தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
وَمَا كَانَ لَكُمْ أَنْ تُؤْذُوا رَسُولَ اللَّهِ وَلَا أَنْ تَنْكِحُوا أَزْوَاجَهُ مِنْ بَعْدِهِ أَبَدًا إِنَّ ذَلِكُمْ كَانَ عِنْدَ اللَّهِ عَظِيمًا
மேலும் அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் தொல்லை கொடுப்பது உங்களுக்குத் தகுமானதன்று. அவர்களின் மனைவியரை அவர்களுக்குப் பின்னர் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் ஒரு காலத்திலும் கூடாது. நிச்சயமாக அது அல்லாஹ்விடத்தில் (பாவத்தால்) மிக்க மகத்தானதாகும்.
(திருக்குர்ஆன் 33-53)
எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களின் மனைவியர்களில் ஒன்பது பேர் உயிருடன் இருந்தார்கள். அவர்களில் எவரையும் அன்று வாழ்ந்த நபீ தோழர்களில் எவரும் திருமணம் செய்வதற்கு விரும்பவுமில்லை. முன்வரவுமில்லை.
அக்கால கட்டத்தில் திரு மதீனா நகரில் வாழ்ந்த அறபு மக்களில் பெருமானாருடன் உயிருக்கு உயிராக வாழ்ந்த தோழர்களிற் பலர் இருந்தும் கூட, அதேபோல் பண வசதியுடையவர்கள் பலர் இருந்தும் கூட அவர்களில் எவரும் அப்பெண்களைத் திருமணம் செய்ய நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.
இதற்கான காரணம் மேற்கண்ட திரு வசனமேயாகும். நபீ தோழர்களில் எவரும் திருக்குர்ஆன் ஆணைக்கு மாறு செய்ததற்கு வரலாறே இல்லை.
இதேபோல் பெருமானார் அவர்களின் மனைவியர்களில் ஒருவர் கூட திருமணம் செய்ய வேண்டுமென்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இதற்கும் காரணம் மேற்கண்ட திருவசனமேயாகும்.
யாராவது ஒருவன் மரணித்தால் அவனுடைய மனைவியை இன்னொருவன் முடிப்பதற்கு இஸ்லாமில் எத்தடையும் கிடையாது. இது பொதுவான சட்டம். அவர்கள் இருவரும் விரும்பினால் திருமணம் செய்து கொள்ள முடியும்.
பொதுவான சட்டம் இவ்வாறிருக்கும் நிலையில் பெருமானாரின் மனைவியரை வேறெவரும் அம்மனைவியரின் மரணம் வரை திருமணம் செய்தல் தண்டனைக்குரிய பெரும் குற்றமென்று அல்லாஹ்வின் “ஆடர்” வந்ததந்கான காரணம் என்னவென்று நாம் ஆய்வு செய்து பார்ப்போம்.
மேற்கண்ட இச்சட்டம் திருக்குர்ஆன் மூலம் அல்லாஹ் அறிவித்த சட்டமேயன்றி பெருமானார் கூறிய சட்டமுமல்ல. அவர்களின் மனைவியர் கூறிய சட்டமுமல்ல.
ஒரு கணவன் தனது மனைவி மீது அளவற்ற பாசமுள்ளவனாகவும், அவளைத் தனது உயிரை விட நேசித்தவனாகவும் வாழ்ந்தான் என்று வைத்துக் கொள்வோம். அதேபோல் மனைவியும் இருந்தாள் என்றும் வைத்துக் கொள்வோம்.
இத்தகைய அளவற்ற அன்பின் – காதலின் காரணத்தால் கணவனுக்குத் தனது மனைவியை தனது மறைவின் பின் எவரும் திருமணம் செய்யக் கூடாது என்ற உணர்வும், அதேபோன்ற உணர்வு மனைவிக்கும் வருவதும் அசாத்தியமான ஒன்றல்ல. வருவதற்குச் சாத்தியம் உண்டு. அவ்வாறு வருவது பிழை என்றும் சொல்ல முடியாது. அவ்வாறு உலகில் எங்கும், எவருக்கும் நடக்கவில்லை என்றும் சொல்லவும் முடியாது.
இத்தகைய உணர்வு குறித்த தம்பதிகளுக்கு ஏற்பட்டு இருவரும் அவ்வாறு உடன்படிக்கை செய்து கொண்டார்களாயின் அவ் உடன்படிக்கையை அவர்கள் இருவரும் பேண வேண்டும். அமுல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தல் அவ்விருவரினதும் தனிப்பட்ட விடயமாகும்.
