தொகுப்பு: மௌலவீ MJM ஜஹானீ றப்பானீ
இஸ்லாமிய அறிவுலகில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்பதில் பல்வேறு கருத்துடையவர்கள் காணப்படுகின்றனர். சிலர் அவனுக்கு உருவம் இல்லை என்று மட்டும் நம்புகிறார்கள். வேறு சிலர் உருவம் உண்டு என்று மட்டும் நம்புகிறார்கள். இன்னும் சிலர் (ஸூபிய்யாக்கள்) அல்லாஹ்வுக்கு இரு நிலைகள் உள்ளன. ஒன்று “தன்ஸீஹ்” நிலையாகும். இந்நிலையில் அவனுக்கு உருவமில்லை என்றும், மற்றது “தஷ்பீஹ்” நிலையாகும். இந்நிலையில் அவனுக்கு உருவம் உண்டு என்றும் நம்புகிறார்கள். இவர்கள் இவ்விடயத்தில் – இவ்விரண்டையும் நம்புவதில் கடும் போக்குடையவர்களாக உள்ளார்கள். அதாவது இவ்விரண்டில் ஒன்றை எடுத்து மற்றதை விட்டவன் கடைசி நரகிற்கிரையாவான் என்று கூறுகின்றார்கள்.
இருக்கு முதலெல்லாம்
கொடுத்திட்டாலும்
இரவு பகலெலாம் வணங்கிட்டாலும்
வருட முழு நோன்பு நோற்றிட்டாலும்
வரிசை ஹஜ்ஜதை செய்திட்டாலும்
ஹறத்தில் கிதாபெல்லாம் ஓதிட்டாலும்
அநேக நன்மைகள் செய்திட்டாலும்
கருத்தில் இது ரெண்டை அறியாதவர்
கடைசி நரகத்திற்கிரையாவரே!
(தோணா மௌலானா)
அதேபோல் அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ நாயகம் அவர்கள்
فَإِنْ قُلْتَ بِالتَّنْزِيْهِ كُنْتَ مُقَيِّدًا – وَإِنْ قُلْتَ بِالتَّشْبِيْهِ كُنْتَ مُحَدِّدًا
وَإِنْ قُلْتَ بِالْأَمْرَيْنِ كُنْتَ مُسَدِّدًا – وَكُنْتَ إِمَامًا فِى الْمَعَارِفِ سَيِّدًا
நீ “தன்ஸீஹ்” நிலையை மட்டும் நம்பினாலும் நீ அவனை அந்நிலையில் கட்டுப்படுத்தியவன்தான்.
நீ “தஷ்பீஹ்” நிலையை மட்டும் நம்பினாலும் நீ அவனை அந்நிலையில் கட்டுப்படுத்தியவன்தான்.
நீ இரு நிலைகளையும் நம்பினால் நீ நேர்வழி பெற்றவன்தான்.
அதுமட்டுமன்றி இறைஞானத்தில் தலைவனும்தான்.
இந்த விடயத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 1979ம் ஆண்டு வழங்கிய “அத்தத்ஸீஸு அலத் தவ்ஹீத்” என்ற “பத்வா”வுக்கு ஆதாரமாக எடுத்த நூற்களில் ஒன்றான “அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூலில் மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்.
اعلموا أنّ ذلك الوجود ليس له شكل ولا حدّ ولا حصر، ومع وجود هذا التنزيه المذكور فقد ظهر وتجلى فى الخارج بصور المخلوقات، ولم يتغيّر بسبب هذا الظهور فى المظاهر الخلقيّة ممّا كان هو عليه من عدم الشكل وعدم الحدّ، بل هو الآن كما كان عليه فى الأزل،
அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹு தஆலாவின் “வுஜூத்” உள்ளமைக்கு எந்தவொரு உருவமோ, எல்லையோ, கட்டுப்பாடோ இல்லை. இவ்வாறு “தன்ஸீஹ்” பரிசுத்த நிலையில் அவன் – அவனுடைய உள்ளமை இருக்கும் நிலையில் படைப்புக்களின் உருவங்களில் வெளியாகி, தோற்றமளிக்கிறான். இவ்வாறு அவன் படைப்புக்களின் உருவங்களில் வெளியானதால் அவனுடய “தன்ஸீஹ்” நிலையில் (உருவமில்லாமல், எல்லையில்லாமல், கட்டுப்பாடில்லாமல் இருந்த நிலையில்) எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவன் எவ்வாறிருந்தானோ அவ்வாறே இப்போதும் உள்ளான்.
