தொடர் 01
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் #மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
ஹுதன் லில் முத்தகீன் – هُدًى لِلْمُتَّقِيْنَ
திருக்குர்ஆன் “தக்வா” இறை பக்தி – இறையச்சம் உள்ளவர்களுக்கு வழி காட்டும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான். (திருக்குர்ஆன் 02-02)
கடந்த தொடர் ஒன்றில் “தக்வா” இறை பக்தி என்றால் என்னவென்று எழுதியிருந்தேன்.
திருக்குர்ஆன் பக்தி உள்ளவர்களுக்கு நல்வழி காட்டும் என்று கூறியுள்ளான். அதாவது நேர்வழி காட்டும் என்று கூறியுள்ளான்.
பக்தியுள்ளவர்கள் – நல்வழி பெற்றவர்களாயிருக்கும் நிலையில் அவர்களுக்கு ஏன் நேர்வழி காட்ட வேண்டும் என்ற கேள்விக்கு விடை சொல்வதற்காகவே هُدًى لِلْمُتَّقِيْنَ திருக்குர்ஆன் பக்தி உள்ளவர்களுக்கு நேர்வழி – நல்வழி காட்டும் என்று தலைப்பில் எழுத நினைத்தேன்.
இதற்கு முன் அத்திவாரத்தை முதலில் பலப்படுத்தி இரண்டாவதாக விடயத்தை எழுதலாம் என்று திருக்குர்ஆன் வசனங்கள் தொடர்பான விளக்கங்களை எழுதி வருகிறேன். இவை முடிந்த பின் இறை பக்தி உள்ளவர்களுக்கு நேர்வழி எதற்கு என்ற கேள்விக்கு விடை எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்!
“அலிப் லாம் மீம்”
இது “பகறா” அத்தியாயத்தின் முதலாவது வசனமாகும். இவ்வசனத்திற்கு ஸுஊத் குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் அஸீஸின் மகன் மன்னர் பஹ்த் அவர்கள் அன்பளிப்புச் செய்த திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு நூலில் “அலிப் லாம் மீம்” என்ற முதலாவது வசனம் அறபு மொழியிலும், தமிழிலும் எழுதப்பட்டிருந்தாலும் இவ்வசனத்திற்கான மொழிபெயர்ப்பு எழுதப்படவில்லை. இந்நூல் ஹிஜ்ரீ 1414ல் அச்சிடப்பட்டதாகும். இந்நூலின் மொழிபெயர்ப்பை சரி கண்டவர்களில் இலங்கை நாட்டைச் சேர்ந்த உலமாஉகளில் நால்வர் அடங்குவர். இந்நால்வரும் ஸஊதி அரசாங்கத்தோடு தொடர்புள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் 29 அத்தியாயங்கள் மட்டும் வித்தியாசமானவையாகும். அதாவது 29 அத்தியாயங்களின் முதலாம் வசனங்கள் மட்டும் வித்தியாசமானவையாகும். இதன் விபரம் விளக்கமாக பின்னால் இடம் பெற்றுள்ளது.
01. பகறா அத்தியாயம். வசனம் 01. இதை “அலிப் லாம் மீம்” என்று மொழிய வேண்டும்.
02. ஆல இம்றான் அத்தியாயம். வசனம் 01. இதை “அலிப் லாம் மீம்” என்று மொழிய வேண்டும்.
03. அல் அஃறாப் அத்தியாயம். வசனம் 01. இதை “அலிப் லாம் மீம் ஸாத்” என்று மொழிய வேண்டும்.
04. யூனுஸ் அத்தியாயம். வசனம் 01. இதை “அலிப் லாம் றா” என்று மொழிய வேண்டும்.
05. “ஹுத்” அத்தியாயம். வசனம் 01. இதை “அலிப் லாம் றா” என்று மொழிய வேண்டும்.
06. யூஸுப் அத்தியாயம். வசனம் 01. இதை ஷஷஅலிப் லாம் றா|| என்று மொழிய வேண்டும்.
07. “றஃத்” அத்தியாயம். வசனம் 01. இதை “அலிப் லாம் மீம் றா” என்று மொழிய வேண்டும்.
08. இப்றாஹீம் அத்தியாயம். வசனம் 01. இதை “அலிப் லாம் றா” என்று மொழிய வேண்டும்.
09. “அல்ஹிஜ்ர்” ஹிஜ்ர் அத்தியாயம். வசனம் 01. இதை “அலிப் லாம் றா” என்று மொழிய வேண்டும்.
10. மர்யம் அத்தியாயம். வசனம் 01. இதை “காப் ஹா யா ஐன் ஸாத்” என்று மொழிய வேண்டும்.
11. “தாஹா” அத்தியாயம். வசனம் 01. இதை “தாஹா” என்று மொழிய வேண்டும்.
