தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“தக்வா” என்ற சொல் முஸ்லிம்களில் மார்க்க அறிவோடு தொடர்புள்ளவர்கள் அதிகமாகவும், பொதுவான அறிவுள்ளவர்கள் குறைவாகவும் பயன்படுத்துகின்ற சொல்லாகும். ஓர் அறிவும் இல்லாதவர்கள் கூட இச் சொல்லைப் பாவிப்பார்கள்.
இச் சொல் திருக்குர்ஆன் வசனங்களிற் பல இடங்களிலும், நபீ மொழிகளிற் பல மொழிகளிலும் இடம் பிடித்த கௌரவமான சொல்லாகும்.
இச் சொல்லுக்கு இறை பக்தி, இறையச்சம் என்று பொருள் கூறப்படுகிறது. இப் பொருளைக் கருத்திற் கொண்டே முஸ்லிம்கள் ஒரு மார்க்க வாதி குறித்து பேசும் போது அவர் “தக்வா” உள்ள நல்ல மனிதன் என்றும், “ஸாலிஹ்” ஆன மனிதன் என்றும் பேசுவதுண்டு.
வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்கு முன் ஓதப்படுகின்ற “குத்பா” பிரசங்கத்தில் “தக்வா” இறை பக்தி கொண்டு மக்களுக்குப் போதிப்பது – “வஸிய்யத்” செய்வது “பர்ழ்” கடமை என்று “ஷரீஆ”வில் சொல்லப்பட்டுள்ளது. இது பேணப்படாவிட்டால் ஓதப்படும் “குத்பா” நிறைவேறாது என்று “ஷாபிஈ மத்ஹப்” வலியுறுத்துகிறது. இதனால்தான் வெள்ளிக்கிழமை “குத்பா” ஓதுபவர் “மின்பர்” மேடையில் பிரசங்கம் தொடங்கும் போது அல்லாஹ்வை “தக்வா” செய்து கொள்ளுமாறு – அஞ்சி நடக்குமாறு முதலில் எனக்கும், இரண்டாவதாக உங்களுக்கும் “வஸிய்யத்” நல்லுபதேசம் செய்கிறேன் என்று கூறுவதற்கான காரணமாகும். இவ்வாறு ஒருவர் சொல்லத் தவறினால் இருப்பவர்கள் அவருக்கு நினைவூட்டுவது அவர்களின் கடமையாகும். அவர்களும் நினைவூட்டவில்லையானால் அனைவரும் பாவிகளாக நேரிடும்.
“தக்வா” என்றால் என்ன?
“தக்வா” என்ற இச் சொல்லுக்கு இறை பக்தி என்றோ, இறையச்சம் என்றோ எவ்வாறு பொருள் கூறிக் கொண்டாலும் இதன் சுருக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
اِمْتِثَالُ أَوَامِرِ اللهِ وَاجتْنِاَبُ نَوَاهِيْهِ
அல்லாஹ்வும், நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும் மனிதர்கள் எதையெல்லாம் செய்வது கடமை என்று கூறியுள்ளார்களோ அவற்றை அவர்கள் எடுத்து நடப்பதையும், எதையெல்லாம் செய்வது கூடாதென்று கூறியுள்ளார்களோ அவற்றை அவர்கள் தவிர்த்துக் கொள்வதையும் குறிக்கும். பொதுவாகப் பாவமான விடயங்களை விடுவதையும், நன்மையான விடயங்களைச் செய்வதையும் குறிக்கும்.
இன்னும் இதை விளக்கமாகச் சொல்வதாயின் நான்கு மத்ஹப்களில் எவர் எதைப் பின்பற்றினாலும் அந்த மத்ஹபில் எதெல்லாம் “ஹறாம்” கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதோ அவை யாவையும் தவிர்ப்பதையும், எதெல்லாம் “பர்ழ்” கடமை என்று சொல்லப்பட்டுள்ளதோ அவை யாவையும் எடுத்து நடப்பதையும் குறிக்கும். ஒரே வசனத்தில் “தக்வா” என்றால் என்னவென்று சொல்வதாயின் “ஹறாம்” பாவம் என்று “ஷரீஆ”வில் சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் தவிர்ந்து, “ஹலால்” என்று சொல்லப்பட்டுள்ளவற்றை மட்டும் எடுத்து நடப்பதைக் குறிக்கும்.
