தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இறைவனால் படைக்கப்பட்ட யாவும் அவனின் “தாத்” உள்ளமையின் வெளிப்பாடேயன்றி அவனின் சக்தியின் வெளிப்பாடல்ல. ஏனெனில் “குத்றத்” சக்தி என்பது “தாத்”தை விட்டும் பிரிந்து ஒருபோதும் செயல்படமாட்டாது.
“தாத்” என்றாலும், “வுஜூத்” என்றாலும் இரண்டும் ஒன்றுதான். இதுவே இறைஞானிகளில் முத்திப் பழுத்தவர்களின் முடிவாகும். “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் பேசிய ஸூபீ மகான்கள் போன்று. இதற்கு மாறாக அது வேறு, இது வேறு என்று சொல்வோரும் உள்ளனர். ஆயினுமிவர்கள் ஸூபிஸ கோட்பாட்டிற்கு மாறானவர்களாவர்.
இறைஞானம் பேசுகின்றவர்கள் “தாத்” என்ற சொல்லைப் பயன்படுத்தினாலும் அதற்கு தமிழ் மொழியில் எந்தவொரு சொல்லையும் பயன்படுத்துகிறார்களில்லை. தமிழில் அதற்குச் சரியான ஒரு சொல் இல்லையென்றே நான் நினைக்கிறேன். எனினும் “தாத்” என்பதற்குரிய மறு பெயரான “வுஜூத்” என்ற சொல்லை தமிழில் உள்ளமை என்று மொழியாக்கம் செய்து சொல்கிறார்கள்.
“தாத்” என்ற அறபுச் சொல்லை தமிழில் மொழியாக்கம் செய்வதற்கு தமிழில் சொல் இல்லையென்றே நான் நினைக்கிறேன். ஆயினும் படைப்புகளைப் பொறுத்தவரை அவற்றுக்கு “தாத்” – “தவாத்” என்ற சொற்களை நாம் பயன்படுத்துகிறோம். ذَاتُ مُزَّمِّلٍ، ذَاتُ فَاطِمَةَ என்பன போன்று. அவற்றுக்கு அவ்வாறு பயன்படுத்தும் போது அவற்றின் உடல்கள் என்ற பொருளையே நாம் கருதுகிறோம். அதேபோல் அல்லாஹ்வுக்கு நாம் தமிழில் உடல் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. அவ்வாறு பயன்படுத்தினாலும் அது பல கருத்து வேறுபாடுகளையும், சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றன. ஆகையால் “தாத்” என்ற அறபுச் சொல்லையே பயன்படுத்தி வருகிறோம்.
“தாத்” என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது முஸ்லிம் அல்லாதவர்கள் அதை தெளிவாகப் புரிந்து கொள்கிறார்களில்லை என்பதால் கடந்த காலங்களில் “தாத்” என்ற சொல்லுக்குப் பதிலாக “பிரம்மம்” என்ற சொல்லை நான் பயன்படுத்திப் பேசினேன். இச் சொல் இந்து மதத்தவர்கள் பாவிக்கின்ற சொல்லாகையால் நான் பேசுகின்ற “வஹ்ததுல் வுஜூத்” தத்துவமும் இந்து மத தத்துவம் தான் என்று எனது எதிரிகளிற் பலர் மக்களிடம் பிரச்சாரம் செய்யத் தொடங்கியதால் அச் சொல்லைப் பயன்படுத்துவதையும் நான் நிறுத்திவிட்டு இன்று வரை “தாத்” என்ற சொல்லையும், “வுஜூத்” உள்ளமை என்ற சொல்லையும் மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்.
இலங்கையிலோ, இந்தியாவிலோ தமிழில் இறைஞானம் பேசுகின்றவர்கள் “தாத்” என்ற அறபுச் சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் இருப்பதாக அறிந்தால் அதை எமக்கு அறிவிக்குமாறு அவர்களை அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
அறபுச் சொற்களில் சில சொற்களுக்கு தமிழில் பொருத்தமான சொற்கள் எமக்கு கிடைக்காததால் ஏதோ ஒரு வகையில் பொருத்தமான சொல்லை நாம் பயன்படுத்தும் போது அதை மையமாக வைத்தே நாம் பேசுகின்ற உண்மையான தத்துவத்தையும் இந்து மத தத்துவமென்று படம் பிடித்துக் காட்டி குழப்பத்தை ஏற்படுத்துகின்ற போலி உலமாஉகளால் நாம் மிகவும் நிதானமாகவே சொற் பிரயோகங்கள் செய்து வருகிறோம்.