இதுதான் ஸூபிய்யாக்களின் கொள்கையாகும். ஸூபிய்யாக்கள் அல்லாஹ்வை உருவத்தில் மட்டும் கட்டுப்படுத்தவும் இல்லை, அரூபத்தில் மட்டும் கட்டுப்படுத்தவும் இல்லை. அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று அவர்கள் சொல்வது கூட அவனுக்கு குறிப்பிட்ட ஒரு உருவத்தை கற்பித்துச் சொல்லவும் இல்லை. எவ்வுருவாயினும் அவ்வுரு அவனது உள்ளமையின் கோலமே – தோற்றமே என்றுதான் கூகிறார்கள்.
அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று மட்டும் நம்புபவர்கள் இதை ஜீரணிக்க முடியாமற் போவதற்கான காரணம் ஒரு வேளை அவனுக்கு உருவம் உண்டு என்று நம்பினால் விக்கிரக வணங்கிகளுடன் தாமும் சேர்ந்து விடுவோமோ என்ற பயத்தினாலாகும். அவர்கள் அல்லாஹ்வின் திரு நாமங்களுக்குரிய கற்பனை உருவங்களை சிலைகளாக வடித்து வைத்து அவற்றை சாஷ்டாங்கம் செய்கிறார்கள். கற்பனை உருவங்களை சிலைகளாக வடித்தாலும் சரி, அவ்வாறு சிலைகளாக வடிக்காமல் ஒரு குறிப்பிட்ட உருவத்தை அவனுடையதென்று கற்பனையில் மாத்திரம் வைத்துக் கொண்டாலும் சரி இரு சாராரும் அவனுக்கு உருவம் மட்டும் கற்பித்த வழிகேடர்களே! அந்த வகையில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று மட்டும் நம்பும் வஹ்ஹாபீகளும், விக்கிரக வணங்கிகளும் ஒரே கோட்டில் பயணிக்கக் கூடியவர்களே!
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்பதற்கு வஹ்ஹாபீகள் திருமறையிலும். திரு நபீயின் நிறை மொழிகளிலுமேதான் ஆதாரங்கள் காட்டுகிறார்கள். அல்லாஹ்வுடைய உருவங்கள் என்பன தெளிவாக கூறப்பட்டவைதான். ஆனால் இவ்வுருவங்கள் அவனின் “தஷ்பீஹ்” நிலையிலுள்ள அவனின் உள்ளமையின் கோலங்கள் என்பதை ஏற்கவில்லை. அவர்களிடத்தில் “தன்ஸீஹ்” நிலையுமில்லை. “தஷ்பீஹ்” நிலையுமில்லை. அல்லாஹ் படைப்புக்களைப் படைக்க முன்னும், படைத்த பின்னும் இவர்கள் கற்பனை செய்துள்ள உருவமுள்ளவனாகவே இருக்கிறான் என்று நம்புகிறார்கள். அதாவது இவர்கள் அல்லாஹ்வை உருவத்தில் மட்டும் கட்டுப்படுத்துகிறார்கள். மட்டுப்படுத்துகிறார்கள். “அர்ஷ்” எனும் சிம்மாசனத்தைக் கொண்டு எல்லையிடுகிறார்கள். எனவே, இவர்கள் நம்பியுள்ள இறைவன் கட்டுப்பாடானவன். மட்டுப்பாடானவன். இதனால் இவர்கள் அல்லாஹ் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்பி நாத்திகர்களை விட்டும் வேறுபட்டவர்களாக ஆகுவார்களே தவிர அல்லாஹ் நபீமார்களையும், றஸூல்மார்களையும் அனுப்பி மக்களுக்கு அவனைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க நாடிய அந்த விசுவாசிகள் கூட்டத்தில் சேரமாட்டார்கள்.
