தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
سلام الله وسلامي على مؤمن موحّد لم يعص الله فى عمره ولو مرّة واحدة، ولم يخن أحدا ولو مرّة واحدة، ولم يأخذ من أحد مكسا ولو مرّة واحدة، ولم يكفّر أحدا من المؤمنين ولو مرّة واحدة،
ரிஸ்வீ முப்தீ அவர்களே!
உங்களிடம் நான் கேட்கும் கேள்விகளுக்கு 14 நாட்களுக்குள் விளக்கமாக விடை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி 01: ஒரு முஸ்லிமை மதம் மாற்றி “பத்வா” தீர்ப்பு வழங்குவதற்கு உங்களுக்கு அதிகாரம் தந்தவர் யார்? எப்போது தந்தார்? அதில் ஒரு போட்டோ பிரதி வேண்டும். தர முடியுமா? முடியாதா?
கேள்வி 02: நான் பேசியது “வஹ்ததுல் வுஜூத்” ஞானமாகும். “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையல்ல. நீங்கள் எனது பேச்சை விளங்கியோ விளங்காமலோ, அல்லது மன முரண்டாகவோ அதை “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை என விளங்கி அது பிழையான கொள்கை என்று “பத்வா” எழுதிவிட்டு அந்த “பத்வா” புத்தகத்தில் எனது பெயரை குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் எனது பேச்சை சரியாக விளங்காமல் “பத்வா” கொடுத்துவிட்டீர்கள். அதில் எனது பெயரை குறிப்பிட்டது ஏன்? இதற்கு எழுத்து மூலம் விடை தாருங்கள்.
கேள்வி 03: குற்றவாளியை நேரில் விசாரிக்காமல் அவர் குற்றவாளி என்றோ, நிரபராதி என்றோ தீர்ப்பு வழங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? இல்லை என்று நீங்கள் சொல்வீர்களாயின் என்னை ஒரு தரமேனும் விசாரிக்கமால் தீர்ப்பு வழங்கியது ஏன்?
கேள்வி 04: அரச நீதி மன்றங்களிலும், காழீ நீதி மன்றிலும், பொது நீதி மன்றுகளிலும் ஒரே தவணையில் தீர்ப்புக் கூறப்படாமல் பல தவணைகள் கொடுத்து தீர்ப்புக் கூறுவதில் உள்ள தத்துவம் உங்களுக்குப் புரியாமல் “சுடுகுது மடியைப் பிடி” என்ற பாணியில் தீர்ப்பு வழங்கியதற்கான காரணம் என்ன?
கேள்வி 05: உங்களின் அறபு “பத்வா”வில் எந்த ஓர் இடத்திலும் எனது பெயர் கூறப்படாத நிலையில் மொழியாக்கத்திலும், அட்டை முகப்பிலும் எனது பெயர் வந்தது எவ்வாறு? இது சதியா? தவறா? நரிப் புத்தியா?
கேள்வி 06: உங்களின் “பத்வா” புத்தகம் எந்த அச்சகத்தில் எவரின் செலவில் அச்சிடப்பட்டது? செலவு எவ்வளவு?
கேள்வி 07: உங்களின் “பத்வா”வில் எந்த ஓர் இடத்திலும் “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல் இடம் பெறவில்லையே! அது ஏன்?
கேள்வி 08: உங்களின் “பத்வா” அறபுப் பகுதி 28ம் பக்கத்தில் التحفة المرسلة “அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூலை ஆதாரமாக எடுத்துள்ளதாக எழுதியுள்ளீர்கள். இந்நூல் எக்கலையைச் சேர்ந்தது? இதில் “வஹ்ததுல் வுஜூத்” சரியென்று எழுதப்பட்டுள்ளதா? பிழை என்று எழுதப்பட்டுள்ளதா?
