தொகுப்பு: மௌலவீ MJM ஜஹானீ றப்பானீ
மேலே தலைப்பில் கூறிய வசனத்தில் மட்டுமன்றி அல்லாஹு தஆலா திருக்குர்ஆனின் பல இடங்களில் தான் மனிதனுடன் இருப்பதாக கூறியுள்ளான். அத்தகைய திரு வசனங்களிற் சிலதை இங்கு குறிப்பிடுகிறேன்.
وَاللَّهُ مَعَكُمْ (سورة محمد – 35)
அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான். (முஹம்மத் அத்தியாயம், வசனம் 35)
إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ (البقرة – 153)
நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (பகறா அத்தியாயம், வசனம் 153)
وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ (البقرة 194)
அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் “தக்வா”தாரிகளுடன் இருக்கிறான். (பகறா அத்தியாயம், வசனம் 194)
மேற்குறித்த வசனங்களில் அல்லாஹு தஆலா மனிதனுடன் இருப்பதாக கூறுகிறான். இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் விடயம் என்னவெனில் “உடனிருத்தல்” என்பதாகும். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என்பதால் இங்கு அல்லாஹ் என்று ஒருவனும், பொறுமையாளர்கள் என்று இன்னொரு தரப்பும் இருப்பதாக விளங்கப்படுகிறது. அல்லாஹ் “தக்வா”தாரிகளுடன் இருக்கின்றான் என்றால் அல்லாஹ் என்று ஒருவனும், “தக்வா”தாரிகள் என்று இன்னொரு தரப்பும் இருப்பதாக விளங்கப்படுகிறது. பொதுவாக அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான் என்றால் அல்லாஹ் என்று ஒருவனும், நீங்கள் – மனிதர்கள் என்று ஒரு தரப்பும் இருப்பதாக விளங்கப்படுகிறது.
“வஹ்ததுல் வுஜூத்” இறையியல் தெரியாத அல்லது அதை மறுக்கும் முல்லாக்கள் இத்தகைய திரு வசனங்களை ஆதாரமாகக் காட்டி அல்லாஹ் வேறு, மனிதன் வேறு என்று அல்லாஹு தஆலா திருமறையில் தெளிவாகவே கூறியுள்ளான். ஒரு வஸ்த்து இன்னொரு வஸ்த்துவுடன் இருப்பதானால் அவ்விரண்டும் வேறானவையாக இருந்தாலே சாத்தியம் என்று கூறுகின்றனர். எனவே, “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவமே இஸ்லாத்தின் ஆணிவேர் என்று நம்பி அதன் வழி வாழும் நாங்கள் இது தொடர்பில் ஆய்வு செய்து பார்ப்போம்.
மேலெழுந்தவாரியாக திருவசனத்தை நோக்கினால் “உடனிருத்தல்” என்பதற்கு இரு வஸ்த்துக்கள் அவசியம் என்றே விளங்கப்படும். ஒரு வாதத்திற்காக “வஹ்ததுல் வுஜூத்” இறையியலை மறுக்கின்ற முல்லாக்கள் கூறுவது போன்று அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்று வைத்தே ஆய்வு செய்வோம்.
மேற்குறித்த திரு வசனங்கள் அனைத்திலும் “அல்லாஹ்” என்ற தனது இயற் பெயரான “ஜாமிஉல் அஸ்மா”வைப் பயன்படுத்தியே கூறியுள்ளான். “அல்லாஹ்” என்பது அவனின் அனைத்துப் பெயர்களையும், தன்மைகளையும் உள்வாங்கிய அவனது “தாத்” உள்ளமையின் பெயராகும்.
اَللهُ عَلَمٌ عَلَى الذَّاتِ الْوَاجِبِ الْوُجُوْدِ الْمُسْتَحِقِّ لِجَمِيْعِ الْمَحَامِدِ
“அல்லாஹ்” என்ற பெயர் “வாஜிபுல் வுஜூத்” ஆன, சகல புகழ்களுக்கும் தகுதியான அவனது “தாத்”திற்குச் சொல்லப்படும். இதுவே “அல்லாஹ்” என்ற பெயரின் வரைவிலக்கணமாகும்.