மேற்கண்ட விபரப்படி ஒருவன் எல்லா நன்மைகளும் செய்கின்றானாயினும் அவன் தொழவில்லையானால் அவன் “தக்வா” இறையச்சம் அல்லது இறை பக்தி இல்லாதவன் என்றே கணிக்கப்படுவான். இதேபோல் ஒருவன் எல்லாப் பாவங்களும் செய்கின்றானாயினும் அவன் தவறாமல் தொழுதாலும் கூட அவன் “தக்வா” இறை பக்தி உள்ளவனாக கணிக்கப்படமாட்டான். எனவே, எவன் நூறு வீதமும் அல்லாஹ்வின் ஏவல்களை எடுத்தும், விலக்கல்களை தவிர்த்தும் நடந்தானாயின் அவன் மட்டுமே “தக்வா” இறை பக்தி, இறையச்சம் உள்ளவனாவான் என்றும், “முத்தகீ” “தக்வா” உள்ளவனாவான் என்றும் முடிவு செய்தல் வேண்டும்.
ஒருவன் அல்லாஹ்வின் கட்டளைப்படி ஹலால், ஹறாம் பேணியும், ஏவல் விலக்கல் பேணியும் நடக்கின்றான் என்றும், ஆயினுமவன் “ஸுன்னத்” ஆன காரியங்களைப் பேணாமல் நடக்கின்றான் என்றும் வைத்துக் கொண்டால் அவன் “தக்வா” இறை பக்தியுள்ளவனாவானா என்று யாராவதொருவர் என்னிடம் கேட்பாராயின் அவருக்கு பின்வருமாறு பதில் கூறலாம்.
அவன் “தக்வா” உள்ளவன் என்றுதான் நான் பதில் கூறுவேன். ஆயினுமவன் وَرَعْ என்ற பேணுதல் இல்லாதவன் என்று சொல்ல முடியும்.
ஒருவன் “மக்றூஹ்” ஆன விடயத்தை அதிகம் செய்து வருகின்றான் என்றும், “ஸுன்னத்” ஆன விடயத்தை குறைவாக செய்தும் வாழ்கிறான் என்றும் வைத்துக் கொள்வோம். இவன் “தக்வா” உள்ளவனா என்று ஒருவன் என்னிடம் கேட்பானாயின், ஆம் அவன் “தக்வா” உள்ளவன் என்றே கணிக்கப்படுவான் என்று சொல்வேன்.
ஏனெனில் “மக்றூஹ்” ஆன விடயம் எதுவாயினும் அதைச் செய்யாமல் தவிர்த்து நடப்பது சிறந்ததே. ஆயினும் அதைச் செய்பவன் நரகில் வேதனை செய்யப்படமாட்டான்.
நாற்பது “மக்றூஹ்” செய்தால் ஒரு “ஹறாம்” இன் தரத்தை பெறும் என்று சொல்லப்படுவது அதாவது நாற்பது “மக்றூஹ்” சேர்ந்தால் ஒரு “ஹறாம்” ஆகும் என்பது அர்த்தமற்ற கூற்றாகும். இதேபோல் நாற்பது “ஸுன்னத்” சேர்ந்தால் ஒரு “பர்ழ்” கடமையின் தரத்தைப் பெறும் என்பதும் அர்த்தமற்ற கூற்றேதான்.
நாற்பது “மக்றூஹ்” ஒரு “ஹறாம்” என்பதும், நாற்பது “ஸுன்னத்” ஒரு “பர்ழ்” என்பதும் அர்த்தமற்ற கூற்றாயிருந்தாலும் இது அறபு நாடு உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் வாழ்கின்ற முஸ்லிம் பொது மக்களிடம் இருந்தே வருகிறது.
