தொடர் 05
اَللهم صَلِّ وَسَلِّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ قِبْلَةِ الْوَاجِدِ وَالْمَوْجُوْدِ،
யா அல்லாஹ்! கண்மணி நாயகம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது நீ ஸலவாத், ஸலாம் சொல்வாயாக! அவர்கள் “வாஜித்” படைத்தவனுக்கும், “மவ்ஜூத்” படைப்புக்கும் “கிப்லா” முன்னோக்குமிடமாக உள்ளார்கள்.
மேற்கண்ட இவ்வசனம் “ஸுப்ஹான மவ்லித்” எனும் நூல் சின்ன “துஆ”வில் இடம் பெற்றுள்ளது. சின்ன “துஆ”வை முழுமையாக எழுதுகிறேன்.
اللهم صَلِّ وَسَلِّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ اَعْلَمِ الْعَالَمِيْنْ، وَأَشْرَفِ الْمُرْسَلِيْنْ، مَخْزَنِ كَنْزِ الْوُجُوْدْ، وَمِفْتَاحِ خَزَائِنِ الْجُوْدْ، وَقِبْلَةِ الْوَاجِدِ وَالْمَوْجُوْدْ، وَصَاحِبِ لِوَاءِ الْحَمْدِ وَالْمَقَامِ الْمَحْمُوْدْ، حَمَامِ بُرُوْجِ الْمَلَكُوْتْ، وَطَاؤُوْسِ حَضْرَةِ الْجَبَرُوْتْ، وَمُدَرِّسِ مَسْجِدِ اللَّاهُوْتْ، وَمَحْبُوْبِ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتْ،
மேற்கண்ட இந்த “துஆ”வில் 10 அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் முதலாம் அம்சமான اَعْلَمِ الْعَالَمِيْنْ என்ற வசனத்திற்கும், இரண்டாம் அம்சமான أَشْرَفِ الْمُرْسَلِيْنْ என்ற வசனத்திற்கும் விளக்கம் எழுதவில்லை. இன்ஷா அல்லாஹ் ஆரம்பித்த அம்சத்திலிருந்து எட்டு அம்சங்களையும் நிறைவு செய்த பின் குறித்த இரு அம்சங்களையும் எழுதுவேன்.
இத் தொடரில் ஐந்தாவது அம்சம் பற்றி எழுதுகிறேன்.
قِبْلَةُ الْوَاجِدِ وَالْمَوْجُوْدْ
“கிப்லா” என்ற சொல்லை முஸ்லிம்கள் தொழுகின்றவன் முன்னோக்கும் திசைக்குப் பயன்படுத்துவார்கள். தொழுகையை தொடங்கு முன் “நிய்யத்” வைப்பார்கள் அதில்,
مُسْتَقْبِلًا إِلَى الْكَعْبَةِ الشَّرِيْفَةِ
என்ற வசனத்தை சேர்த்துக் கொள்வார்கள். இதன் பொருள் “சிறப்பு மிகு “கஃபா”வை முன்னோக்கியவனாக” என்பதாகும்.
தொழுகின்றவர் எந்த நாட்டில் இருந்தாலும் அவர் திரு மக்கா நகரிலுள்ள “கஃபா” வை முன்னோக்கியவராகவே தொழ வேண்டும். அதை முன்னோக்காவிட்டால் தொழுகை நிறைவேறாது. “கஃபா” உள்ள திசைதான் முஸ்லிம்கள் தொழுகையின் போது முன்னோக்க வேண்டிய திசையாகும். இது “கிப்லா” என்று அழைக்கப்படுகின்றது.
இது தவிர இதற்கு வேறு பொருளும் உண்டு. இச் சொல்லுக்கு பொதுவாக جِهَةٌ திசை என்ற பொருளும் உண்டு. இதனால்தான் قِبْلَةُ الْمُصَلِّىْ தொழுகின்றவனின் திசை என்று சொல்லப்படுகின்றது. இதேபோல் எதெல்லாம் முன்னோக்கப்படுகின்றதோ அதெல்லாம் “கிப்லா” என்ற பெயரில் அழைக்கப்படும்.