மேற்குறித்த வசனங்களில் பொதுவாக அல்லாஹ் மனிதனுடன் இருக்கிறான் என்றே சொல்லப்பட்டுள்ளது. அவனது தன்மைகள் மட்டும் இருப்பதாகச் சொல்லப்படவில்லை. அல்லாஹ்வும், படைப்பும் வேறு என்ற அடிப்படையில் பார்த்தாலும் நாம் எங்கிருந்தாலும் அவன் – அல்லாஹ் எம்மோடு தனது “தாத்”துடன் இருக்கிறான். அப்படியாயின் அவனே இருக்கிறான் என்று பொருள் வரும். இதை விடுத்து அவன் இருக்கிறான் என்றால் அவனின் உதவி இருக்கிறது என்றோ அல்லது அவனின் அருள் இருக்கிறது என்றோ அவனை விட்டும் அவனின் தன்மைகளைப் பிரித்துச் சொல்ல முடியாது. அவ்வாறு ஒருவர் சொல்வாராயின் அவன் எங்கே இருக்கிறான் என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். ஒன்றோ அவன் “அர்ஷ்” எனும் சிம்மாசனத்தில் இருக்கின்றான் என்று கூறி வஹ்ஹாபீயாக வேண்டியதுதான். இல்லையெனில் ஏற்றுக் கொள்ளும் படியான பதிலை அவர் சொல்ல வேண்டும்.
அவன் வேறு, படைப்பு வேறு என்று வாதிடுபவர் நாம் எங்கிருந்தாலும் அல்லாஹ் எம்முடன் இருக்கிறான் என்றால் அவன் தன்னுடைய “தாத்”துடனேயே இருக்கிறான் அதாவது அவன் எவ்வித மாறுபாடுமின்றி அவனே இருக்கிறான் என்று நம்ப வேண்டும்.
“வஹ்ததுல் வுஜூத்” இறையிலை மறுக்கும் முல்லாக்கள் அதை மறுப்பதற்காக முதலில் “எல்லாம் அவனே” என்றால் நாயும் அல்லாஹ்வா? பன்றியும் அல்லாஹ்வா? மலமும் அல்லாஹ்வா? சலமும் அல்லாஹ்வா? ஸுப்ஹானல்லாஹ்! அவன் துய்யவன் என்றுதான் சொல்வார்கள். இவர்களின் அறியாமையினால் வெளியாகும் இவ்வாறான கேள்விகளுக்கு இறைவன் உதவியால் எமக்குப் பதில் கூற முடியும். இவ்வாறு இவர்கள் கேட்பது நாங்கள் “எலலாம் அவனே” என்று கூறுவதால் அல்லாஹ்வின் பரிசுத்த தன்மையை இல்லாமலாக்குகின்றோம் என்று நிறுவி அதை ஏற்பதை விட்டும் மக்களை தடுப்பதற்காகவேயாகும். அல்லாஹ் “நஸீப்” ஆக்கியவர்களுக்கு அந்த ஞானத்தை வழங்கியே தீருவான். அதில் மாற்றமில்லை. இல்லையெனில் “வஹ்ததுல் வுஜூத்” இன்று உலகெங்கும் கொடி கட்டிப் பறந்திருக்காது.
