தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இலங்கைத் திரு நாடு ஜனநாயக நாடென்று இந்நாட்டு அரசு பிரகடனம் செய்திருக்கும் நிலையில் ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த பல மில்லியன் முஸ்லிம்களின் மனித உரிமையையும் பறித்து அவர்களைக் கசக்கிப் பிழிந்து காலால் மிதிக்கும் உலமா சபையின் அநீதியையும், அட்டூழியத்தையும், மனித உரிமை மீறலையும் கேட்கவும் பார்க்கவும் யாருமில்லையா?
கடந்த சுமார் 43 ஆண்டுகளாக இலங்கை வாழ் ஸூபிஸ முஸ்லிம் சமூகத்தின் மனித உரிமைகளைப் பறித்து அவர்களைக் கசக்கிப் பிழிந்து காலால் மிதிக்கும் உலமா சபையின் தலைவர் ரிஸ்வீ முப்தீ இந்நாட்டின் ஜனாதிபதியா? அல்லது ஸூபிஸ முஸ்லிம்களை மதம் மாற்றி மார்க்கத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரியா? அரசாங்கத்திடமிருந்து ஸூபிஸ முஸ்லிம்களாகிய நாங்கள் பதிலை எதிர் பார்க்கிறோம்.
1979ம் ஆண்டு இஸ்லாமிய ஸூபிஸ தத்துவம் பேசிய என்னையும், எனது கருத்தை ஏற்றுக் கொண்ட பல மில்லியன் முஸ்லிம்களையும் மதம் மாற்றி “பத்வா” மார்க்கத்தீர்ப்பு வழங்கிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அட்டூழியத்தையும், மனித உரிமை மீறல்களையும் அரசாங்கமும், இந்நாட்டில் வாழும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், நீதிக்காக குரல் கொடுக்கும் முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாத ஏனைய மதச் சகோதரர்களும் உலமா சபையை தட்டிக் கேட்க முன் வர வேண்டும். அல்லது உலமா சபையின் தீர்ப்பின் படி (உலமா சபையின் தீர்ப்பு 20ம் பக்கம்) ஸூபிஸ முஸ்லிம்கள் அனைவரையும் உலமா சபையுடன் இணைந்து கொன்று குவிக்க வேண்டும்.
உலமா சபையின் அட்டூழியங்களும், மனித உரிமை மீறல்களும்.
உலமா சபையின் “பத்வா” தீர்ப்பில் அவர்கள் கூறியுள்ள மனித உரிமை மீறல்களும், அடக்கு முறைகளும் அவர்களின் “பத்வா” 20ம் பக்கத்தில் உள்ளன. அவற்றில் முக்கியானவற்றை மட்டும் எழுதுகிறேன்.
01. ஒருவன் இஸ்லாத்திலிருந்து மதம் மாறிவிட்டால் இஸ்லாமிய சட்டப்படி அவன் கொலை செய்யப்பட வேண்டும்.
ஸூபிஸ முஸ்லிம்களான நாங்கள் மதம் மாற வில்லை. நாங்கள் அன்றும், இன்றும் முஸ்லிம்களாகவே உள்ளோம். ஆயினும் உலமா சபைதான் எங்களை மதம் மாற்றி தீர்ப்பு வழங்கிவிட்டு எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்று கூறுகிறது. அதோடு பொது மக்களையும் கொலைக்குத் தூண்டுகிறது.
1998ம் ஆண்டு ஸூபிஸ முஸ்லிம் மத குருக்களில் ஒருவரான மௌலவீ MSM பாறூக் காதிரீ அவர்கள் இனம் தெரியாதவர்களால் தனது வீட்டிலிருந்த நேரம் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உலமா சபை வழங்கிய “பத்வா” தீர்ப்பே காரணமாகும். இது தொடர்பாக அரசு விசாரணைக்குழு ஒன்றை நியமித்து ஆய்வு செய்தால் உண்மை வெளியாகும். இது மனித உரிமை மீறலா? இல்லையா?
2007ம் ஆண்டு நான் காத்தான்குடியிலுள்ள எனது அலுவலகத்தில் ஸூபிஸ முஸ்லிம் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த வேளை வெள்ளை வேன் ஒன்றில் துப்பாக்கிகளுடன் வந்த இனம் தெரியாத ஒன்பது பேர்கள் எனது அலுவலகத்தில் 32 அல்லது 33 வேட்டுக்கள் தீர்த்து என்னைக் கொலை, அல்லது கடத்திச் செல்ல முயற்சித்தது காத்தான்குடி வாழ் மக்கள் அனைவரும் பகிரங்கமாக அறிந்ததேயாகும். இக்கொலை முயற்சிக்கும் பிரதான காரணம் உலமா சபை வழங்கிய “பத்வா” தீர்ப்பேயாகும்.
