தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
ஹிஜ்ரீ 80 க்கும், 150 க்கும் இடைப்பட்ட காலத்திலேயே மதீனா நகர் “மஸ்ஜிதுன் நபவீ” பள்ளிவாயலில் இமாம் அபூ ஹனீபா றஹிமஹுல்லாஹ் அவர்களால் எழுதப்பட்ட “மவ்லித்” ஓதப்பட்டுள்ள அதிசய தகவல்#ஹிஜ்ரீ 80 க்கும், 150 க்கும் இடைப்பட்ட காலத்திலேயே மதீனா நகர் “மஸ்ஜிதுன் நபவீ” பள்ளிவாயலில் இமாம் அபூ ஹனீபா றஹிமஹுல்லாஹ் அவர்களால் எழுதப்பட்ட “மவ்லித்” ஓதப்பட்டுள்ள அதிசய தகவல்
كتب اﻹمام أبو حنيفة النُّعْمان قصيدةً في رسولِ الله صلى الله عليه وسلّم، ولم يطلُع عليها أحدٌ، فلمَّا وصل إلى المدينة المنورة ، سَمِعَ مؤذِّنَ المسجد النبويّ يُنشِدها على المئذنة، فعَجِب من ذلك وانتظر المؤذّن فسأله : لمن هذه القصيدة ؟! قال : ﻷبى حنيفة النعمان قال : أتَعْرفه؟ قال : ﻻ قال : وَعَمَّنْ أخذتَها ؟ قال : فى رُؤْيَايَ أنشدها بَيْنَ يَدَيِ المصطفى صلى الله عليه وسلّم فحفِظْتُها وناجَيْتُه بها على المئذنة. فدمعَتْ عينا اﻹمام أبى حنيفة رضى الله عنه وأخذ يُنْشِدُها:
ஹனபீ மத்ஹபின் தாபகர் அபூ ஹனீபா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் எம் பெருமானார் கண்மணி நாயகம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைப் புகழ்ந்தும், அவர்களிடம் “வஸீலா” உதவி தேடியும் ஒரு பாடல் எழுதினார்கள். இந்த விடயம் அவர்கள் தவிர வேறு எவருக்கும் தெரியாது.
ஒரு நாள் இமாம் அவர்கள் திரு மதீனா நகர் வந்த போது “மஸ்ஜிதுன் நபவீ” நபீ பெருமானின் மதீனாப் பள்ளிவாயலில் “மிஃதனா” பாங்கு சொல்லும் இடத்திலிருந்து பள்ளிவாயல் “முஅத்தின்” அப்பாடலைப் பாடுவதை செவியேற்ற இமாம் அவர்கள் வியப்படைந்தவர்களாக அவரை அழைத்து இது யார் எழுதிய பாடல் என்று அவரிடம் கேட்க, அவர் அபூ ஹனீபா எழுதியது என்று சொன்னார். அதற்கவர்கள் அபூ ஹனீபாவை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்க, இல்லை என்றார். அப்படியானால் யார் மூலம் இப்பாடலைப் பெற்றுக் கொண்டீர்கள் என்று கேட்ட போது எனது கனவில் நான் பெற்றுக் கொண்டேன். இமாம் அபூ ஹனீபா அவர்கள் பெருமானார் முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் முன்னிலையில் பாடினார்கள். அப்போது நான் மனனம் செய்து கொண்டேன் என்றும், அதை இன்று பாடினேன் என்றும் கூறிய போது இமாம் அவர்கள் அழுதவர்களாக அதைப் பாடத் தொடங்கினார்கள்.
இந்த வரலாறின் மூலம் நாம் பல பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ் இடமிருந்தால் அவற்றை பின்னால் எழுதுவேன்.
