தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
36 வருடங்களுக்கு முன் ஏந்தல் ஹாஜா அவர்கள் காட்டிய அற்புதம். (சரியான ஆண்டு நினைவில் இல்லை)
நானும், மௌலவீ ALM இஸ்மாயீல் (சின்ன சமது மௌலீ) அவர்களும் சென்னையிலிருந்து கேரளா – மலையாள மாநிலம் செல்வதற்காக பேருந்துக்கான “டிக்கட்” எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்த சமயம் 1966ம் ஆண்டு வேலூர் “அல் பாகியாதுஸ் ஸாலிஹாத்” அறபுக் கல்லூரியில் என்னுடன் ஓதிக் கொண்டிருந்த அதிராம் பட்டணத்தைச் சேர்ந்த நண்பர் மௌலவீ மர்ஹூம் அப்துல் பத்தாஹ் அவர்கள் எதிர் பாராமல் வழியில் சந்தித்தார்.
மூவரும் சைவ ஹோட்டல் ஒன்றில் காலை நாஸ்த்தாவுக்காக சென்று அங்கு பேசிக் கொண்டிருந்தோம்.
கேரளா மாநிலத்தில் அடக்கம் பெற்றுள்ள வலீமாரைச் சந்திப்பதற்காக இன்றிரவு அங்கு பயணிக்க உள்ளோம் என்று சொன்ன போது நண்பர் அப்துல் பத்தாஹ் இப்போது கேரளாவுக்குச் செல்லாமல் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் ஷரீப் சென்று அண்ணல் ஹாஜாவை சந்தியுங்கள். அதன் பிறகு கேரளா செல்லுங்கள் என்றார்.
பணம் கொடுத்துப் பெற்ற பேருந்துக்கான டிக்கட்டை உரியவரிடம் கொடுத்து பணம் கேட்ட போது மறுத்துவிட்டார். அந்த டிக்கட்டை ஓர் ஏழையின் கையில் அன்பளிப்பாக வைத்துவிட்டு புகையிரதத்தில் “அஜ்மீர் ஷரீப்” செல்வதற்கான ஏற்பாடு செய்து டில்லி, ஜெய்ப்பூர் வழியாக அஜ்மீர் ஷரீப் சென்றோம். சுமார் 60 மணித்தியாலங்கள் இப்பயணத்திற்கு தேவைப்பட்டது.
அஜ்மீர் பதியில் கால் வைத்தவுடன் ஹாஜாவிடம் ஐந்து நாட்கள் தங்கியிருப்பதற்கென்று முடிவு செய்து “கரீப் நவாஸ் கெஸ்ட் ஹவுஸ்” ஹோட்டலில் “றூம்” எடுத்து தங்கியிருந்தோம்.
அன்று காலை “ஸுப்ஹ்” தொழுகைக்காக “ஸந்தல் மஸ்ஜித்” சந்தனப் பள்ளி சென்றோம். அங்குள்ள சனக் கூட்டத்தைக் கண்ட போது இது “ஸுப்ஹ்” தொழுகையா? ஜும்ஆ தொழுகையா? என்று எண்ணிக் கொண்டு தொழுது முடித்துவிட்டு ஹாஜாவை தரிசிப்பதற்காக அவர்கள் துயிலும் அறைக்குள் நுழைந்தோம்.
ஸுப்ஹானல்லாஹ்! என்னை மின்சாரம் தாக்கியது போன்ற ஓர் உணர்வைப் பெற்று நான் இல்லாமலானேன். எவ்வளவு நேரம் உள்ளே நின்றேன்? என்ன செய்தேன்? எவ்வாறு வெளியே வந்தேன்? என்பதை நான் அறியவில்லை.
என்னை ஆட்கொண்டிருந்த ஹாஜாவின் ஆன்மிக மேகம் கலைந்தது. பின்னர் நான் இருப்பதாக உணர்ந்தேன்.
தொடராக மூன்று நாட்கள் தங்கியிருந்தோம். அதிக நேரங்களை அவர்களின் சந்நிதானத்தில் கழித்தோம். உடலுக்கு உகந்த, நாவுக்கு ருசியான பல்வகை சுவையான உணவுகள் இருந்தும் கூட ஆன்மிக உணவையே அதிகம் புசித்தோம். ஒளியுணவு எங்களின் ஆன்மிகத்தை தட்டி எழுப்பியது. இருள் சூழ்ந்த உள்ளத்தை ஒளிரச் செய்தது.
