தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“கஸீததுல் புர்தா” பாடல் 35
نَبِيُّنَا الْآمِرُ النَّاهِيْ فَلَا أَحَدٌ – أَبَرَّ فِى قَوْلِ لَا مِنْهُ وَلَا نَعَمِ
பொருந்தும் விதி விலக்கைப்
புகுத்தும் நபீ நாதரினும்
தெரிந்துரை ஆம் அல்லவெனச்
செப்பு மெய்யர் வேறிலரே!
பொருள்: நம்மின் நபீகளார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நல்லவைகளை ஏவியும், அல்லவைகளை விலக்கியும், நல்வழி காட்டும் நற்றவப் பெருந் தூதர். ஆதலால் ஆம் அல்லது அல்ல என்ற வாய்மையில் அப் பெருந்தகையை விட மற்றெவரும் சத்தியவானில்லை.
பெருமான் ஏந்தல், ஏழையின் பங்காளர், எண் திசையும் போற்றும் புரவலர், என் கல்புக்கனி, ஈருலகின் “றூஹ்” உயிர், உத்தம புத்திரர், உள நோய் வைத்திய மேதை முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு 40 வது வயதில் “நுபுவ்வத்” நபீ பட்டம் கிடைத்தது. தங்களின் 63வது வயதில் “வபாத்” மறைந்தார்கள். 40 வருடங்கள் வெளிப்படையில் நபீ பட்டமின்றியும், 23 வருடங்கள் தான் நபீ என்பதை வெளிப்படுத்தியும் வாழ்ந்துள்ளார்கள்.
அவர்களின் 63 வருட வாழ்வில் ஒரு பொய்யாவது சொன்னதற்கு வரலாறைக் காணவில்லை. எவராலும் நிரூபிக்கவும் முடியவில்லை. இப்புனிதத்துவம் உலகில் தோன்றி மறைந்த 124, 000 நபீமாருக்கும் உண்டு. இவர்களுக்கு – நபீகளாருக்கு – மட்டுமல்ல. எனினும் இவர்கள் அவர்களில் மிகப் புனிதமானவர்களாவர். படைப்புக்களில் இவர்களுக்கு நிகர் இவர்களேதான். எம் பெருமான் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஒரு பொய்யாவது சொன்னார்கள் என்று சொன்னவன் “காபிர் காபிர் காபிரேதான்” இதில் சந்தேகமில்லை.
நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சில சமயங்களில் பேசிய பேச்சு சிற்றறிவுக்கும், வெளியறிவுக்கும் பொய் போல் விளங்கினாலும் கூட அது பொய்யல்ல என்று ஆன்மிக அடிப்படையில் நிறுவ முடியும். அதற்குமுன் அவர்களின் பேச்சு பொய் போல் காட்டக் கூடிய ஏழு ஹதீதுகளை – நபீ மொழிகளை இங்கு எழுதுகிறேன்.
ஹதீது ஒன்று:
நபீ தோழர் அபூ மூஸல் அஷ்அரீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் பெருமானார் அவர்களிடம் வந்த குழுவினர் – நபீ தோழர்கள் – தம்மை தமதூருக்கு ஏதாவது வாகனத்தில் ஏற்றியனுப்புமாறு அவர்களிடம் கேட்ட போது அதற்கவர்கள் وَاللهِ لَا أَحْمِلُكُمْ، وَمَا عِنْدِيْ مَا أَحْمِلُكُمْ இறைவன் மீது சத்தியமாக உங்களை நான் ஏற்றி அனுப்பமாட்டேன். உங்களை ஏற்றி அனுப்புவதற்கு என்னிடம் எந்த வாகனமும் இல்லை என்று கூறிவிட்டார்கள்.
வந்த குழுவினர் பெருமானாரின் பேச்சை சிரமேற்றாங்கியவர்களாக தமது பொதிகளை தோளிலும், தலையிலும் சுமந்தவர்களாக கால் நடையாக தமது கிராமத்தை நோக்கி நடந்தனர்.
அதன்பின் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு சில ஒட்டகங்கள் கிடைத்தன. அப்போது நபீகளார் தங்களின் தோழர் ஒருவரை அழைத்து கால் நடையாகச் செல்லும் குழுவினரை அழைத்து வருமாறு கூறினார்கள். அதன்படி அத்தோழர் அவர்களை அழைத்து வந்தார்.