இந்நூலின் விரிவுரை நூல் 45ம் பக்கத்தில்,
وأن جميع الموجودات عين الحقّ سبحانه وتعالى، ولكنّها من حيث التعيُّن غير الحقّ سبحانه وتعالى، والغيريّة اعتباريّة، وأمّا من حيث الحقيقة فالكلّ هو الحقّ سبحانه وتعالى، ومثاله الحبابُ والموج والثّلج، فإنّ كلهنّ من حيث الحقيقة عينُ الماء ومن حيث التعيّن غيرُ الماء،
என்ற வசனம் கூறப்ப்டுள்ளது. இதன் சுருக்கமான விளக்கம் என்னவென்று கூற வேண்டும். முடியுமா? முடியாதா? முடியாதென்றால் ஏன்? நீங்கள் கூறாவிட்டால் அடுத்த தொடரில் நான் கூறுவேன்.
கேள்வி 09: உங்கள் “பத்வா” 28, 29ம் பக்கங்களில் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை பிழையென்று உங்களால் முடிந்த ஆதாரங்கள் கூறி நிறுவியுள்ளீர்கள். அல்ஹம்து லில்லாஹ்! மிக்க மகிழ்ச்சி. நானும் இக் கொள்கை பிழை என்றுதான் சுமார் 50 ஆண்டுகளாக கூறி வருகிறேன். எனக்கு எதிரான “பத்வா”வில் இக் கொள்கை பிழையென்று ஏன் எழுதினீர்கள்? இதன் மூலம் நீங்கள் எனது பேச்சை “ஹுலூல் – இத்திஹாத்” என்று விளங்கிக் கொண்டீர்கள். நான் சொல்வதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
கேள்வி 10: உங்களின் “பத்வா” புத்தகத்தில் பல இடங்களில் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்களையும், அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ நாயகம் அவர்களையும், இமாம் ஙஸ்ஸாலீ நாயகம் அவர்களையும் (றழியல்லாஹு அன்ஹும்) ஆதாரங்களாக எடுத்துள்ளீர்கள். அதோடு அவர்களைப் புகழ்ந்தும் எழுதியுள்ளீர்கள். இவர்கள் அனைவரும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை பேசியவர்கள் என்பது உலகறிந்த உண்மை. “வஹ்ததுல் வுஜூத்” பேசிய நான் “முர்தத்” மதம் மாறியவன் என்றால் இவர்கள் யார்? உங்களுக்கு நூல்களின் பெயர்களுடனும், பக்கங்களுடனும் எத்தனை ஆதாரம் தேவை? சொல்லுங்கள் தருகிறேன்.
கேள்வி 11: உங்களின் “பத்வா”வின் பல இடங்களில் “முஜஸ்ஸிமா” சடவாதிகள் பற்றி கூறுகையில் அவர்கள் வழிகேடர்கள் என்று எழுதியுள்ளீர்கள். உங்களின் நிர்வாகத்தில் சடவாதிகள் எத்தனை பேர் உள்ளனர் என்று நீங்களே சொல்கிறீர்களா? அல்லது நான் சொல்லவா?
வஹ்ஹாபிகள் அனைவரும் “முஜஸ்ஸிமா” சடவாதிகள் – “அல்லாஹ்வுக்கு சடம் உண்டு” என்று சொல்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களுடன் இருப்பவர்கள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளாமலா உள்ளீர்கள்? அவ்வாறாயின் நீங்கள் யார்? உங்களை எவ்வாறு சொல்வது?
இலங்கை நாட்டிலுள்ள “தஃவா” அமைப்புக்களில் தப்லீக் அமைப்பும், தவ்ஹீத் அமைப்பும் சரியான கொள்கையுடைய அமைப்புக்கள் என்று நீங்கள் பாராட்டி அறிக்கை விட்டதை மறந்து விட்டீர்களா? அல்லது இப்போது மறந்தவர்கள் போல் நடிக்கிறீர்களா? அந்த அறிக்கையில் “ஸுன்னத் வல்ஜமாஅத்” கூட்டத்தை நீங்கள் சேர்த்துக் கொள்ளாதது ஏன்?
நான் 1979ம் ஆண்டு முதல் அதாவது மார்க்கப் பிரச்சினை, “பத்வா” வெளியான காலம் முதல் இன்று வரை “ஸூபிஸம், வஹ்ததுல் வுஜூத்” எனும் ஞானத்துடன் தொடர்பிலேயே இருந்து வருகிறேன். நான் அறிந்த வரை ஸூபீகள் கூறும் தத்துவம் மட்டுமே இஸ்லாமிய தத்துவம் என்று உணர்கிறேன்.