நபீ பெருமானாரின் மறவுக்குப் பின்னர் அவர்களின் மனைவியர்களை எவரும் திருமணம் செய்யக் கூடாதென்று அல்லாஹ் அருள் மறை மூலம் தடுத்தது, விலக்கியது மேற்கண்ட வகையைச் சேர்ந்ததல்ல. அது கணவனும், மனைவியும் செய்து கொண்ட ஒப்பந்தம். இது அல்லாஹ் தடை செய்த காரியம்.
பெருமானார் அவர்கள் தங்களின் மனைவியருடன் அப்படியொரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் என்பதற்கு ஆவண ரீதியான எந்த ஓர் ஆதாரமும் இல்லை.
அவ்வாறு இருக்குமாயின் அதையறிந்த அல்லாஹ் அவர்களை கண்ணியப்படுத்தும் வகையில் அப்படியொரு சட்டம் பிறப்பித்தான் என்று சொல்வதற்கு ஒரு வாய்ப்பு உண்டு. இங்கு அதுவுமில்லை.
இது தவிர இன்னொரு வகையிலும் நாம் ஆய்வு செய்யலாம்.
அல்லாஹ் தனது அன்பிற்குரியவர்களான “ஹபீப்” முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பாவித்த வாகனத்தை இன்னொருவர் பாவிக்க விரும்பாததினாலும் திருமறை மூலம் அவ்வாறு அறிவித்திருக்கலாம். இதற்கு சாத்தியம் உண்டு. ஆயினும் இது கூட நூறு வீதமும் பொருத்தமான கருத்துமல்ல. காரணமுமல்ல.
ஏனெனில் மன்னர்கள், கோடீஸ்வரர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர் பாவித்த கார் போன்றவற்றை பிறர் பாவிப்பதை விரும்பாத அவர்களின் குடும்பத்தவர்கள் அதை அவர்கள் தொட்டும் பார்க்காமல் பத்திரமாக பாதுகாத்து வைக்கின்றார்கள். ஆயினுமது காலப் போக்கில் கறை பிடித்து இத்துப் போய் விட்டால் அதை பழைய இரும்புச் சாமான்கள் வாங்குபவர்களுக்கு விற்று விடுகிறார்கள். அல்லது குப்பையில் போட்டு விடுகிறர்கள்.
இதேபோல் பெருமானார் அவர்களின் மனைவியர் தமக்குரிய வாழ்நாள் காலம் முடிந்தால் – மரணித்தால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டு விடுகிறார்கள். எனவே, மேற் சொன்ன காரணமும் நூறு வீதம் பொருத்தமானதென்று கொள்ள முடியாது.
ஆகையால் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர்களின் மனைவியரை எவரும் திருமணம் செய்யலாகாதென்றும், அது பெருங்குற்றமென்றும் திரு மறை மூலம் பிரகடனம் செய்ததற்கான ஆவண ரீதியான காரணம் ஆன்மிகத்தோடு தொடர்புள்ள காரணம் என்றே கூற வேண்டும்.
اَلنَّبِيُّ حَيٌّ
– நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மரணிக்கவில்லை. இன்னும் உயிரோடுதான் உள்ளார்கள் என்பதே அதற்கு நூறு வீதம் பொருத்தமான காரணமாகும் என்பது எனது ஆய்வில் நான் கண்ட, அறிந்த முடிவாகும்.
ஒரு பெண்ணின் கணவன் உயிரோடிருக்கும் வரை அவள் இன்னொருவரைத் திருமணம் செய்வது விலக்கப்பட்டதாகும். ஒருவரின் மனைவியை அவர் “தலாக்” விவாகரத்துச் செய்தால் அல்லது அவள் – மனைவி “பஸ்க்” செய்தால் மட்டுமே அவள் இன்னொருவரைத் திருமணம் செய்ய முடியும்.
எம் பெருமானார் அவர்கள் அன்றும், இன்றும், இனிமேலும் உலக முடிவின் வரை உயிருடன் இருக்கும் நிலையில் அவர்களின் மனைவியரை எவராயினும் திருமணம் செய்வது விலக்கப்பட்டதேயாகும்.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் எதார்த்தம் பற்றி திருக்குர்ஆனில் கூறிய அல்லாஹ் واعلموا أن فيكم رسول الله “அல்லாஹ்வின் திருத்தூதர் “உங்களிலே” இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளான். (திருமறை 49-07)
இங்கு وَاعْلَمُوْا நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் என்ற சொல்லை அல்லாஹ் ஏன் பயன்படுத்தியுள்ளான் என்பதை கண்ணியமிக்க மத போதகர்கள் தமது கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு ஆய்வு செய்தார்களாயின் அவர்களுக்கு இத் தத்துவம் குன்றின் மேல் தீபம் போல் தெளிவாகும்.