காலை, மாலை, இரவு, பகல் வேறுபாடின்றி ஹாஜாவின் காலடியில் கிடந்தோம். அழுதோம். சலித்தோம். கெஞ்சினோம். எமக்கிருந்த தேவைகளை ஒன்றன் பின் ஒன்றாக முன் வைத்து அவசியம் தேவையானதைப் பெற்றுக் கொண்டோம்.
وَاللهُ هُوَ الْمُعْطِيْ
அல்லாஹ்தான் கொடுப்பவன். ஹாஜா அல்ல. இது எமக்குத் தெரியும். எனினும் مُعْطِيْ கொடுப்பவன் என்ற அவனின் திரு நாமம் செயல்படுவதற்கு ஒரு “மள்ஹர்” – பாத்திரம் வேணுமல்லவா? அவன் எது செய்வதாயினும் “மள்ஹர்” என்ற ஏதாவதொரு பாத்திரமின்றி எதுவும் செய்வதில்லையே! இந்த ஹாஜாவை தனது கொடை வெளியாகும் பாத்திரங்களில் ஒருவராக ஆக்கிக் கொண்டான் என்ற நம்பிக்கையோடு அவனிடம் கேட்கும் பாணியிலேயே அவர்களிடமும் கேட்டோம். பெற்றுக் கொண்டோம்.
ஒரு நாளிரவு “இஷா” தொழுகையை முடித்துவிட்டு ஹாஜா துயிலும் அறைக்குள் நுழைந்தேன். அவர்களை முன்னோக்கி கையேந்தி நின்றேன். கண்களை இறுக மூடிக் கொண்டேன். ஒரு பெண்ணின் அழுகைக் குரல் என் காதை துளைத்தது. என் கல்பை நனைத்தது. கண்களைத் திறந்தேன். இந்து மதப் பெண் ஒருத்தி ஏழு வயது மதிக்கத்தக்க சிறுவனைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அழுவதைக் கண்டேன். அவள் என்ன சொல்கிறாள் என்பதை அறிந்து கொள்வதற்காக அவளை சற்று நெருங்கி காது கொடுத்துக் கேட்டேன். அவள் தனது சொந்த மொழியான இந்து மொழியில் புலம்பினாள்!
“ஹாஜாவே! ராஜஸ்த்தான் மாநிலத்தின் ராஜாவே! என் இதயத்தில் மலர்ந்த ரோஜாவே! இரக்கத்தின் வெளிப்பாடே! இருளகற்றும் ஒளி விளக்கே!
எனது இந்த மகன் நான் பெற்றவனாயினும் தந்தது நீங்கள்தான். பல்லாண்டுகளாக பாலகன் பாக்கியமின்றி பரதேசி போல் நாடெல்லாம் சுற்றித் திரிந்தேன். நான் சந்திக்காத வைத்தியர் வையகத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
இறுதியில் உங்களை நாடி வந்தேன். ரோசா மலர் மாலை உங்களுக்குச் சூடி பாலகன் ஒருவனைப் பரிசாகத் தாருங்கள் என்று கெஞ்சினேன். தங்களின் பாதணி என் தலைமேல் வைத்து பாதம் பணிந்து நின்றேன். தாங்கள் காட்டிய சமிக்ஞை என் கர்ப்பாசனத்தை தொட்டது. மன நிறைவோடு மனை மீண்டேன். மூன்று மாதங்கள் பொறுத்திருந்தேன். நான் வடித்த கண்ணீர் உங்களின் உள்ளத்தை கசிய வைத்து விட்டது போலும். அன்பிற்குரிய இந்த மகனை அன்பளிப்பாக தந்தீர்கள்.
மகிழ்ந்தேன். மகிழ்ச்சி மேலீட்டால் தரையில் விழுந்து விழுந்து மகிழ்ச்சிக் கண்ணீர் உகுத்தேன். நான் கண்டவர்களிடமெல்லாம் உங்களின் அபார சக்தியை கூறினேன்.
ஆயினும் அள்ளித் தந்த நீங்கள் என் மகனின் நாவைக் கிள்ளிப் பிடித்துக் கொண்டீர்களே ஹாஜா! இவனின் மழலை மொழி கேட்டு என்னால் மகிழ முடியாமற் போயிற்றே யாஹாஜா! நான் என்ன குற்றம் செய்தேனோ! என்னை மன்னித்து என் மகனின் நாவை விட்டு விடுங்கள். என்னிடம் உள்ளதையும், எனக்குரியதையும் உங்களுக்கே தந்து விடுகிறேன்”
இவ்வாறு அவள் புலம்பியதைக் கேட்டு என் மனம் நெருப்பில் உருகிய மெழுகு போலாயிற்று.