இப்போது விடயத்திற்கு வருவோம். அல்லாஹ் மனிதனுடன் இருக்கிறான் என்றால் அது கொண்டு அவன் வேறு, மனிதன் வேறு, அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்றுதான் விளங்க வேண்டும் என்று வாதிடும் முல்லாக்களிடம் நாம் முன் வைக்கும் கேள்வி என்னவெனில் அல்லாஹ் திருமறையில் “நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான்” என்று கூறியுள்ளான். அப்படியாயின் அவன் எமக்கு வேறானவனாகவேனும் எம்முடனே இருக்கிறான் என்பதாகும். ஒருவன் சாக்கடை நீர் ஒன்று சேரும் குழியில் விழுந்து விட்டானாயின் அவனுடன் அல்லாஹ் இருக்கிறான் என்ற அடிப்படையில் அல்லாஹ் அக்குழியில் இருக்கிறானா? என்பதாகும். முல்லாக்களின் வாதப்படி அல்லாஹ் சாக்கடைக்குழியினுள் தன்னுடைய “தாத்”துடன் இருக்கிறான் என்பதாகும். இது அவனின் பரிசுத்த தன்மைக்கு கேடு இல்லையா?
அடுத்ததாக நான் தலைப்பில் கூறிய “நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் (அல்லாஹ்) உங்களுடனே இருக்கிறான்” (ஹதீத் அத்தியாயம், வசனம் 04) என்ற வசனத்தை சற்று உன்னிப்பாக அவதானித்தால் அந்த வசனத்தில் “அய்ன” என்ற சொல்லைப் பயன்படுத்தி “அய்னமா குந்தும்” என்று கூறியுள்ளான். இதன் பொருள் எங்கே? என்பதாகும். அல்லாஹு தஆலா எங்கே என்பதை விட்டும் துய்யவனாவான். அல்லாஹு தஆலா “நீங்கள் எங்கிருந்த போதிலும்” என்று கூறியிருப்பது மனிதனோ அல்லது அவனல்லாத மற்றுமுள்ள படைப்புக்களோ அவைகள் தரிபாடாயிருப்பதற்கு இடம் அவசியமாகும் என்பதினால்தான். அல்லாஹு தஆலா அவனுக்கு (மனிதனுக்கு) வேறானவனாக அவனுடன் இருப்பதானால் அவன் இருக்குமிடங்களிலெல்லாம் அவன் – அல்லாஹ் இருக்கிறான் என்ற அடிப்படையில் அவனும் இடத்தின் பால் தேவையாகிறான் என்ற கருத்து வந்து விடும். “மஆதல்லாஹ்”. இடமாகவும், தளமாகவும், மனிதனாகவும், மற்றுமுள்ள படைப்புக்களாகவும் அவனே இருக்கின்றான் என்றால் அவன் தேவையாவதற்கு இன்னொன்றில்லை என்ற அடிப்படையில் அவனுக்கு இடத்தை தரிபடுத்தாமல் நாம் தப்பிவிடுவோம்.
அப்படியாயின் “உடனிருத்தல்” என்றால் இரண்டு வஸ்த்துக்கள் தேவை என்றுதானே விளங்கப்படுகின்றது? ஏன் அல்லாஹு தஆலா இவ்வாறு கூறியிருக்கிறான்? வேறு விதமாக கூறியிருக்கலாமே என்று ஒருவர் கேட்டால் அவருக்கான பதில் பின்வருமாறு.
அல்லாஹு தஆலா திருமறையில் எந்தவொரு இடத்திலும் மலக்குகள் – அமரர்கள், மற்றும் மனிதனல்லாத வஸ்த்துக்களைக் குறிப்பிட்டு நான் அவற்றுடன் இருப்பதாக கூறவில்லை. இந்த விடயத்தை சற்று சிந்தித்துப் பார்த்தால் உண்மை துலங்கும். அதற்கு ஆதாரமாக பின்வரும் இப்னு அறபீ நாயகம் அவர்களின் கூற்றை தருகிறேன்.