ஸூபீ மகான்கள் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் எதார்த்தத்தில் மரணித்து மற்றவர்கள் போல் மண்ணுடன் மண்ணாகிவிட்டார்கள் என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
மூளை நோயால் பாதிக்கப்பட்ட கிறுக்கர்களும், ஸூபீ மகான்களின் அகமியங்களையும், அவர்கள் கூறும் தத்துவங்களையும் புரிந்து கொள்ளாத, அல்லது புரிந்து கொள்ள சக்தியற்ற போலி மத போதகர்களும் பெருமானார் எதார்த்தத்தில் மரணித்து விட்டார்கள் என்று விளங்கிக் கொண்டார்கள்.
இவர்கள் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ள பின்வரும் தத்துவத்தைத் தமது கறுப்புக் கண்ணாடியை கழற்றி விட்டு ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ
அல்லாஹ்வின் பாதையில் – அல்லாஹ்வுக்காக வெட்டப்பட்டு கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் அல்லாஹ்விடம் உயிரோடுதான் உள்ளார்கள். அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. (திருமறை 03 – 169)
மேற்கண்டவாறு உயிர் துறந்தவர்கள் “ஷுஹதாஉ”கள்தான். ஆயினுமிவர்கள் சிறிய போரில் “ஷஹீத்” ஆனவர்களேயாவர். பெரிய போரில் “ஷஹீத்” ஆனவர்கள் அல்லர்.
ஒரு சமயம் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் புனிதப் போர் ஒன்றை முடித்துவிட்டு தோழர்களுடன் பள்ளிவாயலுக்கு வந்து அவர்கள் மத்தியில் உரை நிகழ்த்துகையில், مرحباً بكم قدمتم من الجهاد الأصغر إلى الجهاد الأكبر நல்வரவாகுங்கள்! நீங்கள் சிறிய போரை முடித்து விட்டு பெரிய போருக்கு திரும்பியுள்ளீர்கள் என்று கூறினார்கள்.
இது கேட்ட தோழர்கள் நாங்கள் முடித்து விட்டு வந்திருப்பதுதானே பெரிய யுத்தம். ஆனால் அதை நபீ பெருமான் சிறிய யுத்தம் போன்றும், இதன் பிறகு செய்யப் போவதுதான் பெரிய யுத்தம் என்றும் சொல்கிறார்களே அதுஎன்ன யுத்தம் என்று கேட்டறிவதற்காக وما الجهاد الأكبر يا رسول الله பெரிய யுத்தமென்றால் என்ன? என்று வினவினார்கள். அவர்களுக்கு விடை கூறிய பெருமானார் هو الجهاد مع النفس அது “நப்ஸ்” எனும் மனவெழுச்சியுடன் போர் செய்வதாகும் என்று கூறினார்கள்.
இந்த நபீ மொழி மூலம் முஸ்லிம்கள் அல்லாதவர்களுடன் செய்யும் யுத்தம் சிறிய யுத்தம் என்றும், ஒருவன் தனது “நப்ஸ்” மனவெழுச்சியுடன் போராடுவது பெரிய யுத்தமென்றும் அறிய முடிகிறது.
மேற்கண்ட திரு வசனம் சொல்வது சிறிய யுத்தம் செய்த “ஷஹீத்” உயிர் துறந்தவன் அல்லாஹ்விடம் உயிருள்ளவனாக இருக்கிறான் என்றால் பெரிய யுத்தம் செய்து உயிர் துறந்தவன் நிச்சயமாக உயிருள்ளவனாக இருப்பான் என்பதில் சந்தேகமில்லை. இது சிறு பிள்ளைக்கும் தெரிந்த விஷயமேயாகும்.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பெரிய யுத்தம் என்று சொல்லப்பட்ட “நப்ஸ்” உடன் போராடி அதை வென்றவர்கள் என்பதில் சந்தேகமில்லையாதலால் அவர்கள் உயிரோடு இருப்பார்கள் என்பதில் சந்தேகம் கொள்ள முடியாது.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது மனிதர்களால் சொல்லப்படுகின்ற “ஸலவாத்” அவர்களுக்கு எட்டி வைக்கப்படுகிறது என்றும், எனது “உம்மத்” என் மீது சொல்கின்ற “ஸலவாத்”தை நான் அறிகிறேன் என்றும் பல ஹதீதுகள் உள்ளன. அவற்றை இங்கு எழுதி விடயத்தைப் பெரிதாக்க நான் விரும்பவில்லை.
