தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
நான் எழுதவுள்ள பின்வரும் வரலாறு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் திருவாய் திறந்தருளிய, “ஸஹீஹ் முஸ்லிம்” எனும் நூலில் பதிவான பலமான நபீ மொழியேயாகும்.
கீழ்க்காணும் வரலாறு “ஸஹீஹ் முஸ்லிம்” நூலில் இருப்பது போல் வேறு நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. மேலதிக விபரங்கள் தேவையானோர் அல் இமாம் கமாலுத்தீன் அத்தமீரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் حياة الحيوان الكبرى எனும் நூல் முதலாம் பாகம் 318ம் பக்கத்தைப் பார்க்க வேண்டும்.
வரலாறு:
முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு குறிகாரன் – மந்திரக் காரன் இருந்தான். அவன் அரசனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தான். ஒரு சமயம் அவன் அரச சபையில், நான் வயதாகிவிட்டேன். மரணம் என்னை நெருங்கிவிட்டது. நான் மரணித்தால் என்னிடமுள்ள அறிவை நீங்கள் அறிந்து கொள்ள முடியாது. ஆகையால் திறமையுள்ள ஓர் இளைஞனை எனக்குத் தாருங்கள். எனது அறிவை அவனுக்கு நான் கற்றுக் கொடுக்கின்றேன் என்று அரச சபையில் அறிவித்தான். அவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்கள் ஓர் இளைஞனைத் தெரிவு செய்து சூனியக் காரனிடம் சென்று மந்திரம், சூனியம் என்பவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு அவனைப் பணித்தார்கள். அவன் அவர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு சூனியக் காரனின் வீடு சென்று தினமும் சூனியம் கற்று வந்தான். அவன் செல்லும் வழியில் கிறித்துவ மத குரு ஒருவர் தனது வழிபாட்டுத் தலத்தில் வசித்து வந்தார்.
قَالَ مَعْمَرٌ أَحْسِبُ أَنَّ أَصْحَابَ الصَّوَامِعِ يَوْمَئِذٍ كَانُوْا مُسْلِمِيْنْ
அந்த மதகுரு அக்காலத்தில் வாழ்ந்த முஸ்லிமாயிருக்கலாம் என்று இமாம் மஃமர் கூறியுள்ளார்.
அந்த இளைஞன் சூனியக் காரனிடம் செல்லும் போதெல்லாம் வழியில் கிறித்துவ மத குருவையும் சந்திப்பது வழக்கம். அவன் மத குருவிடம் இறைஞானத்தையும், சூனியக் காரனிடம் சூனியத்தையும் கற்று வந்தான். இளைஞனுக்கு நாளடைவில் மத குருவின் மீது நல்லெண்ணமும், சூனியக் காரன் மீது கெட்டெண்ணமும் வளரத் தொடங்கியது. இதனால் அவன் மத குருவிடம் அதிக நேரம் தங்கியிருப்பவனாகவும், சூனியக் காரனிடம் சொற்ப நேரம் தங்கியிருப்பவனாகவும் மாறிவிட்டான். இளைஞனின் இந் நடவடிக்கை சூனியக் காரனுக்கு பிடிக்காமற் போனதால் அவன் இளைஞனின் நடவடிக்கை பற்றி அரச சபைக்கு அறிவித்தான். இச் செய்தியறிந்த இளைஞன் இதை கிறித்துவ மத குருவிடம் கூறினான். குரு இவனின் பாதுகாப்புக் கருதி இவனுக்கு ஓர் ஆலோசனை வழங்கினார். அதாவது, சூனியக் காரன் உன்னிடம் ஏன் குறித்த நேரம் வரவில்லை எனக் கேட்டால் வீட்டில் வேலையாக இருந்து விட்டேன் என்றும், வீட்டவர்கள் அவ்வாறு கேட்டால் சூனியக் காரனிடம் வேலையாக இருந்துவிட்டேன் என்றும் சொல் என்று கூறினார். அவ்வாறே அந்த இளைஞனும் சொல்லி வந்தான்.