எது “ஷரீஆ”வில் “மக்றூஹ்” என்று சொல்லப்படுகிறதோ அதைச் செய்வதால் நரக தண்டனை கிடைக்காது. ஆயினும் அதைச் செய்யாது விட்டால் நன்மை கிடைக்கும்.
எது “ஷரீஆ”வில் “ஸுன்னத்” என்று சொல்லப்படுகின்றதோ அதைச் செய்வதால் நிச்சயமாக நன்மை கிடைக்கும். ஆனால் அதை விடுவதால் நரக தண்டனை கிடைக்காது.
இவ்விரண்டிற்குமுரிய “ஷரீஆ”வின் சட்டம் பின்வரும் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.
وَفَاعِلُ الْمَكْرُوْهِ لَمْ يُعَذَّبِ – بَلْ إِنْ يَكُفَّ لِامْتِثَالٍ يُثَبِ
وَالسُّنَّةُ الْمُثَابُ مَنْ قَدْ فَعَلَهْ – وَلَمْ يُعَاقَبِ امْرُأٌ إِنْ أَهْمَلَهْ
இவ்விரு பாடல்களின் விளக்கமும் மேலே கூறப்பட்டுள்ளது.
وَرَعٌ
“வறஉன்” பேணுதல் என்று ஒரு அம்சம் உண்டு. இது சட்டத்திற்கு அப்பாற் பட்டதாகும். இவ்வழியைப் பேணி நடப்பவர்கள் “ஸுன்னத்” ஆன விடயங்களை “பர்ழ்” கடமை எனக் கருதியும், “மக்றூஹ்” ஆன விடயங்களை “ஹறாம்” எனக் கருதியும் செயல்படுவார்கள். இன்னோர் “முதவர்ரிஊன்” என்று அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தில் உயர்ந்த இடமுண்டு. இவர்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவர்களுமாவர்.
ஆன்மிக உயர் பதவிகள் பெற்ற வலீமார் போன்றோர் “ஸுன்னத்” ஆன காரியத்தை “பர்ழ்” என்று சொல்லாவிட்டாலும் அதை “பர்ழ்” உடைய தரத்தில் மதித்து செயல்படுவார்கள்.
நான் இந்தியாவில் “கம்பம்” என்ற ஊரில் ஒரு வலீயை சந்தித்துள்ளேன். இவர்கள் முஹம்மத் ஸயீத் ஜல்வதீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் மகன் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் றஹிமஹுல்லாஹ் ஆவார்கள். இவர்கள் நான் எனது வாழ்வில் சந்தித்த வலீ ஆவார்கள்.
இவர்களுடன் யாராவது பேசிக் கொண்டிருக்கும் வேளை “அதான்” பாங்கு சொல்லப்படும் போது “அஷ்ஹது அன்ன முஹம்மதர் றஸூலுல்லாஹ்” என்று “முஅத்தின்” – பாங்கு சொல்பவர் சொன்னதும் கேட்டவர்கள் அனைவரும் தமது இரு பெரு விரல்களையும் உதட்டில் வைத்து முத்தமிட்டு அவ்விரல்களைக் கண்ணில் தடவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யாதவர்களை அவர்கள் சபையிலிருந்து உடனே விரட்டி விடுவார்கள்.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது அளவற்ற அன்பும், காதலும் கொண்ட மகான்கள் “ஸுன்னத்” இல்லாத விடயத்தை “ஸுன்னத்” என்று சொல்லாவிட்டாலும் கூட அதற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுவார்கள். செயல்பட்டு வந்துமுள்ளார்கள். அம்பா நாயகமவர்களின் மேற்கண்ட செயல் இதற்கு சான்றாக உள்ளது. வஹ்ஹாபிஸம் இலங்கையில் இறக்குமதி செய்யப்படுமுன் தொழாதவன் கூட “பாங்கு” சொல்லப்படும் போது நபீ பெருமானின் பெயர் சொல்லப் படுவதை அவன் செவியேற்றால் மேற்கண்டவாறு தனது இரு கைப் பெருவிரல்களையும் தனது வாயில் வைத்து முத்தமிட்டு அவ்விரல்களைக் கொண்டு கண்களைத் தடவிக் கொள்ளும் வழக்கம் இருந்து வந்தது. உலமாஉகளும், பொது மக்களும் இவ்வாறு செய்யத் தவறமாட்டார்கள். அது அருள் நிறைந்த காலம். இது இருள் நிறைந்த காலம்.