இமாம் அவர்களின் பாடல்:
يَا سَيِّدَ السَّادَاتِ جِئْتُكَ قَاصِدًا – أًرْجُوْا رِضَاكَ وَأَحْتَمِيْ بِحِمَاكَا
وَاللهِ يَا خَيْرَ الْخَلَائِقِ إِنَّ لِيْ – قَلْبًا مَشُوْقًا لَا يَرُوْمُ سِوَاكَا
وَبِحَقِّ جَاهِكَ إِنَّنِيْ بِكَ مُغْرَمٌ – وَاللهُ يَعْلَمُ أَنَّنِيْ أَهْوَاكَا
أَنْتَ الَّذِيْ لَوْلَاكَ مَا خُلِقَ امْرُؤٌ – كَلَّا وَلَا خُلِقَ الْوَرَى لَوْلَاكَا
أَنْتَ الَّذِيْ مِنْ نُوْرِكَ الْبَدْرُ اكْتَسَى – وَالشَّمْسُ مُشْرِقَةٌ بِنُوْرِ بَهَاكَا
أَنْتَ الَّذِيْ لَمَّا رُفِعْتَ إِلَى السَّمَا (ء) – بِكَ قَدْ سَمَتْ وَتَزَيَّنَتْ لِسَرَاكَا
أَنْتَ الَّذِيْ نَادَاكَ رَبُّكَ مَرْحَبًا – وَلَقَدْ دَعَاكَ لِقُرْبِهِ وَحَبَاكَا
أَنْتَ الَّذِيْ فِيْنَا سَأَلْتَ شَفَاعَةً – نَادَاكَ رَبُّكَ لَمْ تَكُنْ لِسِوَاكَا
أَنْتَ الَّذِيْ لَمَّا تَوَسَّلَ آدَمٌ – مِنْ زَلَّةٍ بِكَ فَازَ وَهُوَ أَبُوكَا
وَبِكَ الْخَلِيْلُ دَعَا فَعَادَتْ نَارُهُ – بَرْدًا وَقَدْ خَمِدَتْ بِنُوْرِ سَنَاكَا
وَبِكَ الْمَسِيْحُ أَتَى بَشِيْرًا مُخْبِرًا – صِفَاتِ حُسْنِكَ مَادِحًا لِعُلَاكَا
وَكَذَاكَ مُوْسَى لَمْ يَزَلْ مُتَوَسِّلًا – بِكَ فِى الْقِيَامَةِ مُحْتَمٍ بِحِمَاكَا
وَالْأَنْبِيَاءُ وَكُلُّ خَلْقٍ فِى الْوَرَى – وَالرُّسُلُ وَالْأَمْلَاكُ تَحْتَ لِوَاكَا
பாடலின் சுருக்கம்:
01. “ஸாதாத்”மாரின் ஸெய்யிதே! உலகிலுள்ள அனைத்து “ஸாதாத்”மாரின் தலைவரே! உங்களை நாடி வந்தேன். உங்களின் திருப் பொருத்தம் எனக்கு வேண்டும். அதை ஆதரவு வைக்கிறேன். உங்களின் பாதுகாப்பு கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்.
02. படைப்புக்களில் சிறந்தவரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் தவிர வேறெவரையும் நாடாத, ஆசை நிரம்பிய உள்ளம் எனக்கு உண்டு.
03. உங்களின் பொருட்டால் நான் உங்கள் மீது கடும் அன்புள்ளவனாக உள்ளேன். நான் உங்களை நேசிக்கிறேன் என்பது அல்லாஹ் அறிந்ததே!
04. நீங்கள் இன்றேல் எந்த ஒரு மனிதனும் படைக்கப்பட்டிருக்க மாட்டான். இல்லை. எந்த ஒரு படைப்பும் படைக்கப்பட்டிருக்காது.
05. நீங்கள் எத்தகைய நபீயெனில் சந்திரன் கூட உங்களைக் கொண்டுதான் ஒளி பெற்றது. உங்களின் ஒளி கொண்டே சூரியனும் ஒளி பெறுகிறது.
06. நீங்கள் எத்தகைய நபீயெனில் நீங்கள் வானத்திற்கு உயர்த்தப்பட்ட போது உங்களைக் கொண்டே அது உயர்ந்து அழகு பெற்றது.