இவ்வாறிருக்கும் காலத்தில் வழமை போல் குறித்த வழியால் அவன் வந்து கொண்டிருந்த சமயம் வழியின் குறுக்கே பயங்கர மிருகம் ஒன்று போக்குவரத்துக்குத் தடையாக படுத்திருந்தது. இது கண்ட பொது மக்கள் போகப் பயந்து இரு பக்கமும் குவிந்து நின்றிருந்தனர். அங்கு வந்த இளைஞனும் போக முடியாமல் தடைப்பட்டு நின்றிருந்தான்.
அப்போது அவன் மனதில், இன்றுதான் உண்மை வெளியாகும் நாள்போல் தெரிகிறது. சிறிய கல் ஒன்று எடுத்து இப் பெரிய மிருகத்துக்கு எறிவோம் என்று ஒரு கல்லை எடுத்து இறைவா! மதகுரு உன்னிடம் பெரியவராக இருந்தால் இக்கல்லால் இம் மிருகத்தைக் கொன்று விடுவாயாக! என்று சொன்னவனாக எறிந்தான். மிருகம் அக்கணமே செத்து விட்டது.
இதைக் கண்ட மக்கள் கொன்றவன் யார் என்று வினவினார்கள். குறித்த இளைஞன் என்று சொல்லப்பட்டது. மக்கள் அதிர்ச்சியடைந்தவர்களாக இவ் இளைஞன் கற்ற அறிவு வேறெவரும் கற்றிருக்கமாட்டார்கள் என்று கூறி வியந்தார்கள். இளைஞனின் பெயரும், புகழும் ஊரெல்லாம் கமழத் தொடங்கின.
இதேவேளை அரசனின் அவையில் அங்கத்தவனாயிருந்த ஒருவனுக்கு இச் செய்தி கிடைத்த போது அவன் இவ் இளைஞனிடம் வந்து நீ நோய்களைக் குணப்படுத்துவதாகவும், உன்னால் பல அற்புதங்கள் வெளியாவதாகவும் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். நீ என்னைப் பார்வையுள்ளவனாக மாற்றினால் உனக்குப் பரிசு தருவேன் என்று கூறினான்.
அதற்கு அந்த இளைஞன் உன்னிடமிருந்து எதையும் நான் எதிர் பார்க்கவில்லை. ஆயினும் நீ பார்வை பெற்றால் அப்பார்வையைத் தந்தவனை உன்னால் நம்ப முடியுமா? அவனைக் கொண்டு “ஈமான்” நம்பிக்கை கொள்ள உன்னால் முடியுமா? என்று கேட்டான். அதற்கு அந்த அந்தகன் ஆம் என்றான். அப்போது அந்த இளைஞன் அந்தகனுக்குப் பார்வை கிடைப்பதற்காக அல்லாஹ்விடம் “துஆ” பிரார்த்தனை செய்தான். அல்லாஹ் அவனுக்கு பார்வையை அக்கணமே வழங்கி அவன் அல்லாஹ்வைக் கொண்டு “ஈமான்” நம்பிக்கை கொண்டு முஸ்லிம் ஆகிவிட்டான்.
அவன் மறு நாள் வழமை போல் அரச சபைக்கு வந்து அமர்ந்தான். அவன் கண் பார்வை பெற்றிருந்ததைக் கண்ட அரசன் உனக்கு பார்வை தந்தவன் யார்? என்று கேட்டான். அதற்கவன் எனது “றப்பு” இறைவன் என்றான். இது கேட்ட அரசன் அவன் மீது சீறிப் பாய்ந்து நான்தானே “றப்பு”. என்னைத் தவிர வேறு நாயன் உண்டா? அவன் யார்? என்று கோபம் கொண்டவனாக கேட்டான். அதற்கவன் எனக்கும், உனக்கும் “றப்பு” இறைவன் அல்லாஹ்தான் என்று சுடச்சுட பதிலளித்தான்.