எனவே, இவர்களும் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று சொல்கிறார்கள் என்பதனால் அவனுக்கு உருவம் உண்டு என்று நம்பும் ஸூபீகளும், இவர்களும் இந்த விடயத்தில் ஒன்று என்று எண்ணுவது விளக்கமில்லாத குழப்பமாகும். இவ்வாறு விளக்கமில்லாமல் குழம்பியதன் விளைவே 1979ம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைச் சார்ந்த குறைமதிகள் வழங்கிய “ஏகத்துவத்தில் ஊடுருவல்” என்ற “பத்வா”வாகும். இவர்கள் சொல்வது கட்டுப்பாடான, குறிப்பிட்ட ஒரு உருவம் அல்லது குண்டுதாரி ஸக்றானின் கொள்கை வழி செல்லும் குறைமாதக் குழந்தைகள் சொல்வது போல் இரண்டு உருவங்கள் ஆகும். ஆனால் ஸூபீகள் நம்பும், விசுவாசிக்கும் உருவம் என்பது கற்பனை உருவமல்ல. உருவம் என்று எதுவெல்லாம் உள்ளனவோ அதுவெல்லாம் அவன் உருவங்களே! கோலங்களே! என்பதாகும். இந்த நுட்பம் புரியாமல்தான் “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் பேசிய மகானுக்கு “தஜ்ஸீம்” சடவாதத்திற்கு மறுப்பான ஆதாரங்களைக் கோர்வை செய்து, விசாரணையின்றி தீர்ப்பு வழங்கினார்கள். “தஜ்ஸீம் – வஹ்ததுல் வுஜூத்” இரண்டும் ஒன்றென்று எண்ணிக் கொண்டார்கள் மூடர்கள். அதுகூடப் பரவாயில்லை. அவர்கள் வழங்கிய “பத்வா”வில் வழிகேடென்று கூறப்பட்ட உருவக் கொள்கையை, சடவாதம் பேசுபவர்களை “தௌஹீத் அமைப்புக்கள்” என்று இன்று இவர்கள் சான்றிதழ் வழங்குகிறார்கள்.
எனவேதான் வஹ்ஹாபீகள் கூறும் உருவம் என்பது ஸூபீகள் கூறும் உருவம் என்ற கருத்திலல்ல. ஸூபீகள் அவனுக்கு உருவம் உண்டு என்று நம்பினாலும் வஹ்ஹாபீகள் கூறும் அடிப்படையில் நம்பவில்லை. அதனால் உருவ விடயத்தில் வஹ்ஹாபீகளின் கருத்து தவறானதாகும். வழிகேடாகும்.
இன்னும் அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று நம்புபவர்கள் அவர்களும் அவனை “தன்ஸீஹ்” அரூப நிலையில் மட்டும் மட்டுப்படுத்துகிறார்கள். ஒரு வகையில் வஹ்ஹாபீகள் வழிகேட்டின் ஒரு பக்கம் என்றால் உருவமில்லை என்று மட்டும் நம்பும் இவர்கள் வழிகேட்டின் மறு பக்கம் என்று சொல்லலாம்.