பாங்கு சொல்லும் சத்தம் கேட்டவர்கள் அனைவரும் “முஅத்தின்” “அஷ்ஹது அன்ன முஹம்மதர் றஸூலுல்லாஹ்” என்று சொன்னதைக் கேட்டதும் மேலே நான் எழுதியுள்ளவாறு செய்தல் நல்லதென்று பல அறிஞர்கள், வலீமார்கள் கூறியுள்ளார்கள். இவ்வாறு செய்வதற்கு குர்ஆனில் அல்லது நபீ மொழியில் ஆதாரம் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. இது தொடர்பாகத் தெளிவு பெற விரும்புகின்றவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டால் தெளிவை ஏற்படுத்தலாம்.
இவ்வழக்கம் வஹ்ஹாபிஸ வழிகேடு தலை நீட்டு முன் அனைத்து முஸ்லிம்களிடமும் இருந்து வந்ததை எவரும் மறுக்க முடியாது. தொழாதவன் கூட இவ்வாறு செய்யத் தவறமாட்டான். அன்று வாழ்ந்த உலமாஉகளில் நூறு வீதமானோர் இவ்வாறு செய்தவர்களே தவிர இதற்கு மாறு செய்தவர்களல்ல.
காத்தான்குடியில் வாழ்ந்து மரணித்த ஒரு ஹழ்றத் அவர்கள் தனது மாணவன் ஒருவருடன் எனது தந்தையைக் காண என் தங்கையின் வீட்டுக்கு வந்தார்கள். அவவேளை எனது தந்தை சுகவீனமாக வீட்டில் இருந்தார்கள்.
மூவரும் பேசிக் கொண்டிருந்த சமயம் “இஷா” தொழுகைக்கான “பாங்கு” சொல்லப்பட்டது. பேச்சை நிறுத்திவிட்டு மூவரும் பாங்கிற்கு பதில் கூறிக் கொண்டிருந்தார்கள்.
“முஅத்தின்” “அஷ்ஹது அன்ன முஹம்மதர் றஸூலுல்லாஹ்” என்று சொன்ன போது எனது தந்தை மேலே நான் எழுதியது போல் இரு பெரு விரல்களையும் முத்தமிட்டு கண்ணில் தடவிக் கொண்டார்கள். எனினும் வந்தவர்கள் இருவரும் அவ்வாறு செய்யவில்லை.
மூவரும் பாங்கு “துஆ” ஓதி முடித்த பின் தகப்பனார் அவர்கள் வந்தவர்களிடம், நான் உங்கள் இருவரையும் விட வயதில் கூடினவனாயும், அனுபவத்தில் கூடினவனாயும் இருக்கும் நிலையில் நான் அவ்வாறு செய்திருந்தும் நீங்கள் செய்யாமல் இருந்ததேன்? அவ்வாறு செய்வது பிழையா? அவ்வாறாயின் அதற்கான காரணத்தை எனக்கு சொல்லித் தாருங்கள் என்று கேட்டார்கள்.
அதற்கவர்கள் நாம் அவ்வாறு செய்தால் அது “ஸுன்னத்” ஆன காரியமென்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள். மார்க்கத்தில் “ஸுன்னத்” இல்லாத ஒரு காரியத்தை “ஸுன்னத்” என்று நம்புவது “ஷரீஆ”வின் பார்வையில் பிழையானதாகும். இதனால்தான் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட எனது தந்தை அவ்விருவரிடமும் நீங்கள் மௌலவீகள் என்ற பெயரில் ஏன் இருக்கிறீர்கள்? ஒருவன் “ஸுன்னத்” இல்லாத ஒரு காரியத்தை “ஸுன்னத்” என்று நம்புவது பிழையாயின் அது பற்றிச் சொல்லிக் கொடுப்பது உங்களின் கடமையல்லவா? அதை நீங்கள் செய்யாமல் அந்தக் காரியத்தைப் பிழை என்பது எவ்வாறு நியாயமாகும்? என்று கேட்டார்கள். அதோடு வந்த இருவரும் வாய் மூடி மௌனிகளாயினர்.