12. “அஷ்ஷுஅறா” அத்தியாயம். வசனம் 01. இதை “தா ஸீம் மீம்” என்று மொழிய வேண்டும்.
13. அந்நம்லு அத்தியாயம். வசனம் 01. இதை “தாஸீன்” என்று மொழிய வேண்டும்.
14. அல்கஸஸ் அத்தியாயம். வசனம் 01. இதை “தா ஸீம் மீம்” என்று மொழிய வேண்டும்.
15. “அல்அன்கபூத்” அத்தியாயம். வசனம் 01. இதை “அலிப் லாம் மீம்” என்று மொழிய வேண்டும்.
16. “அர்றூம்” அத்தியாயம். வசனம் 01. இதை “அலிப் லாம் மீம்” என்று மொழிய வேண்டும்.
17. “லுக்மான்” அத்தியாயம். வசனம் 01. இதை “அலிப் லாம் மீம்” என்று மொழிய வேண்டும்.
18. “அஸ்ஸஜ்தா” அத்தியாயம். வசனம் 01. இதை “அலிப் லாம் மீம்” என்று மொழிய வேண்டும்.
19. “யாஸீன்” அத்தியாயம். வசனம் 01. இதை “யாஸீன்” என்று மொழிய வேண்டும்.
20. “ஸாத்” அத்தியாயம். வசனம் 01. இதை “ஸாத்” என்று மொழிய வேண்டும்.
21. “அல் முஃமின்” அத்தியாயம். வசனம் 01. இதை “ஹாமீம்” என்று மொழிய வேண்டும்.
22. “ஹாமீம் ஸஜ்தா” அத்தியாயம். வசனம் 01. இதை “ஹாமீம்” என்று மொழிய வேண்டும்.
23. “அஷ்ஷூறா” அத்தியாயம். வசனம் 01, 02. இதை “ஹாமீம்” – “ஐன் ஸீன் காப்” என்று மொழிய வேண்டும்.
24. “அஸ்ஸுக்றுப்” الزُّخْرُفْ அத்தியாயம். வசனம் 01. இதை “ஹாமீம்” என்று மொழிய வேண்டும்.
25. “அத்துகான்” அத்தியாயம். வசனம் 01. இதை “ஹாமீம்” என்று மொழிய வேண்டும்.
26. “அல் ஜாதியா” الجاثية அத்தியாயம். வசனம் 01. இதை “ஹாமீம்” என்று மொழிய வேண்டும்.
27. “அல் அஹ்காப்” அத்தியாயம். வசனம் 01. இதை “ஹாமீம்” என்று மொழிய வேண்டும்.
28. “காப்” ق அத்தியாயம். வசனம் 01. இதை “காப்F” என்று மொழிய வேண்டும்.
29. “அல் கலம்” அத்தியாயம். வசனம் 01. இதை “நூன்” என்று மொழிய வேண்டும்.
மேற்கண்ட 29 அத்தியாயங்களின் தொடக்கத்தில் வந்துள்ள வசனங்களில் குறைந்தது ஓர் எழுத்தைக் கொண்ட வசனமும், கூடியது ஐந்து எழுத்துக்களைக் கொண்ட வசனங்களும் உள்ளன.
ஸஊதி அரசு வெளியிட்டுள்ள “தர்ஜமதுல் குர்ஆன்” மொழிபெயர்ப்பில் 29 அத்தியாயங்களில் முதலாம் வசனம் எந்த ஓர் இடத்திலும் மொழி பெயர்க்கப்படவில்லை. இதன் படி சுமார் 30 வசனங்கள் மொழி பெயர்க்கப்படவில்லை.
அதாவது திருக்குர்ஆனின் மொத்த வசனங்கள் 6666 என்ற கருத்தின் படி இவற்றில் சுமார் 30 வசனங்கள் மொழி பெயர்க்கப்படாத நிலையில் இந்த மொழி பெயர்ப்பு நூலுக்கு “தர்ஜமதுல் குர்ஆன்” திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு என்று பெயர் வைத்திருப்பது பொருத்தமற்றதாகும்.
ஏனெனில் திருக்குர்ஆன் என்பது 6666 வசனங்களை உள்வாங்கிய ஒன்றுக்கேயாகும். அவற்றில் சுமார் 30 வசனங்களை மொழிபெயர்க்காமலிருக்கும் நிலையில் பொதுவாக திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு என்று பெயர் வைத்திருப்பது பொருத்தமற்றதாகும். இதற்குப் பொருத்தமான பெயர் வைப்பதாயின் ترجمة بعض القرآن குர்ஆன் சிலதின் மொழிபெயர்ப்பு அல்லது ترجمة بعض آي القرآن குர்ஆன் வசனங்களிற் சிலதின் மொழி பெயர்ப்பு என்று பெயர் வைப்பதே பொருத்தமாகும்.