கடந்த சில தினங்களுக்கு முன் வெலிகமவைச் சேர்ந்த ஒரு ஆலிம்ஷா (பாரின் அதிபர்) அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று தனது கற்பனையில் வந்ததையெல்லாம் உளறிக் கொட்டுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இவர் தனது பெயருக்குப் பின்னால் வைத்திருக்கும் பட்டம் “மளாஹிரீ” என்பதாகும். அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்பது பற்றி ஆராயுமுன் தனது பட்டத்தில் இருக்கின்ற “மளாஹிர்” என்ற சொல் பற்றி மட்டும் ஆய்ந்து தெளிந்தாலே இவருக்கு விடை கிடைத்துவிடும். இவர் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பொன் மொழிகளுக்கு தன்னிச்சையாக விளக்கம் கூறாமல், தான் கொண்ட கொள்கைக்கு ஆதரவாக அவற்றை வளைத் தெடுக்காமல் பொன் மொழிகள் தரும் கருத்தை தனது கொள்கையாக, அவற்றை ஆதாரமாக வைத்துப் பேசிய முன்னோர்களான ஞானவான்கள் போதித்ததை தனது கொள்கையாக ஆக்கிக் கொண்டால் ஈடேற்றம் பெறுவார் என்று அவருக்கு ஆலோசனை வழங்குகிறோம்.
“நீங்கள் பூரண இரவில் சந்திரனைக் காண்பது போன்று உங்கள் இரட்சகனைக் காண்பீர்கள்” என்ற நபீ மொழிக்கு “உங்களின் இறைவனைக் காண்பீர்கள் என்றுதான் வந்துள்ளதேயன்றி “உங்கள் இரட்சகனின் உருவத்தை காண்பீர்கள்” என்று வரவில்லையாம். அதனால் அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று உளறுகிறார் ஆலிம்ஷா. இது இவரின் அறிவின் முதிர்ச்சி என்று எவரும் எண்ணி விடாதீர்கள். பைத்தியம் முத்தியதால் ஏற்பட்ட விளைவு என்றுதான் நான் நம்புகிறேன். அப்துல்லாஹ் என்பவனிடம் அனஸ் என்பவர் நான் உன்னை கடற்கரையில் கண்டேன் என்று சொன்னார் என்று வைத்துக் கொள்வோம். அனஸ் என்பவர் கண்டது அப்துல்லாஹ்வின் உருவத்தை என்று வரவில்லையாதலால் அப்துல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று வாதிட்டால் அவரை என்னென்று சொல்வது?
அதுமாத்திரமின்றி “நாளை மறுமையில் ஒவ்வொருவரும் தாம் வணங்கியவற்றுடன் செல்லுமாறு அல்லாஹ் பணிப்பான். எல்லோரும் சென்று இறுதியில் விசுவாசிகள் மட்டும் எஞ்சுவார்கள். அவர்களிடம் அவர்கள் காணாத உருவத்தில் அல்லாஹ் வருவான்” என்று வந்துள்ள ஹதீதில் தெளிவாகவே “ஸூறத்” உருவம் என்று வந்திருக்கிறது. இது அவர் முன்னால் சுட்டிக் காட்டிய ஹதீதுக்கு கூறிய விளக்கத்திற்கு முரணானதாகும். இங்கு “ஸூறத்” என்பதற்கு உருவம் என்று சொல்லக் கூடாதாம். “ஸூறத்” என்பதற்கு “ஸிபத்” என்றும் கருத்து இருப்பதால் “ஸிபத்” தன்மை என்று பொருள் கூற வேண்டும் என்றும் உளறுகிறார். இந்த ஆலிம்ஷா தன்மையை மட்டும் பார்க்கும் வல்லமை வழங்கப்பட்ட மகானாக இருப்பார் போலும். ஆதாரமில்லாமல் ஆதேயத்தை மட்டும் பார்க்கும் வல்லமை பெற்றவர் போலும். பைத்தியம் பல விதம். அதில் இது ஒரு விதம்.
குறிப்பு: அல்லாஹ்வை அகக் கண்ணாலும், புறக் கண்ணாலும் இம்மையிலும், மறுமையிலும் காண்பது பற்றிய தெளிவான ஆதாரங்களுடன் கூடிய விளக்கங்கள் அண்மையில் வெளிவரவுள்ள ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் (தால உம்றுஹூ) அவர்கள் எழுதிய “அல்கிப்ரீதுல் அஹ்மர்” எனும் நூலில் மிகத் தெளிவாக உள்ளன. அனைவரும் அந்நூலை வாசித்துப் பயன் பெறுவோமாக!