தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
ஒருவர் “துஆ” ஓத இன்னொருவர் அல்லது பலர் “ஆமீன்” சொல்லுதல் கூட்டு “துஆ” எனப்படும். இது இஸ்லாமின் பார்வையில் ஆகாதென்று நபீ மொழியறியாக் குறை மதியாளர்கள் கூறுகிறார்கள்.
இது மட்டுமல்ல. எங்காவது கூட்டு “துஆ” ஓதப்படுமென்று முன் கூட்டியே அறிந்து கொண்டார்களாயின் அதற்கு முன் அவ்விடத்தை விட்டும் மெல்ல நழுவி விடுவார்கள். அவர்கள் நழுவுவதை யாராவது கண்டு என்ன தம்பி அல்லது என்ன “அங்கிள்” “துஆ”வுக்கு இருக்கவில்லையா? என்று கேட்டால் உரிய காரணம் கூறி இனங்காட்டப் பயந்து, அல்லது கழிபட்டவன் என்று எண்ணிவிடுவார்கள் என அஞ்சி அவசர வேலையாகப் போகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்து விடுவார்கள்.
இவர்களின் இக் கொள்கையும், இந்த நடவடிக்கையும் கூட்டு “துஆ” ஆகுமென்று கூறிய அண்ணல் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களையும், அவ்வாறு சட்டம் கூறிய “புகஹாஉ” சட்ட மேதைகளையும், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற மூத்த உலமாஉகளையும், நமதூரிலும், வெளியூர்களிலும் வாழ்ந்து மறைந்த அறிவுலக மேதைகளையும், மற்றும் அசல் ஸுன்னீகளையும் நையாண்டி பண்ணும், இன்னும் இன்னோரை நையப்புடைக்கும் கீழ்த்தரமான செயலாகும்.
கூட்டு “துஆ” ஆகும் என்பதற்கு எண்ணற்ற நபீ மொழிகள் ஆதாரங்களாக உள்ளன. அவற்றையெல்லாம் எழுதத் தேவையில்லை. ஆதாரத்திற்கு ஒன்று இருந்தால் போதும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ الْمِنْبَرَ، فَقَالَ: «آمِينَ آمِينَ آمِينَ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ حِينَ صَعِدْتَ الْمِنْبَرَ قُلْتَ: آمِينَ آمِينَ آمِينَ، قَالَ: «إِنَّ جِبْرِيلَ أَتَانِي، فَقَالَ: مَنْ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ وَلَمْ يُغْفَرْ لَهُ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ، وَمَنْ أَدْرَكَ أَبَوَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يَبَرَّهُمَا، فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ، وَمَنْ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ»
நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “மின்பர்” பள்ளிவாயலில் உள்ள பிரசங்க மேடையில் ஏறிய போது “ஆமீன் ஆமீன் ஆமீன்” என்று மூன்றுதரம் சொன்னார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் திருத் தூதரே! நீங்கள் மேடையில் ஏறி மூன்று தரம் “ஆமீன்” என்று சொன்னீர்களே அதற்கு விளக்கம் என்ன? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பின்வருமாறு பெருமானார் விளக்கம் சொன்னார்கள்.
வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து, ஒருவன் றமழான் மாதத்தை அடைந்தும் தனது பாவம் மன்னிக்கப்படாமல் அவன் நரகில் நுழைந்தால் அல்லாஹ் அவனைத் தூரப்படுத்தி விடுவானாக! என்று கூறி என்னை “ஆமீன்” என்று சொல்லுங்கள் என்றார்கள். நான் “ஆமீன்” இறைவா இதை நீ ஏற்றுக் கொள்வாயாக! என்று சொன்னேன்.
