தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
கடந்த தொடர்களில் “பத்வா” வழங்கிய உலமா சபை நூறு வீதமும் இமாம் என்றும், மகான் என்றும் ஏற்றுக் கொண்ட முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய “வஹ்ததுல் வுஜூத்” தத்துவங்களிற் சிலதை எழுதியுள்ளேன். இன்னும் எழுதவும் உள்ளேன்.
நான் “பத்வா” வழங்கிய முல்லாக்களிடம் கேட்க விரும்பும் கேள்வி என்னவெனில், முல்லாக்களே! நீங்கள் உங்களின் “பத்வா”வின் 05ம், 22ம் பக்கங்களில் பல இமாம்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இவர்கள் சரியான இமாம்கள் என்றும் மகான்கள் என்றும் கூறியுள்ளீர்கள். அவர்களைச் சரி கண்டுமுள்ளீர்கள்.
அவர்கள் இப்னு அறபீ, அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ, இமாம் ஙஸ்ஸாலீ ஆகியோர்களாவர்.
இம் மூவரும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை பகிரங்கமாகவும், தெளிவாகவும் பேசிய மகான்கள் என்பதை உலகில் வாழும் அறிஞர்கள் அனைவரும் அறிவார்கள்.
குறித்த மாகன்களின் பேச்சுக்களை நீங்கள் விளங்கவில்லையா? அல்லது விளங்கியிருந்தும் என்னை மக்கள் மத்தியில் குற்றவாளியாக படம் பிடித்துக் காட்டி மீண்டும் கொலைக்கு தூண்டுகிறீர்களா?
நீங்கள் உலமாஉகள் அல்லவா? உங்களின் நடவடிக்கைகள் நியாயமானவையாக இருக்க வேண்டுமல்லவா? ஏன் இப்படி மாபெரும் அநீதி செய்கிறீர்கள்? “பத்வா”வினால் தாக்கப்பட்டோர் சீறி எழுந்தால் பல விபரீதங்கள் ஏற்படலாமல்லவா? இதைக் கவனத்திற் கொண்டீர்களா? நன்மை, நல்லிணக்கம் நாடி இதைச் சொல்கிறேன். சிந்தியுங்கள். கவனத்திற் கொண்டு “பத்வா”வை வாபஸ் பெற்று நாட்டு மக்களின் நல்லிணக்கத்திற்கு வழி செய்யுங்கள்.
நான் பேசினேன். எனது பேச்சுள்ள ஒலி நாடாக்களை காத்தான்குடி உலமாஉகள் சிலர் உங்களிடம் கொண்டு வந்து “பத்வா” கேட்டார்கள். நீங்கள் “பத்வா” கொடுத்தீர்கள்.
எனது பேச்சு திருக்குர்ஆனுக்கு முரணாக, அல்லது நபீ மொழிக்கு முரணாக இருந்தால் பேசிய என்னை ஒரு தரமாவது விசாரிக்க வேண்டாமா? நான் மார்க்க அறிவு இல்லாத ஒருவனாயிருந்தால் அல்லது “அவாம்” பொது மக்களில் ஒருவனாயிருந்தால் என் பேச்சை தூக்கியெறிந்து விட்டு நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்திருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் நான் பேசிய கருத்துக்கள் பிழை என்று மட்டுமாவது சொல்லியிருக்கலாம்.
ஆனால் நீங்கள் என்னை நேரில் விசாரிக்கவுமில்லை, கடிதம் மூலமாவது எனது கருத்துக்குரிய விளக்கத்தை கேட்டறிந்து கொள்ளவுமில்லை.
ஆரம்ப கட்டத்தில் என்னை கொழும்பு வருமாறு ஒரு கடிதம் அனுப்பியிருந்தீர்கள். அவ்வேளை எனக்கும், காத்தான்குடி உலமா சபைக்குமிடையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்ததால் இக்காரணத்தைக் காட்டி உங்களுக்கு பதில் அனுப்பியிருந்தேன். அந்தப் பதில் இப்போதும் உங்களிடமிருக்கும் எடுத்துப் பாருங்கள்.