ولو تسمع الاتّحادَ من أهل الله أو تجد فى مصنّفاتِهم فلا تفهم ما فهمتَ من الاتّحادِ الّذي قلنا فيه، إنّه يحصل من الوجودين، إذ ليس مرادُهم بالاتّحاد إلّا شُهودُ الوجودِ الحقّ الواحد المُطلقِ الّذي الكلُّ به موجودٌ، فيتّحد به الكلُّ من حيثُ كونُ كلِّ شيئٍ موجودًا به ومعدوما في نفسِه، لا من حيثُ أنّ له وجودًا خاصًّا اتَّحدَ به الكلُّ، فإنّه مُحالٌ، (مرآة العارفين للشّيخ الأكبر محي الدين ابن عربي)
இறைஞானிகளிடமிருந்து “இத்திஹாத்” என்ற கொள்கையை காட்டும் பேச்சைக் கேட்டாலோ அல்லது அவர்களின் நூற்களில் அதை கண்டாலோ நாம் “இத்திஹாத்” என்று சொன்ன அந்த விடயம் என்று நீ விளங்கிவிடாதே! ஏனெனில் அந்த “இத்திஹாத்” என்பது இரண்டு “வுஜூத்” உள்ளமைகளுக்கிடையேதான் ஏற்படும். “இத்திஹாத்” போன்ற அவர்களின் பேச்சு கொண்டு அவர்களின் நாட்டம் எந்த “வுஜூத்” உள்ளமையைக் கொண்டு அனைத்துப் படைப்புக்களும் நிலை பெற்றிருக்கின்றனவோ அந்த உள்ளமையை “ஷுஹூத்” செய்வதாகும். காண்பதாகும். அனைத்தும் தன்னிலே இல்லாதவையும், அல்லாஹ்வைக் கொண்டே நிலை பெற்றுள்ளன என்பதன் அடிப்படையில் அந்த உள்ளமையுடன் ஒன்றாகுவதற்காகும். மாறாக அவனுக்கு தனியான வுஜூத் உண்டு, அனைத்தும் அதனுடன் ஒன்றாகிவிட்டன என்ற அடிப்படையில் அல்ல. இது அசாத்தியமாகும்.
(மிர்ஆதுல் ஆரிபீன், ஆசிரியர்: இப்னு அறபீ)
“ஐனிய்யத்” படைப்பும், படைத்தவனும் ஒன்றே என்ற கொள்கையில் முங்கிக் குளிக்கும் ஸூபீகள் தமது கொள்கைக்கு மாற்றமாக “இத்திஹாத்” ஐக் காட்டும் வசனங்கள் போல் வசனங்களைப் பேசுவதால் அவர்கள் “இத்திஹாத்” பேசுகிறார்கள் என்பது அர்த்தமல்ல. மாறாக வஸ்த்துக்களாக காட்சியளிக்கும் அவற்றின் எதார்த்தமான “வுஜூத்” ஐ “ஷுஹூத்” செய்வதற்காகவே அவர்கள் அவ்வாறு பேசிகிறார்கள்.
அதேபோன்றுதான் அல்லாஹு தஆலா திருக்கலிமா மூலம் மனிதர்களுக்கு உணர்த்திய “ஐனிய்யத்”தை வலுவாக்குவதற்காக திருமறை மூலம் தானே சகல வஸ்த்துக்களாகவும் காட்சியளிக்கிறேன் என்று நிறுவியிருக்கும் நிலையில் “உடனிருத்தல்” என்ற வார்த்தைப் பிரயோகம் மூலம் வஸ்த்துக்களுக்கு நான் வேறானவன் என்பதைச் சொல்லவில்லை. நான் மேலே குறிப்பிட்டது போன்று “மஇய்யத்” உடனிருத்தல் என்பதை மலக்குகள் – அமரர்களுக்கும், மனிதனுக்கும் தவிர வேறு படைப்புகளுக்கு பாவிக்கவில்லை. காரணம் வேற்றுமையில் கிடக்கும் அந்த மனிதன் அவனை – ஹக் தஆலாவை “ஷுஹூத்” செய்ய வேண்டும் என்பதற்கேயாகும்.
இல்லை “உடனிருத்தல்” என்பது வேறு என்பதைத்ததான் காட்டும் என்றிருந்தால் அல்லாஹ் திருமறையில்
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلَاثَةٍ
நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காபிர்களாகிவிட்டார்கள் என்று (05-73) கூறிய அவன் அதே திருமறை (58 – 07)வது வசனத்தில் பின்வருமாறு கூறியுள்ளான்.
