Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நபீ தோழர் “அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப்” றழியல்லாஹு அன்ஹு!

நபீ தோழர் “அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப்” றழியல்லாஹு அன்ஹு!

நபீ தோழர் “அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப்” றழியல்லாஹு அன்ஹு!
الصحابيّ الجليل عبد الرحمن بن عوف رضي الله عنه،
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
இவர்கள் பிரசித்தி பெற்ற நபீ தோழர்களில் ஒருவர். றழியல்லாஹு அன்ஹு. யானைப் படை மக்கா நகரைத் தாக்கி 10 வருடங்களின் பின் பிறந்தார்கள். இவர்கள் நபீ பெருமானாரின் “குறைஷ்” வம்சத்தை சேர்ந்தவர்களாவர். நபீ தோழர்களில் சுவர்க்கம் கொண்டு சுபச் செய்தி சொல்லப்பட்ட ஒருவருமாவார்கள். ஆரம்ப கால கட்டத்தில் இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்த எண்மரில் ஒருவராவார்கள். உமர் இப்னுல் கத்தாப் அவர்கள் ஆலோசனை சபைக்குத் தெரிவு செய்த ஆறு பேர்களில் ஒருவருமாவார்கள்.

இவர்கள் முதலாவது கலீபா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்து கொண்டார்கள்.
பெருமானார் அவர்களின் காலத்தில் அதிக யுத்தங்களிலும், மற்றும் “பத்ர்” யுத்தம், “உஹ்த்” யுத்தம், “கன்தக்” யுத்தம் முதலானவற்றிலும் கலந்து கொண்டார்கள். ஒரு யுத்தத்தின் போது பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இவர்களைப் பின்பற்றி தொழுதிருக்கின்றார்கள். இரண்டாவது கலீபா உமர் றயழில்லாஹு அன்ஹு அவர்கள் இவர்களிடம் ஆலோசனை கேட்பவர்களாக இருந்தார்கள்.
 
இவர்கள் ஹிஜ்ரத்துக்கு 32 வருடங்களுக்கு முன் திரு மக்கா நகரில் பிறந்தார்கள். மூன்றாவது கலீபா உத்மான் இப்னு அப்பான் இவர்களின் “ஜனாஸா” தொழுகை நடத்தினார்கள். நபீ தோழர் ஸஃத் இப்னு அபீ வக்காஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “ஜனாஸா”வை திரு மதீனா மையவாடியான “ஜன்னதுல் பகீஇ” எனும் இடத்திற்குச் சுமந்து சென்றார்கள். தங்களின் 75ம் வயதில் “வபாத்” ஆனார்கள்.
அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் அவர்கள் பெரும் வியாபாரியாகவும், கொடை வள்ளலாகவும் விளங்கினார்கள். நபீ பெருமானார் அவர்களின் காலத்திலேயே தங்களின் சொத்துக்களில் பாதியை தர்மம் செய்துவிட்டார்கள். இதைத் தொடர்ந்து தர்மம் செய்து கொண்டே இருந்தார்கள். ஒரு சமயம் போருக்காக 500 குதிரைகளும், 500 ஒட்டகங்களும் வாங்கினார்கள். “பத்ர்” போரில் கலந்து எஞ்சிய நபீ தோழர்களில் ஒவ்வொருவருக்கும் 400 “தீனார்” கொடுத்து உதவினார்கள். இதேபோல் “உம்மஹாதுல் முஃமினீன்” விசுவாசிகளின் தாய்மார் ஒவ்வொருவருக்கும் பெருந் தொகைப் பணம் கொடுத்து உதவினார்கள்.
நபீ தோழர் அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெயரில் தினமும் “பாதிஹா” ஓதி வருபவர்களுடன் அவர்கள் அன்பாக இருப்பார்கள். “துஆ”வும் செய்வார்கள். தினமும் அவர்கள் மீது “பாதிஹா” ஓதி வருபவர்களுக்கு பொருளாதார நெருக்கடி, வறுமை வராமல் அருள் செய்வார்கள்.
அம்பா நாயகம்:
 
கம்பத்தில் அடக்கம் பெற்றுள்ள “காமில் வலீ” அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறித்த நபீ தோழர் அவர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களாக இருந்தார்கள். சில இரவுகளில் இருவரும் உரையாடிக் கொண்டிருந்ததை அவர்களின் “முரீது”களிற் பலர் செவியேற்றுமுள்ளார்கள்.
நான் அம்பா நாயகம் அவர்களை கம்பம் நகர் சென்று மூன்று தரம் சந்தித்து அருள் பெற்றுள்ளேன். பல இரவுகள் அவர்களுடன் தங்கியுமுள்ளேன். அவர்கள் எனது “அல்கிப்ரீதுல் அஹ்மர்” எனும் “பத்வா”வில் கையொப்பமும் வைத்துள்ளார்கள்.
நான் கம்பம் சென்று அம்பா நாயகம் அவர்களைச் சந்திப்பதற்கு முன்னர் அம்பா நாயகம் அவர்களின் “கறாமத்” அற்புதங்கள் பற்றி பலர் மூலம் அறிந்திருந்தேன். நான் அவர்களை நேரில் கண்ட பிறகுதான் நான் கேள்விப் பட்டிருந்த செய்திகள் உண்மையென்று அறிந்து கொண்டேன்.
 