நீங்கள் இரண்டாவது கடிதமொன்று அனுப்புவீர்கள் அதன் பிறகு வரலாமென்று எதிர்பார்த்திருந்தேன். கிடைக்கவில்லை. ஒரேயொரு கடிதத்தோடு நிறுத்திக் கொண்டீர்கள். அதன் பிறகு “முர்தத்” பத்வாதான் வெளிவந்தது. அதிர்ச்சியடைந்தேன். உங்களின் அறியாமையையும், அவசரத்தையும் எண்ணி கண்ணீர் வடித்தேன்.
நீங்கள் செய்திருக்க வேண்டியது என்ன? உங்கள் மனச் சாட்சியில் கை வைத்துச் சொல்லுங்கள். உங்களால் சரியான, நியாயமான காரணம் சொல்ல முடியாது. நான் எனது மனச் சாட்சியில் கை வைத்துச் சொல்வதாயின் நீங்கள் இரண்டாவது கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். அல்லது உங்களிற் சிலர் என்னிடம் வந்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.
ஏனெனில் மதம் மாற்றி, கொலை செய்ய வேண்டுமென்று “பத்வா” வழங்குவது பயங்கரவாதத்தைச் சேர்ந்த விடயமாகும். இது உங்களுக்கும் தெரிந்ததே. இத்தகைய ஒரு விடயம் படித்தவர்கள் ஒன்று கூடி பல்கலைக் கழக மட்டத்தில் பல நாட்கள் ஆய்வு செய்து முடிவு காண வேண்டிய ஒன்றாகும்.
அரசாங்க நீதி மன்றிலும், காழீ நீதி மன்றிலும் குற்றவாளி தவணைக்கு வராவிட்டால் நீதிபதி தவணை கொடுத்து குற்றவாளியை அழைப்பது எல்லா நீதி மன்றங்களிலும் நடைமுறையில் உள்ள வழக்கமாகும். இதுவே நியாயமுமாகும். எந்தவொரு நீதி மன்றாயினும் அதன் நீதிவான் ஒரே தவணையில் வழக்கை முடித்து விடாமல் அதைப் பல மாதங்கள் வரை பிற்படுத்துவது ஒரு நன்மை கருதியேயாகும். அதாவது வழக்காளியும், எதிரியும் ஒற்றுமையாவதவற்கு ஒரு அவகாசத்தையும், சந்தர்ப்பத்தையும் வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இதைக் கருத்திற் கொண்டே “காழீ” நீதி மன்றில் கூட ஒரே தவணையில் தீர்ப்பு வழங்காமல் பல தவணைகளில் விசாரித்து தீர்ப்பு வழங்குகிறார்கள். நீங்களோ அரச நீதி மன்றங்களின் நடைமுறைக்கும், காழீ நீதி மன்றங்களின் நடைமுறைக்கும் மாறாகச் செயல்பட்டுள்ளீர்கள். அநீதி செய்து விட்டீர்கள்.
“பத்வா” வழங்கிய முல்லாக்களே!
இந் நடவடிக்கைகளைக் கூட நீங்கள் புரிந்த கொள்ளாமல் சிறு பிள்ளைத் தனமாக, அல்லது அறிவிலிகளாக நடந்து கொண்டது கவலைக்கும், வேதனைக்குமுரிய விடயமாகும்.
ஏன் அவசரப்பட்டீர்கள்? உங்களை அவசரப்படுத்தியது யார்? அல்லது எது? காத்த நகர் “குத்பு”மார்களா? அல்லது மயிலாட்டமா?
குதிரையின் காலை உடைத்தால் அது ஓட முடியாமல் ஒரே மூலையில் படுத்துவிடுமென்று நினைத்தீர்களா? மயிலின் தோகையை வெட்டிவிட்டால் அது ஆட முடியாமல் படுத்து விடுமென்று கனவு கண்டீர்களா? கால் உடைக்கப்பட்டும் குதிரை ஓடிக் கொண்டிருப்பதும், தோகை வெட்டப்பட்டும் மயில் ஆடிக் கொண்டிருப்பதும் இறைவனின் அருட் கொடை என்பது உங்களுக்குப் புரியவில்லையா?