இச்சம்பவம் நடந்த மறு நாள் எனது பாதுகாப்புக் கருதி உடனடியாக இந்தியா சென்று அஜ்மீர் ஷரீபில் தொடர்ந்து 10 மாதங்கள் தங்கியிருந்ததால் இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு என்னால் முடியாமற் போயிற்று.
10 மாதங்களின் பின் நான் நாடு திரும்பி கொழும்பில் தங்கியிருந்த போது முன்னாள் ஆளுனர் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஊருக்கு வாருங்கள் நான் பாதுகாப்பு ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறியதையடுத்து நான் காத்தான்குடி வந்து விட்டேன்.
உலமாஉகள் வழங்கிய “பத்வா” தீர்ப்பு நூல் 20ம் பக்கத்தில் அவர்கள் மீண்டும் எழுதியுள்ள மனித உரிமைகள் மீறல்களையும் எழுதுகிறேன்.
02. உலமாஉகளின் மனித உரிமை மீறல்களில் மற்றொன்று இஸ்லாத்திலிருந்து மதம் மாறிய ஒருவனை முஸ்லிம்கள் “முஸ்லிம் ஜமாஅத்”தை – கூட்டத்தைச் சேர்ந்தவனாக கணக்கெடுக்கக் கூடாது என்பதாகும். அதாவது அவன் முஸ்லிம்களுடன் சேர்ந்து வாழ விடாமல் அவனை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதாகும். இது நீதியா? அநீதியா? இது மனித உரிமைகள் மீறலா? இல்லையா? முல்லாக்களின் இத்தீர்ப்பின் படி முஸ்லிம்களின் எந்தவொரு நிகழ்விலும் ஸூபிஸ முஸ்லிம்கள் கலந்து கொள்ளக் கூடாது.
03. மதம் மாறிய ஒருவனால் சன்மார்க்க கடமைகள் எவையேனும் நிறைவேற்றப்படின் அவை நிறைவேறா. உலமாஉகளின் இத்தீர்ப்பு நீதியா? அநீதியா? மனித உரிமை மீறலா? இல்லையா?
முல்லாக்களின் இத்தீரப்பின் படி பள்ளிவாயல்களில் ஸூபிஸ முஸ்லிம்கள் தொழுகை நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தினால் தொழுகை நிறைவேறாது.
இவர்களின் கூற்றின் படி 43 ஆண்டுகளாக ஸூபிஸ முஸ்லிம்கள் தொழுத தொழுகைகள் நிறைவேறாது. நோற்ற நோன்புகள் நிறைவேறாது. செய்த “ஹஜ்” வணக்கமும் நிறைவேறாது.
04. முஸ்லிம்களுடன் அவர்களுக்கிருந்த அனைத்தும் நீங்கிவிடும். முல்லாக்களின் இத்தீர்ப்பின் படி ஸூபிஸ முஸ்லிம்கள் ஏனைய முஸ்லிம்களுடன் எந்த ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாது.
05. முல்லாக்களின் கண் கெட்ட தீர்ப்பின் படி ஸூபிஸ முஸ்லிம் ஒருவர் மரணித்தால் ஒரு முஸ்லிமின் “ஜனாஸா”வுக்கு செய்ய வேண்டிய நான்கு கடமைகளில் ஒன்றும் செய்யக் கூடாது. அந்த முஸ்லிமை நாய், நரிகளை குழி தோண்டிப் புதைப்பது போல் புதைத்து விட வேண்டும்.
இது மனித உரிமை மீறலா? இல்லையா? இது அநியாயமா? இல்லையா?
முல்லாக்களின் தீர்ப்பின் படி ஸூபிஸ முஸ்லிம் மரணித்தால் எங்கே அவரை அடக்கம் செய்வது? ரீஸ்வீ முப்தீ அவர்களின் வீட்டிலா? அல்லது “பத்வா” எழுதியவர்களின் வீட்டிலா?
மேற்கண்ட மனித உரிமை மீறல்கள் உலமா சபை வழங்கிய “பத்வா” நூல் 20ம் பக்கத்தில் கூறப்பட்டிருப்பது அதி மேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், கௌரவ நீதி அமைச்சர், மற்றும் கௌரவ முஸ்லிம் அரசியர்வாதிகள் ஆகியோருக்கு அறியாமற் போனது அதிசயமானதேயாகும்.
எனினும் இன்னோர் கடந்த காலங்களில் கவனயீனமாக இருந்ததுபோல் இனிமேலும் இருந்து விடாமல் இவ்விடயத்தில் முழுக்கவனம் எடுத்தும், எதிர்கால ஸூபிஸ முஸ்லிம் சந்ததிகளின் நலன் கருதியும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இன்னோரை அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
பிரதி அமைச்சர்கள் இருவரைப் பாராட்டுகிறேன்.
முன்னாள் பிரதி அமைச்சர்களான மர்ஹூம் டொக்டர் பரீத் மீரா லெப்பை அவர்களையும், கலாநிதி சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களையும் பாராட்டுகிறேன்.