كُلُّ مَا يُسْتَقْبَلُ مِنَ الشَّيْءِ
ஸூபிஸ வழியில் – இறை ஞான வழியில் – நடக்கின்ற ஒருவன் தனது ஞான குருவை “கிப்லா” என்றும் அழைப்பதுண்டு. இது சில நாட்டவர்களின் வழக்கத்தில் உண்டு. ஒரு மாணவன் தனது ஆசிரியரை “கிப்லா” என்று சொல்லும் வழக்கமும் சில நாடுகளில் உண்டு. இவ்வாறு சொல்லிக் கொண்டாலும் தொழுகின்றவன் தொழும் போது “கஃபா”வையே “கிப்லா”வாக எடுத்துக் கொள்ள வேண்டுமேயன்றி தனது ஆன்மிக குருவையோ, ஆசிரியரையோ “கிப்லா”வாக ஆக்கிக் கொள்ளுதல் பிழையாகும். அவ்வாறு தொழுதால் தொழுகை நிறைவேறவும் மாட்டாது. இங்கு இன்னும் சற்று ஆழமாக ஆய்வு செய்யவும் முடியும்.
அதாவது مَجْذُوْبْ “மஜ்தூப்” என்று ஒருவர் இருப்பதாக ஆன்மிக வழியில் கூறப்படுகிறது. அவர் யாரெனில் இறை வழியில் அவர் பயணிக்கும் போது அவரின் சிந்தனையில் சில மாற்றம் ஏற்படும். அந்த மாற்றம் அவரின் சிந்தனையை குழப்பிவிடும். அவ்வேளை அவரின் அறிவும், புத்தியும் வழமை போல் இயங்காமற் போய்விடும். அந்நேரம் அவரால் வெளியாகின்ற சொல்லும், செயலும் வித்தியாசமானவையாக இருக்கும். சுருக்கமாக சொன்னால் அவரை விடயம் தெரியாதவர்கள் பைத்தியம் என்று சொல்லி சமூகத்திலிருந்து ஒதுக்கிவிடுவார்கள்.
இத்தகைய ஒருவர்தான் “மஜ்தூப்” என்று அழைக்கப்படுவார். இவரால் சில வேளை “ஷரீஆ”வுக்கு முரணான சொல், செயல் வெளியாக இடமுண்டு. அவ்வாறு வெளியானால் அதை மற்றவர்கள் கணக்கெடுக்காமல் அவரை விட்டு விட வேண்டும். அவருக்கு உதவி செய்ய விரும்பினவர்கள் செய்யலாம். ஆயினும் அவருக்கு அநீதி செய்யலாகாது,
“கிப்லா” என்ற சொல் தொழுகையில் முன்னோக்கப்படும் “கஃபா”வைக் குறிப்பது போல் வேறு சில அர்த்தங்களுக்கும் அது பாவிக்கப்படும் என்று நான் எழுதியுள்ளேன். இதன்படி ஒரு “முரீத்” சிஷ்யன் தனது ஞான குருவை “கிப்லா” என்று சொல்ல முடியும்.
இந்தியாவில் “தரீகா” வழி நடக்கும் முரீதுகளும், மார்க்க கல்வி கற்கும் ஸுன்னத் வல் ஜமாஅத் மாணவர்களும் தமது குருமார்களையும், ஆசிரியர்களையும் “கிப்லா” என்ற சொல்லால் விழிப்பார்கள். இதில் குற்றமில்லை. எனினும் தொழும் போது அவர்களை “கிப்லா”வாக ஆக்கிக் கொள்வது முற்றிலும் பிழையாகும்.
பெருமானார் அவர்கள் அல்லாஹ்வுக்கும், படைப்புகளுக்கும் “கிப்லா” என்று சொல்லப்படுவது கௌரவத்தை கருத்திற் கொண்டதேயன்றி தொழுகையில் அவர்களை முன்னோக்கும் நோக்கத்தில் அல்ல. தொழுகையில் “கஃபா”வை மட்டுமே முன்னோக்க அனுமதியுண்டு.