நான் ஹாஜாவை நோக்கி, கருணையின் களஞ்சியமே! இரக்கத்தின் இருப்பிடமே! يَا مُعْطِيَ الْمَسُوْلْ உங்கள் இடத்தில் நான் இருந்தால் …. என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.
மறு நாட் காலை “தர்பார்” செல்வதற்காக நான் அஜ்மீர் நகரில் தங்கியிருந்த வீட்டின் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தேன். வீட்டு முற்றத்தில் ஹிந்தி மொழி நாளிதழை கையில் வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் முதவல்லீ றஊப் ஸாஹிப் என்னைக் கண்டதும் “மவ்லவீ ஸாப் இதர் ஆவ்” மௌலவீயே இங்கு வாருங்கள் என்றார்கள். அவர் அருகே சென்றேன். பத்திரிகையை என்னிடம் தந்து “தேகர் படோ” பார்த்து படியுங்கள் என்றார்கள். “ஹிந்தீ மாளூம் நெஹீஹே” ஹிந்தி தெரியாது என்றேன். அவரே வாசித்து மொழியாக்கம் செய்தார்.
“பிறவியிலேயே ஊமையான ஏழு வயதுச் சிறுவன் ஹாஜாவின் சந்நிதானத்தில் சரளமாகப் பேசிவிட்டான்” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது.
பேசிய சிறுவன்தான் நான் தர்ஹாவில் தாயுடன் கண்ட ஊமைச் சிறுவன் என்று தெரிந்து கொண்டேன். இது ஹாஜாவின் அற்புதங்களில் ஒரு கடுகுதான்.
அண்ணலெம் பெருமானின் கட்டளைப்படி அஜ்மீர் வந்த ஹாஜா கரீப் நவாஸ் தற்போது அவர்களின் “தர்ஹா” உள்ள இடத்திலேதான் ஓலைக் குடிசை அமைத்து சிஷ்யர்களுடன் வாழ்ந்து வந்தார்கள்.
அவ்வேளை ராஜஸ்த்தான் மாநிலத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த இந்து மன்னன் “பத்ஹூறா” என்பவனிடம் ஹாஜா பற்றி புகார் செய்யப்பட்டது. உங்கள் ஆட்சியை கவிழ்ப்பதற்காக ஒரு துளுக்கன் மந்திரவாதி வந்துள்ளான் என்றும், அவன் அனாஸ்கார் குளத்தில் குளிக்கின்றான், நீர் எடுக்கின்றான் என்றும் எதிரிகளால் சொல்லப்பட்டது. முறையிடப்பட்டது.
இது கேட்டு கண் சிவந்த “பத்ஹூறா” மன்னன், இன்றுடன் நீ அஜ்மீரை விட்டும் வெளியேற வேண்டும், அனாஸ்கார் குளத்தில் நீர் எடுப்பதையும் நிறுத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பி வைத்தான்.
“விலாயத்” ஒலித்தனத்துடன் மோதி வென்றவன் உலகில் எவன் இருக்கின்றான்? ஹாஜா அசையவில்லை. என்னை உன்னால் அசைக்க முடியாதென்று தூது அனுப்பினார்கள்.
நான் இந்நாட்டு மன்னன். என்னாலா அசைக்க முடியாது என்று சீற்றம் கொண்டு சீறி எழுந்து “அனாஸ்கார்” குளத்துக்கு ஹாஜா வர முடியாதென்று தடை உத்தரவு பிறப்பித்தான்.
ஹாஜாவோ அவனின் ஆணைக்கு அஞ்சாமல் அங்கேயே இருந்து கொண்டு ஆன்மிக ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.
“கறாமத்” அற்புதம் எனும் ஆயுதத்தால் அவனை விரட்டத் துணிந்த ஹாஜா “வுழூ” செய்வதற்குப் பயன்படுத்துகின்ற சிறி அளவிலான கூஜாவை எடுத்துக் கொண்டு அனாஸ்கார் குளத்திற்குச் சென்றார்கள். ஹாஜாவைக் கண்ட காவல் காரர்கள் மயக்கமுற்று பனை மரங்கள் சாய்வது போல் சாய்ந்து விழுந்தார்கள்.