இவ்வாறான நபீ மொழிகள் மூலம் அவர்கள் உயிரோடுதான் உள்ளார்கள் என்று விளங்க முடிகிறது. அவர்கள் உயிரோடுதான் உள்ளார்கள் என்பதே “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையுமாகும். அவர்கள் மரணித்து மண்ணுடன் மண்ணாகிவிட்டார்கள் என்பது மற்றவர்களின் கருத்தாகும். “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வாதிகளான நாம் அவர்கள் உயிரோடுதான் உள்ளார்கள் என்று நம்புவோம். நம்பவும் வேண்டும். இதற்கு மாறாக அவர்கள் அழிந்து மண்ணுடன் மண்ணாகிவிட்டார்கள் என்று நம்புதல் எமது “ஈமான்” நம்பிக்கையில் ஓட்டையை ஏற்படுத்திவிடும்.
அவர்கள் உயிரோடு இல்லையென்றால் அவர்களுக்கு “ஸலாம்” சொல்லுமாறு அல்லாஹ் திருக்குர்ஆனில்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
விசுவாகிளே! அவர்கள் மீது “ஸலவாத்” சொல்லுங்கள். இன்னும் “ஸலாமும்” சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கமாட்டான். உயிரில்லாத ஒருவனுக்கு “ஸலாம்” சொல்வது அர்த்தமற்ற ஒன்றாகும். அர்த்தமற்ற ஒன்றைச் செய்யுமாறு அவன் யாரையும் பணிப்பதில்லை.
எனவே, மேலே நான் கூறிய திருக்குர்ஆன், நபீ மொழிகளின் ஆதாரங்கள் மூலம் அவர்கள் உயிரோடுதான் உள்ளார்கள் என்ற உண்மை நிரூபணமாகிறது. இதை நிறுவுவதற்கு இன்னும் பல ஆதாரங்கள் கூறலாம். எனினும் உண்மையை ஏற்றுக் கொள்ளும் மன நிலை உள்ளவர்களுக்கு மேற்கண்ட ஆதாரங்கள் போதும். ஆனால் மன முரண்டுக்கு மருந்துமில்லை. மருத்துவமனையுமில்லை.
நான் கூறிய விளக்கத்தை அறியும் ஒருவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட இடமுண்டு. அல்லாஹ் திருக்குர்ஆனில் நபீ பெருமானாரை விழித்து
إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ
நீங்களும், மற்றவர்களும் மரணத்தை அனுபவிப்பவர்கள்தான் என்று அல்லாஹ் சொன்னதற்கான விளக்கமும், كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ உலகில் வாழ்கின்ற அனைவரும் மரணிப்பவர்கள்தான் என்று அல்லாஹ் சொன்னதற்கான விளக்கமும், كُلُّ شَيْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُ அல்லாஹ்வைத் தவிர மற்றவை யாவும் அழிபவை என்று அல்லாஹ் சொன்னதற்கான விளக்கமும் என்ன என்பதே அவருக்கு வரும் கேள்வியாகும். அவரின் இக்கேள்வி நியாயமானதே! ஆயினும் இதற்கு பல கோணங்களில் விளக்கம் சொல்ல முடியும். குறிப்பாக “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை அடிப்படையிலும் விளக்கம் கூற முடியும்.
ஆயினும் நான் ஆழமாக விளக்கம் கூறி ஆய்வாற்றல் குறைந்தவர்களைத் தடுமாற வைக்காமல் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரேயொரு பதிலில் விளக்கம் கூறுகிறேன்.
அல்லாஹ் மரணிப்பதுமில்லை, அழிவதுமில்லை என்பதே உலக முஸ்லிம்கள் அனைவரினதும் நம்பிக்கையாகும். பெருமானாரும் மரணிப்பதில்லை என்றால் இந்த நம்பிக்கையில் பொது மக்களுக்கு தடுமாற்றம், கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடும்.
எனவே, பொது மகக்ளின் இந்த நம்பிக்கையையும் பாதுகாத்து பெருமானார் மரணிக்காமல் இன்று வரை உயிரோடுதான் உள்ளார்கள் என்பதையும் நிறுவுவதற்கு அல்லாஹ் கையாண்ட ஓர் உபாயமே பெருமானாரின் பிரிவாகும். மரணமாகும்.