இதையடுத்து ஒருவன் தனது பெற்றோர் இருவரையும், அல்லது அவர்களில் ஒருவரை அடைந்து அவர்களுக்கு நன்றியுள்ளவனாக நடந்து கொள்ளாமல் மரணித்து நரகம் சென்றால் அல்லாஹ் அவனைத் தூரப்படுத்தி வைப்பானாக! என்று கூறி என்னை “ஆமீன்” என்று சொல்லுங்கள் என்றார்கள். நான் “ஆமீன்” இறைவா! இதை நீ ஏற்றுக் கொள்வாயாக! என்று சொன்னேன்.
இதையடுத்து ஒருவன் உங்களின் பெயர் சொல்லக் கேட்டு உங்கள் மீது “ஸலவாத்” சொல்லாமல் மரணித்து நரகம் சென்றால் அவனை அல்லாஹ் தூரப்படுத்திவிடுவானாக! என்று கூறி “ஆமீன்” என்று சொல்லுங்கள் என்றார்கள். நான் “ஆமீன்” இறைவா! இதை நீ ஏற்றுக் கொள்வாயாக! என்று சொன்னேன் என்று கூறினார்கள்.
ஆதாரம்: இப்னு குஸைமா, ஹதீது எண்: 1888,
இப்னு ஹிப்பான், 2387, அத்தர்ஙீப் வத்தர்ஹீப் – 339
இந்த நபீ மொழி மூலம் குறித்த மூவருக்கும் பாதகமாக வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் “துஆ” கேட்டதாகவும், அவரின் “துஆ”வுக்கு நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் “ஆமீன்” சொன்னதாகவும் கூறப்பட்டுள்ளது.
வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் கேட்ட “துஆ” பிரார்த்தனைக்கு பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “ஆமீன்” சொல்லியுள்ளார்கள் என்பது நபீ மொழி மூலம் தெளிவாகிறது.
கூட்டு “துஆ” கூடாதென்றிருந்தால் ஜிப்ரீல் மட்டும் “துஆ” கேட்டிருப்பார். பெருமானார் அவர்களை “ஆமீன்” சொல்லுமாறு சொல்லியிருக்கவுமாட்டார். பெருமானார் “ஆமீன்” சொல்லியிருக்கவுமாட்டார்கள்.
இந்த நிகழ்வு கூட்டு “துஆ” ஆகும் என்பதற்கு ஆதாரமாகும்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُمَا أَخْبَرَاهُ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ‘ إِذَا أَمَّنَ الإِمَامُ، فَأَمِّنُوا، فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ المَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ – وَقَالَ ابْنُ شِهَابٍ – وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: آمِينَ ‘
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள்.
தொழுகை நடத்துகின்ற “இமாம்” “ஆமீன்” என்று சொன்னால் நீங்களும் – பின்னால் தொழுகின்றவர்கள் – “ஆமீன்” என்று சொல்லுங்கள். ஏனெனில் ஒருவன் சொல்கின்ற “ஆமீன்” மலக்குகள் – அமரர்கள் சொல்கின்ற “ஆமீன்” என்பதற்கு நேர்பட்டால் அவனின் முந்தின பாவம் மன்னிக்கப்படும் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரீ, ஹதீது எண்: 780
தொழுகை நடத்துகின்ற இமாம் “பாதிஹா ஸூறா” ஓதி முடிந்தவுடன் “ஆமீன்” என்று சொன்னதும் அவரைப் பின் தொடர்ந்து தொழுபவர்களும் “ஆமீன்” சொல்வது “ஸுன்னத்” நபீ வழியாகும்.
இமாம் “பாதிஹா ஸூறா” ஓதி “வலழ்ழால்லீன்” என்று முடிந்த பின் அதாவது ஒரு நொடி நேரம் கழித்து அவரே “ஆமீன்” என்று சொல்வார். அவருடன் இணைந்து அவரைத் தொடர்ந்து தொழுபவர்களும் “ஆமீன்” சொல்ல வேண்டும். இதே நேரம் “மலக்” அமரர்களும் “ஆமீன்” சொல்வார்கள். தொழுபவர்களில் யாராவதொருவர் சொல்கின்ற “ஆமீன்” அமரர்கள் சொல்கின்ற “ஆமீன்” என்பதற்கு நேர்படுமாயின் அவரின் முந்தின பாவம் மன்னிக்கப்படும் என்பது நபீ மொழி.
