Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“றஜப்” மாதத்தின் 27ம் இரவு விஷேட இரவாகும். குறித்த இரவில்தான் “மிஃறாஜ் – இஸ்றா” இரண்டும்...

“றஜப்” மாதத்தின் 27ம் இரவு விஷேட இரவாகும். குறித்த இரவில்தான் “மிஃறாஜ் – இஸ்றா” இரண்டும் இடம்பெற்றன.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
இவை தொடர்பான முழு விபரங்களையும் எழுதுவதாயின் ஒரு நூல்தான் எழுத வேண்டும். அது இப்போது சாத்தியமற்றது. எனினும் இவ்விரண்டு விடயங்களுடனும் தொடர்புள்ள பிரதான குறிப்புக்களை மட்டும் எழுதுகிறேன். “இஸ்றா” என்பது நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் திரு மக்கா நகரிலிருந்து ஜரூசலத்திலுள்ள “அல்மஸ்ஜிதுல் அக்ஸா” பைதுல் முகத்தஸ் பள்ளிவாயலுக்கு மேற்கொண்ட பயணத்தைக் குறிக்கும்.

இப்பயணம் திருக்குர்ஆன் வசனம் கொண்டு தரிபடுத்தப்பட்ட விடயமாகும்.
இது தொடர்பாக அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறியுள்ளான்.
 
سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ
தன் அடியாரை – முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை “கஃபா”வாகிய சிறப்புக்குரிய பள்ளியிலிருந்து “பைதுல் மக்திஸ்” இல் உள்ள “மஸ்ஜிதுல் அக்ஸா”வுக்கு இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகப் பரிசுத்தமானவன். “மஸ்ஜிதுல் அக்ஸா” எத்தகையதென்றால் நாம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு காண்பிப்பதற்காகவே அழைத்துச் செல்கிறோம். நிச்சயமாக உங்களின் இரட்சகனாகிய அவனே செவியேற்கிறவன், பார்க்கிறவன். (17-01)
 
மேற்கண்ட திரு வசனத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. அவற்றில் சிலதை மட்டும் தெரிவு செய்து சுருக்கமாக விளக்கம் எழுதுகிறேன்.
அவற்றில் ஒன்று سُبْحَانَ الَّذِيْ என்ற வனமாகும். இதன் சுருக்கமான பொருள் ஒருவன் துய்யவன் என்பதாகும். இதன் மூலம் அல்லாஹ் தன்னையே புகழ்கிறான். நான்கு வகைப் புகழ்களில் இதுவும் ஒன்று.
 
அல்லாஹ்வை அவனின் தகுதிக்கும், தரத்திற்கும் ஏற்றவாறு – உரியவாறு புகழ்வதற்கு அவனால் மட்டுமே முடியும். மற்றவர்கள் அவனைப் புகழ்ந்தாலும் கூட அவர்களின் தரத்திற்கு ஏற்றவாறுதான் புகழ முடியுமேயன்றி அவனின் தரத்திற்கு ஏற்றவாறு புகழ அவனால் மட்டுமே முடியும்.
அல்லாஹ் தன்னைத் தானே புகழ்கின்ற வேளை அவனுக்குள்ள மகிழ்ச்சி அளவற்றதாகும்.
ஒரு மனிதன் தன்னைத் தானே புகழும் போது மற்றவர்களிற் பலர் அதைச் சரி காண்பதில்லை. அவனை “புகழ் விரும்பி” என்று இழித்துரைப்பார்கள். எள்ளி நகையாடுவார்கள்.
 
ஆயினும் அல்லாஹ் தன்னைத் தானே புகழும் போது அவனை யாரும் இழித்துரைப்பதுமில்லை, எள்ளி நகையாடுவதுமில்லை. ஏனெனில் புகழுக்குரியவனும், புகழப்பட வேண்டியவனும் அவனேதான்.
“ஸுப்ஹான” என்பது புகழ் மட்டுமல்ல. அது வியப்பும் கலந்த புகழாகும். அல்லாஹ் தனது வல்லமை கண்டு தானே வியப்படைகிறான் எனில் அந்த வல்லமையை நாம் என்னென்று சொல்வது? இதையடுத்து “அப்து” அடிமை என்ற சொல்லைக் கூறியுள்ளான்.
 