ஸஊதியின் வெளியீடான “தர்ஜமதுல் குர்ஆன்” திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு பிரதியில் குறித்த 29 இடங்களிலும் திரு வசனத்தை மட்டும் தமிழில் எழுதியுள்ளார்களேயன்றி அவற்றின் மொழிபெயர்ப்பை கூறவில்லை.
அறபு வசனத்தை மட்டும் தமிழில் எழுதிவிட்டு மொழி பெயர்ப்பு எழுதவில்லையானால் விஷயம் தெரியாதவர்கள் அவ்வசனத்திற்கு மொழி பெயர்ப்பு இல்லை என்று எண்ணிக் கொள்வதற்கு சாத்தியம் உண்டு. இதேபோல் மொழியாக்கமில்லாத வசனங்கள் திருக்குர்ஆனில் உள்ளன என்று அவர்கள் நினைப்பதற்கும் வழியுண்டு. இது பெரும் தவறாகும்.
ஸஊதி வெளியிட்ட “தர்ஜமதுல் குர்ஆன்” பிரதியில் மொழிபெயர்க்காமல் அறபு வசனத்தை மட்டும் தமிழில் எழுதியுள்ளதால் வாசிப்பவர்களுக்கு எந்த ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை. மாறாக சந்தேகமே ஏற்படும்.
மொழிபெயர்க்காமல் விட்டவர்கள் அதற்கான காரணத்தை சுருக்கமாகவேனும் எழுதியிருக்கலாம். அதைக் கூட அவர்கள் செய்யவில்லை. செய்திருந்தால் கேள்விக்கு இடமிருந்திருக்காது.
திருக்குர்ஆன் வசனங்கள் எல்லாமே மக்களுக்கு சொல்வதற்காக அருளப்பட்டனவே தவிர அவற்றில் சிலதை மறைப்பதற்காக அருளப்படவில்லை.
அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறியுள்ளான்.
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ
அல்லாஹ் எத்தகையவனென்றால் தனது தூதரை நேர்வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்துக் கொண்டிருப்போர் வெறுத்த போதிலும் உலகிலுள்ள எல்லா மார்க்ககங்களை விட இஸ்லாம் மார்க்கத்தை மேலோங்கச் செய்யவே அவ்வாறு செய்தான். (திருக்குர்ஆன் 09 – 33)
மேற்கண்ட இவ்வசனத்தில் لِيُظْهِرَهُ என்று ஒரு சொல் வந்துள்ளது. இதன் பொருள் மார்க்கத்தைப் பகிரங்கப்படுத்துவதற்காகவே அல்லாஹ் நபீ பெருமானாரை நபீயாக அனுப்பி வைத்தானேயன்றி அதை இரகசியமாகச் சொல்வதற்காக அல்ல என்பதாகும். இஸ்லாம் மார்க்கத்தின் கருத்துக்களும், தத்துவங்களும் பகிரங்கமாகச் சொல்லப்பட வேண்டியவையே தவிர இரகசியமாகச் சொல்லப்பட வேண்டியவையல்ல.
இன்னும் அல்லாஹ் பின்வருமாறு கூறியுள்ளான்.
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَكَفَى بِاللَّهِ شَهِيدًا
அல்லாஹ் எத்தகையவனென்றால் தனது தூதரை நேர்வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக தன் தூதரை அனுப்பி வைத்தான். இன்னும் இதற்குச் சாட்சியாக இருக்க அல்லாஹ் போதுமானவன். (திருக்குர்ஆன் 48-28)
மேற்கண்ட திருவசனம் போல் இவ்வசனமும் சத்திய மார்க்கத்தை மறைக்காமல் அதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றே கூறுகிறது.
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ
மேற்கண்ட இரு திரு வசனங்கள் போல் இவ்வசனமும் சத்திய மார்க்கத்தை மறைக்காமல் அதை பகிரங்கப்படுத்த வேண்டுமென்றே கூறுகிறது. (திருக்குர்ஆன் 61-09)
மேற்கண்ட 09-33, 48-28, 61-09 முதலான திரு வசனங்கள் மார்க்கத்தை பகிரங்கப்படுத்த வேண்டுமென்றே கூறுகின்றன.
மார்க்கத்தைப் பகிரங்கப்படுத்துவதும், திருக்குர்ஆனைப் பகிரங்கப்படுத்துவதும் இரண்டும் ஒன்றேதான். இரண்டும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டியவையே தவிர மறைக்கப்பட வேண்டியவையல்ல. இரகசியமாக சொல்லப்பட வேண்டியவையுமல்ல.
எனவே, திருக்குர்ஆனின் 6666 வசனங்களில் எந்த ஒரு வசனத்தையும் மறைப்பது திருக்குர்ஆனுக்கே முரணானதாகும்.
தொடரும்…