பெருமானார் ஐந்து ஒட்டகங்களில் அவர்களையும், அவர்களின் பொதிகளையும் ஏற்றி அவர்களை அனுப்பி வைத்தார்கள். போனவர்கள் மீண்டும் நபீ பெருமானிடம் வந்து, அல்லாஹ்வின் றஸூலே! எங்களை ஏற்றி அனுப்பமாட்டேன் என்று சத்தியம் செய்து சொன்ன நீங்கள் பின்னர் ஏற்றி அனுப்பினீர்கள் என்று சொன்ன போது مَا أَنَا حَمَلْتُكُمْ، وَلَكِنَّ اللهَ حَمَلَكُمْ நான் உங்களை ஏற்றி அனுப்பவில்லை. எனினும் அல்லாஹ்தான் உங்களை ஏற்றி அனுப்பினான் என்று கூறினார்கள். பெருமானார் விளக்கம் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் விளக்கம் கேட்கவுமில்லை.
ஆதாரம்: புகாரீ, ஹதீது எண்: 3133, அறிவிப்பு: அபூ மூஸல் அஷ்அரீ
உண்மையில் அக்குழுவினரையும், அவர்களின் பொதிகளையும் ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பியவர்கள் நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயன்றி அல்லாஹ் என்று ஒருவன் வந்து ஏற்றியனுப்பவில்லை. ஆயினும் நபீகளார் நடந்த நிகழ்வுக்கு மாறாக, உண்மைக்குப் புறம்பாக கூறியுள்ளார்கள். இது பொய்யா? இல்லையா? அறபு மொழியில் “பொய்” என்பதற்கு كَذِبٌ، كِذَابٌ، كِذْبَةٌ، كَذْبَةٌ، كِذْبٌ என்றெல்லாம் சொல்ல முடியும். இச் சொல் صِدْقٌ உண்மை என்ற சொல்லின் எதிர்ச் சொல்லாகும்.
“பொய்” என்றால் اَلْإِخْبَارُ عَنِ الشَّيْئِ بِخِلَافِ مَا هُوَ مَعَ الْعِلْمِ بِهِ “ஒரு செய்தியை – ஒரு நிகழ்வை உண்மைக்கு மாறாகச் சொல்வதாகும். அது பொய்யென்று அறிந்திருக்கும் நிலையில்” என்று வரைவிலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. அதாவது நடக்காத ஒன்றை நடந்ததாகவும், நடந்த ஒன்றை நடக்கவில்லை என்றும், சொல்லாத ஒன்றைச் சொன்னதாகவும், சொன்ன ஒன்றை சொல்லவில்லை என்றும் உண்மைக்கு மாறாகச் சொல்வதாகும். இது பொய்யென்று சொல்லப்படும்.
“கல்கு” படைப்பு என்ற சொல்லுக்கு “பொய்” என்ற பொருளும் உண்டு. ஏனெனில் அது எதார்த்தத்தில் இல்லாத ஒன்றாகும். அது இருப்பதாகச் சொல்வது பொய்யன்றி வேறென்ன?
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் திரு மக்கா நகரில் முதன் முறையாக மக்கா மக்களிடம் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று கூறிய போது அந்த மக்கள்,
أَجَعَلَ الْآلِهَةَ إِلَهًا وَاحِدًا إِنَّ هَذَا لَشَيْءٌ عُجَابٌ، وَانْطَلَقَ الْمَلَأُ مِنْهُمْ أَنِ امْشُوا وَاصْبِرُوا عَلَى آلِهَتِكُمْ إِنَّ هَذَا لَشَيْءٌ يُرَادُ، مَا سَمِعْنَا بِهَذَا فِي الْمِلَّةِ الْآخِرَةِ إِنْ هَذَا إِلَّا اخْتِلَاقٌ،
எல்லாத் தெய்வங்களையும் ஒரே தெய்வமாக இந்த முஹம்மத் ஆக்கிவிட்டாரா? இது பெரும் வியப்பான விடயமாகும். “இவரை விட்டும் விலகிச் செல்லுங்கள். உங்கள் தெய்வங்களை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக இதில் (இவரது பிரச்சாரத்தில்) ஏதோ (சுயநலம்) நாடப்படுகிறது” என்று அவர்களின் தலைவர்கள் (கூறிச்) சென்றனர். வேறு எந்த மார்க்கத்திலும் (அல்லது இறுதியாக வந்த வேதத்தில்) இதுபோன்று நாம் கேள்விப்பட்டதில்லை. இது இவருடைய பொய்யேயன்றி வேறில்லை. (38 – 5,6,7)
எல்லாத் தெய்வங்களும் ஒரே தெய்வம்தான் எனும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை உணர்த்தும் இவ்வசனத்திற்கு விளக்கம் கூறத் தொடங்காமல் “கல்கு” படைப்பு என்ற சொல்லுக்கு பொய் என்ற பொருள் உண்டு என்பதை மட்டும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
اِخْتِلَاقْ
– என்றால் பொய் என்று பொருள் வரும். இச் சொல் “கல்க்” என்ற சொல்லின் மற்றொரு தோற்றமாகும். அதாவது “இக்திலாக்” என்ற சொல்லின் பிறப்பிடம் “கல்க்” என்ற சொல்தான். படைப்பு என்பது எதார்த்த்தில் இல்லாததாயிருக்கும் நிலையில் அது இருப்பதாகச் சொல்வது பொய்யல்லாமல் வேறென்ன? இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்வதுதானே பொய்.