இவ் உபாயத்தை செயல்படுத்துவதற்காக அல்லாஹ் அவர்களை மரணித்தவர்கள் போல் மக்களுக்கு காட்டினான் என்பதே இதன் எதார்த்தமாகும். இப்படியொரு வல்லமை அவனுக்கு இல்லையென்று எவராலும் சொல்ல முடியாது.
நாம் பல நிகழ்வுகளை அறிந்தும் இருக்கிறோம். நேரில் கண்டுமிருக்கிறோம்.
“அஸ்ஹாபுல் கஹ்ப்” குகைவாசிகளின் வரலாறு திருமறையில் கூறப்பட்ட வரலாறாகும். அவர்கள் விழிக்காமலேயே தொடர்ந்து 309 வருடங்கள் உறங்கினார்கள்.
وَلَبِثُوا فِي كَهْفِهِمْ ثَلَاثَ مِائَةٍ سِنِينَ وَازْدَادُوا تِسْعًا
(திருக்குர்ஆன் 18-25)
முன்னூற்று ஒன்பது வருடங்கள் தொடராக உறங்க வைத்த அல்லாஹ்வுக்கு ஒரு சில நாட்கள் மட்டும் பெருமானாரின் சுவாசத்தை தனது “குத்றத்” எனும் கையால் பிடித்து வைத்து அவர்களை மரணித்தவர்கள் போல் காட்டுவதற்கும் அவன் சக்தியுள்ளவனேயாவான். 309 வருடங்கள் உறங்கினார்களேயன்றி அவர்களில் எவரும் மரணிக்கவில்லை. தொடர் உயிருடனேயே அவர்கள் இருந்தார்கள்.
அல்லாஹ் நபீ பெருமான் அவர்களுக்கு மற்ற எவருக்கும் கொடுக்காத பல விஷேடங்களைக் கொடுத்துள்ளான். உதாரணமாக நான்கு மனைவியருக்கும் அதிகமான பெண்களைத் திருமணம் செய்யலாமென்று சலுகை வழங்கினான். அவர்களின் கழிவுகள் சுத்தமானவை என்று இஸ்லாமிய “ஷரீஆ” சட்டம் கூறுகின்றது. தொழுது கொண்டிருப்பவனை அவர்கள் அழைத்தால் அவன் தொழுகையை உடனே முறித்து விட்டு அவர்களின் அழைப்புக்கு பதில் கூற வேண்டுமென்று திருக்குர்ஆன் கூறுகிறது. மக்கா வாசிகளில் அவர்களை எதிர்த்தவர்கள், நீங்கள் நபீ என்றால் அதற்கான அத்தாட்சி காட்ட வேண்டுமென்று கேட்ட போது மக்காவிலுள்ள மலையொன்றில் அவர்கள் இருந்தவாறே சந்திரனை இரண்டாகப் பிளந்து காட்டினார்கள். உலகில் அவர்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் அறிவுகளும், அவர்களுக்குப் பின் வாழப் போகின்றவர்களின் அறிவுகளும் தங்களுக்கு உண்டு என்று சொன்னவர்கள். ஒரு மாதத் தொலைவில் உள்ளவன் கூட பயப்படுமளவு நான் உதவி செய்யப்பட்டுள்ளேன் என்றும் சொன்னவர்கள். “இஸ்றா – மிஃறாஜ்” எனும் இரு பெரும் அற்புதப் பயணம் செய்தவர்கள். அதாவது எந்த ஒரு நவீன கருவியுமின்றி அண்ட சராசரங்கள் அனைத்தையும் ஒரு சில நொடிகளில் வலம் வந்தவர்கள். எவராலும் செல்ல முடியாத சுவர்க்கம், நரகம் சென்று வந்தவர்கள். இவற்றையெல்லாம் விட அல்லாஹ்வை தலைக் கண்ணால் கண்டவர்கள். இன்னுமிவைபோல் பல்லாயிரம் சிறப்புக்களைப் பெற்றிருந்தவர்கள்.