மர்ஹூம் டொக்டர் பரீத் மீரா லெப்பை அவர்கள் பிரதியமைச்சராக இருந்த காலத்தில் “பத்வா” விடயத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்பதற்காக காத்தான்குடி 05 ஜாமிஉள்ளாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாயல் மாடியில் பிரதி அமைச்சர் டொக்டர் பரீத் மீரா லெப்பை அவர்களின் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் காத்தான்குடி முக்கியத்தர்களில் பலர் கலந்து கொண்டனர். நானும் கலந்து கொண்டேன்.
அதில் பேச்சுவார்த்தை மூலம் சரியான முடிவு எட்டப்படாமற் போனதால் சரி, பிழை என்று துண்டு எழுதி குலுக்கல் முறையில் முடிவு காணும் அபிப்பிராயம் முன் வைக்கப்பட்ட போது இரு தரப்பினரும் அதை விரும்பாததால் அதுவும் கை விடப்பட்டது.
இறுதியில் இரு தரப்பினரும் சேர்ந்து ஒரே குரலில் “கலிமா”ச் சொல்லி சமாதானமாதல் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட போது அதை நானும், எனது தரப்பினரும் விரும்பாமற் போனதால் அதுவும் கை விடப்பட்டு இறுதியில் முடிவெதுவுமின்றி கூட்டம் கலைந்தது.
பல வருடங்களுக்கு முன் முன்னாள் பிரதியமைச்சரும், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் என்னிடம் கல்வி கற்ற எனது மாணவருமான கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்கள் சமாதானத்தை கருத்திற் கொண்டு சிறிய மட்டத்தில் சில ஏற்பாடுகள் செய்தும் பயனளிக்காது போனதால் அவர்கள் கட்டுனாயக்க விமான நிலையத்தின் தலைவராக இருந்த காலத்தில் அங்கு இரு தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடி மிகவும் சிரமத்திற்கு மத்தியில் சமாதானம் செய்து வைத்தார்கள். அக்கலந்துரையாடலில் நானும், எனது தரப்பினரும், காத்தான்குடி உலமா சபை சார்பில் முக்கியமானவர்களும் கலந்து கொண்டோம். ஆயினும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (கொழும்பு) சார்பில் எவரும் கலந்து கொள்ளவில்லை. அந்த சமாதானம் கூட சில வருடங்கள் மட்டுமே நிலைத்திருந்தது. அதன் பின் அதுவும் முறிந்தது.
இந்த சமாதானம் முறிந்ததற்கும், இதற்குப் பின் ஏற்பட்ட சமாதானம் முறிந்ததற்கும் நானோ, காத்தான்குடி உலமா சபையோ காரணமல்ல. ஆயினும் இதற்கு வஹ்ஹாபீகளும், பொறாமைக் காரர்களும், சந்தர்ப்பவாதிகளுமே காரண கர்த்தாக்களாயிருந்தனர். இவர்களிற் பலர் மரணித்து விட்டார்கள். இவர்களின் நச்சு நடவடிக்கை தொடர்பாக நான் எழுதுவதாயின் மரணித்த சிலரின் பொறாமை, திருட்டுப் புத்தி, சுய நலம் என்பவற்றையும் எழுதினால்தான் மக்கள் உண்மையைப் புரிந்து கொள்வார்கள். மலத்தைக் கிளறி மாணிக்கம் எடுக்க நான் விரும்பவில்லை. அது எனக்குப் பொருத்தமானதுமல்ல.
இன்று தம்பி ரிஸ்வீ முப்தீ அவர்கள் (நான் “பத்வா” கொடுக்கவில்லை என்றும், “பத்வா” கொடுக்கப்பட்ட 1979ம் ஆண்டு நான் 20 வயது இளைஞனாக அறபுக் கல்லூரியில் ஓதிக் கொண்டிருந்தேன் என்றும், றஊப் மௌலவீ விஷயம் தெரியாமல் என்னை சபித்துக் கொண்டும், எனக்கு எதிராக “துஆ” கேட்டுக் கொண்டும் இருக்கிறார் என்றும்) கூறியுள்ளார்.
ரிஸ்வீ அவர்களுக்கு தற்போது 61 வயதாக இருக்க வேண்டும். அவர் சொல்வது உண்மைதான். ஆயினும் “பத்வா” கொடுத்தவர்கள் மரணித்து விட்டாலும் அந்த “பத்வா”வை ரிஸ்வீ அவர்கள்தான் இன்று வரை அமுல் செய்து கொண்டிருக்கிறார் என்றால் அவர் யார்? “பத்வா”வைச் சரி கண்டவரா? இல்லையா? ஆகையால் ஸூபிஸ முஸ்லிம்களை “முர்தத்” என்று சொல்பவரை சபிப்பதும், அவருக்கு எதிராக “துஆ” கேட்பதும் பிழையானதென்று எவரும் சொல்லவும் மாட்டார்கள். நானும் அநீதி செய்தவனாகவும் மாட்டேன்.