இவ் ஆதாரத்தை எதற்காக எழுதினேன் என்றால் இல்லாத ஒன்றைச் சொல்வது பொய் என்று நிறுவுவதற்கு ஆதாரமாகவே கூறினேன்.
இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்வதும், நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்வதுமே பொய் என்றால் நபீ பெருமானைச் சந்திக்க வந்த நபீ தோழர்களையும், அவர்களின் பொதிகளையும் ஒட்டகங்களில் ஏற்றி அனுப்பிவிட்டு ஏற்றி அனுப்பவில்லை என்று சொல்வது பொய்யா? இல்லையா?
எனவே, ஹதீதில் வந்துள்ளபடி நான் ஏற்றி அனுப்பவில்லை என்பதும் பொய். وَاللهُ حَمَلَكُمْ அல்லாஹ்தான் ஏற்றி அனுப்பினான் என்பதும் பொய்யாகிவிடும். ஏனெனில் அல்லாஹ் என்று ஒருவன் அங்கு வரவுமில்லை. அவன் ஏற்றியனுப்பவுமில்லை. ஆகையால் நபீகளார் பொய் சொன்னார்கள் என்று இந்த நபீ மொழியை இரும்புத் துரும்பாக வைத்துக் கொண்டு துள்ளுவோருக்கு இறுதியில் விளக்கம் கொடுப்போம். பெருமானார் பொய் சொல்லவில்லை என்று நிறுவுவோம்.
ஹதீது இரண்டு:
இரண்டாவது ஹதீது – நபீ மொழியும் முதலாவது நபீ மொழி போன்றதேயாகும். விடயத்திலும், கருத்திலும் இரண்டும் ஒன்று போன்றதே. எனினும் இந்த இரண்டாவது நபீ மொழியில் பெருமானார் மூன்று ஒட்டகம் கொடுத்தாக வந்துள்ளது. ஐந்து என்று வரவில்லை.
எனவே, இந்த ஹதீதுக்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை. முதலாம் நபீ மொழிக்கு எழுதியுள்ள விளக்கம் இரண்டாம் நபீ மொழிக்கும் பொருத்தமானதேயாகும்.
ஆதாரம்: முஸ்லிம், ஹதீது எண்: 1649, அறிவிப்பு அபூ முஸல் அஷ்அரீ
ஹதீது மூன்று:
“தாயிப்” யுத்தம் நடக்கவிருந்த அன்று நபீ தோழர்கள் தாயிப் மண்ணில் கூட்டம் கூட்டமாக குவிந்திருந்தார்கள். பல குழுக்களாக பல பக்கங்களிலும் போருக்கு ஆயித்தமாயிருந்தார்கள். அவர்களில் “கலீபாஉ”களும், பிரதான தோழர்களும் இருந்தார்கள்.
அவ்வேளை நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அங்கு வந்து அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் கரம் பற்றி அவர்களை மட்டும் ஒரு பக்கம் அழைத்துச் சென்று அன்று காலை முதல் மாலை வரை இருவரும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்கள். இதைத் தூரத்திலிருந்து ஏனைய தோழர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் இரகசியமாக பேசியதால் ஏனையோருக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவில்லை.