இத்தகு சிறப்புகளை எல்லாம் அவர்களுக்கு வழங்கிய அல்லாஹ்வினால் அவர்களுக்கு எதார்த்த மரணத்தை வழங்காமல் மரணித்தவர்கள் போல் ஒரு நாடகத்தை நடத்த முடியாமற் போய் விட்டதா? அதற்கவன் சக்தியற்றவனாகிவிட்டானா? “தவ்ர்” குகையில் தோழர் அபூ பக்ர் அவர்களுடன் ஒழித்திருந்த வேளை சிலந்திக்கு “வஹீ” அறிவித்து குகை வாயலில் வலை விரிக்கச் செய்தும், அதேபோல் புறாக்களுக்கு அறிவித்து அவ் வலை மேல் முட்டையிட வைத்த அல்லாஹ்வுக்கு பெருமானாரின் மரணத்தை ஒரு கண் துடைப்பாக காட்சிப்படுத்த சக்தியற்றவனாகிவிட்டானா?
பெருமானாருக்கு எதார்த்த மரணம்தான் ஏற்பட்டதென்ற தமது வாதத்தை நிறுவுவதற்கு சீறிப் பாயும் சில்லறைகள் நான் மேலே எழுதிக் காட்டிய
إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ
كُلُّ شَيْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُ
போன்ற திரு வசனங்களையும், ولكل أمة أجل ஒவ்வொருவருக்கும் மரணம் உண்டு என்ற வசனத்தையும் ஆதாரங்களாக கூற முன் வரலாம்.
அல்ஹம்து லில்லாஹ் வரட்டும். குட்டை கலங்கிய பின்னர்தான் தெளிவு ஏற்படும். திருக்கலிமாவின் சரியான பொருள் எது என்பதும், “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்பது இஸ்லாம் கூறும் தத்துவமா? இல்லையா? என்பதும் விளங்க வரும்.
அன்புப் பொது மக்களே! அண்ணலெம்பெருமானாரை தமது உயிரினும் மேலாக நேசிக்கும் அவர்களின் காதலர்களே! “ஷரீஆ”வை இறுகப் பிடித்து நிற்கும் சத்தியவான்களே! நான் திருக்குர்ஆனுக்கு முரணாகப் பேசவுமில்லை. எழுதவுமில்லை.
எம் பெருமானார் அவர்கள் “வபாத்” ஆனார்கள் என்பதையும், அவர்களின் புனித உடல் குளிப்பாட்டப்பட்டது என்பதையும், அது “கபன்” செய்யப்பட்டது என்பதையும், தொழுகை நடாத்தி அடக்கம் செய்யப்பட்டது என்பதையும் நான் ஆயிரம் முறை ஏற்றுக் கொள்கிறேன். இவற்றில் எதையும் நான் மறுக்கவில்லை.
இதேபோல் பெருமானாரின் மரணச் செய்தி கேட்ட தோழர்களிற் சிலர் “எவன் முஹம்மத் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று சொன்னானோ அவன் கழுத்தை நான் கொய்து விடுவேன்” என்று சொன்னதையும், பெருமானாரை “கப்ர்” குழிக்குள் வைத்த பின் அவர்கள் மீது மூன்று பிடி மண் போட்டமை கண்டு கதறியழுது தனது சுய நினைவிழந்து ஓடிய தோழரின் வரலாறையும் நான் அறிவேன். நடந்ததை எல்லாம் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشرّه من الله تعالى،
என்ற “ஈமான்” விசுவாசத்தின் ஆறு அம்சங்களையும் முழுமையாக ஏற்றுக் கொண்ட ஒரு “முஃமின்” விசுவாசிதான் நான்.
நான் சொல்வது என்னவெனில் பெருமானார் அவர்களின் மரணம் உலக மக்களுக்கு அல்லாஹ் நடாத்திக் காட்டிய ஒரு நாடகமும், கண் துடைப்புமேயன்றி வேறில்லை என்று மட்டுமே சொல்கிறேன்.
சீறும் சில்லறைகளும், சிற்றறிவாளர்களும் மரணத்தில் “மவ்து ஹகீகீ” என்றும், “மவ்து மஜாஸீ” என்றும் இரு வகை உண்டு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.
இறுதியாக வஹ்ஹாபீகள் ஸுன்னீகளிடம் கேட்க வேண்டிய கேள்வியை நானே அவர்களிடம் கேட்டு கட்டுரையை முடிக்கிறேன்.
கேள்வி: நபீ பெருமானார் அடக்கம் செய்யப்பட்ட பின் அவர்களுக்காக “தல்கீன்” ஓதப்பட்டதா? அப்படியாயின் ஓதியவர் யார்? அவர் தற்போது ஓதுகின்றவர்கள் பயன்படுத்துகின்ற வசனங்கள் பாவித்தாரா?
அண்ணலெம் பெருமான் அன்றும், இன்றும், என்றும் உயிருள்ளவர்களே!