஷெய்குல் இஸ்லாம்” என்று வஹ்ஹாபிகளால் போற்றிப் புகழப்படும் இப்னு தைமிய்யா யாரென்று இன்னும் சில நாட்களில் உங்களுக்குத் தெரிய வரும்.
இன்ஷா அல்லாஹ்!