அப்போது கூடியிருந்த தோழர்களில் ஒருவர் இன்னொருவரிடம் பெருமானார் தங்களின் சாச்சாவின் மகனுடன் – அலீயுடன் – நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இதையறிந்த பெருமானார் அவர்கள், مَا أَنَا اِنْتَجَيْتُهُ، وَلَكِنَّ اللهَ اِنْتَجَاهُ “அவருடன் – அலீயுடன் நான் பேசவில்லை. எனினும் அல்லாஹ்தான் அவருடன் பேசினான்” என்று கூறினார்கள்.
ஆதாரம்: அக்பாறு மக்கா, ஹதீது எண்: 1964, அறிவிப்பு: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்
ஹதீது நான்கு:
தாயிப் யுத்தம் நடைபெறவிருந்த அன்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்த அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் கரம் பற்றி அவர்களை அழைத்துக் கொண்டு சற்று தூர இடம் சென்று ஒரு நாள் பகற் பொழுது முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஸெய்யிதுனா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்து அவ்விருவரும் பேசிக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்று يَا رَسُوْلَ اللهْ! لَقَدْ طَالَتْ مُنَاجَاتُكَ عَلِيًّا مُنْذُالْيَوْمِ அல்லாஹ்வின் திருத்தூதரே! இன்று பகல் முழுவதும் அலீ அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறினார்கள். அதற்கு பதிலளித்த எம் பெருமானார் அவர்கள், مَا أَنَا اِنْتَجَيْتُهُ، وَلَكِنَّ اللهَ اِنْتَجَاهُ அலீயுடன் நான் பேசவில்லை. எனினும் அல்லாஹ்தான் அவருடன் பேசினான் என்று கூறினார்கள்.
ஆதாரம்: அல்முஃஜமுல் கபீர், ஆசிரியர்: இமாம் தபறானீ, ஹதீது எண்: 1756,
அறிவிப்பு: ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு
ஹதீது ஐந்து:
தாயிப் யுத்தம் நடைபெறவிருந்த அன்று நபீ பெருமான் அலீ அவர்களை அழைத்துக் கொண்டு தூர இடம் சென்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளை கூட்டத்துடன் இருந்த ஒரு தோழர் பெருமானார் தங்களின் சாச்சா மகனுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார். இதையறிந்த பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், مَا أَنَا اِنْتَجَيْتُهُ، وَلَكِنَّ اللهَ اِنْتَجَاهُ அலீயோடு நான் பேசவில்லை. எனினும் அல்லாஹ்தான் அவரோடு பேசினான் என்று கூறினார்கள்.
ஆதாரம்: மனாகிப் அலீ, ஆசிரியர்: இப்னுல் மஙாசிலீ, அறிவிப்பு: ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு
மேற்கண்ட மூன்றாம், நான்காம், ஐந்தாம் ஹதீதுகள் மூன்றும் ஒரே விடயத்தையே கூறுகின்றன. அவ்விடயம் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பேசவில்லை. எனினும் அவர்களுடன் பேசியவன் அல்லாஹ்தான் என்ற விடயமாகும்.
நபீ பெருமானார் அவர்கள் ஒரே விடயத்தை ஒரே வசனத்தில் மூன்று கட்டங்களில் கூறியுள்ளார்கள். அவர்கள் கூறியதிலுள்ள வியப்பான விடயம் என்னவெனில் அவர்களே அழைத்து வந்து அவர்களே அலீயுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு “அலீயுடன் நான் பேசவில்லை, எனினும் அல்லாஹ்தான் பேசினான்” என்று கூறியதாகும்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் இவ்வாறு சொன்னது பொய்யா? இல்லையா? அவர்கள் பொய் சொன்னார்கள் என்று சொன்னவன் “காபிர்” ஆகிவிட்டான். அவர்கள் பொய் சொல்லவில்லை. இதற்கான விளக்கம் ஸூபீகளான நாங்கள் சொல்வோம். இன்ஷா அல்லாஹ்!
ஹதீது ஆறு:
திரு மதீனா நகரில் “மஸ்ஜிதுன் நபவீ” நபீ அவர்களின் பள்ளிவாயலில் அவர்களே தொழுகை நடத்துவார்கள். அவர்களுக்கு நோய் ஏற்பட்டால் ஸெய்யிதுனா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்களை தொழுகை நடத்துவதற்கு முற்படுத்துவார்கள். அதாவது அவர்களையே தொழுகை நடத்துமாறு பணிப்பார்கள். இது வழக்கத்தில் உள்ளதாகவே இருந்து வந்தது. இந்த விபரம் நபீ தோழர்கள் அனைவருக்கும் தெரிந்த விடயமே! இந்த விடயம் ஸெய்யிதுனா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகள் ஹப்ஸா நாயகி றழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் தெரியும்.