கோபத்தை சகித்துக் கொள்ள முடியாமற் போன அரசன் அவனின் தலை உச்சியில் வாளை வைத்து இரண்டாகப் பிளந்து விடுங்கள் என்று படை வீரர்களுக்கு கட்டளையிட்டான். அவ்வாறே அவன் கொலை செய்யப்பட்டான். அதன் பின் கிறித்துவ மத குரு கொண்டு வரப்பட்டு அவரும் அவ்வாறே கொலை செய்யப்பட்டார். இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக அவ் அரசனை அல்லாஹ் என்று ஏற்றுக் கொள்ளாத பலர் கொல்லப்பட்டார்கள்.
இறுதியில் இவ் விவகாரத்துக்கு காரணமாயிருந்த சூனியம் கற்பதற்காக நியமிக்கப்பட்டு கிறித்துவ மத குருவால் நல்வழி பெற்ற இளைஞன் பிடித்து வரப்பட்டான்.
அரசன் இவனை வாளால் வெட்டிக் கொல்லாமல் மலை உச்சிக்கு இவனை எடுத்துச் சென்று அங்கிருந்து இவனை தலை கீழாய்த் தள்ளிவிடுங்கள் என்று கட்டளையிட்டான். இளைஞன் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தலை கீழாய் தள்ளிவிடப்பட்ட போது அல்லாஹ்வின் அருளால் அவன் மட்டும் உயிர் தப்பினான். அழைத்துச் சென்ற அனைவரும் மலையிலிருந்து கீழே விழுந்து இறந்தனர். இளைஞன் மட்டும் உயிரோடு அரசனிடம் வந்து நின்றான். அரசன் அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டான். அவன் நடந்ததை நடந்தவாறே சொன்னான்.
மீண்டும் ஆத்திரமடைந்த அரசன் படைகளை அழைத்து இவனை கடலுக்கு எடுத்துச் சென்று நடுக்கடலில் இவனைத் தள்ளிவிடுங்கள் என்று கட்டளையிட்டான். அவ்வாறே அவர்கள் செய்தார்கள். எனினும் இளைஞன் அல்லாஹ்வின் அருளால் உயிர் தப்பி அரசனிடம் வந்தான். அவனை அழைத்துச் சென்ற அனைவரும் நீரில் மூழ்கி மாண்டனர்.
அரசன் தலையில் கை வைத்து இவனை எவ்வாறு கொலை செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்த போது அவ் இளைஞன் அரசனிடம் நீ என்னைக் கொலை செய்ய விரும்புகிறாயா? அவ்வாறாயின் நான் சொல்வது போல் செய்தால் மட்டுமே என்னைக் கொல்ல உன்னால் முடியும். முதலில் இந்நாட்டு மக்கள் அனைவரையும் ஓர் இடத்தில் ஒன்று கூட்டி என்னை ஒரு சிலுவையில் அறைந்து என்னுடைய அம்பால் எனக்கு எறிந்து விடு. எறியும் போது بِسْمِ اللهِ رَبِّ هَذَا الْغُلُامِ “இவ் இளைஞனின் “றப்”புடைய பெயர் கொண்டு என்று சொல். இன்றேல் என்னைக் கொல்ல முடியாது என்று கூறினான்.
(சிலுவை என்பது நீண்ட மரச் சட்டத்தின் மேற்பகுதிக்குச் சற்றுக் கீழே இரு பக்கமும் சம அளவுள்ள குறுக்குச் சட்டம் பொருத்தப்பட்ட அமைப்பு)
அவ்வாறே அரசன் செய்தான். அந்நாட்டு மக்கள் அனைவரும் ஓர் இடத்தில் ஒன்று கூட்டப்பட்டு அந்த இளைஞன் சொன்னவாறே செய்யப்பட்டது.