“அப்து, நபீ, றஸூல்” என்ற சொற்களில் அதி சிறப்பைக் குறிக்கும் சொல் “றஸூல்” என்ற சொல்லாகும். அதையடுத்து “நபீ” என்ற செர்லலும், அதையடுத்து “அப்த்” என்ற சொல்லுமாகும். இவ்வாறிருக்கும் நிலையில் வியப்பான ஒரு பயணத்தின் போது சிறப்பில் குறைந்த “அப்த்” அடியான் என்ற சொல்லை ஏன் அல்லாஹ் பயன்படுத்தினான் என்று நாம் ஆய்வு செய்தால் – “தஸவ்வுப்” ஸூபிஸ அடிப்படையில் ஆராய்ந்தால் மூன்று சொற்களிலும் மற்ற இரு சொற்களை விட “அப்த்” அடியான் என்ற சொல்தான் ஸூபிஸக் கண்ணோட்டத்தில் சிறந்ததாகும்.
ஏனெனில் “நுபுவ்வத்” நபித்துவம் என்பதும், “ரிஸாலத்” தூதுத்துவம் என்பதும் இரு பெரும் பதவிகளாயிருந்தாலும் இவ்விரு பதவிகளும் “கல்க்” படைப்போடு தொடர்புள்ளவையாகும். “அப்த்” அடியான் என்ற சொல் அல்லாஹ்வுடன் தொடர்புள்ளதாகும். மனிதர்களுக்காகவே நபீயும், றஸூலும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். “அப்த்” என்பவர் அவ்வாறானவர் அல்ல. “றப்பு – அப்த்” என்றுதான் சொல்லப்படும். “றப்பு – நபீ” என்றோ, “றப்பு – றஸூல்” என்றோ சொல்வதில்லை.
 
ولفظ العبد مأخوذ من العُبودية، التي هي نهاية التَّذَلُّلِ والخضوع، لا من العبادة التي هي لازمها، وهي أفضل من العبادة،
“அப்த்” என்ற சொல் عُبُوْدِيَّةْ “உபூதிய்யத்” என்ற சொல்லில் இருந்து பிறந்த சொல்லேயன்றி عِبَادَةْ என்ற சொல்லில் இருந்து பிறந்ததல்ல. இவ்விரு சொற்களுக்குமிடையில் வேறுபாடு உண்டு.
“உபூதிய்யத்” என்றால் கடும் பக்தி, கடும் பணிவு என்று பொருள் வரும். “இபாதத்” என்றால் அவ்வாறு பொருள் வராது.
தன்னைப் புகழ்ந்த அல்லாஹ் பின்னால் لَيْلْ – “லெய்ல்” இரவு என்ற சொல்லைக் கூறியுள்ளான். இதன் பொருள் தனது அடியாரை இரவில் அழைத்துச் சென்றவன் என்று வரும்.
 
“இஸ்றா” எனும் இப்பயணம் பகலில் நிகழ்ந்திருந்தால் இதில் எவருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்கமாட்டா. ஏனெனில் அதை அனைவரும் அறிந்திருக்க முடியும். அல்லாஹ் ஏன் இப்பயணத்துக்கு இரவைத் தெரிவு செய்தான் எனில் இரவு என்பது اَللَّيْلُ أَحَبُّ الْأَوْقَاتِ لِخَلْوَةِ الْحَبِيْبْ مَعَ الْمَحْبُوْبِ காதலன் காதலியுடன் தனித்திருப்பதற்கு மிகப் பொருத்தமான நேரமாகும். جَعَلَ اللَّيْلَ لِبَاسًا وَالنَّهَارَ مَعَاشًا அல்லாஹ் இரவை உடையாகவும், பகலை உழைப்புக்குரியதாகவும் ஆக்கித் தந்துள்ளான். சிற்றின்பத்திற்குப் பகலை விட இரவு பொருத்தமாயிருப்பது போல் பேரின்பத்திற்கும் அதுவே பொருத்தமானதாகும். திருமணம் செய்த ஒருவன் தனது பயணத்திலிருந்து தனது வீட்டிற்கு வருவதாயின் இரவு நேரத்தில் வருவது “ஸுன்னத்” என்று இஸ்லாமில் கூறப்பட்டிருப்பது மேற்கண்ட பொருத்தம் கருதியோயாகும்.
இதையடுத்து مِنَ الْمَسْجِدِ மக்காப் பள்ளிவாயிலிலிருந்து ஜரூசலத்திலுள்ள “மஸ்ஜிதுல் அக்ஸா” தூரத்திலுள்ள பள்ளிவாயலுக்கு அழைத்துச் சென்றான்.
 
இஸ்றா பிக்னிக்.
 