07. நீங்கள் எத்தகையவர்களெனில் நீங்கள் விண்ணுலகம் சென்ற போது அல்லாஹ் உங்களை “வெல்கம்” நல்வரவாகுக! எனக் கூறி வாழ்த்தி வரவேற்கப்பட்ட, அனைத்தும் வழங்கப்பட்ட மனிதப் புனிதர். நீங்கள் அவனுக்கு – அவன் உங்களுக்கு நெருங்கியிருப்பதினால் அவ்வாறு வரவேற்கப்பட்டீர்கள்.
08. நீங்கள் எத்தகையவர்களெனில் எங்களுக்காக அல்லாஹ்விடம் “ஷபாஅத்” பரிந்துரைத்தலை கேட்டீர்கள். மன்றாடும் அந்தஸ்த்தைக் கேட்டீர்கள். அந்தப் பதவி உங்களுக்கே தவிர வேறு எவருக்கும் இல்லையே யா ஹபீபல்லாஹ்!
09. நீங்கள் எத்தகையவர்களெனில், உங்களின் தந்தை நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களின் தவறுக்காக உங்களின் பொருட்டால் உதவி கேட்ட போது உங்களைக் கொண்டு அவர்கள் வெற்றி பெற்றார்களே அத்தகைய நபீ நீங்கள்! மகனின் பொருட்டால் வெற்றி பெற்ற தந்தை அவர்கள்.
10. “நும்றூத்” எனும் கொடுங்கோலன் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைத் தீக்கிடங்கில் தூக்கியெறிந்த போது உங்கள் பொருட்டால் அவர்கள் பிரார்த்தனை செய்த போது அவர்களுக்கு நெருப்பு குளிராகி இதமாயிற்றே அத்தகைய நபீ நீங்கள். அது மட்டுமன்றி உங்கள் பொருட்டால் அது அணைந்தும் போயிற்றே அத்தகைய நபீ நீங்கள்.
11. உங்கள் பொருட்டால் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உங்கள் பற்றி சுபச் செய்தி சொல்பவர்களாகவும், உங்களின் அழகிய நன்மைகள், மற்றும் நற்குணங்களைப் புகழ்ந்து கூறுபவர்களாகவும் வந்தார்கள்.
12. இவ்வாறுதான் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுமாவார்கள். அவர்கள் மறுமையில் உங்களைக் கொண்டு “வஸீலா” உதவி தேடுபவர்களாகவும், பாதுகாப்புத் தேடுபவர்களாகவும் இருப்பார்கள்.
13. நபீமார்கள் அனைவரும், அனைத்துப் படைப்புக்களும், மற்றும் றஸூல்மார், மலக்கு – அமரர்களும் உங்களின் கொடி நிழலிலேயே நிற்பார்கள்.
சாரம்: இமாம் அபூ ஹனீபா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “ஹனபீ மத்ஹப்” இன் தாபகராவார்கள். நான் அறிந்தவரை இவர்களை எதிர்த்த, பிழையான கருத்து கூறிய எவருமில்லை. எனினும் “மத்ஹப்” கூடாதென்று கூறும் மகான்கள் இவர்களைக் குறை காண்பார்கள். அது அவர்களின் “நஸீப்” விதி. நாமென்ன செய்யலாம்? மனதுக்கு வேதனைதான். வஹ்ஹாபிஸ விஷம் உடலில் செயல்படும் வரை அவர்கள் நல்வழி பெறுவதை எதிர்பார்க்க முடியாது. ஆயினும் வஹ்ஹாபிஸத்தில் ஊறிப் போய் பைத்தியம் பிடித்த பலர் கூட ஸுன்னிஸ வழிக்கு வந்ததற்கு வரலாறு இருக்கத்தான் செய்கிறது. وما ذلك على الله بعزيز அவர்களை நல் வழிப்படுத்துவது அல்லாஹ்வுக்கு பெரிய காரியமல்ல.
எந்த ஒரு வஹ்ஹாபீயாயினும் அவர் என்னிடம் வந்து என்னோடு சுமார் மூன்று மாதங்கள் தொடராக தங்கியிருப்பாராயின் அவரை “ஸுன்னீ”யாக மட்டுமன்றி ஸூபீயாகவும் மாற்ற முடியும். இன்ஷா அல்லாஹ்!