அல்லாஹ் பெருமானாரை முன்னோக்குகிறான். அதேபோல் அவர்கள் அவனை முன்னோக்குகிறார்கள்.
“ஷரீஆ”வின் சட்டம் தெரியாத சில போலி ஷெய்குமார் தொழுகையில் தம்மை முன்னோக்குமாறு சிஷ்யர்களுக்கு கூறியதாக அறிய முடிகிறது. இது தவறு. இவ்வாறு சொல்லும் போலி ஷெய்குகளை கைப்பிடித்து அவர்கள் காட்டும் வழியில் நடப்பது வழிகேடாகும்.
“முறாகபா” என்று ஆன்மிகத்தில் ஒரு நிலை உண்டு. அதெவ்வாறெனில் ஒரு “ஷெய்கு” ஞான குருவிடம் “பைஅத்” ஒப்பந்தம் செய்து கொண்ட ஒரு “முரீத்” சிஷ்யன் தனது குருவை தனது கண்களை மூடிக் கொண்டு கற்பனைக் கண்ணால் பார்ப்பதாகும். அவரின் உருவத்தை கற்பனைக் கண் முன் நிறுத்தி கண் இமைக்காமல் – அவரின் தோற்றம் மறைந்து விடாமல் முழுக்கவனத்தையும் செலுத்தி பார்ப்பதாகும். இதுவே “முறாகபா” எனப்படும்.
இவ்வாறு சிஷ்யன் பார்த்து பயிற்சி எடுத்து வரும் போது அவனின் “ஷெய்கு” நிதர்சனமாகவே அவனுக்குத் தோற்றமளிப்பார்.
இந்நிலையை ஒரே முறையில் அல்லது ஒரே நாளில் அடைந்து விட முடியாது. சிலர் சில நாட்களில் அடைந்து கொள்வர். இன்னும் சிலர் சில மாதங்களில் அடைந்து கொள்வர். இன்னும் சிலர் ஒரு வருடத்தில் அடைந்து கொள்வர்.
இவ்வாறு அவன் பயிற்சி செய்து குருவை நிதர்சனமாக காணும் பாக்கியம் பெற்றுக் கொண்டானாயின் அந்தக் குருவின் தோற்றத்தில் எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அவனுக்குத் தோற்றுவார்கள்.
எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் படைத்தவனான அல்லாஹ்வுக்கு “கிப்லா”வாகவும், படைப்புகளுக்கு “கிப்லா”வாகவும் உள்ளார்கள் என்றால் தொழும் ஒருவன் நபீகளாரின் “றவ்ழா”வை – அடக்கம் பெற்றுள்ள இடத்தை தொழும் போது “கிப்லா”வாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று விளங்கிக் கொள்ளலாகாது.
மேற்கண்ட “துஆ”வில் இடம் பெற்ற 10 அம்சங்களில் மூன்றாம், நாலாம் அம்சங்களுக்கு கடந்த பதிவுகளில் விளக்கம் கூறியிருக்கிறேன். இந்தப் பதிவில் ஐந்தாவது அம்சத்திற்கு சுருக்கமாக விளக்கம் கூறியுள்ளேன். ஏனைய அம்சங்களுக்கு தொடர்ந்து கட்டம் கட்டமாக விளக்கம் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்!
அதிசயமென்னவெனில் வஹ்ஹாபிகள் இந்த “துஆ”, ஸலவாத் இஸ்லாமிய கொள்கைக்கு முரணானதென்று கூச்சலிடுவதும், அவர்களின் கூச்சலை செவியேற்றுக் கொண்டு அவர்களுக்கு மறுப்புக் கூறாமல் தம்மை ஸுன்னீகள் என்று கூறும் உலமாஉகள் இதை ஓதி வருவதுமேயாகும். இந்த “துஆ”, ஸலவாத் பற்றி “பத்வா” வியாபாரிகள் என்ன சொல்வார்களோ!
தொடரும்…