ஒரு நாள் ஹப்ஸா நாயகி அவர்கள் அண்ணலெம்பிரான் அவர்களிடம் அல்லாஹ்வின் திருத் தூதரே! உங்களுக்கு நோய் வந்தால் – உங்களால் தொழுகை நடத்த முடியாது போனால் ஸெய்யிதுனா அபூ பக்ர் நாயகம் அவர்களையே தொழுகை நடத்துவதற்கு முற்படுத்துகிறீர்கள் என்று சொன்னார்கள். அப்போது நபீகளார், لَسْتُ أَنَا الَّذِيْ أُقَدِّمُهُ، وَلَكِنَّ اللهَ قَدَّمَهُ “அவர்களை தொழுகைக்காக முற்படுத்துவது நானல்ல. எனினும் அல்லாஹ்தான் அவர்களை முற்படுத்துகிறான்” என்று கூறினார்கள்.
ஆதாரம்: பழாயிலுஸ்ஸஹாபா, ஆசிரியர்: இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹிமஹுல்லாஹ்.
அறிவிப்பு: ஹப்ஸா நாயகி றழியல்லாஹு அன்ஹா.
இந்த ஆறாவது ஹதீதும் கூறப்பட்ட ஏனைய ஐந்து ஹதீதுகள் போல் எம் பெருமானார், பொய்யென்றால் என்னவென்றே தெரியாத ஏந்தல் “அஸ்ஸாதிகுல் அமீன்” அவர்கள் பொய் சொன்னது போல் அறிவிக்கிறது. இதற்கும் விளக்கம் எம்மிடமுண்டு. வெளி வரும் நேரம் வெளி வரும்.
ஹதீது ஏழு:
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் திரு மதீனா நகரில் பல “கபீலா” قَبِيْلَةْ கள் இருந்தன. இன்றும் அறபு நாடுகளிலும், ஏனைய நாடுகளிலும் பல “கபீலா” கோத்திரங்கள் உள்ளன. அவற்றில் நபீ பெருமான் அவர்களின் காலத்தில் “அஸ்லம் கபீலா” என்றும், “ஙிபார் கபீலா” என்றும் இரு பெரும் “கபீலா” கோத்திரங்கள் இருந்தன. இவ்விரு கோத்திரத்தை சேர்ந்தவர்களும் நபீ பெருமானார் அவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தவர்களாவர். இதனால் பெருமானார் அவர்கள் இவர்களுக்காக “துஆ” செய்துள்ளார்கள்.
ஒரு சமயம், أَسْلَمُ سَالَمَهَا اللهُ، وَغِفَارُ غَفَرَ اللهُ لَهَا “அஸ்லம்” கோத்திரத்தை அல்லாஹ் ஈடேற்றமாக்கி வைப்பானாக! என்றும், “ஙிபார்” கோத்திரத்தாரின் பாவங்களை மன்னிப்பானாக! என்றும் “துஆ” பிரார்த்தித்தார்கள். இவ்வாறு செய்த எம் பெருமானார் அவர்கள் “இவ்வாறு நான் சொல்லவில்லை, எனினும் அல்லாஹ்தான் சொன்னான்” என்று கூறினார்கள். مَا أَنَا قُلْتُهُ، وَلَكِنَّ اللهَ قَالَهُ என்று கூறினார்கள்.
ஆதாரம்: பழாயிலுஸ்ஸஹாபா, ஆசிரியர்: அஹ்மத் இப்னு ஹன்பல்,
முஸ்னத் அஹ்மத், ஆசிரியர்: அஹ்மத் இப்னு ஹன்பல்,
அல்முஃஜமுல் கபீர்: ஆசிரியர்: இமாம் தபறானீ
மேற்கண்ட ஏழு நபீ மொழிகளும் எம் பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களை அல்லாஹ் என்று கூறியுள்ளார்கள் என்று அறிவிக்கின்றன.