இலங்கை அரசு இந்நாட்டை ஜனநாயக நாடென்று அறிவித்திருக்கும் நிலையில் உலமா சபை இதை சர்வதிகார நாடாக்குகிறதே! இது அரசுக்குப் புரியவில்லையா? மனித உரிமை மீறல் தொடர்பான அதிகாரிகளுக்கு விளங்கவில்லையா? முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கேனும் துலங்கவில்லையா? ஏன் இந்தப் புறக்கணிப்போ?
“பத்வா” வழங்கிய முல்லாக்களே!
நீங்கள் எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கியது ஏன்? நான் “வஹ்ததுல் வுஜூத்” பேசினேன் என்பதற்காகவா? “ஹுலூல் – இத்திஹாத்” பேசினேன் என்பதற்காகவா?
“வஹ்ததுல் வுஜூத்” பேசினேன் என்பதற்காகவென்று நீங்கள் விடை சொன்னால் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ நாயகம் அவர்களை இமாம் என்றும், மகான் என்றும் உங்களின் “பத்வா” 05ம் பக்கத்திலும், 22ம் பக்கத்திலும் ஏன் எழுதினீர்கள்? அவர்கள் பேசியது எது? “வஹ்ததுல் வுஜூத்” ஞானமா? அல்லது வேறொரு ஞானமா? அப்படியானால் அது எது? அதன் பெயரென்ன? அவர்கள் பேசியது “வஹ்ததுல் வுஜூத்” ஞானம்தான் என்று நீங்கள் விடை சொன்னால் அவர்களை இமாம் என்றும், மகான் என்றும் ஏன் எழுதினீர்கள்? விடை தாருங்கள். ஊமைகள் போல் இருக்காதீர்கள். விடை தர சக்தியில்லையா? “பத்வா”வை வாபஸ் பெறுங்கள்.
நீங்கள் முஸ்லிம்களில் ஒருவர் இருவரையா மதம் மாற்றினீர்கள்? இல்லை. கோடிக் கணக்கான முஸ்லிம்களை காபிர்களாக்கிய பெருமை உங்களுக்கே சொந்தம்.
உங்களின் “பத்வா”வின் படி நீங்கள் உலகில் வாழும் முஸ்லிம்களில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை ஏற்றுக் கொண்ட கோடிக் கணக்கான முஸ்லிம்களை மதம் மாற்றியுள்ளீர்கள். உங்களுக்கான மார்க்கச் சட்டம் என்ன? நீங்களே சொல்லுங்கள்.
ஒரு முஸ்லிமை மதம் மாற்றியவன் “காபிர்” என்ற பெருமானாரின் உயிர் மொழிப்படி “பத்வா” வழங்கிய நீங்கள் அனைவரும் காபிர்களா? இல்லையா? சொல்லுங்கள். நியாயத்தைச் சொல்லுங்கள். சட்டத்தைச் சொல்லுங்கள். எங்களுக்குத் தேவை நியாயம் மட்டும்தான். சலுகையோ, சல்லியோ அல்ல. உங்களுக்கு வட்டிலப்பம் தந்து உங்களை மயக்க வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை. அவ்வாறு வட்டிலப்பமோ, வண்டப்பமோ கொடுத்து நாங்கள் பழக்கப்பட்டவர்களுமல்ல. குற்றம் செய்த மனமே குறுகுறுக்கும். இதன் வெளிப்பாடுதான் வட்டிலப்பம்.