பொது மக்கள் தவறு செய்தால் அதைத் திருத்துவது உலமாஉகளின் கடமையாகும். மற்றவர்களுக்கு கடமையல்ல. உலமாஉகள் தமது கடமையை சரியாகச் செய்தால் பொது மக்கள் வழி தவறிப் போகவேமாட்டார்கள்.
உலமாஉகள் இரு நாக்குள்ளவர்களாகவும், இரு முகமுள்ளவர்களாகவும் இருந்தால் எவரையும் திருத்தவும் முடியாது, எதையும் சாதிக்கவும் முடியாது.
எனதூரான காத்தான்குடியில் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வாதிகளான உலமாஉகள் உள்ளார்கள். இவர்களை யாராவது தனது வீட்டுக்கு மௌலித் ஓதுவதற்காகவோ, கத்தம், பாதிஹா ஓதுவதற்காகவோ அழைத்தால் அவர்கள் அவன் வீடு சென்று ஓதுகிறார்கள். சாப்பிடுகிறார்கள். அவன் அன்பளிப்புக் கொடுத்தால் அதை எடுத்துக் கொள்கிறார்கள்.
ஆயினும் ஒரு வஹ்ஹாபீ ஜும்ஆத் தொழுகையின் பின் பள்ளிவாயலில் மௌலித் ஓதுவது “ஷிர்க்” இணை வைத்தலாகும் என்று பேசினால் இரகசியமாக மௌலித் ஓதி பணம் பெறும் மௌலவீயும் அங்கு இருந்தால் அவர் வெட்கித் தலை குனிந்து முகத்தை மறைத்துக் கொள்கிறாரேயன்றி அவனை எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்க நெஞ்சில் பலமற்றவராகவும், இடுப்பில் வீரியம் அற்றவராகவுமே உள்ளார். இவர் ஸுன்னீ மௌலவீயாக இருந்தும் கூட இவரால் எந்தப் பயனும் இல்லாமற் போகிறது. இவர் ஒரு நடிகர் என்றே சொல்ல வேண்டும்.
ஒரு நாள் காத்தான்குடிப் பள்ளிவயால் ஒன்றில் ஒரு வஹ்ஹாபீயின் “பயான்” நடை பெறுகிறது. அவர் தனது பயானில் முஹ்யித்தீன் ஆண்டகை என்பவருக்கு பலர் நேர்ச்சை செய்கிறார்கள். இது மாரியம்மன் கோவிலுக்கு நேர்ச்சை செய்வது போன்றதாகும் என்று குரைக்கிறார். இதைப் பல ஸுன்னீ உலமாஉகள் செவிமடுத்துக் கொண்டு செவிடர்கள் போல் இருந்துள்ளார்கள்.
ஸுன்னீ உலமாஉகள் தமது வாயளவில் தாங்கள் “ஸுன்னீகள்” என்று சொல்லிக் கொண்டிருப்பதால் மட்டும் எந்த ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை. அவர்கள் செயலில் இறங்க வேண்டும். இலங்கை முழுவதிலும் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையை பிரகடனம் செய்ய வேண்டும். இது மட்டுமல்ல. ஸூபிஸம் பேசியவர்களுக்கு “ரித்தத்” பத்வா வழங்கி மதம் மாற்றி வைத்த, எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்றும் பொது மக்களைத் தூண்டிய “பத்வா” வியாபாரிகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும் வேண்டும். இன்றேல் இவர்களும் அவர்களுடன் நரகம் செல்லவே வேண்டும்.
முற்றும்…