இமாம் அபூ ஹனீபா அவர்கள் ஹிஜ்ரீ 80ல் பிறந்து 150ல் மறைந்தார்கள். (கி.பி. 699 – 767) வயது 70 (ஆங்கிலக் கணக்கின் படி 68). இவர்கள் மறைந்து 1255 வருடங்காகின்றன.
இந்த வரலாறின் மூலம் ஓர் உண்மை தெளிவாகிறது. அதாவது ஹிஜ்ரீ 80க்கும், 150க்கும் இடைப்பட்ட காலம் தான் இமாம் அவர்கள் வாழ்ந்த காலம். அதாவது “தாபியீன்”களின் காலம்.
“தாபியீன்” என்றால் நபீ தோழர்களில் – ஸஹாபாக்களில் ஒருவரையாவது நேரில் கண்டவர்களாவர். இச் சொல் تَابِعٌ “தாபிஉன்” என்ற சொல்லின் பன்மைச் சொல். தொடர்ந்தவர் என்று பொருள்.
تَبَعُ التَّابِعِيْنْ
– “தபஉத் தாபிஈன்” என்றால் “தாபியீன்”களில் ஒருவரையாவது நேரில் கண்டவர்களாவர்.
இவ்விரு பிரிவினர்களிலும் “உலமாஉ” மார்க்க அறிஞர்கள் இருந்தனர். இவர்களின் கருத்துக்களுக்கு இவர்களைப் பிந்தினவர்களின் கருத்தை விட முக்கியத்துவம் கொடுப்பது அறிஞர்களின் வழக்கமாகும்.
இமாம் அபூ ஹனீபா றஹிமஹுல்லாஹ் அவர்கள் வாழ்ந்த ஹிஜ்ரீ 80க்கும், 150க்கும் இடைப்பட்ட காலத்தில் திரு மதீனா நகர் “மஸ்ஜிதுன் நபவீ” நபீ பெருமானார் அவர்களின் பள்ளிவாயலில் “பாங்கு” சொல்வதற்கென்று உயரமாக கட்டப்பட்ட ஓர் இடம் இருந்தது. இது مِأْذَنَةٌ – “மிஃதனதுன்” பாங்கு சொல்லும் இடம், அறிவித்தல் செய்யுமிடம் என்று அழைக்கப்பட்டு வந்தது.
“பாங்கு” சொல்லும் சத்தம் ஊர் மக்களுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு கட்டப்படும் வழக்கம் நபீ பெருமானாரின் காலத்திலும் இருந்தது. இன்னும் பல பள்ளிவாயல்களில் இப்போதும் உள்ளது. ஒலி பெருக்கி வந்த பின் இவ்வழக்கம் குறைந்து போயிற்று.
பாங்கு சொல்வதற்கென்று கட்டப்பட்டாலும் கூட பொது மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய, “ஜனாசா” அறிவித்தல் போன்ற முக்கிய தகவல்கள் சொல்வதற்காகவும் இவ் இடம் பாவிக்கப்பட்டு வந்திருப்பது மேற்கண்ட அபூ ஹனீபா றஹிமஹுல்லாஹ் அவர்களின் வரலாறின் மூலம் அறியப்படுகிறது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட இடம் காத்தான்குடி பிராதான வீதி இரும்புத் தைக்காப் பள்ளிவாயலிலும், காத்தான்குடி 05 ஜாமிஉள்ளாபிரீன் பள்ளிவாயலிலும் இருந்ததை 1955ம் ஆண்டுகளில் நான் நேரில் கண்டுள்ளேன். அவற்றில் ஏறி, இறங்கியும் உள்ளேன். ஆயினும் வஹ்ஹாபிகள் வந்தபின் சிறப்பான பல அம்சங்கள் நிறுத்தப்பட்டன போல் ஒலி பெருக்கி வந்த பின் இவ்வாறான கட்டிடங்களும் இல்லாமற் போய்விட்டன.