பெருமானார் அவர்களின் இப்பயணம் உல்லாசப் பயணமல்ல. ஆன்மிகப் பயணம். இப்பயணம் திரு மக்கா நகரிலிருந்து “மஸ்ஜிதுல் அக்ஸா” வரை நிகழ்ந்தது.
“அல் அக்ஸா” என்ற சொல்லுக்கு اَلْأَبْعَدُ மிகத் தூரம் என்று பொருள். திரு மக்கா நகரிலிருந்து சுமார் 767 மைல் தூரத்தில் இருப்பதால் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. பெருமானார் அவர்கள் திரு மக்காவிலிருந்து “மஸ்ஜிதுல் அக்ஸா”வுக்கு வரும் இப்பயணத்தின் போது பெருமானார் அவர்களுடன் ஜிப்ரீல் எனும் “மலக்”கும் இருந்தார்கள். இப்பயணத்தின் போது பெருமானார் அவர்களுக்கு “கைட்” ஆக ஜிப்ரீல் அவர்களே இருந்தார்கள்.
 
அல்லாஹ் அவர்களை ஏன் அழைத்தான்?
“இஸ்றா” எனும் மண் பயணத்திற்கும், “மிஃறாஜ்” எனும் விண் பயணத்திற்கும் அல்லாஹ் ஏன் அழைத்தான் என்ற கேள்விக்கு திருவசனத்திலேயே அல்லாஹ் பதில் கூறிவிட்டான். لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا என்ற வசனம் இதை தெளிவு படுத்துகிறது. அதாவது எங்களின் அத்தாட்சிகளை பெருமானார் அவர்களுக்கு காண்பிப்பதற்காக அவர்களை அழைத்தோம் என்று கூறியுள்ளான்.
 
இவ்வசனத்திற்கு அத்தாட்சிகள் அனைத்தையும் காண்பிப்பதற்காக என்று பொருள் கொள்வது பொருத்தமற்றது. ஏனெனில் அவ்வாறு பொருள் கொள்வதாயின் மேற்கண்ட வனம் لِنُرِيَهُ آيَاتِنَا என்று வந்திருக்க வேண்டும். அவ்வாறு வராமல் مِنْ “மின்” என்ற ஒரு சொல் சேர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்த “மின்” என்ற சொல்லுக்கு மொழியிலக்கணத்தில் சில – சிலது என்ற பொருள் உண்டு. இதன்படி எங்களின் அத்தாட்சிகளில் சிலதைக் காட்டுவதற்காக என்று பொருள் கொள்ள வேண்டும்.
பெருமானார் அவர்களுக்கு அல்லாஹ் காட்டியவை மட்டும்தான் அவனின் அத்தாட்சிகள் என்பது கருத்தல்ல. அவன் அவர்களுக்கு அப்பணயத்தின் போது காட்டாத அத்தாட்சிகள் இன்னும் அதிகம் உள்ளன. மண்ணில் உள்ள அவனின் அத்தாட்சிகளை விட மிகப் பெரிய, வியக்கத்தக்க அத்தாட்சிகள் விண்ணிலேயே உள்ளன.
 
سُبْحَانَ الَّذِيْ
என்ற திரு வசனத்தை தொடங்கிய அல்லாஹ் إِنَّهُ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرْ பார்ப்பவனும் அவனே, கேட்பவனும் அவனே என்று முடித்துள்ளான். இவ்வாறு முடித்திருப்பதில் ஓர் மர்மம் – இரகசியம் மறைந்திருப்பது ஞானத்துறையில் – ஞானக் கடலில் உள் நீச்சலடிப்பவர்களுக்குப் புரியுமேயன்றி வெளி நீச்சல் அடிப்பவர்களுக்கு புரியாது. அந்த மர்மத்தை இங்கு எழுதுவதற்கு விரும்பவில்லை. இதே தலைப்பில் அடுத்த தொடரில் சுட்டிக் காட்டுவேன். இன்ஷா அல்லாஹ்!
குறிப்பு: இன்றிரவு “மிஃறாஜ்” இரவாயிருப்பதால் இவ் இரவை உயிர்ப்பிக்க விரும்பும் அனைவரும் தமக்காக “துஆ” கேட்கும் போது எனக்காகவும் ஒரு நிமிடம் ஒதுக்கிக் கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
 
உலமாஉகள் அறிவில்லாமல் வழங்கிய “முர்தத்” பத்வா வாபஸ் பெறப்பட்டு இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் பாரபட்சமின்றி வாழ்வதற்கும், “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று உலமாஉகளால் தீர்ப்பு வழங்கப்பட்ட ஸூபிஸ முஸ்லிம்களின் எதிர்கால சந்ததிகள் சந்தோஷமாக வாழ்வதற்கும் இறைவனிடமும், இறையருள் பெற்ற மகான்களிடமும் கையேந்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
தொடரும்…
RELATED ARTICLES

Most Popular

Recent Comments