நான் அறிந்த இஸ்லாமிய தத்துவத்தை – இறைஞானத்தை 1979ம் ஆண்டு வரை உள்ளூரிலும், வெளியூர்களிலும் பேசி வந்தேன். இதனால் கைமேல் பலனும் கண்டேன். ஆயினும் 79ம் ஆண்டுக்குப் பின் வெளியூர்களில் பேச முடியாத சூழலை உங்களின் “பத்வா” ஏற்படுத்திவிட்டது. இதனால் என்னைக் கொண்டு – என் மூலம் இறைஞானம் பெற்று வந்தவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அல்லாஹ்விடம் நீங்களே பதில் கூற வேண்டும்.
முப்தீ ஸாஹிப் அவர்களே!
நீங்கள் சிலரிடம், “பத்வா” வழங்கியவர்கள் யாரோ இருக்க றஊப் மௌலவீ என்னைச் சாடிப் பேசுகிறார், ஏசுகிறார் என்று குறை கூறியதாக அறிந்தேன். “பத்வா” வழங்கிய நேரத்தில் நீங்கள் எங்கு இருந்தீர்கள். என்ன செய்தீர்கள்? என்பது எனக்குத் தெரியாது. அது எனக்குத் தேவையுமில்லை. ஆயினும் யார் “பத்வா” வழங்கியிருந்தாலும் இன்று வரை அதை அமுல் செய்து கொண்டிருப்பது உங்கள் தலைமையில் இயங்கும் உலமா சபைதான். அவ்வாறாயின் நீங்கள்தான் “பத்வா”வை அமுல் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
நான் உங்களையும், “பத்வா” எழுதியவர்களையும் பல முறை என்னிடம் வந்து நான் கூறும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தைக் கற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தேன். எனினும் நீங்களோ, உங்களின் முப்தீகளோ எந்த ஒரு பதிலும் தரவில்லை. ஆயினும் அவர்களில் ஒருவர், இவர் எங்களுக்கு ஞானம் சொல்லித் தர இவர் யார் என்று கேட்டுள்ளார். அறிவு என்பது தேடிப் படிக்க வேண்டியதேயன்றி அது எவரின் காலடிக்கும் வராது என்பதை அவ்வாறு சொன்ன மகான் அறியாமலிருப்பது அவரின் அறிவையும், மனப் பக்குவத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
கேள்வி 12: நான் பேசிய, இதுவரை பேசிக் கொண்டுமிருக்கின்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் என்னை விடவும், என்னுடனுள்ள சொற்ப மௌலவீமார்களை விடவும், இன்னும் உங்களை விடவும், உங்களுடனுள்ள 8500க்கும் அதிகமான மௌலவீமாரை விடவும் சிறந்த, பல் கலைகளில் பண்டிதர்களான, “இல்ஹாம்” எனும் இறையுதிப்பு வழங்கப்பட்ட, “கறாமத்” எனும் அபார அற்புதங்களும் வழங்கப்பட்ட பெரும் மகான்களால் பேசப்பட்டும், எழுதப்பட்டும் வந்த மெய்ப் பொருள் பற்றிய மெய்ஞ்ஞானமாகும். நீங்களும், உங்களின் முப்தீகளும் நினைப்பது போல் அது நடை பாதைச் சரக்கல்ல என்பதை இதன் பிறகாவது தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் எழுத்துக்களிலோ, பேச்சுக்களிலோ திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிகளுக்கும் முரணான ஒரு புள்ளியைக் கூட எவராலும் காண முடியாது.
“முப்தீ ஸாஹிபு”வே நீங்கள் யார்?
فِكْرُكَ فِيْكَ يَكْفِيْكَ
உங்கள் பற்றி நீங்கள் சிந்தித்தாலே போதும். உங்களுக்கு நாங்கள் “பத்வா” வழங்குவதாயின் எப்பவோ வழங்கியிருப்போம். நாங்கள் உயர் குல வழிவந்த, எதையும் துருவித் துருவி ஆய்வு செய்தறிந்த ஸூபீகளாவோம். உங்கள் போல் இழி குலத்தோரின் செயல் எங்களால் வெளியாகாது.