“மலக்” அமரர்கள் சொல்லும் “ஆமீன்” என்பதற்கு தொழுபவர்களில் ஒருவர் சொல்கின்ற “ஆமீன்” நேர்படுவதென்றால் எவ்வாறு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
அமரர்கள் எப்போது “ஆமீன்” என்று சொல்லத் தொடங்குகிறார்களோ அதே நேரம் பின்னால் தொழுகின்றவர்களும் “ஆமீன்” என்று சொல்லத் தொடங்குவதுதான் நேர்படுவது என்று வைத்துக் கொண்டால் அமரர்கள் “ஆமீன்” சொல்வதற்கு “ஆ” என்று தொடங்குகிறார்களோ அதே நொடியில் மற்றவர்களும் “ஆ” என்று தொடங்குவதென்பது முடியாத காரியமாகும். ஏனெனில் அமரர்கள் எப்போது “ஆ” என்று தொடங்குவார்கள் என்பதை சாதாரண மக்கள் அறிந்து கொள்ள முடியாது. மகான்கள் தவிர.
எனவே, مُوَافَقَةٌ – நேர்படுதல் என்பது தொடங்கும் நேரத்தைக் குறிக்காது. ஆகையால் பக்தி, தூய்மை போன்ற விடயத்தில் நேர்படுதல் என்றே விளங்கிச் செயல்பட வேண்டும். அவர்களின் பக்தியும், சொல்பவர்களின் பக்தியும் ஒன்று போல் இருந்தால் அது நேர்படுதலாகிவிடும்.
ஆகையால் “ஆமீன்” சொல்பவர்கள் பக்தியுடன் சொல்ல வேண்டும்.
மேற்கண்ட இந்த நபீ மொழி மூலம் நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் தொழுகை நடத்துபவர் “பாதிஹா ஸூறா” ஓதும் போது “துஆ” கேட்கிறார். அதாவது اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ என்பதிலிருந்து கடைசி வரை “துஆ”தான். இந்த “துஆ”வுக்கு தொழுகை நடத்துபவர் “ஆமீன்” சொல்வது போன்றும், அவரின் பின்னால் தொழுபவர்கள் “ஆமீன்” சொல்வது போன்றும், மலக்குகள் – அமரர்களும் “ஆமீன்” சொல்கிறார்கள். அதாவது தொழுகை நடத்துபவரின் “துஆ”வுக்கு அமரர்களும் “ஆமீன்” சொல்கிறார்கள். இது கூட்டு “துஆ”வா? இல்லையா?
எனவே, மேற்கண்ட ஆதாரங்கள் மூலம் கூட்டு “துஆ” ஆகும் என்பது தெளிவாகிறது.
கூட்டு “துஆ” ஆகும் என்பதற்கு திருக்குர்ஆனிலோ, நபீ மொழிகளிலோ ஆதாரம் இருக்கத்தான் வேண்டுமென்பது அவசியமில்லை. கூட்டு “துஆ” பிழையென்பதற்கு ஆதாரம் இல்லாதிருந்தால் அதுவே போதும். பின்வரும் நபீ மொழியை கூட்டு “துஆ”வை மறுப்போர் கலப்பற்ற எண்ணத்தோடு ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ»
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள்.
இஸ்லாமில் – இஸ்லாம் மார்க்கத்தில் யாராவது நல்ல வழக்கம் ஒன்றை – நல்ல நடைமுறை ஒன்றை புதிதாக ஏற்படுத்தினால் அவனுக்கு அதன் கூலியும், அவனுக்குப் பின் அதை நடைமுறைப் படுத்துகின்றவர்களுக்கு கிடைக்கின்ற கூலியும் உண்டு. இதனால் அதை நடைமுறைப்படுத்துகின்றவர்களின் கூலியில் ஒன்றும் குறைந்து விடாது.