وَسُئِلَ الْاِمَامُ مُـحْيِ الدِّيْنِ النَّوَوِيْ رَحِمَهُ الله عَنِ الشَّيْخِ ابْنِ عَرَبِيْ قَالَ تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ. وَلَكِنِ الَّـذِيْ عِنْدَنَا أَنَّهُ يَحْرُمُ عَلَى كُلِّ عَاقِلٍ اَنْ يُسِيْئَ الظَّنَّ بِاَحَدٍ مِنْ أَوْلِـيَاءِ اللهِ عَزَّوَجَلَّ وَيَجِبُ عَلَيْهِ اَنْ يُـؤَوِّلَ اَقْـوَالَهُمْ وَاَفْعَالَهُمْ مَادَامَ لَمْ يَلْحَقْ بِدَرَجَتِهِمْ. وَلَايَـعْجِزُ عَنْ ذَلِكَ اِلَّا قَلِيْلُ التَّـوْفِيْقِ. قَالَ فِيْ شَرْحِ الْمُهَذَّبِ ثُمَّ اِنْ اُوِّلَ فَلْيُؤَوَّلْ كَلَامُهُمْ اِلَى سَبْعِيْنَ وَجْهًا. وَلَانَقْبَلُ تَأْوِيْلًا وَاحِدًا. مَاذَاكَ اِلَّا تَعَنُّتٌ
சட்ட மேதை இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் அஷ்ஷெய்கு இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பற்றி கேட்கப்பட்ட போது அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்.
#அவர்கள்_தோன்றி_மறைந்த_ஒரு_சமூகம்.#அவர்கள்_தொடர்பாக_எங்களின்_கடமை_என்னவெனில்_அல்லாஹ்வின்_வலீமார்களில்_எவர்_மீதும்_கெட்டெண்ணம்_வைப்பது_எங்கள்_மீது_ஹறாம்_விலக்கப்பட்டதாகும். #அவர்களின்_சொற்கள், #செயல்கள்_என்பவற்றுக்கு_நாம்_வலிந்துரை_கொள்ள_வேண்டும். #அவர்களின்_செயல்களுக்கும், #சொற்களுக்கும்_அவற்றின்_வெளித்_தோற்றத்தை_மட்டும்_பார்த்து_எந்த_ஒரு_முடிவும்_செய்து_விடுவது_கூடாது. #இது_அவர்களின்_அந்தஸ்த்தை_நாம்_அடையும்_வரைதான். #அவர்களின்_தரத்தை_அடைந்தால்_வலிந்துரை_தேவையில்லாமற்_போய்விடும். #அவர்களின்_பேச்சுக்களுக்கும், #செயல்களுக்கும்_வலிந்துரை_வைத்து_அவர்கள்_மீது_நல்லெண்ணம்_கொள்ளாமலிருப்பவன்_அல்லாஹ்வின்_நல்லனுகூலம்_குறைந்தவனாகவே_இருப்பான்.
#இமாம்_நவவீ_மேலும்_ஷர்ஹுல்_முஹத்தப்_எனும்_நூலில்_பின்வருமாறு_கூறியுள்ளார்கள்.
#அந்த_மகான்களின்_பேச்சுக்களுக்கும், #செயல்களுக்கும்_வலிந்துரை_கொள்வதாயினும்_இரண்டொரு_வலிந்துரையுடன்_மட்டும்_நின்றுவிடாமல்_எழுபது_வலிந்துரைகளேனும்_கொடுத்து_அவர்களின்_பேச்சுக்களையும், #செயல்களையும்_நோக்க_வேண்டும். #ஒரு_வலிந்துரையோடு_மட்டும்_நின்றுவிடலாகாது. #ஒரு_வலிந்துரைதான்_கொள்ள_வேண்டுமென்று_சொல்வதை_நாங்கள்_ஏற்றுக்_கொள்ளமாட்டோம். #அதாவது_அவ்வாறு_சொல்லுதல்_மன_முரண்டேயாகும்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை ஏற்றுக் கொண்ட இமாம் இப்னு அறபீ, இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ, இமாம் ஙஸ்ஸாலீ ஆகியோர் “எல்லாம் அவனே” எனும் ஸூபிஸ தத்துவம் பேசியுள்ளார்கள் என்ற தலைப்பில் இப்னு அறபீ அவர்களின் தத்துவங்களிற் சிலதை தொடர் ஒன்றிலிருந்து நான் எழுதி வருகிறேன். இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன். அடுத்த தொடரில் இப்னு அறபீ அவர்களின் “எல்லாம் அவனே” என்ற தத்துவ முத்துக்களில் சில விஷேடமான குறிப்புகள் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்!
தொடரும்… (2ம் பக்கம் பார்க்க)