நீங்கள் அன்று பௌத மதத் தலைவர்கள் போல் கையில் வெசக் விளக்கேந்தி நின்றீர்களல்லவா? நினைவிருக்கிறதா? இச் செயலை ஒரு முஸ்லிம் நினைத்துக் கூட பார்க்கமாட்டான். ஆனால் நீங்களோ “பத்வா” மன்னனாச்சே! எப்படி விளக்கேந்தி நிற்பீர்கள்? உங்களின் இச் செயலைக் கண்ட முஸ்லிம் சமூகம் காறி உமிழ்ந்ததல்லவா? அன்றே நீங்கள் غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّيْنَ என்ற திரு வசனத்தில் கூறப்பட்ட இரு கூட்டங்களோடு இணைந்து கொண்டீர்கள். நாங்கள் உங்களுக்கு “பத்வா” கொடுத்தோமா? எங்களால் முடியாதென்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு முடிந்தது ஏன் எங்களுக்கு முடியாமற் போனது? இது ஜனநாயக நாடு என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.
நீங்கள் பகிரங்கமாக “குப்ர்” மத மாற்றத்தை ஏற்படுத்தும் செயலைச் செய்த நேரம் உங்களின் “பத்வா” குழு எங்கே இருந்தார்கள்? எந்த நிலையில் இருந்தார்கள்? கோமாவிலா கிடந்தார்கள்?
இலங்கை நாட்டில் வஹ்ஹாபிஸ ராஜ நாகங்களை வளர்த்தது யார்? நீங்கள்தான். அவர்கைளத் தூக்கி மடி மீது வைத்து செல்லக் கதை கேட்டது யார்? நீங்கள்தான். “தஃவா” பணிக்கு பொருத்தமான அமைப்புக்கள் “தவ்ஹீத்” அமைப்புக்களும், “தப்லீக்” அமைப்பும் என்று பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டது யார்? நீங்கள்தான். தறாவீஹ் தொழுகை எட்டு “றக்அத்”தா? இருபது “றக்அத்”தா என்ற கேள்விக்கு இரண்டும் செய்யலாம் என்று சொன்னவர் யார்? நீங்கள்தான்.
வழி கெட்டவர்களையும், வழி கெடுப்பவர்களையும் புகழ்ந்து தலை மேல் வைத்து வளர்த்து விட்டு நூற்றாண்டு விழாவில் “சஹ்றான் ஷெய்தான்” என்று ஆங்கிலத்தில் கர்ஜித்தீர்கள். இது நியாயமா?
அம்பட்டன் குப்பையை கிளறினால் அத்தனையும் மயிரே! என்று முன்னோர்கள் சொன்னது போல் உங்களின் வண்டவாளங்களைக் கிளறினால் உலகமே நாறத் தொடங்கிவிடும். அது எங்களுக்கு – ஸூபிகளுக்கு தேவையற்றது.
எனவே, நீங்களும், உங்களின் “பத்வா” குழுவும் இறையருள் பெற்று நிம்மதியாக வாழ விரும்பினால் உங்களின் தவறையுணர்ந்து, இந்நாட்டில் வாழும் ஸூபீ முஸ்லிம்களுக்கு அநீதியாக வழங்கிய “பத்வா”வை வாபஸ் பெற்று இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட வழி செய்யுங்கள். தவறினால் உங்களின் அநீதியான “பத்வா” விவகாரம் ஐ.நா வரை செல்லும் என்பதையும், அதற்கு அல்லாஹ்வினால் முடியும் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் “பத்வா”வை வாபஸ் பெறும் வரை என் நாவும், என்னுடனுள்ள ஸூபீகளான மௌலவீமார்களினது நாவும் இயங்கிக் கொண்டே இருக்கும் என்பதையும், நான் எதிர்வரும் ஐந்தாம் திகதி 79வது அகவையை பூர்த்தி செய்தாலும் கூட என் எழுது கோலில் மை தீர்ந்து விடாது என்பதை உங்களின் நினைவில் வைத்துச் செயல்படுங்கள்.
مَنْ تَشَرَّعَ وَلَمْ يَتَحَقَّقْ فَقَدْ تَفَسَّقْ – وَمَنْ تَحَقَّقَ وَلَمْ يَتَشَرَّعْ فَقَدْ تَزَنْدَقْ