مَا يَكُونُ مِنْ نَجْوَى ثَلَاثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَا أَدْنَى مِنْ ذَلِكَ وَلَا أَكْثَرَ إِلَّا هُوَ مَعَهُمْ أَيْنَ مَا كَانُوا
மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை. இன்னும் ஐந்து பேர்களில் அவன் ஆறாவதாக இல்லலாமலில்லை. அதை விட மிகக் குறைந்தோ, அதை விட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை என்று கூறியுள்ளான்.
முதலாவதாக கூறப்பட்ட வசனத்தில் சொல்லப்பட்ட விடயம் “நஸாறா”க்களில் ஒரு பிரிவினர் சொன்னதாகும். அவர்கள் “மூன்று பேர்களில் அல்லாஹ் மூன்றாமவன்” என்று சொன்னதை அதாவது நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம், அவர்களின் தாயார் மர்யம் அலைஹஸ்ஸலாம் ஆகியோருடன் அல்லாஹ் மூன்றாவது “இலாஹ்” ஆக இருக்கிறான் என்று சொன்னதை “குப்ர்” என்று கூறுகிறான்.
அதேநேரம் இரண்டாவதாக கூறிய வசனத்தில் மூன்று பேர் இரகசியம் பேசினால் நான்காவதாக அவர்களுடன் அல்லாஹ் இருக்கிறான், ஐந்து பேர் இகசியம் பேசினால் அவர்களுடன் ஆறாவதாக அல்லாஹ் இருக்கிறான், அதை விடக் கூடவோ, குறையவோ இருந்தாலும் அவர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்று கூறுகிறான். இது அல்லாஹ் கூறிய கூற்றாகும். இதை “குப்ர்” என்றோ “ஷிர்க்” என்றோ அல்லாஹ் சொல்லவும் இல்லை, வேறு யாரும் சொல்லவுமில்லை.
இங்கு இரு வசனங்களிலும் கூறப்பட்டுள்ள விடயம் “உடனிருத்தல்” என்பதுதான். “நஸாறா”க்கள் கூறியது “ஙைரிய்யத்” வேறு என்ற அடிப்படையிலாகும். அதனால்தான் அல்லாஹ் அவர்களின் கூற்றை “குப்ர்” என்று வர்ணிக்கிறான். இரண்டாவதாகச் சொன்ன வசனத்தில் அல்லாஹ் கூறியிருப்பது அல்லாஹ் அவர்கள் தானாக இருக்கின்றான் என்ற அடிப்படையிலாகும். அதனால் அதை நம்புவது “ஈமான்” விசுவாசமாகும்.
எனவேதான் இவ்வாறு வசனங்களைப் பாவிக்கலாம். ஆனால் அவற்றைச் சொல்பவனின் நோக்கம் “ஙைரிய்யத்” தாக இருக்குமானால் அது “குப்ர்” ஆகும். “ஐனிய்யத்” அடிப்படையில் ஒரு விடயத்தை விளங்கப்படுத்துவதற்காகச் சொன்னால் அது “குப்ர்” அல்ல. அப்படியாயின் “உடனிருத்தல்” என்பதை எவ்வாறு நாம் விளங்க வேண்டும்? என்பதைப் பற்றி சற்று ஆராய்வோம்.
அல்லாஹ் மனிதனுடன் அல்லது படைப்புக்களுடன் இருக்கிறான் என்றால் இங்கு இரண்டு வஸ்த்துக்கள் தேவைப்படுகின்றன. இரண்டு என்பதுதான் “ஷிர்க்” எனும் இணை வைத்தலின் அத்திவாரமாகும். இதுவே துவிதம் எனப்படும். எவர் துவிதம் பேசுகின்றாரோ அவர் இணை வைக்கின்றார் என்பதே அதன் அர்த்தமாகும்.