முதலாம் ஹதீதில் لَسْتُ أَنَا حَمَلْتُكُمْ، وَلَكِنَّ اللهَ حَمَلَكُمْ நான் உங்களை ஒட்டகங்களில் ஏற்றியனுப்பவில்லை, எனினும் அல்லாஹ்தான் ஏற்றி அனுப்பினான் என்ற வசனமும்,
இரண்டாம் ஹதீதிலும் அதே போன்ற வசனமும்,
மூன்றாம் ஹதீதில் مَا أَنَا اِنْتَجَيْتُهُ، وَلَكِنَّ اللهَ اِنْتَجَاهُ அலீ அவர்களுடன் நான் பேசவில்லை. எனினும் அவருடன் அல்லாஹ்தான் பேசினான் என்ற வசனமும்,
நாலாம் ஹதீதிலும் அதே போன்ற வசனமும்,
ஐந்தாம் ஹதீதிலும் அதே போன்ற வசனமும்,
ஆறாம் ஹதீதில் لَسْتُ أَنَا الَّذِيْ أُقَدِّمُهُ، وَلَكِنَّ اللهَ قَدَّمَهُ அவரை – அபூ பக்ர் ஸித்தீக் அவர்களை தொழுகை நடத்த நான் முற்படுத்தவில்லை, எனினும் அல்லாஹ்தான் அவரை முற்படுத்தினான் என்ற வசனமும்,
ஏழாம் ஹதீதில், مَا أَنَا قُلْتُهُ، وَلَكِنَّ اللهَ قَالَهُ அவ்வாறு நான் சொல்லவில்லை. எனினும் அல்லாஹ்தான் சொன்னான் என்ற வசனமும் பெருமானார் தங்களை அல்லாஹ் என்று சொல்லியுள்ளார்கள் என்று மிகத் தெளிவாக காட்டுகின்றன.
நபீ பெருமானார் அவர்கள் தாங்களே விரும்பிச் செய்த செயலை தாங்கள் செய்யவில்லை என்று ஏழு இடங்களிலும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்கள் என்பது எவராலும் மறுக்க முடியாது.
பெருமானார் தாங்களே விரும்பிச் செய்த ஒரு வேலையை தாங்களே அதை நான் செய்யவில்லை என்று மறுத்துப் பேசியிருப்பது அவர்களைப் பொறுத்து மட்டும் ஆகுமானதும், மற்றவர்களுக்கும் ஆகாததுமானதா? அல்லது பொதுவாக எல்லோருக்கும் ஆகுமானதுதானா? என்ற கேள்விக்கு அது ஆன்மிக வழி சென்று எதார்த்த நிலை அறிந்த எல்லோருக்கும் ஆகுமானதுதான் என்று விடை சொல்லப்பட்டால் ஒருவன் திருமணம் செய்துவிட்டு நான் திருமணம் செய்யவில்லை, எனினும் அல்லாஹ்தான் திருமணம் செய்தான் என்றும், ஒருவன் உறங்கிவிட்டு நான் உறங்கவில்லை, அல்லாஹ்தான் உறங்கினான் என்றும், ஒருவன் கொழும்புக்குச் சென்று விட்டு நான் கொழும்புக்குச் செல்லவில்லை, அல்லாஹ்தான் கொழும்புக்குச் சென்றான் என்றும் சொல்வது ஆகுமானதென்றே விடை சொல்லப்பட வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் ஸூபீகளான நாங்கள் இதற்கு மறுக்க முடியாத ஆதாரங்களை மக்கள் மன்றில் முன் வைப்பதற்கு ஆயித்தமாக உள்ளோம்.
எனினும் நமது நாட்டில் எல்லா விடயங்களுக்கும் “பத்வா” வழங்குகின்ற, இலங்கை வாழ் உலமாஉகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை இருப்பதாலும், பெரும் பெரும் உலமாஉகளை உள்வாங்கிய தப்லீக் ஜமாஅத் அமைப்பு இருப்பதாலும், “அல்அகீததுல் அஷ்அரிய்யா” கொள்கையை காலால் மிதித்துக் கொண்டு இப்னு தைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப் போன்றோரைப் பின்பற்றிய அமைப்புக்கள் இருப்பதினாலும் அவர்களை முந்திக் கொண்டு நாங்கள் முடிவு சொல்லாமல் அந்த மகான்களின் விளக்கங்களையும் எமது கருத்திற் கொண்டு விளக்கம் எழுத நாடியுள்ளோம்.
தொடரும்…