தொடர் 01
مَنْ لَمْ يَشْكُرِ النَّاسَ لَمْ يَشْكُرِ اللهَ
மனிதர்களுக்கு நன்றி செய்யாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செய்யாதவனாவான்!
நான் அண்மையில் காரணக்கடல், காதிர் வலீ, ஷாஹுல் ஹமீத் பாதுஷா றஹிமஹுல்லாஹ் அவர்களின் “கப்ர்” ஷரீபுக்கு சந்தனம் பூசும் அருள் நிறைந்த நிகழ்வில் கலந்து அருள் பெறுவதற்காக எனது “முரீது” சிஷ்யர்கள் சிலருடன் தமிழ் நாடு நாஹூர் ஷரீபுக்குச் சென்றேன்.
மக்கள் வெள்ளத்தால் நாஹூர் நகர் கடல் போல் தோற்றியது. ஹோட்டல்களும், லாட்ஜ்களும், வீடுகளும் சனங்களால் நிரம்பி வழிந்தன. “யா காதிர் முறாத் ஹாஸில்” என்ற முழக்கம் நெஞ்சங்களைப் பிழந்தன.
சனக் கூட்டங்களுக்கிடையில் நான் நுழைந்து பாதுஷா நாயகம் அவர்களின் அருளறைக்குள் புகுந்தேன். ஸுப்ஹானல்லாஹ்! இருப்பதற்கும் இடமிருக்கவில்லை. நிற்பதற்கும் இடம் இருக்கவில்லை. அங்கு அமர்ந்திருந்த அறிமுகமில்லாத ஒருவர் எழுந்து பாவா இங்கு அமருங்கள் என்றார். அல்ஹம்து லில்லாஹ்! என்று அமர்ந்தேன்.
மறு நிமிடம் யூஸுப் என்ற ஒரு “சாப்” என்னிடம் வந்து “தர்ஹா” தலைவர் பாதுஷாவின் காலடியில் நின்று கொண்டு உங்களை அழைக்கிறார் என்றார். என் மனதை “கரண்ட்” அடித்தாற்போல் இருந்தது. அவ் இடம் நோக்கி வேகமாக நடந்தேன். பாதுஷா நாயகமவர்களின் கால்மாட்டு பக்கம் தலைவர் நின்றிருந்தார்.
இருவரும் “முஸாபஹா” செய்தபின் தலைவர் அவர்கள் ஒரு பொன்னாடையை பாதுஷா நாயகம் அவர்களின் “கப்ர் ஷரீப்” மீது வைத்து அதைக் கொண்டு என்னைப் போர்த்த அங்கு நின்ற மக்கள் “அல்லாஹு அக்பர்” என்று முழங்கினார்கள்.
தலைவர் அவர்கள் என்னைப் பிடித்துக் கொண்டு “இலங்கையில் வஹ்ஹாபிஸத்தை அழித் தொழிக்க நீங்கள் கடும் முயற்சி எடுக்கிறீர்கள். நீங்கள் மட்டுமே இப்போது இருக்கிறீர்கள். நீங்கள் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை நிலை நாட்டுவதற்காக உங்களை பாதுஷா நாயகம் வரவேற்கிறார்கள்” என்றார்.
காரணக் கடலின் காலடியில் நிகழ்ந்த இந் நிகழ்வு சொர்க்க வாசலில் நடந்த நிகழ்வாக – சொர்க்கத்தில் நடந்த நிகழ்வாக நான் கருதுகிறேன். அல்லாஹ் தலைவருக்கும், எனக்கும் பாதுஷா நாயகத்தின் பேரருளைத் தருவானாக!
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
10.01.2023