ஒரு சமயம் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தோழர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த போது அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் திருத்தூதரே!
إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً،
“ஒருவன் தனது உடை அழகாக இருக்க வேண்டும், பாதணி அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான்” என்று மட்டும் சொன்னார். அவரின் கேள்வியின் கருவை விளங்கிக் கொண்ட எம் பெருமானார்
إِنَّ اللهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ،
என்று பதில் கூறினார்கள்.
இதன் பொருள் அல்லாஹ் அழகன். அவன் அழகையே விரும்புகிறான் என்பதாகும். பெருமானார் அவர்கள் சுருக்கமாகக் கூறிய பதிலின் கருவை தோழர் விளங்கிக் கொண்டார். சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் இந்த நபீ மொழிக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்த நான் “அல்லாஹ் முருகன். முருகையே விரும்புகிறான்” என்று தமிழில் விளக்கம் சொன்னேன்.
மறு நாள் காலை காத்தான்குடியில் ஒரு துண்டுப் பிரசுரம் பெயருக்குரிய முதலெழுத்தும், முகவரியுமில்லாத ஒருவரால் வெளியிடப்பட்டது. அதில் அவர் றஊப் மௌலவீ முருகனை வழிபடுகிறார் என்று எழுதி குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார்.
அழகன் என்ற சொல்லுக்கு தமிழ் அகராதியில் முருகன் என்று பொருள் உண்டு. இதை எழுதுவது பிழையா? அன்றுடன் இந்துக்கள் பாவிக்கின்ற சொற்களைக் கூட பயன்படுத்துவதையும் நான் விட்டு விட்டேன்.
இறைஞானத்தின் எதிரிகள் இறைவனின் எதிரிகள். இவர்களை இறைவனின் எதிரிகளாக மாற்றியவர்கள் போலி உலமாஉகளேயாவர். இவர்கள் நல்வழி பெறாத வரை முஸ்லிம்கள் இறைஞானத்தை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. இவர்கள் நல்வழி பெறும் வரை என்று சொல்வதை விட உலமா சபையின் உயிரற்ற “பத்வா” இருக்கும் வரை என்று சொல்வதே பொருத்தமானதாகும்.
இன்று உலகில் வாழும் 200 கோடி முஸ்லிம்களும் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று வாயால் சொன்னவர்கள்தான். ஆயினும் அவர்களில் ஸூபீ மகான்கள் கூறும் அடிப்படையில் திருக்கலிமாவின் பொருளை விளங்கி அறிந்தவர்கள் இருபது இலட்சம் பேர்கள் இருப்பார்களா என்பது கூட கேள்விக்குறிதான்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் வாழ்ந்த நூற்றாண்டும், அதையடுத்த தொடரான இரண்டு நூற்றாண்டுகளுமே திருக்கலிமாவின் பொருளில் பொய் பரவாத காலமாயிருந்தன. சுமார் 300 ஆண்டுகள்தான் திருக்கலிமாவில் புரட்டல், ஊடுருவல் செய்யப்படாத காலங்களாயிருந்தன.
இது குறித்தே பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
خَيْرُ الْقُرُونِ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ يَفْشُو الْكَذِبُ،
“நூற்றாண்டுகளில் சிறந்தது எனது நூற்றாண்டு. சிறப்பில் அதை அடுத்தது அடுத்த நூற்றாண்டு. சிறப்பில் அதை அடுத்தது அதையடுத்த நூற்றாண்டு. பின்பு பொய் பரவும்” என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
நபீ பெருமான் அவர்கள் மூன்று நூற்றாண்டுகளை – முன்னூறு வருடங்களை சிறந்த காலம் என்று குறிப்பிட்டு பின்னர் பொய் பரவும் என்று கூறியுள்ளார்கள்.
மூன்று நூற்றாண்டுகள் “கைர்” நல்ல நூற்றாண்டுகள் என்று கூறிய கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்லஸாது வஸ்ஸலாம் அவர்கள் அதன் பிறகு பொய் பரவுமென்று கூறினார்கள்.