இதேபோல் இஸ்லாம் மார்க்கத்தில் யாராவது ஒருவர் தீய வழக்கம் ஒன்றை புதிதாக ஏற்படுத்தினால் அவனுக்கு அதன் பாவமும், அவனுக்குப் பின் அதை நடைமுறைப் படுத்துகின்றவர்களுக்கு கிடைக்கின்ற பாவமும் உண்டு. அதனால் அதை நடைமுறைப்படுத்துகின்றவர்களின் பாவத்தில் ஒன்றும் குறைந்து விடாது.
ஆதாரம்: முஸ்லிம்.
இதை ஓர் உதாரணம் மூலம் விளங்குவோம். ஒருவன் مَنْ سَنَّ فِى الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً “இஸ்லாம் மார்க்கத்தில் நல்ல நடைமுறை ஒன்றை ஏற்படுத்துவானாயின்” உதாரணமாக தினமும் “அஸ்ர்” தொழுகையின் பின் ஓர் இடத்தில் ஐம்பது பேர் ஒன்று கூடி பெருமானார் அவர்களைப் புகழ்தல் என்று ஓர் நிகழ்வை ஏற்பாடு செய்தல் போன்று. இப்படியொன்று இஸ்லாம் மார்க்கத்தில் இல்லை. ஆயினும் ஒருவன் புதிதாக இவ்வழக்கத்தை ஏற்படுத்துவது போன்று.
திருக்குர்ஆனிலோ, நபீ மொழிகளிலோ இப்படியொரு நிகழ்வு மார்க்கமாக்கப்படவில்லை. இது மார்க்கமாக்கப்படாத ஒன்றுதான். இதில் சந்தேகமே இல்லை. எனினும் ஒருவன் இவ்வாறு புதிதாக ஏற்படுத்தினால் அது நன்மையான காரியமாகவும் இருந்தால் அது “பித்அத்” புதிதாக ஏற்படுத்தப்பட்டதாயினும் அது நல்ல காரியம் என்ற வகையில் அதைச் செய்வதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது. அவன் புதிதாக ஏற்படுத்திய அச் செயல் திருக்குர்ஆனுக்கோ, நபீ மொழிகளுக்கோ முரணாகாமல் இருந்தால் போதும். அதைச் செய்யலாம். அச் செயல் புதிதாக ஏற்படுத்தப்பட்ட “பித்அத்” ஆக இருந்தாலும் அதைச் செய்யலாம். மேற்கண்ட நபீ மொழி மூலம் நல்ல “பித்அத்” செய்வதற்கு நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அனுமதி வழங்கிவிட்டார்கள்.
மேற்கண்ட நபீ மொழியில் வந்துள்ள سَنَّ – “ஸன்ன” என்ற சொல்லுக்கு மார்க்கத்தில் நடைமுறையில் இல்லாத ஒன்றை புதிதாகச் செய்தான் என்ற பொருள் கொள்வதே பொருத்தமானதாகும்.
سَنَّ فُلَانٌ طَرِيْقًا مِنَ الْخَيْرِ لَمْ يَعْرِفْ قَوْمُهُ
இந்த வசனத்தை வஹ்ஹாபீ உலமாஉகளும், ஸுன்னீ உலமாஉகளும் மிக உன்னிப்பாக, ஆழமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
முஸ்லிமில் வந்துள்ளதாக நான் மேலே குறிப்பிட்ட நபீ மொழிக்கு முழுமையாக விளக்கம் எழுதவில்லை. இதோடு சுருக்கிக் கொள்கிறேன்.
ஒருவர் “துஆ” ஓத மற்றவர்கள் “ஆமீன்” சொல்வது எந்த வகையிலும் பிழையாகாதென்பது ஸூபிஸ வழி செல்லும் எங்களின் முடிவாகும். இது பிழையென்போர் தமது ஆதாரங்களை முன்வைப்பதை வரவேற்கிறோம்.