இரண்டில்லை என்பதுதான் “தௌஹீத்” ஏகத்தவத்தின் அத்திவாரமாகும். “தௌஹீத்” என்ற சொல்லின் கருத்து ஒன்றாக்கி வைத்தல் என்பதாகும். ஒருவனான இறைவனை எவ்வாறு ஒருவனாக்கி வைப்பது? இது அசாத்தியமாகும். அதனால் “தௌஹீத்” ஏகத்துவம் என்பது அசாத்தியமானது என்ற கருத்தல்ல. மாறாக “தௌஹீத்” செய்யக் கூடிய மனிதனைப் பொறுத்தே இவ்வாறு சொல்லப்படுகின்றது. அல்லாஹ்வைப் பொறுத்தல்ல. மனிதன் தனது எண்ணத்தில் பல வஸ்த்துக்கள் – பல “வுஜூத்” உள்ளமைகள் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறான். அது இணையாகும். இதனையே நான் முன்னால் “இரண்டு என்பது “ஷிர்க்” இணைவைத்தலின் அத்திவாரமாகும்” என்று குறிப்பிட்டேன். அவ்வாறு இந்த மனிதன் தனது எண்ணத்தில் பலதாகக் காணும் வஸ்த்துக்களை – தெய்வங்களை ஒன்றென்று ஆக்குவதே “தௌஹீத்” ஒன்றாக்கி வைத்தல் எனப்படும். பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மக்கத்து காபிர்கள் மத்தியில் திருக்கலிமாவை முதன் முதலில் பிரகடனம் செய்த போது இதனையே அந்த மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் ஏற்றுக் கொள்ளவில்லை.
أَجَعَلَ الْآلِهَةَ إِلَهًا وَاحِدًا إِنَّ هَذَا لَشَيْءٌ عُجَابٌ
இவர் (முஹம்மத்) (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விடயமே! (38-05)
அவர்கள் திருக்கலிமா மூலம் இவ்வாறு புரிந்து கொண்டதை அல்லாஹ் பிழைகாணவில்லை. எனவே, இணைவைத்தலின் அத்திவாரமான இரண்டு அல்லது துவிதம் என்ற அடிப்படையிலன்றி அல்லாஹ் மனிதனுடன் அல்லது படைப்புக்களுடன் இருக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனை பின்வரும் உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
தங்கத்தையும், காப்பையும் எடுத்துக் கொண்டால் எந்நிலையிலும் தங்கம் என்பது காப்புடனேயே இருக்கிறது. இங்கு இரண்டு பெயர்கள் சொல்லப்பட்டாலும் எதார்த்தத்தில் இரண்டு வஸ்த்துக்கள் இல்லை. இருப்பது தங்கம் மாத்திரமே. காப்பு என்பது தங்கத்தின் வேறுபடாத அதன் கோலம்.
அது போன்றுதான் பஞ்சையும், நூலையும் எடுத்துக் கொண்டால் நூல் எங்கிருந்தபோதும், எந்நிலையில் இருந்த போதும் பஞ்சு நூலுடனேயே இருக்கிறது. இங்கும் இரண்டு வஸ்த்துக்களின் பெயர்கள் சொல்லப்பட்டாலும் எதார்த்தத்தில் இரண்டு என்பதே கிடையாது. இருப்பது பஞ்சு மாத்திரமே. நூல் என்பது பஞ்சின் வேறபடாத அதன் கோலமாகும்.
இவ்வாறுதான் அல்லாஹ் மனிதனுடன் இருக்கிறான் அல்லது படைப்புக்களுடன் இருக்கிறான் என்றால் இரண்டு வஸ்த்துக்கள் உள்ளன என்று விளங்கி இணையை ஏற்படுத்தாமல் மனிதனாக, மற்றுமுள்ள படைப்புக்களாக அவனே இருக்கிறான் என்பதை நாகரீகமான முறையில் தனக்கே உரித்தான பாணியில் கூறியுள்ளான் என்று நாம் விளங்க வேண்டும்.