இந்த நபீ மொழியின் வசன நடைப்படி ثُمَّ يَفْشُو الْكَذِبُ என்று வசனம் வராமல் ثُمَّ يَفْشُو الشَّرُّ பிறகு தீமை பரவும் என்றே வசனம் வந்திருக்க வேண்டும். ஏனெனில் “கைர்” நல்லது என்ற சொல்லின் எதிர்ச் சொல் “ஷர்று” கெட்டது என்பதேயாகும். பொய் என்பதல்ல. முன்னால் “கைர்” என்ற சொல் வந்துள்ளதால் பின்னால் “ஷர்று” என்ற சொல் வருவதே பொருத்தம். பெயர், முகவரி இல்லாத யாரோ ஒருவர் இவ்வாறு சொல்லியிருந்தால் இவ்வசனத்தை மேற்கண்டவாறு மாற்ற முடியும். ஆனால் இவ்வசனம் சொன்னவர்களோ أَعْلَمُ الْعَالَمِيْنْ உலக மக்களில் மிகப் பெரும் அறிஞராகையால் இவ்வசனத்தை எவராலும் மாற்றவோ, திருத்தவோ முடியாது. பெருமானார் சொன்னதே சரியானதாகும்.
பொய் என்பது “ஷர்று” தீமையில் ஒரு வகையாயினும் அதற்கே நபீ பெருமானார் முக்கியத்துவம் கொடுத்துச் சொல்லியிருப்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
மூன்று நூற்றாண்டுகள் பொய்யில்லாத காலமா?
நபீ பெருமானார் குறித்த முன்னூறாண்டுகளிலும் வாழ்ந்த மக்கள் பொய் சொல்லவில்லையா? என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் கூற முடியாது.
நபீ பெருமானின் நூற்றாண்டிலும், அதன் பின்னுள்ள இரண்டு நூற்றாண்டிலும் வாழ்ந்த மக்கள் பொய் சொன்னார்கள் என்பதில் எவரும் இரண்டாம் கருத்து கூற முடியாது.
எனினும் நபீ பெருமானார் அவர்கள், பின்னர் பொய் பரவும் என்று குறிப்பிட்டது “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற இஸ்லாமிய மூல மொழியில்தான் என்பது தெளிவாகிறது.
பெருமானார் அவர்கள் சுட்டிக் காட்டிய முன்னூறு ஆண்டுகளிலும் உலகில் வாழ்ந்த முஸ்லிம்களில் எவரும் பொதுவாகப் பொய் சொல்லவில்லை என்ற கருத்து பிழையானதாகும். அக்கால கட்டத்தில் மெய்யர்களும் இருந்தார்கள், பொய்யர்களும் இருந்தார்கள். ஆயினும் உலக விவகாரங்களில் பொய்யர்கள் இருந்தார்களாயினும் “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் இஸ்லாமிய மூல மொழியில் பொய் சொன்னவர்கள் இருந்ததில்லை. குறித்த முன்னூறு ஆண்டுகளிலும் திருக்கலிமாவில் تَحْرِيْفْ புரட்டல் செய்யப்படவில்லை. ஊடுருவல் செய்யப்படவில்லை. இது குறித்தே பெருமானார் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மூன்று நூற்றாண்டுகள் சிறந்ததென்றும், அதன் பின் பொய் பரவும் என்றும் சொன்னார்கள்.
பொய் பரவுதல்:
“திருக்கலிமா” என்று முஸ்லிம்களால் சொல்லப்படுகின்ற “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் இஸ்லாமிய மூல மொழிக்கு உரிய, சரியான பொருள் “அல்லாஹ் அல்லாத “இலாஹ்” தெய்வம் இல்லை” என்பதாகும். அல்லது “அல்லாஹ்வுக்கு வேறான எந்த “இலாஹ்” தெய்வமும் இல்லை” என்பதாகும். அல்லது “அல்லாஹ்வுக்கு வேறான எதுவும் இல்லை” என்பதாகும்.