ஹாஜா நாயகம் தாங்கள் எடுத்துச் சென்ற சிறிய கூஜாவை குளத்தின் மேலே வைத்தார்கள். அவ்வளவுதான். குளத்து நீரெல்லாம் கூஜாவுக்குள் ஏறின. குளம் வத்தி வரண்டு போயிற்று. குளத்து மீன்களெல்லாம் செத்து மடிந்தன. நெல் வயல்கள், தோட்டங்கள் நீரின்றி அழிந்தன. கால் நடைகள் குடிக்க நீரின்றியும், உண்ண உணவின்றியும் ஒன்றன் பின் ஒன்றாக செத்துப் போயின.
பஞ்சம் தலை விரித்தாடத் தொடங்கிற்று. பட்டினியால் பலர் உயிரிழந்தனர். இன்று இங்கு நடக்கின்ற கொந்தளிப்பு அன்று அங்கு நடந்தது. “பத்ஹூறா கோ ஹோம்” என்ற மக்களின் ஆவேசக் குரல் வானைத் தொட்டது.
மன்னன் பத்ஹூறாவின் தலை சுழன்றது. இதயம் துடித்தது. நரம்பு, நாளங்கள் செயலிழந்தன. பிரஜைகளின் எதிர்ப்பு நாளுக்கு நாள் பொங்கி எழுந்தது.
இன்று இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலைக்கு ராஜஸ்தான் மக்கள் தள்ளப்பட்டனர். “பத்ஹூறா கோ ஹோம்” என்ற நாட்டு மக்களின் எதிர்ப்பொலி மன்னன் பத்ஹூறாவின் செவிகளைச் செவிடாக்கியது.
கோபத்தால் கொதித்தெழுந்த “பத்ஹூறா” தனது சேனைகளை அழைத்து என்ன செய்வதென்று வினவினான். மன்னனின் சிரேஷ்ட மந்திரவாதி அஜேபால் மூலம் ஹாஜாவை ஒழித்துக் கட்டுவோம் என்றனர் சேனைகள்.
மந்திரவாதி அஜேபால் அரச சபைக்கு அழைக்கப்பட்டான். அவனிடம் ஹாஜாவை அடக்கியொடுக்க வழி என்னவென்று கேட்டான் பத்ஹூறா. என் மந்திரத்தால் மலை மீதுள்ள பெருங்கல்லொன்றை ஹாஜா மீது உருட்டி விடுகின்றேன் என்றான் அஜேபால்.
அரசன் அனுமதி வழங்கினான். அஜேபால் மந்திரம் சொல்லி மலைக்கல் ஒன்றை ஹாஜாவையும், அவர்களின் சிஷ்யர்களையும் நோக்கி உருட்டி விட்டான். உருண்டு வந்த மலைக் கல்லை தங்களின் சுட்டு விரலால் குத்தி நிறுத்தினார்கள் ஹாஜா.
அந்தக் கல் இன்று வரை அஜ்மீர் மலையில் உள்ளது. ஹாஜாவின் சுட்டு விரல் பதிந்த அடையாளமும் அதில் உள்ளது.
தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத அஜேபால் தனது மந்திர சக்தியால் ஆகாயத்தில் அந்தரத்தில் பறந்து காட்டினான். இது கண்டு “ஜத்பு” நிலையடைந்த ஹாஜா தங்களின் “முஸல்லா” தொழுகைக்கான விரிப்பை ஆகாயத்தில் எறிந்து அதன் மேல் அமர்ந்து கொண்டு தங்களின் கைத்தடியால் அஜேபாலை அடித்து துறத்தினார்கள். அடி தாங்க முடியாத மந்திரவாதி அஜேபால் அண்ணல் ஹாஜாவிடம் சரணடைந்து அவர்களின் திருக்கரம் பற்றி இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்து கொண்டான்.
இந்த அஜேபால் ஹாஜா அற்புதத்தால் அஜ்மீர் மலைக்குகை ஒன்றில் இன்று வரை மறைந்து உயிர் வாழ்வதாகவும், இன்று வரை ஹாஜாவின் தர்பாருக்கு வந்து தரிசித்துச் செல்வதாகவும் அஜ்மீரில் விஷயம் தெரிந்த பலர் கூறுகின்றார்கள்.
உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை ஆன்மிகத்தோடு முட்டி மோதிய எவரும் வெற்றி பெற்றதற்கு வரலாறே இல்லை.