சிரியா நாட்டிள் டமஸ்கஸ் நகரிலுள்ள “மஸ்ஜித் அமவீ” பள்ளிவாயலிலும் இது போன்ற ஒரு கட்டிடம் உண்டு. இதற்குப் பக்கத்தில் அழகிய, பெரிய “மனாரா” ஒன்றும் உண்டு. பின்னொரு காலத்தில் அதன் மீதுதான் தற்போது வானத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கும் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்குவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. இதை நானும், என்னுடன் வந்த நண்பர்கள் இருவரும் அருளை நாடி முத்தமிட்டுக் கொண்டோம். இப்பள்ளிவாயலில்தான் நபீ சகரிய்யா அல்லது நபீ தாஊத் அலைஹிமஸ்ஸலாம் அவர்கள் அடக்கம் பெற்றுள்ளார்கள். அவர்களின் “கப்ர்” அடக்கவிடத்தையும் முத்தமிட்டோம். அல்ஹம்துலில்லாஹ்! எமது சிரியப் பயணம் அற்புதமானது.
இமாம் அபூ ஹனீபா அவர்களின் குறித்த நபீ புகழ் பாடல் திரு மதீனாப் பள்ளிவாயலில் உயரமான இடத்திலிருந்து பாடப்பட்டுள்ளதென்ற உண்மை தெளிவாகிறது. இதை இன்னொரு பாணியில் சொல்வதாயின் இமாம் அவர்களால் பெருமானாரைப் புகழ்ந்து எழுதப்பட்ட “மவ்லித்” பாடல் அன்று அப்பள்ளிவாயலின் “முஅத்தின்” அவர்களால் ஓதப்பட்டுள்ளதென்று சொல்லலாம். இவ் உண்மையை எவர் அறியாது போனாலும் நபீ புகழ் பாடுவதை நையாண்டி செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இக்காலத்தில் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் கூட நபீ பெருமானாரைப் புகழ்ந்து பாடுவதையும், பேசுவதையும் கேட்கும் போது வஹ்ஹாபீகளை எண்ணி வருந்த வேண்டி உள்ளது.
உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவரினதும் நபீயான முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை இழிவு படுத்திய துவேசிகள் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கேட்பது மட்டும் போதாது. அவர்களை இந்தியப் பிரதமர் சிறையில் அடைத்தால் மட்டுமே உலகில் வாழும் சுமார் 180 கோடி முஸ்லிம்களின் கொதிக்கும் குருதி அமைதி பெறும்.
அல்லாஹ் எந்த ஓர் “அமலும்” செய்வதில்லை. ஆயினும் அண்ணலெம் பிரான் அவர்களின் “மௌலித்” புகழ் பாடிக் கொண்டே இருக்கிறான். அவர்களின் சிறப்புக்கு இதை விடச் சான்று தேவையா?
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையிலும், “தப்லீக்” மர்கஸிலும் வருடத்தில் ஒரு தரமாவது நபீ புகழ் பாடி, மவ்லித் ஓதி, கந்தூரி அன்னதானம் வழங்கப்படாமல் இருப்பது இவர்கள் அனைவரும் நபீ புகழ் பாடுதலுக்கு ஆதரவானவர்களல்லர் என்பதற்கு மறுக்க முடியாத சான்றாகும். இன்னும் மூன்று மாதங்களில் எம்மைச் சந்திக்கவுள்ள பெருமானாரின் றபீஉனில் அவ்வல் மாதம் மேற்கண்ட இரு அமைப்புக்களும் என்ன செய்வார்களோ?!
அன்பான வேண்டுகோள்!
இலங்கை வாழ் முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! நமது இலங்கைத் திரு நாடு எல்லா வளமும் பெற்று சிறக்க வேண்டுமாயின் எதிர் வரும் றபீஉனில் அவ்வல் மாதம் எல்லாப் பள்ளிவாயல்களிலும், தப்லீக் மர்கஸிலும், கொழும்பு ஜம்இய்யதுல் உலமா கட்டிடத்திலும் மௌலித் ஓதி இன, மத, மொழி வேறுபாடின்றி அன்னதானமும் வழங்கப்பட வேண்டும்!