அரசன் எறிந்த அம்பு அவ் இளைஞனின் நெற்றிப் பொட்டில் பாய்ந்து குருதி பீறிட்டுப் பாய்ந்த போது அவ் இளைஞன் தனது கை விரலால் அவ் இடத்தில் வைத்தவனாக “ஷஹீத்” ஆனான்.
அப்போது அங்கு கூடி நின்ற இலட்சக் கணக்கான மக்கள் آمَنَّا بِرَبِّ هَذَا الْغُلَامِ “இவ் இளைஞனின் “றப்பு” இறைவனைக் கொண்டு நாங்கள் “ஈமான்” கொண்டோம்” என்று குரலெழுப்பினார்கள்.
அரசனிடம் மக்கள் அனைவரும் அடக்கியாளும் அரசனே! மூவர் உன்னை இறைவன் என்று ஏற்க மறுத்ததால் அவர்களைக் கொன்றொழித்தாய். இன்று உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் உன்னை ஏற்றுக் கொள்ளவில்லையே! உன்னால் அவர்களை என்ன செய்ய முடியுமென்று கேட்டனர்.
சீற்றம் கொண்ட அரசன் வேலையாட்கள், மற்றும் படை வீரர்களைக் கொண்டு மாபெரும் கிடங்கு – குழி வெட்டி அதில் பெரும் நெருப்பெரித்து தன்னை இறைவனாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் அனைவரையும் அக்குழியில் தள்ளி எரிக்குமாறு கட்டளையிட்டான். அவ்வாறே செய்யப்பட்டு பல்லாயிரம் முஸ்லிம்கள் எரிக்கப்பட்டனர்.
இது குறித்தே பின்வரும் திரு வசனம் அருளப்பட்டது.
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ، النَّارِ ذَاتِ الْوَقُودِ،
நெருப்புக் குண்டங்களுடையோர் கொல்லப்பட்டனர். அது எரி பொருளுடைய பெரும் நெருப்புக் குண்டம். (85-04,05)
நெருப்புக் குண்டத்தில் ஒருவர் பின் ஒருவராக எறியப்பட்டுக் கொண்டிருந்த சமயம் பால் அருந்தும் பச்சிளங் குழந்தையோடு ஒரு பெண் வந்தாள். அவள் தனது பச்சிளங் குழந்தையோடு நெருப்பில் இறங்கத் தயங்கி நின்ற வேளை அக்குழந்தை
يَا أُمَّاهْ! لَا تَحْزَنِيْ فَإِنَّكِ عَلَى الْحَقِّ
தாயே! தயங்காதீர். நீங்கள் சத்தியத்திலேயே உள்ளீர்கள் என்று சொன்னது.
இத்தகவலை இமாம் முஸ்லிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். பாலருந்தும் அக்குழந்தை ஏழு மாதக் குழந்தை என்று இமாம் இப்னு குதைபா றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த வரலாறில் கூறப்பட்ட, அம்பால் எய்து – எறிந்து கொல்லப்பட்ட அந்த இளைஞனின் பெயர் அப்துல்லாஹ் இப்னுத் தாமிர் என்று “ஸீறா” நூலாசிரியர் இமாம் முஹம்மத் இப்னு இஸ்ஹாக் கூறியுள்ளார்கள்.
“நஜ்றான்” எனுமிடத்திலுள்ள ஒருவர் இரண்டாவது கலீபா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் தனக்குச் சொந்தமான பாழடைந்த ஒரு நிலத்தை தனது தேவைக்காக தோண்டிக் கொண்டிருந்த போது குழியில் ஒருவர் தனது நெற்றிப் பொட்டில் கை விரலை வைத்தவராக உட்கார்ந்திருந்தார் என்றும், அவரின் கை விரலில் மோதிரம் இருந்ததாகவும், அதில் رَبِّيَ اللهُ “எனது இறைவன் அல்லாஹ்” என்று எழுதப்பட்டிருந்ததாகவும் இமாம் முஹம்மத் இப்னு இஸ்ஹாக் அவர்கள் “ஸீறா”வில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இவர் யார்? இவரின் வரலாறு என்ன? என்று தெரியாத “நஜ்றான்” வாசி கலீபா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்ட போது அவர்தான் நஜ்றான் அரசனால் கொல்லப்பட்ட அப்துல்லாஹ் இப்னுத் தாமிர் என்றும், அவரை அவ்வாறே வைத்து அடக்கிவிடுங்கள் என்றும் பதில் அனுப்பி வைத்தார்கள்.