மேற்கண்ட மூன்று விதமான பொருளில் எப் பொருளும் சரியானதேயாகும். இவை தவிர இன்று படித்தவர்களில் பலரும், படிப்பறிவில்லாத “அவாம்” பொது மக்களில் அநேகமானவர்களும் மேலே குறிப்பிட்ட மூன்று வகைப் பொருளில் எதையும் நம்பாமல் “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்ற பொருளை மட்டுமே நம்பியும், சொல்லியும் வருகிறார்கள். அதோடு மட்டும் அவர்கள் நின்று விடாமல் மேற்கண்ட மூன்று வகைப் பொருளும் பிழையென்றும் நம்புகிறார்கள். நம்ப வைக்கவும் படுகிறார்கள்.
ஸூபிஸ வழி செல்லும் நாங்கள் மேலே சொன்ன மூன்று வகைப் பொருள் மட்டுமே சரியென்றும், இக்காலத்தில் அதிகமானோர் நம்பியும், சொல்லியும் வருகின்ற “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்ற பொருள் திருக்கலிமாவின் பொருளல்ல என்றுமே சொல்கிறோம். இவ்வாறு நாம் சொல்வதால் அல்லாஹ் வணக்கத்திற்குரியவன் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. எங்களின் கொள்கை அன்றும், இன்றும், என்றும் அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் என்பதேயாகும். அல்லாஹ் ஒருவன் என்றும், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன், அவனுக்கு நிகருமில்லை, இணை துணையுமில்லை என்றே நம்புகிறோம். பேசியும் வருகிறோம். எழுதியும் வருகிறோம். எங்கள் கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் விளக்கமும் கூறியும், எழுதியும் வருகிறோம்.
இவை போதாதென்று எங்களின் கொள்கையை எதிர்க்கின்ற முப்திகளையும், உலமாஉகளையும் எங்களிடம் வந்து கற்றுக் கொள்ளுமாறும் அழைக்கிறோம். தரமான உலமாஉகளில் ஒரு குழு எங்களிடம் வந்து சில நாட்கள் தங்கியிருந்து கற்குமாறு அழைக்கிறோம். தங்கியிருக்கும் நாட்களில் உணவு, மற்றும் தங்குமிட வசதிகளும் செய்து தருகிறோம் என்று சொல்லியும் அழைக்கிறோம். எழுத்து மூலம் பல தரம் அழைத்துமிருக்கிறோம். ஆயினும் எங்களின் அழைப்பு செவிடன் காதில் சங்கு ஊதினாற் போலாகிவிட்டது.
صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُوْنَ
اَلنَّصِيْبُ يُصِيْبُ وَلَوْ كَانَ بَيْنَ جَبَلَيْنِ، وَالنَّصِيْبُ لَا يُصِيْبُ وَلَوْ كَانَ بَيْنَ شَفَتَيْنِ،
قَضَى وَقَدَّرَ كُلَّ شَيْءٍ بِحَقٍّ وَعَدْلٍ،
நாங்கள் கூறிவருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” கோட்பாட்டை – தத்துவத்தை – யார் ஏற்றுக் கொண்டாலும், யார் எதிர்த்தாலும் ஸூபிஸ வழி செல்லும் நாங்கள் எங்களின் இறுதி மூச்சு வரை இதே கருத்தை வலியுறுத்திக் கொண்டே இருப்போம்.
1979ம் ஆண்டு முதல் இன்று வரை (22.09.2022) நான் பேசிய பேச்சுக்களும், நூல்கள், கட்டுரைகள் மூலம் எழுதிய விளக்கங்களும், கருத்துக்களும் நற்பாக்கியம் உள்ளவனுக்குப் போதும். போதும். போதுமே!
مَنْ أَرَادَ سَعَادَةَ الدَّارَيْنِ فَلْيُطَالِعْ كُتُبِيْ وَلْيَسْمَعْ كَلَامِيْ
இன்ஷா அல்லாஹ் கரீப் நவாஸ் ஹாஜா அவர்களின் தரிசனத்திற்காக இன்னும் சில நாட்களில் நான் அஜ்மீர் செல்ல இருப்பதாலும், பெருமானார் அவர்களின் முதல் வசந்தம் அண்மையில் இருப்பதாலும் தலைக்கு சுமைகள் அதிகமாவிடும் என்று நினைக்கிறேன். كل يوم هو فى شأن