அம்பா நாயகம் அவர்கள் தங்களின் “முரீது” சிஷ்யர்களுக்கு தொழில் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருந்ததாகவும், அவர்களுக்கு ஏற்படும் அன்றாடத் தேவைகளுக்கு தாங்களே பணம் தருவதாகச் சொல்லியிருந்ததாகவும் நான் அறிந்திருந்தேன். நான் அங்கு சென்ற பிறகுதான் நான் அறிந்த விடயங்கள் உண்மையானவை என்பதை தெளிவாக அறிந்து கொண்டேன்.
 
நான் அம்பா நாயகம் அவர்களுடன் தைக்காவில் தங்கியிருந்த போது ஒரு நாள் “மக்ரிப்” நேரம் இட்லி, சட்னி போன்றவை அவர்களுக்கு எங்கோ இருந்து வந்தன. அன்று அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். நோன்பு திறந்தவுடன் சாப்பிட்டார்கள்.
அவ்வேளை அவர்களின் “முரீத்” சிஷ்யர் ஒருவர் வந்து அவர்களுக்கு அருகில் இருந்தார். அவரிடம் எவ்வளவு தேவை என்று நாயகம் கேட்டார்கள். 1000 ரூபாய் என்றார். அம்பா அவர்கள் தங்களின் “பெல்ட்” வாரைத் திறந்து பணம் எடுத்துக் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த பணம் அப்போதுதான் வங்கியிலிருந்து எடுத்த பணம் போல் புதிய தாளாக இருந்தது.
இதையடுத்து இன்னும் சில நிமிடங்களில் இன்னொருவர் வந்து அமர்ந்தார். அவரிடமும் எவ்வளவு தேவை என்று கேட்டார்கள். அவரும் அதேபோல் சொன்னார். அவருக்கும் அவ்வாறே கொடுத்தார்கள்.
இப்பயணத்தின் போது அவர்கள் மூலம் நான் பல அறிவுகளையும், பாடங்களையும் கற்றுக் கொண்டேன்.
 
நபீ தோழர் அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் றயழில்லாஹு அன்ஹு அவர்கள் இரவு நேரங்களில் அம்பா நாயகம் அவர்களிடம் வந்து பேசிக் கொண்டிருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான அளவு பண உதவி செய்வதாகவும் அம்பா நாயகம் அவர்களின் பக்தர்களும், முரீதுகளும் சொல்ல நான் கேட்டுள்ளேன். அவர்கள் சொன்னது உண்மை என்பதையும் அங்கு சென்ற பின் அறிந்து கொண்டேன்.
நான் முதன் முதலில் கம்பம் சென்ற போது அவர்கள் தங்கியிருக்கும் தைக்காவுக்குச் சென்றேன். நான் அங்கு சென்ற நேரம், முதல் சந்திப்பின் போதே என்னைக் கண்டதும் “உங்கள் தகப்பனாரின் “ஜனாஸா” தொழுகையில் “அப்தால்”களில் ஒருவர் கலந்து கொண்டிருந்தார் என்று சொன்னார்கள்.
முன்னறிவிப்புச் செய்யாமலும், நான் யார் என்ற அறிமுகம் இல்லாமலும் இருந்த அம்பா அவர்கள் மேற்கண்டவாறு சொன்னது என்னைத் தூக்கிவாரிப் போட்டாற் போல் இருந்தது.
 
இதையடுத்து என்னிடம் உங்களுக்கு தீராத வயிற்று வலி இருந்ததல்லவா? அது இப்போது எப்படி என்று வினவினார்கள். ஓர் அங்குலம் கூட நகரவில்லை என்றேன். இக்கேள்வியும் எனக்கு ஓர் அதிர்ச்சியை தந்தது. உள்ளே சென்று அமர்ந்தேன். என்னிடம் உங்கள் மாமி – மனைவியின் தாய் பக்தியுள்ள பெண் என்று கூறினார்கள். தொடர்ந்து இரு நாட்கள் தங்கியிருந்து நான் எடுத்துச் சென்ற, நான் அறபு மொழியில் எழுதி வைத்திருந்த “அல்கிப்ரீதுல் அஹ்மர்” எனும் நூலை அவர்களிடம் கொடுத்து கையெழுத்துப் பெற்றுக் கொண்டு திரும்பி வந்து விட்டேன். அவர்கள் எனது நூலில் கையெழுத்து வைத்து தந்தது இப்போதும் என்னிடமுள்ளது. தேவையானோர் நேரில் வந்து பார்வையிடலாம்.
 