நஜ்றான் நாட்டு அரசனின் மேற்கண்ட அட்டூழியம் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நபீயாக அனுப்பப் படுவதற்கு 70 வருடங்களுக்கு முன் நடந்ததென்று இமாம் ஸமர்கந்தீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேற்கண்ட இந்த வரலாறின் மூலம் பல பாடங்கள் எமக்கு கிடைக்கின்றன. அவற்றை விரிவாக எழுத வாப்பில்லாமற் போயிற்று.
சுருக்கமாகச் சொல்வதாயின் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக் கலிமாவுக்கு ஸூபீ மகான்கள் கூறும் விளக்கத்தின் படி அதாவது அல்லாஹ் அல்லாத எதுவுமில்லை, அல்லது அல்லாஹ்வுக்கு வேறான எதுவுமில்லை என்று நம்பிய ஒருவன் எக்காரணம் கொண்டும் தனது நம்பிக்கையிலிருந்து புரண்டு விடக் கூடாதென்ற விடயத்தில் உறுதியாக இருந்து கொள்ள வேண்டும் என்று சொல்லலாம்.
ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த, என்னிடம் “பைஅத்” செய்த சில சகோதரர்கள் மிகவும் அற்ப விடயங்களுக்காக கொள்கையிலிருந்து தடம் புரள்வது எனக்கு தாங்க முடியாத மன வேதனையைத் தருகின்றதென்பதை அவர்கள் புரிந்து கொள்ளாமலிருப்பது வேதனையாக உள்ளது.
உதாரணமாக தேர்தல் என்பது “துன்யா”வோடு சம்பந்தப்பட்ட ஓர் அற்ப விடயம். இதில் கூட எனக்குத் துரோகம் செய்யும் “முரீது” சிஷ்யனை நினைக்கும் போது உள்ளத்தால் அழ வேண்டிய நிலையும் எனக்கு ஏற்படுகிறது.
எத் தேர்தல் வந்தாலும் நான் ஒதுங்கியிருக்காமல் ஏதாவதொரு கட்சியையும், யாராவதொருவரையும் ஆதரிப்பது எனது சுய விருப்பம் கொண்டல்ல. மாறாக எனது ஆன்மிகக் குருமார்களில் ஒருவர் – றஹிமஹுல்லாஹ் – என்னிடம் “அரசியலில் ஓர் மூலையிலாவது குந்திக் கொள்ளுங்கள்” என்று சொன்னதினால்தான் என்பதை எனது அன்பிற்குரிய முரீதுகளுக்குச் சொல்லி வைக்க விரும்புகிறேன்.
ஸூபிஸக் கொள்கையில் என் மூலம் இணைந்து கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவரும் இவ் உலக, மறு உலக விடயங்களில் என் வழியே அவர்களின் வழியாக இருக்க வேண்டும் என்பது எனது குறிக்கோளாகும்.
ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களே! நீங்கள் அனைவரும் ஐவேளை தொழ வேண்டும். அல்லாஹ்வினதும், அண்ணல் பெருமானார் அவர்களினதும் ஏவல்களை எடுத்தும், விலக்கல்களை தவிர்ந்தும் நடக்க வேண்டும், ஐஸ், ஹெரோயின் போன்ற போதைப் பொருள் பாவனைகளை முற்றாகத் தவிர்க்க வேண்டுமென்றும் உங்களை அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
நான் மேலே எழுதியுள்ள வரலாறு உங்களின் “ஈமான்” நம்பிக்கையை உறுதி செய்ய உதவுமென்று நம்புகிறேன்.