“நபீ தோழர் அப்துர் றஹ்மான்” என்ற தலைப்பில் கம்பம் அப்துர் றஹ்மான் மகான் பற்றி நான் எழுதியதற்கான காரணம் இவர்கள் நபீ தோழர் அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் றழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் தொடர்புள்ளவராக இருந்ததேயாகும்.
ஒரு நாள் காத்தான்குடியைச் சேர்ந்த எனது சிஷ்யன் “அல்தாப் அஹ்மத்” என்பவரின் மனைவி “சைபாத்” என்பவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. இது அவர்களின் முதற் குழந்தை. ஆண் குழந்தை.
 
இக்குழந்தை 07.02.2023 செவ்வாய்க் கிழமை காலை 03.57 மணிக்குப் பிறந்தது. அதே இரவு சுமார் 02.30 மணியளவில் நான் ஒரு கனவு கண்டேன். அக்கனவில் இனம் தெரியாத ஒருவர் என்னிடம் வந்து “சைபாத்”தின் குழந்தைக்கு “அப்துர் றஹ்மான்” என்று பெயரிடுக” என்று கூறி மறைந்தார்கள்.
 
அன்று காலை 08 மணியளவில் “அஹ்மத் அல்தாப் – சைபாத்” தம்பதிகளுக்கு குழந்தை பிறந்த செய்தி எனக்கு எட்டியது. நான் குழந்தையின் தந்தையை அழைத்து, “உனது குழந்தைக்கு பெயர் வைத்து விட்டேன். பெயரோ அருள் நிறைந்த பெயர்தான். ஆயினும் நாகரீகமான பெயர் அல்ல. பழைய பெயர்தான். உன் மனைவி சற்று நாகரீகமானவளாயிற்றே! இப்பெயரைப் பொருந்திக் கொள்வாளா என்று கணவனிடம் கேட்டேன். அதற்கவர் அவள் உங்களின் பக்தை. என்ன பெயர் சொன்னாலும் பொருந்திக் கொள்வாள் என்றான். நபீ தோழர் அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் என்ற பெயரில் “அவ்ப்” عَوْفْ என்ற சொல்லை மட்டும் “அவ்பீ” என்று மாற்றி “அப்துர் றஹ்மான் அவ்பீ” என்று பெயர் சூட்டினேன். அல்ஹம்து லில்லாஹ்!
பிறந்த குழந்தைக்குப் பெயர் வைத்தல்:
 
எம் பெருமானார் அவர்களின் காலத்தில் தோழர்களில் யாருக்காவது குழந்தை பிறந்து விட்டால் தோழர்களில் அநேகர் அக்குழந்தையைப் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் கொணர்ந்து கொடுப்பார்கள். அவர்கள் அக்குழந்தையை எடுத்து அதன் முகத்தை உற்று நோக்கியபின் அதற்குப் பெயர் வைத்து “துஆ”வும் செய்வார்கள்.
 
அவர்கள் உற்று நோக்குவது எதற்காகவெனில் அதன் முகத்தையும், அகத்தையும் பார்த்து அதற்குப் பொருத்தமான பெயர் வைப்பதற்கேயாகும்.
இவ்வாறு முகமும், அகமும் பார்த்து அதற்குப் பொருத்தமான பெயர் வைப்பதானது அனைவராலும் முடிந்த காரியமில்லை. நபீமார், வலீமாருக்கு மட்டுமே இத்திறமை உண்டு. இக்காலத்தில் இத்தகையோரைக் கண்டு பிடிப்பது மிகக் கடினமானதாகும். எனினும் இருப்பவர்களுள் ஸூபீ வழி, தரீகா வழி செல்வோர்களைக் கொண்டு பெயர் வைக்கலாம். ஆயினும் வஹ்ஹாபீகளைக் கொண்டு பெயர் வைப்பதையும், “துஆ” ஓதுவதையும் தவிர்த்துக் கொள்வது அவசியம்.
 
ஒரு பொருளுக்குப் பெயர் வைப்பவர் அப் பொருளை கண்ணால் நேரில் பார்க்க வேண்டும். பெயர் வைப்பவர் – குறிப்பாக குழந்தைகளுக்கு பெயர் வைப்பவர் “ஷரீஆ”வோடும், “தஸவ்வுப்” ஆன்மிகத்தோடும் தொடர்புள்ளவராக இருப்பதும், குறிப்பாக அறபு மொழியோடு தொடர்புள்ளவராக இருப்பதும் அவசியம்.
ஓர் அறிஞரிடம் – ஆலிம் இடம் பெயர் கேட்டுச் செல்பவர் தனது பிறந்த குழந்தையை எடுத்துச் செல்வதும், பெயர் இரண்டு எழுத்தில் அல்லது மூன்று எழுத்தில் வர வேண்டும் என்று பெயர் வைப்பவரிடம் சொல்லாதிருப்பதும் அவசியம். பெயர் வைப்பவரிடம் குழந்தைக்காக “துஆ” செய்யுமாறு சொல்வதும், அவருக்கு ஏதாவது சிறிய அன்பளிப்பேனும் செய்வதும் நல்ல காரியங்களாகும்.
 
முற்றும்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments